சினிமா
Published:Updated:

என் ஊர்!

என் ஊர்!
News
என் ஊர்!

பருத்தி வந்தது... சோளம் போனது!

##~##

ண்ணையும் மனிதனையும் மாசுபடுத்தும் ரசாயன உரங்களுக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் பசுமைப் போராளி, முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.பழனிசாமி. இயற்கை முறை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வை, உழவர்களின் மனதில் அழுந்த விதைத்து வரும் இவர், திருப்பூர் மாவட்டம் நாதகவுண்டன் பாளையம்பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

 ''பொறந்த ஊர்லயே வாழ்க்கையின் கடைசிக் காலம் வரைக்கும் பொழப்பு நடத்தக் கிடைக்குறது வரம். அந்த வகையில் பாக்கியசாலி நான். விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் ஓடிக்கிட்டு இருக்கிற விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். ஆங்கில இலக்கியம் படிச்சுப்போட்டு கோயம்புத்தூரில் டியூட்டரா வேலை பார்த் தேன். ஒரு நாள், 'இப்படி எல்லாரும் நகரத்துக்கு வந்துபோட்டா, விவசாயம் பண்றது ஆரு?’னு தோணுச்சு. பொட்டிய ஊருக்குக் கட்டிட்டேன். அப்போ இருந்து கலப்பைதான்.

என் ஊர்!

என் ஊரு இன்னிக்கு மாறிப்போச்சு. தட்டோட்டு வீடு எல்லாம் தார்சு வீடா மாறிடுச்சு. அன்னிக்கு எல்லாம் ஆத்தா செஞ்சு கொடுக்குற பொரி உருண்டையை வாயில் ஒண்ணும் டவுசர் பையில் ஒண்ணுமா திணிச்சுக்கிட்டு, கோலிக் குண்டு வெளயாடப் போவோம். பனை நுங்கை நோண்டித் தின்னுப்போட்டு, அந்த காய்லயே வண்டி ஓட்டுவோம். தண்ணி தவிச்சா, ஊர் கம்மாயில் அள்ளிக் குடிப்போம். ஆனா, இன்னிக்கு நம்ம பேரப்புள்ளைங்க டி.வி. முகத்தில் விழிச்சு, அது முன்னாடியே உறங்கியும் போயிடுதுங்க.

சோளம், கேழ்வரகு, கம்பு மாதிரி ஆரோக்கியமான தானியங்களைத்தான் பெரும்பாலும் பயிர் பண்ணுவோம். உணவும் கேழ்வரகு தோசை, கம்மங்கூழ், கேப்பைக் களினு ஆரோக்கியமா இருக்கும். அரிசி அபூர்வம். கருக்கல்ல இருந்து இருட்டுற வரைக்கும் காட்டு வேலை பார்த்ததால உடம்புக்கு எந்த நோவும் வரலை.  

எங்க ஊரில் மொத மொதலா சைக்கிள் வாங்கி ஓட்டுனவன் நானுங்க. 1954-ல் கோயம்புத்தூர் பிரெசிடன்ஸி சைக்கிள் மார்ட்டில் சைக்கிள் வாங்கிட்டு, அதுலயே ஊர் போய்ச் சேர்ந்தேன். இன்னிக்கு என்னதான் காரில் பறந்தாலும், சைக்கிள் மிதிச்ச சுகம் வர்றது இல்லை. அன்னிக்கு எங்க ஊரில் சினிமாக் கொட்டகை எல்லாம் கிடையாதுங்க. ஊரில் உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி நடத்தி அண்ணன் மார் சாமி கதைகளைப் பாடுவாங்க. விடிய விடிய உட்கார்ந்து அதைக் கேட்குறதுதான் பொழுதுபோக்கு.

என் ஊர்!

என்னிக்கு திருப்பூருக்கு பனியன் கம்பெனிங்க வந்துச்சோ... அப்பவே எங்க விவசாயம் போச்சுங்க. பருத்தி வந்தது... சோளம் போனது. பருத்திக்க£க ரசாயனம் அள்ளித் தெளிச்சு, பூமித் தாயைக் கருக்கிப்புட்டாங்க. கொங்கு மண்டலத்தோட கம்பீர அடையாளமா இருந்தது நம்ம காங்கேயம் காளைதானுங்க. முன்ன வீட்டுக்கு வீடு அந்த மாடு இருக்கும். ஆனா, இப்பம் அழியுற நிலையில் அந்த இனம் இருக்கு. நம்மளோட பாரம்பரியத்தைக் காப்பாத்தோணும்னு நான்தான் 20 காங்கேயம் மாடுங்களை வளர்க்குறேன். இதுபோக, நாட்டு ஆடுகளையும் வளர்க்குறேன். இதுங்க போடுற சாணத்தையும், மூத்திரத்தையும் வெச்சே ஜீவாமிர்தம்

(பஞ்சகவ்யம்) செஞ்சு மண்ணை செழிப்பாக்குறேன். எல்லோரும் இதையே செஞ்சா, நம்மவனை யாரும் மிஞ்ச முடியா தாக்கும்!''

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்