Election bannerElection banner
Published:Updated:

''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress

''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress
''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress

''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress

'சுபவீ' என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரவலாக முன்னெடுத்துச் செல்வதில் முக்கியமானவர். அப்பழுக்கற்ற தமிழ்ப் பற்றாளர், பேராசிரியர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மையுள்ளவர். தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் நல் வாழ்விலும் பெரும் அக்கறை கொண்டவர். கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர். அவர் தனக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படும் எனபதையும், அதைத் தவிர்க்க, தான் கையாளும் வழிமுறைகளையும் இங்கே கூறுகிறார்.

''பொதுவாக, எனக்குப் பதற்றமான நேரங்கள், மனஅழுத்தம் தரும் பொழுதுகள் மிகவும் குறைவு. சுறுசுறுப்பாக இருப்பது வேறு. பதற்றமாக இருப்பது வேறு.

நமக்கு மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் தருபவை, ஒன்று நேரம், இன்னொன்று நிதி, மூன்றாவது உடல்நலம் சார்ந்தது. இவையே நமக்குப் பதற்றத்தைத் தருபவை. உடல் நலம்... என் உடலுக்கு எவை நன்மை தருமோ அவற்றை மட்டுமே உண்ணுவதன் மூலம் அதைச் சரிசெய்துவிடுவேன்.

நிதிப் பற்றாக்குறை பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தது உண்மை. இப்போது அவர்கள் திருமணமாகிச் சென்றுவிட்டார்கள். நானும் என் துணைவியாரும்தாம். அதனால் பெரிய அளவில் செலவுகளில்லை. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்ந்து சரிசெய்தோமானால், நாம் நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

என்னையும் மீறி மிகவும் பதற்றமாக இருந்த நேரங்களும் உண்டு. நான் கல்லூரியில் பணிபுரிந்தபோது சனி, ஞாயிறுகளில் வெளியூர்களுக்குக் கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றைப் பேசுவதற்காகப் போவேன்.

அப்படிப்போய் பேசிவிட்டு, ஞாயிறு இரவு புறப்பட்டு சென்னைக்குக் காலையில் திரும்புவேன். மறுபடியும், என் வீடு இருக்கும் ஆழ்வார் திருநகரியிலிருந்து நான் பணிபுரிந்த கல்லூரி இருக்கும் தாம்பரம் அருகே கௌரிவாக்கத்துக்கு பஸ்கள் மாறி மாறிச் செல்வேன். அப்படிக் கிளம்பிப் போனாலும், கல்லூரிக்குத் தாமதமாகிவிடும். அந்த நேரம் எனக்கு மிகவும் பதற்றமானவை.

இவை எல்லாம் நடந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர். 1997-ம் ஆண்டில் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். அப்போதே நேரம் தவறாமையில் கவனமாக இருக்கவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன்.

ஆனால், 'மனிதர்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சந்தர்ப்பங்கள் முந்திக்கொள்கின்றன' என்று சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவமும் நடைபெற்றது.

பேராசிரியர் அன்பழகனின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னைத் தங்கச்சாலையில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. தலைவர் கலைஞர் என்னையும் அந்தக் கூட்டத்தில் பேசச் சொல்லியிருந்தார்.

நிகழ்ச்சி நாளின்போது என் வீட்டிலிருந்து கிளம்பி போக்குவரத்து நெரிசல் காரணமாக வடழனி வரவே நேரமாகிவிட்டது. பாம்குரோவ் ஹோட்டல் அருகில் வரும்போதே தலைவர் கிளம்பிவிட்டதை அறிந்தேன். அங்கிருந்து, அண்ணா சாலை வருவதற்குள்ளாகவே மிகவும் சிரமமாகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

`தளபதி ஸ்டாலினும் அரைமணி நேரத்துக்கு முன்பாகவே புறப்பட்டு மேடைக்கு வந்துவிட்டார்’ எனச் சொன்னார்கள். மேடைக்கு எல்லோரும் வந்துவிட்டனர். நான் தலைவரிடம் சென்று தாமதத்துக்கு உரிய காரணத்தைச் சொல்லி வருந்தினேன். அவர், 'இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்' என்று கூறினார்.

இப்போதெல்லாம் நேர நிர்வாகம் மிகவும் அவசியம் என்பதால், எல்லாவற்றையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிட்டேன். இரவு பதினொன்றரை மணிக்கு தூங்கச் சென்றாலும், காலை 5 மணி 5:30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.

அப்போதே அந்த நாளில் செய்யவேண்டிய செயல்கள், கலந்துகொள்ளவேண்டிய கூட்டங்கள், வேலைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு ஒரு சிறு குறிப்பு நோட்டில் எழுதிவைத்துக்கொள்வேன். இந்தக் குறிப்பேடு எப்போதும் என் சட்டைப் பையிலேயே இருக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது இன்று முடிந்த வேலைகளை அடித்துவிடுவேன்.

மறுநாள் அதேபோல் அன்றைக்கு உரிய வேலைகள். இரண்டு மாதங்களுக்கு உரிய பயண விவரங்களை டைரியில் முன்கூட்டியே பதிவுசெய்துவிடுவதால் எளிதாகிவிடுகிறது. இந்தச் சிறிய குறிப்பேடு இதயத்துக்கு அருகாமையிலேயே ஒரு பேஸ்மேக்கரைப்போல் நம்மை மனச்சோர்விலிருந்து பாதுகாத்திடும்.

என் தந்தையாருக்கு இந்த வழக்கம் உண்டு. சட்டைப் பையில் நிறைய துண்டுச்சீட்டுகளை வைத்திருப்பார். அவர் சட்டை மாற்றும்போதெல்லாம் அவை அடுத்த சட்டைப் பைக்கு மாறிக்கொண்டேயிருக்கும். வேலை முடிந்தால்தான் அந்தத் துண்டுச் சீட்டைக் கிழித்தெறிவார்.

இப்போது காலம் நிறையவே மாறிவிட்டது. இளைஞர்கள் தங்களது கைப்பேசியிலேயே எல்லா வேலைகளையும் பதிவிட்டுக்கொள்ளலாம். அவற்றை ஞாபகப்படுத்த மணி ஒலிப்பானும் உதவிக்கு வரும். எனக்கு இப்போது 66 வயதாகிறது. ரத்த அழுத்தம் 120-லிருந்து 80-க்குள்தான் இருக்கிறது.

நேர நிர்வாகம்தான் நமது திட்டங்கள் உரிய நேரத்தில் செயல் வடிவம் பெற பெரிதும் உதவும். இப்படியாக நம் வாழ்வை வகுத்துக்கொண்டால், பதற்றம் இல்லாமல் இருக்கலாம்'' என்கிறார் சுபவீ.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு