Published:Updated:

உயிர் பிழை - 16

மருத்துவர் கு.சிவராமன்

‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?’ என பயந்து வாழ்ந்த காலம் மாறிப்போய்,  ‘எந்தப் புற்று எனக்கு இருக்குமோ?’ எனப் பயந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ‘நம்மில் மூன்றில் ஒருவர் புற்றுநோய்க்காகச் சந்தேகிக்கப்படப்போவதும், நான்கில் ஒருவர் புற்றுநோயால் மரணம் அடையப்போவதும் உறுதி. அது முதுமையின் உச்சத்தில் நிகழும் பட்சத்தில் இயல்பு. இளமையின் உச்சத்தில் நிகழ்ந்தால்... வலி’ என்கின்றன நவீன ஆய்வுகள். 

‘இந்த நோயை எப்போதுமே இறுதிக் கட்டத்தில்தான் கண்டுபிடிக்க முடியுமா? ‘சர்க்கரை வர வாய்ப்பு இருக்கு. சாப்பாட்டில் ஜாக்கிரதையா இருங்க, காலையில் எழுந்து ஓடுங்க' எனச் சொல்வதுபோல், ‘ஏன்... இப்படி டென்ஷன் ஆகுறீங்க, பி.பி-யை முதலில் செக் பண்ணுங்க. சட்டை இன் பண்ணும்போது பட்டன் தெறிக்குது. ரத்தக் கொழுப்பு அளவு எவ்வளவு இருக்குனு பார்த்தீங்களா?' என்பதுபோல, புற்றை அதன் ஆரம்பப் பாதையிலேயே வழிமறிக்க முடியாதா? சுக்கு - மல்லி கஷாயம் வைத்தோ, சுருக் என  ஒரு therapeutic vaccine போட்டோ தடுத்து நிறுத்த முடியாதா?’ என்பதுபோன்ற கேள்விகள் இப்போதைய இளைய தலைமுறையினரிடம் தவிர்க்க முடியாதவை.

உயிர் பிழை - 16

40 வயதைத் தொடும் எல்லாப் பெண்களின் மார்பகத்திலும், 60 வயதைத் தொடும் எல்லா ஆண்களின் புராஸ்டேட் கோளத்திலும், மிக நுண்ணிய புற்றுசெல்கள் இருக்கத்தான் செய்யும். சொந்தக் கட்சியோ சொந்த சாதியோ ஆட்சியில் இல்லாத நிலையில், பேட்டை ரௌடி ஓரமாக திருவிழாவில் நின்று வேடிக்கை பார்க்கிற மாதிரி... அந்தப் புற்றுசெல்கள் நிறைய நேரம் அடங்கி ஒடுங்கித்தான் இருக்கும். அதற்குக் காரணம், நம் உடம்பில் உள்ள இயற்கையான புற்றுசெல் அழிப்புச் செல்கள் (Natural killer cells) மற்றும் செல்லின் வாழ்வைக் கணக்குப் பார்த்து ‘இந்தா, உன்

உயிர் பிழை - 16

டியூட்டி முடிஞ்சிருச்சு! நீ உடைந்து செல்லலாம்’ என ஒவ்வொரு செல்லின் வாழ்நாளைக் கணக்கிட்டுக் கண்காணிக்கும் Apoptosis சித்ரகுப்தன்கள் எனும் இருவர். இவர்களுடன், தேவைக்கு ஏற்றபடி வரவழைக்கப்படும் பட்டாலியன் பாதுகாப்புச் சத்துக்களும் இருக்கின்றன. இவர்கள் எல்லோரின் கண்காணிப்பில்தான், இயல்பாக உருவாகும் சின்னச் சின்னப் புற்றுக்கள் சேட்டை ஏதும் செய்யாமல் ‘தேமே' என இருந்து, தானே அழிகின்றன.

இன்று, இயல்பான பருவ மழை, புவி வெப்பமடைதலால் திடீர் தாழ்வழுத்த மண்டலமாகி, கொட்டோகொட்டென்று கும்மி எடுத்து, பட்டி பார்க்காத பழைய சாலை, தார் போடாத புது ரோடு, தூர் வாராத குளம் என அனைத்தையும் உடைத்து எறிகிறது. அதைப்போல, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பாற்றல், சுற்றுச்சூழல் சிதைவாலோ, மனதின் தாழ்வழுத்த மண்டலங்களினாலோ, முதுமையில் ஊட்ட உணவும் பழங்களும் தந்து பழுதுபார்க்கப்படாதபோதோ, பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு புற்று அணுக்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து நம்மை மூழ்கடிக்கின்றன. வெள்ளம் கை மீறும்போது ‘பேரிடர் மேலாண்மை' எந்தப் பலனையும் தருவது இல்லை. அதைப்போலவே, புற்று, பேரிடர் நிலையை அடைந்த பிறகு நாம் மேற்கொள்ளும் சிகிச்சைகள் செலவையும் வலியையும் தருகின்றனவே ஒழிய, சிரிக்கவும் மலரவும் வைப்பது இல்லை. அது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். 

வரும் முன் காத்தாக வேண்டிய கட்டாயத்தில், முன்னெச்சரிக்கை மட்டுமே உயிர் வாழ ஒரேவழி என்ற சிக்கலில் சிக்கியிருக்கிறது  நவீன வாழ்வு. ‘மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்பதே மருத்துவ உலகின் மாஸ்டர் பிளான்' என்றும், ‘வருடாவருடம் இயல்பு அளவைக் குறைத்துக் குறைத்து, நம்மை நோயில் சிக்கவைக்கப் போடும் சூப்பர் திட்டம் இது. வெளிநாடுகள் பலவற்றில் ‘பி.எம்.ஐ-25-க்கு மேல் வேணாம்பா' என்கிறார்கள். நாம் மட்டும்  ‘அதெல்லாம் கிடையாது. இந்தியாவுக்கு 23-க்கு மேல் பி.எம்.ஐ இருந்தாலே ‘குண்டு' என்கிறோம். இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் நாட்டுவெடிகுண்டு என்றெல்லாம் வரும் விமர்சனங்களைக் கவனத்தில்கொள்ளலாம் என்றாலும், முழுமையாக ஏற்பதற்கு இல்லை. உயிர் பிழையைப் பொறுத்தமட்டில் சில முன்னெச்சரிக்கை சோதனைகள் அவசியம். ‘உலகிலேயே தேவை இல்லாமல் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் இந்தியாவில் மிக அதிகம்’ என அறம் சார் மருத்துவ உலகு சொல்கிறது. அதே சமயம் சில எளிய பரிசோதனைகள், வாழ்வியல் மாற்றத்துக்கு வித்திட்டு நோயை நீக்கவும், தள்ளிப்போடவும் உதவும் எனில், ஒரு சிறிய அறுவைசிகிச்சையில் பழுதுபட்ட சிறுபகுதியை நீக்கிவிட்டு வாழ்நாள் எல்லாம் நிம்மதியாக வாழலாம். இந்தச் சோதனைகள் தவறானவை அல்லவே?

‘பித்தம் ஏன் மெலிந்து ஓடுது? கபம் கொஞ்சம் கூடியிருக்கே, உடலை உருக்கும் ஏதோ நோய் உள்ளதே, வாத நாடி வாசல் தாண்டிக் குதிக்குது. வெறும் மலச்சிக்கலா? Lumbar Radiculopathy-யா?’ என முன் கை நாடியைப்பார்த்துச் சொன்னவர்கள் நம் சித்தர்கள். காலையில் முதல் சிறுநீரை மண்குவளையில் பிடித்து, செக்கில் ஆட்டிய  நல்லெண்ணெயை அதில் சில துளிகள் விட்டு, சிறுநீரில் எண்ணெய் பரவும் விதம் பார்த்து  ‘ஆழிபோல பரவுகிறது; அரு போல் நீள்கிறது. இது மேக நோய்' எனக் கணித்தனர். அல்லது ‘வந்திருக்கும் நோய் வேகமாகச் சரியாகிவருகிறது. கவலை வேண்டாம்' எனச் சொன்னார்கள். அத்தகைய நுண்ணறிவுகொண்ட பெரும் மருத்துவ மரபை எங்கோ தூரமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஏனென்றால் இந்த மரபு மருத்துவ ஆய்வின் வெற்றிகள், பன்னாட்டு மருத்துவ வர்த்தகத்தை ஒழித்துக்கட்டிவிடும் என்பதால். எந்த ஆராய்ச்சியும் பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறும்பட்சத்தில் மட்டுமே அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மானுட வாழ்வின் நலனை மனதில்கொண்டு நிகழ்த்தப்படும் ஆய்வுகள் சொற்பமே. ஆனால், புற்றில் அப்படி ஓர் ஆய்வு இப்போது இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.

உயிர் பிழை - 16


 
 

வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை அடுத்த விநாடி அவர் பார்த்துவிட்டார் என ‘டபுள் ப்ளூ டிக்' காட்டும் நேரத்துக்குள், உங்கள் ஒரு துளி ரத்தத்தை அதன் கூறுகளை உங்கள் செல்போனில் படம்பிடித்து, அதில் உள்ள ஆப்ஸ் மூலமாக அனுப்பி, நமக்கு வர இருப்பது கணையத்தின் தலைப்பகுதி புற்று என அறிந்துகொள்ள முடியும். நோயாக புற்றுசெல்கள் வெளிப்படும் முன்னரே அதன் Micro RNA அடையாளம் காட்டும் இந்த ஆய்வை பிரேசில், சிலி, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூட்டாக  மேற்கொண்டு வருகின்றனர். ஆராய்பவர்கள் அமெரிக்காவுக்கு வெளியே, தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்பார்த்ததைப் போலவே இந்த மொத்த அறிவுத்தளத்தையும் Open source-ல் உலகின் எந்த மூலையைச் சேர்ந்த மக்களும் பயன்படுத்திக்கொள்ளும்படி வெளியிடப்போகிறார்கள் என்பதுதான் ஆய்வு அறத்தின் உச்சம்.

Cancer without disease என ஒரு துறை வளர்ந்துவருகிறது. Micro RNA–இல் அடையாளம் காணப்பட்ட புற்றுசெல், நாளடைவில் அது புற்றுநோயாக மாறும் முன்னரே அறியப்பட்டுவிடும். ‘சார், உங்களுக்கு வந்திருப்பது ஈரல் புற்றுசெல். இது நோய்க்கான நுழைவுச்சீட்டுத்தானே ஒழிய நோயாகவில்லை. ஒருவேளை புற்றாகிவிட்டால், அதைத் தீர்க்க இப்போது மருந்து இல்லை. ஆனால், இப்போதைய நிலையில் நீங்கள் தினம் 3 கி.மீட்டர் நடந்தால், உங்களுக்கு ஈரல் புற்று வராமல் காத்துக்கொள்ள முடியும்' என உங்கள் மருத்துவர் சொன்னால் அது எத்தனை இனிப்பான செய்தி? 

உயிர் பிழை - 16

‘3 கிலோ மீட்டரா... இனி செங்கல்பட்டில் இருந்துகூட ஆபீஸுக்கு நடந்தே வருகிறேன்' என ஓடத் தொடங்குவீர்கள் இல்லையா? அந்தச் சாத்தியம் இந்த ஆய்வு முடிவில் நிறையவே உண்டு. மருத்துவத்தைவிட உணவாலும் வாழ்வியல் பயிற்சியாலும்தான் இந்த நோயைத் தவிர்க்க முடியும் என்கிறார், டாக்டர் வில்லியம் லீ. இவர் ஹார்வர்டு பல்கலைக்கழக டாக்டர் மற்றும் புற்றுநோய் உணவியல் ஆராய்ச்சியாளர். வாய்ப்பு இருந்தால் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ‘Can v eat to starve cancer cells? எனும்  TED Talk’-ஐ 20 நிமிடங்கள் கேட்டுப்பாருங்கள். உலகமே உற்றுக்கேட்கும் பேச்சு அது.

 ‘அது எப்படிங்க அவ்வளவு பெரிய நோய், நடந்து, ஓடி, புல், பூண்டுகளைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கட்டுப்படும்?’ எனச் சிலருக்கு யோசனை வரலாம். சமீபத்தில் ஜப்பானில் நடந்த மனதை உலுக்கிய ஓர் ஆய்வு அறிக்கை இதற்கான பதிலைச் சொன்னது. புற்றுநோய் மருத்துவம் குறித்த உலக ஆய்வரங்கில், ஒரு பேராசிரியர், மேலே சொன்ன Micro RNA மற்றும் Messenger RNA சமாசாரங்கள் வாழ்வியல் மாற்றங்களில் எப்படிச் சீராகிறது எனும் ஆய்வு முடிவைச் சமர்ப்பித்தார். 10 நபர்களின் தினசரி நடைப்பயிற்சி, சரியான தூக்கம், தேடித்தேடி நல்லதைப் புசிக்கும் உணவுப்பழக்கம், டாய் சீ (சீன யோகா), முத்தம், காமம்... என அத்தனை விஷயத்திலும் மேற்படி Messenger RNA-ன் மாற்றங்களை ரத்தத்துளிகளில் பதிவுசெய்து, முடிவை அறிவித்தார்.

முடிவுகளின் வெற்றியைப் பார்த்து அரங்கமே அதிர்ந்தது. அந்த உரையின் முடிவில் இன்னொரு மாபெரும் அதிசயமும் நடந்தது. ‘அப்படி 10 ஆண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வேறு யாரும் அல்ல... அந்த 10 நபர்களும் நாங்கள்தான்’ என ஒன்றாக மேடைக்கு வந்தார்கள் ஒரு துறையின் 10 பேராசிரியர்கள். அர்ப்பணிக்கும் அறிவியலும் ஆய்வும் இன்னும் கிழக்கு உலக நாடுகளில் இருக்கத்தான் செய்கின்றன. ‘தன் சக  பேராசிரியரிடம் ஆய்வு வழிகாட்டுதல் பெறும் மாணவருடன், தன் மாணவர் பேசக் கூடாது; தன் ஆய்வு உபகரணங்களைத் தொடக் கூடாது’ எனும் விரோத-குரோதப் பட்டியலுடன் இயங்கும் இங்கு உள்ள பல ஆய்வாளர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. இவர்கள் என்றைக்கு நம் மண்ணின் மரபு சொன்ன ‘மெலியும் பித்தத்தை Messenger RNA உடனும் அரவுபோல் நீளும் சிறுநீர்க் குறிப்பை Micro RNA உடனும் கூட்டாக ஆராயப்போகிறார்கள்?' என்ற ஏக்கமும் விஞ்சுகிறது.

வரலாறுகள் இல்லாத, மரபு வாசம் முகராத, அறம் சார் வாழ்வியல் அறிவுறுத்தப்படும் மூத்த இனக் குடியின் அனுபவப் பகிர்வுகள் இல்லாத கிழக்கும் மேற்கும் உயிர் பிழை உருவாக்கத்தை அறியும் ஆராய்ச்சியின் உச்சத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றன. பிசாசுகளின் பேயாட் டத்தாலும் போன  ஜென்ம கர்ம வினையாலும் தான்  நோய் வருவதாக உலகம் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில், ‘நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடியைத் தேடப்பா' எனச் சொன்ன நுண்ணறிவுக் கூட்டம் நாம். நோய் அறிதலில் இப்போது என்ன செய்யப்போகிறோம்?

- உயிர்ப்போம்...