சினிமா
Published:Updated:

ஆற்றைப்போலத்தான் நானும்!

ஒரு கலைஞனின் பயணம்..

##~##

சங்கிய கந்தல் ஆடை... தூக்கிக் கட்டிய லுங்கி... கையில் ஓர் அழுக்கு மூட்டை... நாடோடியாகத் திரிந்துகொண்டு இருக்கும் அவருடைய மொத்தச் சொத்தும் இவைதான். ஆனால், அவருடைய கை விரல்களில் நாட்டியம் ஆடுகிறது விலை மதிப்பு இல்லாத மாபெரும் திறமை.

 சிவகுமார்... சொத்து, சுகம், உறவுகள் எல்லாம் துறந்து, வழிப்போக்கனாகக் கலைப் பயணம் மேற்கொண்டு இருப்பவர். கண்ணில் படும் எதையும் களிமண்ணில் அச்சு அசலாகப் பிரதி எடுக்கிறார். கைக் குழந்தையோ, டிஜிட்டல் கேமராவோ... எதுவும் தத்ரூப வடிவம் எடுக்கிறது.

''சொந்த ஊர் கும்பகோணம். நாலாவதுக்கு மேல் படிக்க வசதி இல்லை. அப்பாவுக்கு உதவியா தச்சு வேலை பார்த்தேன். ஆத்தங்கரை, வயல்வெளியில் மண் வீடு கட்டி விளையாடுவதில் அவ்வளவு ஆர்வம். விளையாட்டா ஆரம்பிச்ச அந்த ஆர்வம்தான், அந்தப் பொம்மை வீட்டுக்குள்ள ஆம்பளை, பொம்பளை பொம்மைகளைச் செஞ்சு வெக்கிறது, அடுப்பங்கரை கட்டுறது, வீட்டுக்குப் பக்கத்தில் கோயில் கட்டுறது, கிளி, புறாவைப் பறக்கவிடுறதுனு வளர்ந்தது.

ஆற்றைப்போலத்தான் நானும்!

10 வயசுலயே கும்பகோணம் காவிரி கிளையாற்றங்கரையில் எங்க ஊர் பள்ளிக்கூடத்துக் குழந்தைகளுக்காக மணல் சிற்பங்களைச் செஞ்சு காட்டுவேன். சுத்துவட்டார ஊர் பள்ளிக்கூடங்களில் இருந்து வாத்தியார்களே குழந்தைகளைக் கூட்டி வந்து அதைக்  காட்டுவாங்க. கைச்செலவுக்கு 10, 20 கிடைக்கும்.

ஒரு கட்டத்தில் வறுமை காரணமா, குடும்பம் சிதறிப்போச்சுங்க. அரவணைக்க ஆளு இல்லை. பசிக்குச் சோறு இல்லை. சொந்த ஊரே நரகமாகிப்போச்சு. ரெண்டு செட் துணியோட 20 வருஷம் முன்னாடி கிளம்பிட்டேன். கால் போன போக்கில் போய்க்கிட்டு இருக்கேன். எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம் இந்தக் கலை மட்டும்தாங்க. காசு கிடைக்காம மூணு நாள் சாப்பிடாமக்கூட இருந்து இருக்கேன். ஆனா, ஒரு நாள்கூட சிற்பம் செய்யாம இருந்தது இல்லை.

குழந்தைங்கதான் ஆசையா என்கிட்ட வருவாங்க. அவங்களை உட்காரவெச்சு, அவங்க முகத்தை அப்படியே களிமண்ல சிற்பமா செஞ்சு கொடுப்பேன். பெத்தவங்க பக்கத்தில் இருந்தாங்கன்னா பரவசமாகிக் காசு கொடுப்பாங்க. 10, 20 கொடுக்கறதும் உண்டு... 200, 300னு கொடுக்குறதும் உண்டு. ஆனா, நானா இதுவரை வாயைத் திறந்து யார்கிட்டயும் காசு கேட்டது இல்லை.

ஆற்றைப்போலத்தான் நானும்!

பொதுவா, எனக்குச் சாமி நம்பிக்கை இல்லை. ஆனா, என் மூட்டையில் காந்தி, காமராஜர், எம்.ஜி.ஆர். படங்களை வெச்சிருக்கேன். மனுஷங்களுக்கு நல்லது செஞ்சவங்கதான் கடவுள். அதனால், தினமும் எழுந்ததும் அவங்களை வணங்குறேன்.

வாழ்க்கையில் நட்பு, காதல், அன்பு, துரோகம் எல்லாத்தையும் சந்திச்சுட்டேன். இனிக்க இனிக்க வாழ்ந்து இருக்கேன். எவ்வளவு இழக்க முடியுமோ அவ்வளவும் இழந்து இருக்கேன். இழப்புக்களே இருப்புகளோட அருமையைப் புரியவைக்கும். ஆனா, இப்போ சந்தோஷமா, மன நிறைவா இருக்கேன். போதுங்க இந்தப் பொழப்பு!''- நிறைவாகக் கை கூப்புகிறார் சிவகுமார். அவருக்கு நம்மால் முடிந்த ஏதேனும் ஓர் உதவி செய்யலாமே என்று எண்ணி, கோவை கைவினைப் பொருட்கள் தொழிலாளர்கள் சங்கத்தினரிடம் அவரை அறிமுகம் செய்தோம்.

இரண்டு நாட்கள் அங்கு வேலை பார்த்தவர், என்னை அழைத்தார். என்னிடம் இருப்பதைப்போலவே தத்ரூபமாக ஒரு கேமராவை களிமண்ணில் வடிவமைத்துக் கொடுத்தார். நெகிழ்ந்துபோனேன்.

விடை பெறுமுன் சொன்னார், ''என் கால்கள் இங்கே தங்காது. ஆற்றைப்போலத்தான் நானும். பயணித்துக்கொண்டே இருப்பேன்!''  

கட்டுரை, படங்கள்: தி.விஜய்