சினிமா
Published:Updated:

என் ஊர்!

ஒசர விளைக்காரன்ட்ட மோத முடியாதுடே!

##~##

திரைப்பட இயக்குநர், நெகிழவைக்கும் நடிகர் அழகம் பெருமாள், தன் ஊர் குலசேகரபுரம் குறித்தும் தன் பால்ய அனுபவங்கள் குறித்தும் இங்கே மனம் திறக்கிறார்.

 'குலசேகரபுரம் முழுக்கவே விவசாயக் கிராமம். இந்தப் பகுதி மக்களோட பூர்வீகத் தொழில், வெள்ளாமைதான். உறவு, நட்பு, காதல் இது எல்லாம் எப்படி உயிரோடும் உணர்வோடும் கலந்த விஷயமோ அதேபோலத்தான் எனக்கு குலசேகரபுரமும். எங்க ஊரு கடல் மட்டத்தைவிட உயரமா இருக்குறதாலேயே எங்க ஊரை 'உயரவிளை’னு கவிமணி பாடி இருக்காரு. காலப்போக்கில் மருவி 'ஒசரவிளை’னு ஆகிருச்சு. இன்னிக்கும் கொஞ்சம் பேரு 'ஒசரவிளை’னும், கொஞ்சம் பேரு 'குலசேகரபுரம்’னு சொன்னாலும் குலசேகரபுரம்தான் அரசு ஆவணப்படி உண்மையான பெயர்.

என் ஊர்!

என் அப்பா நம்பிநாதன் அரசு அதிகாரி. பல மாவட்டங்களில் பி.டி.ஓ.வா இருந்தாரு. இதனால் ஸ்கூல் லீவுக்குத்தான் குலசேகரபுரத்துக்கு வருவோம். அப்போ ஊட்டியும் கொடைக்கானாலும் தர முடியாத சந்தோஷத்தை இந்தச் சின்ன கிராமம் எனக்குத் தந்துச்சு. அந்தக் காலத்தில் எங்க ஊருக்குப் போக்குவரத்து வசதி கிடையாது. சுசீந்திரம் - கன்னியாகுமரி ரோட்ல இறங்கி ஒன்றரை கி.மீ. நடந்து வரணும். ஊர்ல எங்கப்பா பிரபலம். நடந்துவரும்போதே எதிர்ப்படுறவங்க 'என்னப்பா சௌக்கியமா?’னு விசாரிப்பாங்க. வீட்டுக்குப் போறதுக்குள்ளே குறைஞ்சுது 200 தடவை 'நல்லா இருக்கேன்’னு சொல்வாரு அப்பா.

நாங்க குடும்பத்தோடு குலசேகரபுரம் வந்து இறங்கியதுமே, நான் எங்க அப்பா கிட்ட 'நல்லா இருக்கியா தங்கம்?’னு கிண்டலாக் கேட்பேன். இன்னிக்கு எங்க அப்பா உயிரோட இல்லை. இருந்தாலும் குலசேகரபுரத்தில் கால்வெச்சதுமே எனக்கு அவர் ஞாபகம்தான் முதல்ல வரும். 1950-ம் வருஷம் நேரு எங்க ஊருக்கு வந்து இருக்காரு. அப்போ அப்பா அவருகூட சேர்ந்து போட்டோ எடுத்து இருக்காரு. அப்பாவை மாப்பிள்ளை பார்க்க வந்த என் தாத்தா, நேருகூட நிக்குற போட்டோவைப் பார்த்ததுமே நல்ல பையன்னு முடிவுபண்ணி பொண்ணு தரச் சம்மதிச்சுட்டாராம். இன்னிக்கு வரைக்கும் அந்தப் போட்டோவை நான் தேடிட்டே இருக்கேன்.

என் ஊர்!

ஊர்ல 30 வருஷத்துக்கு முன்னாடியே     அஞ்சலகம், நூலகம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனைனு எல்லாமே வந்துருச்சு. ஊர் மக்கள்தான் அதுக்கு முழுமுதல் காரணம். சர்க்கார் ஆபீஸுங்க வரணும்னு, பலர் சொந்த நிலத்தைப் பணம் வாங்காம இலவசமா எழுதிக் கொடுத்துட்டாங்க. நான் சின்ன பையனா இருக்கும்போது, என் சித்தப்பாவோட  சேர்ந்து நாகர்கோயில் டவுனுக்குப் படம் பார்க்கப் போனேன். படம் முடிஞ்சு வயல் பாதை வழியா இருட்டில் நடந்துவந்தோம். அப்ப ஒரு பூச்சி என் கண்ணுல விழுந்துடுச்சு. நான் பயந்து துள்ளிக் குதிச்சேன். வீட்ல போய்சித்தப்பா இதைச் சொன்னதுமே என் ஆச்சி பதற்றம் ஆகிட்டாங்க. 'நீ யாமுல சின்ன பயல இராவு சினிமாக்குக் கூட்டிட்டுப் போன?’னு செம டோஸ் சித்தப்பாவுக்கு. எனக்குப் பயம் தெளியவைக்கக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் தண்ணி தெளிச்சுவிட்டாங்க.

என் ஊர்!

ஊர்க்காரங்க ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கும். ஆனா, வெளி ஊர்ல இருந்து பிரச்னைனு யாராவது வந்துட்டா, ஊர்க்காரங்க ஒண்ணு கூடிருவாங்க. இதனாலேயே எங்க பக்கத்துக் கிராமங்களில் 'ஒசரவிளைகாரன்ட்ட மோத முடியாதுடே’னுசொல்வாங்க. ஊர்ல மறக்க முடியாத மனிதர், ஓ.பி.கே பிள்ளை. இந்திய ராணுவத்தில் பிரிகேடியரா இருந்தவர். ஊர்ல பல விடலைகளுக்கு இலவசமா உடற்பயிற்சி  சொல்லிக் கொடுத்து, ராணுவத்தில் சேர்த்துவிட்டவர். அவரால் ராணுவத்தில் சேர்ந்தவங்க மட்டும் 50 பேர்.  

நான் சின்னப் பையனா இருக்கும்போது, எங்க ஊர்ல ஒரு கம்பவுண்டர் இருந்தாரு. ஆஸ்பத்திரிக்குப் போக முடியாதவங்க அவர் கிட்டதான் போவாங்க. எந்த நோயா இருந் தாலும் கையில் கொஞ்சம் சந்தனத்தை எடுத்து நெத்தியில் பூசிட்டு, 'கிளம்பு... எல்லாம் சரி ஆகிடும்’னு சொல்வார். அந்தக் கேரக்டரைத் தான் 'டும் டும் டும்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை வெச்சு எடுத்து இருந்தேன். நான் இயக்கிய படங்களில் என் ஊரின் தாக்கம் நிறையவே இருக்கும். ஏன்னா,  குலசேகரபுரம் என் ஆன்மாவோடு ஊறிய விஷயம்!''

- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்