Published:Updated:

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

Published:Updated:
வணக்கம்

'தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றன? எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடுக்கும் போக்கு, அரசு இயந்திரம் சரியாகச் செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது’  இது உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு வழக்கில் தெரிவித்த கருத்து. நீதிமன்றத்தின் கருத்து மட்டுமா... இதுதான் தமிழ்நாட்டின் நடைமுறை யதார்த்தம். ஆனந்த விகடன் மீது ஜெயலலிதா தொடுத்திருக்கும் அவதூறு வழக்கு, இதற்கு சமீபத்திய உதாரணம். 

தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நம் ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக 'மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்தக் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன. ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் தலைமை நிர்வாகியாக இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் நவம்பர் 25ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் கட்டுரை வெளியானது. அதைத் தொடர்ந்து ஆனந்த விகடன் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்டது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர்  பதிப்பாளர் மற்றும் அச்சிடுபவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வணக்கம்

எந்த ஒரு சமூக அவலத்தையும் உரிய ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுவது ஒரு பொறுப்புள்ள பத்திரிகையின் கடமை. அதை அவதூறாகக் கருதுவதும், அதற்காக வழக்கு தொடுப்பதும் தனிப்பட்டவர்களின் உரிமை. ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட எந்த அவதூறு வழக்கும் இதுவரை நிரூபிக்கப்பட்டது இல்லை என்பதுதான் வரலாறு. இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கும் அத்தகையதுதான். இந்த வழக்கை சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அவர்கள் இதை சட்டரீதியாக மட்டுமே எதிர்கொள்ளவில்லை என்பதுதான் முக்கியமானது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள் முதல், இல்லம்தோறும் விகடனைக் கொண்டுசேர்க்கும் சைக்கிள் பையன்கள் வரை கடுமையாக மிரட்டப்பட்டனர். 'ஆனந்த விகடன் இதழை விநியோகித்தால், விற்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என அச்சுறுத்தப்பட்டனர். ஆனந்த விகடனின் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டு, போஸ்டர் ஒட்டியவர்களை மிரட்டிய, தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றன. காவல்துறையினரும், கட்சிப் பிரமுகர்களும் இந்த அராஜகங்களை தங்கள் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொண்டனர். கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு ஓர் அசாதாரண சூழல் உருவாக்கப்பட்டது.

தவிர, விகடனின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த 23ம் தேதி மாலை முதல் திடீரென முடக்கப்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் விகடனைத் தொடர்ந்து வருகிறார்கள். இதில் ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் மட்டும் முடக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் இருந்து மேற்கொண்ட விசாரணைக்கும், எதுவுமே நடக்காததுபோல மழுப்பலான பதில்களே வந்தன. விகடனின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, திடீரெனத் தடை விலக்கப்பட்டு விகடன் ஃபேஸ்புக் பக்கம் மறுபடியும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நடந்தவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் சட்டரீதியான நடவடிக்கைகளை நிச்சயம் தொடர்வோம்.    

இன்னொரு பக்கம், 'விகடன் விலைபோய்விட்டது. அவர் வாங்கிவிட்டார்; இவர்கள் வாங்கிவிட்டனர்’ என்ற அவதூறுப் பிரசாரங்கள் மீண்டும் ஒருமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. 'ஆம், அவர்கள் விகடனை வாங்கியது உண்மைதான். 25 ரூபாய் கொடுத்தால் நீங்களும்கூட விகடனை விலை கொடுத்து வாங்கலாம்’ என வாசகர் ஒருவர் நகைச்சுவையோடு பதிலடி கொடுத்தார்.

அவதூறுகள் மூலம், அடக்குமுறைகள் மூலம், அச்சுறுத்தல்கள் மூலம், பொய் வழக்குகள் மூலம் நீதியின் குரலை ஒருபோதும் அடக்கிவிட முடியாது. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும்.

இந்த இக்கட்டான தருணத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக, அறத்தின் பக்கம் ஆனந்த விகடனின் பக்கம் அணி திரண்ட, குரல் கொடுத்த அனைவருக்கும் தன் தலை வணங்கி நன்றி செலுத்துகிறான் விகடன். இந்தத் தார்மீக ஆதரவுதான் எப்போதும் விகடனின் உந்துசக்தி.

குறிப்பாக, மிரட்டல், உருட்டல்களுக்கு நடுவே விகடனின் விற்பனையாளர்கள் யாரும் துளிகூட விட்டுக்கொடுக்கவே இல்லை. 'ஒவ்வொரு பிரதியையும் வாசகர்கள் கரங்களில் கொண்டுசேர்ப்பது எங்கள் கடமை’ என உறுதியோடு உழைக்கும் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் அஞ்சாத போர்க்குணமும்தான் விகடனின் எரிபொருள்.

மிக முக்கியமாக, ஆனந்த விகடனின் வரமும் உரமும்... வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்!

நன்றி!

ரா.கண்ணன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism