சினிமா
Published:Updated:

என் ஊர்!

14-ம் நம்பர் பாரத விலாஸ் வீடு!

##~##

''சிலர் பிறப்பை 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’னு சொல்வாங்க. என் பிறப்பை 'பார்ன் வித் கூவம் ஸ்மெல்’னு சொல்லலாம். ஆமாங்க... கூவம் சூழ்ந்த புதுப்பேட்டைதான் என் பேட்டை!'' - கலகலவென ஆரம்பிக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. புதுப்பேட்டை பற்றிய பழைய அனுபவம் பேசுகிறார்.

 ''கிழக்குல கூவம், தெற்குல கோழிக் கறிக்கடைங்க, வடக்குல போலீஸ் குதிரை லாயம், மேற்குல காயலான் கடைங்கனு எப்போதும் அடர்த்தியான பரபரப்போட இருக்குற ஏரியா. என் தாத்தா ஸ்ரீராமுலு நாயுடு சென்னை கார்ப்ப ரேஷன் முன்னாள் மேயர்னு சொல்றதுல பெருமைங்க. அப்பா ஜெகன்னாத நாயுடு கார்ப்பரேஷன் ஸ்டாஃப். அவர் காங்கிரஸ் அபிமானி.  

ஏரியாவைச் சுத்தியும் சினிமா தியேட்டருங்கதான். வீட்டுக்குப் பக்கத்துலயே சித்ரா தியேட்டர். அங்கே ஓடுன பல படங்களோட வசனங்கள் எனக்கு அப்பவே அத்துப்படி. அடுத்து கெயிட்டி, கேஸினோ, நியூஎல்ஃபன்ஸ்டன், அண்ணா, சாந்தி, தேவி, பிளாஸா, வெலிங்டன், குளோப், மிட்லேண்ட், பாரகன்னு எல்லா தியேட்டர்லயும் மொத நாள், மொத ஷோ, மொத ரோவுல பழைய லாட்டரிச் சீட்டுகளைத் தூக்கி எறிஞ்சு படம் பார்த்த அனுபவம் ஞாபகத்தில் இருக்குங்க.

என் ஊர்!

சின்ன சடையம்மன் கோயில். இதுதான் எங்க ஏரியாவின் குலசாமி. ஆடி மாதத்தில் அம்மன் வீதி உலா உற்சவம் 10 நாள் நடக்கும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சாதிக்காரங்க இன்சார்ஜ். ஒன்பதாவது நாள் எங்க உற்சவம். அதாவது, நாயுடுங்க உற்சவம். கடைசி நாள் நாயக்கர்கள் உற்சவம். அன்னிக்குப் பலர், உடம்பில் எலுமிச்சம்பழம், அலகு குத்திக்கிட்டு புலிவேஷத்தில் ஆடி வருவாங்க பாருங்க... அவ்வளவு அமர்க்களமா இருக்கும். அடிதடியும் கட்டாயம் உண்டு. பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சு, சாமி கோயிலுக்கு வந்து சேர காலை  7 மணிஆயிடும். அன்னிக்கு மட்டும் நம்மள 'எக்கேடு கெட்டாவது போ’னு வீட்ல தண்ணி தெளிச்சுவிட்ருவாங்க.

இங்கே பாக்ஸிங், சிலம்பம் தெரியாத இளைஞர்களை விரல்விட்டு எண்ணிடலாம். நானும் எங்க அம்மாவுக்குத் தெரியாம பாக்ஸிங் கத்துக்கிட்டேன். அது பிறகு கராத்தே, குங்ஃபூனு பிளாக் பெல்ட் வரை கொண்டுபோயிடுச்சு.

எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த 11-ம் நம்பர் வீட்ல 14 குடித்தனம். இந்தத் தெருவில் தொடங்குற வீடு, அடுத்த தெருவில்தான் முடியும். ஒவ்வொரு குடும்பத்துலயும் ஏழெட்டுப் பேர். அந்த பாரத விலாஸ் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு.

அறிஞர் அண்ணா இறந்துட்டார். ராஜாஜி ஹால்ல அஞ்சலிக்காக அவரோட உடலை வெச்சிருந்தாங்க. மொத்த சென்னையும் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பிச்சுது. அப்ப கூடின வெளியூர் மக்களுக்கு, அம்மா செஞ்சு கொடுத்த லெமன் சாதம், புளியோதரைப் பொட்டலங்களை புதுப்பேட்டை பள்ளிக்கூடத் தில் வெச்சு விநியோகம் பண்ணது இன்னும் ஞாபகத்தில் இருக்கு. அடுத்து காமராஜர் இறந்தபோதும், அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்குப் போற வழியில் மவுன்ட் ரோட்ல போலீஸ்கிட்ட வாங்கின அடியும் இன்னும் வலிக்குதுப்பா!

சென்னை ஸ்பெஷல் வடகறியின் பூர்வீகம் எங்க ஏரியாதான். விஜயவிலாஸ் வடகறி, ராம்தாஸ் ஹோட்டல் மசால் தோசை, கிருஷ்ண விலாஸ் காபி, புஹாரி ஹோட்டல் சின்ன சமோசா, பிலால் ஹோட்டல் நல்லி குருமா, கஜேந்திர விலாஸ் பாயானு இப்ப நினைச்சாலும் உள் நாக்கு வரைக்கும் ருசிக்கும்!

கூவம் கரையில் குடிசை போட்டு வசிச்ச அத்தனை பேரையும் நல்லா ஞாபகம் இருக்கு. நமக்கு ஒரு பிரச்னைன்னா, உயிரைக் கொடுக் கக்கூடத் தயாரா இருந்த அன்பு உள்ளங்களை மறக்கவே முடியாது!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்