Published:Updated:

இந்திய வானம் - 16

இந்திய வானம்
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

கங்கையும் கோடம்பாக்கமும்

டிசம்பர் மாதத்தின் மாலை நேரத்தில்,   ஹரித்துவாரில் உள்ள லட்சுமணன் ஜுலா   பாலத்தில் நின்றிருக்கிறீர்களா?

‘ஆம்’ என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

காற்றின் நூறு விரல்கள் முகத்தைக் கோதி விளையாடும்; காலடியில் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் கங்கை. தொங்கு பாலத்தில் நின்றுகொண்டு கங்கையைப் பார்ப்பது அபூர்வமான அனுபவம். பெருகியோடும் கங்கையின் குறுக்கே அந்தத் தொங்கு பாலம் கட்டப்பட்டிருக்கிறது. வலிமையான இரும்புப் பாலம். இந்தப் பாலத்தை 1930-ம் ஆண்டில் கட்டியிருக்கிறார்கள். ஒரு டிசம்பர் மாத மாலை நேரத்தில் அங்கே நின்றிருந்தேன். கங்கையைப்போல காற்றும் ஒரு பெரு நதிதான் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். 

தள்ளுவண்டிகளும் ஸ்கூட்டர்களும் சைக்கிள் காரர்களும் அந்தக் குறுகிய பாலத்துக்குள் அநாயசமாகக் கடந்துபோகிறார்கள். பாலத்தின் நடுவே நின்றிருந்தேன். கையில் சூலாயுதம் ஏந்திய இளந்துறவி ஒருவன் என்னைப் போலவே காற்றை அனுபவிப்பதற்காக, கண்களை மூடி நின்றிருந்தான். பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். எதற்காக அந்தச் சிரிப்பு...  காற்றை நினைத்தா?

அந்தச் சிரிப்பு எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை ஒன்றிணைக்க சிறிய புன்னகை போதும். அடுத்த விநாடி மொழி தெரியாதவன்கூட சிநேகமாகிவிடுகிறான். அந்தத் துறவியின் தாடி மார்பு வரை கிடந்தது. காற்றில் அந்தத் தாடி அலைவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்திய வானம் - 16

‘உலகியல் ஆசைகள் வேண்டாம்’ என ஒதுங்கிய துறவிக்கும் காற்றின் இதம் தேவையாகத்தான் இருக்கிறது. கங்கையை குளிர்காலத்தில் காண்பது பேரனுபவம். வேட்டைக்குத் தப்பிய புலியைப்போல கங்கை சீறிக்கொண்டிருக்கிறது. கற்களை உருட்டி, தள்ளிக்கொண்டுபோகிறது. ‘நீர் மென்மையானது’ எனச் சொல்பவர்கள் அப்பாவிகள். தண்ணீர், உலகின் வலிமையான ஆயுதம். தொலைவில் படகுகள் கங்கையின் குறுக்கே போயும் வந்தும் இருந்தன.

டிசம்பர் மாதத்தின் விடிகாலையில், கொட்டும் பனியில், அகண்ட கங்கையே காணாமல் போய்விடுகிறது. இருட்டுக்குள்ளாகவே கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.

ஒருமுறை கையில் விளக்கு ஒன்றை ஏந்தியபடியே ஓர் இளம்பெண் கங்கையை நோக்கி நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன். தேவதைக் கதைகளில் படித்த காட்சி ஒன்று, நேரில் கடந்து செல்வதைப் போல் இருந்தது. அந்தப் பெண் கைவிளக்கை கங்கையின் படித்துறையில் வைத்துவிட்டு, கங்கையை வணங்கினாள். பின்பு குளிரை மறந்து, கங்கையின் சீற்றத்தை மறந்து தண்ணீருக்குள் இறங்கினாள். விளக்கின் சுடர் காற்றின் வேகம் தாளாமல் அசைந்துகொண்டேயிருந்தது. அந்தச் சின்னஞ்சிறு வெளிச்சத்தில் கங்கையைக் காணும்போது பரவசமாக இருந்தது.

தொங்கு பாலங்களுக்கு என்றே விசேஷமான கவர்ச்சி இருக்கிறது. அதில் நடக்கும்போது நாம் மிதப்பதுபோன்ற உணர்வை அடைகிறோம். லட்சுமணன் ஜுலாவில் நின்றுகொண்டிருந்தபோது உல்லாசப் பயணம் அழைத்துவரப்பட்ட ஆரஞ்சு வண்ண யூனிஃபார்ம் அணிந்த பள்ளிப் பிள்ளைகள் ஆரவாரத்துடன் பாலத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி ஓடும் கங்கையை எட்டிப் பார்ப்பதற்காகக் குனிந்தபோது, மற்றொரு சிறுமி அவளைப் பின்னால் இருந்து இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவர்களின் உற்சாகத்துக்கு அளவே இல்லை. ஒரு சிறுமி தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நாணயத்தை எடுத்து  பாலத்தில் இருந்து வீசி எறிந்தாள். அந்த நாணயம் காற்றில் சுழன்றுபோய் கங்கையில் விழுந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு சிறுமி உடனே தானும் ஒரு நாணயத்தை எடுத்து கங்கையில் போட்டாள். கங்கையில் வீசி எறியப்படும் நாணயங்கள் என்ன ஆகும்? அந்தச் சிறுமிகளுக்கு அப்படி நடந்துகொள்வது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

எனக்கும் ஒரு நாணயத்தை அப்படி கங்கையில் வீசி எறிய வேண்டும் என ஆசையாக இருந்தது. பையில் துழாவினேன்; சில்லறைக் காசுகளே இல்லை. சில நேரங்களில் பணத்தைவிட சில்லறை முக்கியமானது என்பதை அந்தத் தருணத்தில்தான் உணர்ந்தேன். மூன்று பள்ளி ஆசிரியர்கள், அந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு பாலத்தைக் கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் பாலத்தைத் தாண்டிப்போக விருப்பம் இல்லை. முன்னால் நடப்பதும், திடீரெனப் பின்னால் ஓடிவருவதுமாக இருந்தார்கள். பாலத்தைக் கடந்துபோக யாருக்குத்தான் பிடிக்கும்?
அன்று பாலத்தைவிட்டுத் திரும்பிவரும்போது மனதில் ஞானக்கூத்தன் கவிதை வரிகள் ஓடின...

‘முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

இந்நாளெல்லாம் பாலம்...

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.’

பாலம் என்றாலே தண்ணீரின் நடுவே அமைக்கப்படுவது என்பது உருமாறி, தரையிலும் பாலங்கள் உருவாக்கப்பட்டதைப் பற்றி் கூறும் இந்தக் கவிதையின் முடிவில் ஞானக்கூத்தன்...

‘ஜாக்கிரதையாகப் போய் வா

எங்கும் ஆட்கள் நெரிசல்

உன்னைத் தள்ளி உன்மேல்

நடக்கப்போறார் பார்த்துக்கொள்.’

என பாலம் சொல்வதுபோல முடித்திருப்பார்.  மனிதர் முதுகில் மனிதர் நடந்துபோவது அரூபமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘சாதுர்யம்’ என்ற பெயரில் வணிகம், அதை எளிதாக நடத்திக் கொண்டிருக்கிறது.

‘வாழ்க்கையைப் பயில்வதற்கு இயற்கையை நேசித்தல் வேண்டும்’ என தனது உரை ஒன்றில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்.  ‘காலம் என்பது மனிதன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல; அது பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது. மனிதன் சம்பந்தப் பட்டதற்கு பெயர் ‘நேரம்’. சில காலங்களில் சில மனிதர்கள் அல்ல,  சில நேரங்களில் சில  மனிதர்கள்தான்.

இயற்கையை நேசிக்க நிறையப் பாடங்கள் சொல்லிக்கொடுத்திருப்பவர் மகாகவி பாரதி. வானத்தைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் தாவரங்களைப் பற்றியும் புழு பூச்சிகளைப் பற்றியும்கூட அவர் நிறையச் சொல்லியிருக்கிறார். அவற்றை நாம் பயில வேண்டும் வாழ்க்கையில் எவ்வளவோ அவலங்களைப் பார்க்கிறோம். நம்பிக்கையற்று, விரக்தியுற்று, வாழ்வைச் சபிக்கிற மனிதர்களை எல்லாம் பார்க்கிறோம். ஆனால், வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதுதான் இலக்கியத்தின் கொள்கை; கோட்பாடு. வாழ்வின் மகத்துவத்தை உணர்த்துவதற்கு எழுதுகோலும் இலக்கியமும் பயன்படுதல் வேண்டும்.

தொழிலாளிகளிடமும் சாதாரண மனிதர் களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இந்த வாழ்க்கையின் உண்மை, உயிர்ப்பு துடித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, இந்த நம்பிக்கையை எல்லோருக்கும் தருதல் வேண்டும். விரக்தியுற்ற மனிதர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். வாழ்க்கையின் அவலங்களால் மனம் ஒடிந்துபோகிறவர்களுக்கு ‘வாழ்க்கை இப்படியே இராது; இது மாறும்’ என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனத்தை நல்ல நூல்கள் தரும். எப்படி நம் உடம்புக்கு ஆரோக்கியத்துக்கு நல்ல உணவும் நல்ல மருந்தும் தேவையோ, அது மாதிரி நமது ஆத்மாவுக்கும் நமது மனத்துக்கும் ஆரோக்கியம் தருவதற்கு நல்ல நூல்கள் தேவை’ என்கிறார் ஜெயகாந்தன்.

இதை நான் வாழ்ந்து அனுபவித்து அறிந்திருக் கிறேன். சென்னைக்கு வந்த நாட்களில் எங்கே தங்குவது எனத் தெரியாமல் நண்பர்களின் அறை அறையாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். அந்த நாட்களில் போக்கிடம் இல்லாமல் போனபோது சில நாட்கள் கோடம்பாக்கம் மேம்பாலம் அடியில் தங்கியிருக்கிறேன். அதன் அடியில் உயரமான மேடைபோல ஒன்றிருக்கும். அந்த இடத்தில் ஒரு மலையாளி தங்கியிருந்தார். அவர் பெயர் வர்கீஸ்.

ஒரு தேநீர் கடையில் மாஸ்டராக வேலை செய்துகொண்டிருந்தார். அந்தப் பாலத்து மேடை அவரது வீடாக உருமாறியிருந்தது. ஒருநாள் இரவு கோடம்பாக்கம் சாலையில் உள்ள அந்தத் தேநீர் கடையில் எங்கே போய்த் தங்குவது எனத் தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தபோது வர்கீஸ் என்னை தனது இடத்துக்கு வரும்படியாக அழைத்தார்.

இந்திய வானம் - 16

வாடிக்கையாக தேநீர் குடிக்க வருகிறேன் என்ற நட்புணர்வு காரணமாக இருந்திருக்கக்கூடும். ‘ஏதோ ஓர் அறைக்கு அழைத்துப்போகப் போகிறார்’ என நம்பி நானும் அவருடன் சென்றேன்.
பாலத்தின் அடியில் ஒரே இருட்டாக இருந்தது. மேடையில் ஏறுவதற்காக ஒரு கல்லைப் புரட்டிப் போட்டிருந்தார். அந்தக் கல்லில் கால் வைத்து மேடையில் ஏறிக்கொண்டபடியே அவர் இருட்டுக்குள் கையைவிட்டு, ஒரு தீப்பெட்டியை எடுத்து, குச்சியை உரசிக்காட்டினார்.

‘இதுதான் நம்ம ரூம். இங்கேதான் மூணு வருஷமா தங்கியிருக்கேன். பப்ளிக் டாய்லெட் பக்கத்துல இருக்கு. டிரெஸ், பெட்டி எல்லாம் டீக்கடையில வெச்சிருக்கேன். இதுல ரெண்டு பேர்  தாராளமா படுத்துக்கலாம்’ என்றார்.

கல்லில் ஏறி அந்த மேடையில் உட்கார்ந்து கொண்டேன். வர்கீஸ் ஒரு பீடியைப் புகைத்தபடியே சொன்னார்...

‘இதுதான் என்னோட காக்கா கூடு. ஒரு மனுஷன் தூங்குறதுக்கு இவ்வளவு இடம் போதும்தானே?’

தூசி படிந்துபோன அந்த இடத்தில் மடித்து வைத்திருந்த பெரிய போஸ்டர்களை விரித்துப் போட்டார். நாங்கள் இருவரும் அதில் படுத்துக் கொண்டோம். வர்கீஸ் கிழிந்துபோன துணி ஒன்றை எடுத்து, என்னிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்...

‘கால்ல கட்டிக்கோங்க. எலித் தொல்லை இருக்கு. அது காலைத்தான் கடிக்கும்.’

ஆச்சர்யமாக இருந்தது. இந்த இடத்துக்குள் படுத்து உறங்கி, அதன் கஷ்டங்களைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

‘டீக்கடையிலே படுத்துக்கலாம்தானே..?’ எனக் கேட்டேன்.

‘வந்த புதுசுல அங்கேதான் இருந்தேன். பிறகு இந்த இடத்தை ஒருநாள் தற்செயலாகக் கண்டுபிடிச்சேன். இங்கே அடிக்கிற காத்து  அங்கே இல்லை. காத்து இல்லாம என்னாலே தூங்க முடியாது.’
அன்று இரவு நானும் அவரும் நிறைய நேரம் பேசிக்கொண்டேயிருந்தோம். விடிகாலையில் உறங்கத் தொடங்கினோம். அவர் சொன்னதுபோல குபுகுபுவெனக் காற்று பாய்ந்தோடியது. ‘பாலத்தின் அடியில் படுத்துக் கிடக்கிறேன்’ என்ற உணர்வே இல்லாமல் ஆழ்ந்து உறங்கினேன்.

அதன் பிறகு சிலமுறை நானே விரும்பி அவரைத் தேடி அந்த இடத்துக்கு உறங்குவதற்காகச் சென்றிருக்கிறேன். ஒருநாள் பின்னிரவில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டு ரோந்து வந்த போலீஸ்காரர்கள் டார்ச்லைட் அடித்து எங்கள் இருவரையும் கீழே இறங்கி வரச் சொன்னார்கள். வர்கீஸின் முகத்தில் டார்ச்சை அடித்து, ‘இங்கே என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார் ஒரு போலீஸ்காரர்.
‘இதுதான் நான் தூங்குற இடம்’ எனச் சொன்னார் வர்கீஸ்.

‘எங்கே வேலை... எந்த ஊர்..?’ என விசாரித் தார்கள். வர்கீஸ், தான் வேலைசெய்யும் டீக்கடையின் பெயரைச் சொன்னார். என்னை யார் என வர்கீஸீடம் கேட்டதும், ‘தம்பி சார், கடையிலகூட வேலை செய்றான்’ எனச் சொன்னார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், ‘இங்க எல்லாம் படுக்கக் கூடாது, கிளம்புங்க...’ எனச் சொல்லி இருவரையும் துரத்திவிட்டார்.

எங்கே போவது எனத் தெரியவில்லை.  அதே இடத்தில் நின்றுகொண்டே இருந்தோம்.

‘என்னடா யோசனை, போகப்போறீங்களா, இல்லை... ஸ்டேஷனுக்கு வர்றீங்களா?’ எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

நாங்கள் இருவரும் இருட்டுக்குள்ளாகவே நடந்து, பாலத்தின் படிகள் வழியாக மேலேறினோம். பாலம் காலியாக இருந்தது. பாலத்தின் ஓரமாகவே நடந்து, லிபர்ட்டி தியேட்டர் வரை சென்றோம். மூடப்பட்ட கடைகள், ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள்.

‘இவ்வளவு பெரிய நகரத்துல ரெண்டு பேர் உறங்க இடம் இல்லை’ எனச் சொல்லிச் சிரித்தார் வர்கீஸ்.

விடியும் வரை என்ன செய்வது... எங்கே போவது எனத் தெரியவில்லை.

இருவரும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடந்துகொண்டிருந்தோம். மூடப்பட்ட கடையின் வெளியே சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஏதாவது ஒரு கடையின் வெளியே உறங்கிவிடலாமா எனக்கூடத் தோன்றியது. ஆனால், வர்கீஸ் நடந்து கொண்டேயிருந்தார். கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து, தெற்கு பக்கமாக நடந்தோம்.
எதற்காக நடக்கிறோம் எனப் புரியாமலேயே நடந்தோம். குடிசைகளாக இருந்த ஓர் இடத்தில் அடிபம்பு ஒன்று கண்ணில்பட்டது.

வர்கீஸ் என்னிடம் கேட்டார்...

‘குளிக்கலாமா?’

மணி அப்போது இரண்டு இருக்கும். ‘இந்த இரவில் யார் குளிப்பது?’ என்ற குழப்பமான மனநிலையில் ‘வேண்டாம்’ என்றேன்.

அவர், தான் குளிக்கப்போவதாகச் சொல்லி என்னை அடிபம்பை அடிக்கச் சொன்னார்.

அவர் அடிபம்பின் கிழே உட்கார்ந்துகொண்டார். நான் அடிக்கத் தொடங்கினேன். அடிபம்பு எழுப்பும் இரும்பின் ஓசை பலமாகக் கேட்டது. யாரோ விழித்துக்கொண்டு ‘யாரு?’ எனச் சப்தம் இட்டார்கள். ‘சபரிமலைக்கு மாலை போடப் போறோம்...’ என வர்கீஸ் உற்சாகமான குரலில் சொன்னார்.

அந்தக் குரல் அடங்கிவிட்டது. உடலை ஒடுக்கிக்கொண்டு அடிபம்பின் தண்ணீருக்குக் கீழே தலையைக் கொடுத்து பச்சைத் தண்ணீரில் வர்கீஸ் குளித்துக்கொண்டே இருந்தார். அதைப் பார்த்தபோது எனக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.

‘நானும் குளிக்கிறேன்’ என்றேன்.

‘குளிச்சா தூக்கம் போயிடும்’ எனச் சொல்லி சிரித்தபடியே அவர் அடிபம்பை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே நானும் சட்டையைக் கழற்றிவிட்டு, பேன்ட்டுடன் குளிக்க ஆரம்பித்தேன். தண்ணீர் உடம்பில் பட்டதும் ஜில்லென்று ஆகியது. குளிக்கக் குளிக்க உடம்பும் மனதும் பறப்பதுபோல் இருந்தது.

வர்கீஸ் சொன்னார்...

‘இந்தச் சுகத்தை ஊரில் ஒரு பயல் அனுபவித் திருக்க மாட்டான்; நாம அதிர்ஷ்டசாலிகள்...’

சொட்டும் ஈரத்துடன் நாங்கள் இருவரும் கோடம்பாக்கம் பாலத்தை நோக்கித் திரும்ப நடந்து வந்தபோது, எங்களை அறியாமல் சிரிப்பு பொங்கியது.

வர்கீஸின் தேநீர்கடையின் முன்பாக நாங்கள் விடியும் வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

விடிகாலையில் பால் வாங்கி வருவதற்காக வர்கீஸ் கிளம்பிப்போனார். அடக்கிவைத்திருந்த

இந்திய வானம் - 16

உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நண்பனின் அறையைத் தேடிப்போனேன். அன்றைய பகலில் எனக்குக் கடுமையான காய்ச்சல். பாரசிட்டமால் மாத்திரை ஒன்றை வாங்கிப் போட்டுக்கொண்டு திருவள்ளுவர் பேருந்தைப் பிடித்து, ஊரை நோக்கிச் சென்றேன். வீட்டில் இரண்டு வார காலம் நோயுற்று கிடந்தேன். அதன் பிறகு ஆறு மாத காலம் சென்னைக்கு வரவே இல்லை.

மீண்டும் இலக்கியப் பித்துடன் சென்னைக்கு வந்து இறங்கி, அறை தேடி அலைந்தபோது வர்கீஸின் கடைக்குப் போயிருந்தேன். அவர் இல்லை. ‘கோவைக்கு மாறிப்போய்விட்டார்’ என்றார்கள். முகவரி அறிய முடியவில்லை. ஆனால், இன்றும் கோடம்பாக்கம் பாலத்தைக் கடக்கும்போது ‘சாமானியர்களில் ஒருவனாக இந்தப் பாலத்தின் அடியில் படுத்துக்கிடந்தவன் நான்’ என்ற உணர்வு எழுகிறது. அந்த உணர் வெழுச்சிதான் இன்றும் என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.