Published:Updated:

"சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியம், தி.குமரகுருபரன்

"சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியம், தி.குமரகுருபரன்

Published:Updated:

``ஆனந்த விகடன்ல வந்த `மந்திரி தந்திரி' தொடர் அருமையா இருந்துச்சு தம்பி. ஜெயலலிதா உங்க மேல கேஸ் போட்டதை எதிர்த்து நான் ஒரு அறிக்கைவிட்டேனே... பார்த்தீங்களா?'' என்று விசாரித்தவரிடம் `குறும்புக் கேள்விகள்' என்றதும் `மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா?' என சிரிப்புடன் பதில் சொல்லத் தயாராகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
 
``முதல் வாரத்துலயே என்னைக் கலாய்க்க முடிவு பண்ணிட்டீங்க... ஓ.கே. நான் ரெடி'' என தம்ஸ்அப் காட்டி ரெடியாகிறார் தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் வானதி    சீனிவாசன். 

``இப்பதான் பண்ருட்டியார் இன்டர்வியூ முடிச்சுட்டு வந்தேன். இப்ப எனக்கு இன்டர்வியூவா? வெளிய வேற நாம ஒரு ரௌடியா  ஃபார்ம் ஆகிட்டோம். கொஞ்சம் ஈஸியாக் கேளுங்க'' என உற்சாகமாகிறார் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.  

``ஜாலியா ஜி.கே கொஸ்டின்ஸ் கேட்பீங்களா? நான் ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு. 100-க்கு 100 மார்க் வாங்குறேன் பாருங்க. ஷூட் த கொஸ்டின்ஸ். ஐ'ம் ரெடி'' - இது நடிகை ஐஸ்வர்யா.
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 "சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”

``விஜயகாந்த் நடிக்கும் புதுப் படத்தின் பெயர் என்ன?''

பதில்: `தமிழன் என்று சொல்.’

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ``ஹா... ஹா... நான் சினிமா செய்திகளை அப்டேட் பண்ணுறது இல்லியே தம்பி. ஆனா, விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியை நான் பாராட்டுறேன்; வாழ்த்துறேன்.''

வானதி சீனிவாசன்: ``முதல் பந்துலயே சிக்ஸர் அடிக்கலாம்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டீங் களேப்பா... `தமிழன்'னு ஆரம்பிக்கும், அது மட்டும்தான் ஞாபகத்துல இருக்கு.''

ரங்கராஜ் பாண்டே: யோசித்தவர், `` `தமிழன் என்று சொல்' அல்லது `தமிழன் என்று சொல்லடா'னு நினைக்கிறேன்.''

ஐஸ்வர்யா: ``புதுப் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தேன். விஜயகாந்த் சார் ஏதோ ராஜா மாதிரி ஒரு சேர்ல உட்கார்ந்து கையில வாள் எல்லாம் வெச்சி ருந்தார். அவர் மகன்கூட இந்தப் படத்துல நடிக்கப்போறார்னு சொன்னாங்க. ஆனா, படத்தோட பேர் தமிழில் இருந்ததால, எனக்குப் படிக்கத் தெரியலை. ஏன்னா என் தாய்மொழி தெலுங்கு. ஆனா, தமிழ் நல்லா பேசுவேன்.''

 "சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”

 ``தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன?''

பதில்: 6,835.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: `` `எனக்கு எண்ணிக்கை தெரியாது. ஆனா, தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகளில்தான் விழணும்'னு எழுதிடுங்க தம்பி.''

வானதி சீனிவாசன்: சிரிக்கிறார்... ``ஒரு முடிவோடுதான் கேள்வியை ரெடி பண்ணியிருக் கீங்கபோல. நான் நம்பர்ல வீக் தம்பி. டாஸ்மாக் ஒழிந்தால்தான் தமிழ்நாடு செழிக்கும் என்பது மட்டும் தெரியும்.''

ரங்கராஜ் பாண்டே: ``என் ஞாபகம் சரியா இருந்தா 6,700-ல இருந்து 6,750 வரைக்கும் இருக்கும். சரியா?'' பதிலைச் சொன்னதும்... ``நீங்க கேள்வி கேட்டு பதில் சொல்லுறதுக்குள்ள நாலு கடைகள் கூடியிருக்கப்போகுது'' எனச் சிரிக்கிறார்.

ஐஸ்வர்யா: செல்லக் கோபத்துடன், ``ஏங்க... என்னைப் பார்த்தா டாஸ்மாக் போற மாதிரியா இருக்கு? என்கிட்ட இப்படிக் கேட்டுட்டீங்களே? நான் ஒரு பச்சைக்குழந்தைங்க. சரி, 200, 300 இருக்குமா?’’ என்றவர், பதில் சொன்னதும் ஷாக் ஆகி, ``அய்யோ... அவ்வளவு லிக்கர் ஷாப்ஸ் இருக்கா? பாவம் மக்கள்'' என்கிறார்.

 "சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”

`` `நானும் ரெளடிதான்' படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவைச் செல்லமாக எப்படிக் கூப்பிடுவார்?''

பதில்: காதும்மா.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ``நான் தியேட்டர் போய் படங்கள் பார்த்தே 25 வருஷம் ஆகுது. பழைய படங்கள்தான் ஞாபகத்துக்கு வருது. வீரப்பா, `வஞ்சிக்கோட்டை வாலிபன்'ல `சபாஷ்... சரியான போட்டி'னு சொல்வார். (அதேபோல கையை அசைக்கிறார்). `பாவ மன்னிப்பு' படத்துல எம்.ஆர்.ராதா `வாய்யா ஜேம்ஸ்'னு சொல்வார். இப்ப டி.வி-யில் ஏதாவது படங்கள் போட்டா பார்க்குறது உண்டு. இப்போ `அஜித்’ங்குற பேருல ஒரு நடிகர் இருக்கார்ல?'' என டவுட் கேட்டுத் தெறிக்கவிட்டார்.

வானதி சீனிவாசன்: ``நான் கடைசியாப் பார்த்த படம் `வேதாளம்'. எனக்குப் பிடிக்கலை. சரி, நீங்க சொல்ற படம் நல்லா இருக்குமா?'' என்று விசாரித்தவரிடம் பதிலைச் சொன்னதும், ``அய்யோ... இப்ப காது, மூக்குனு எல்லாம் கொஞ்ச ஆரம்பிச்சுட்டாங்களா?'' எனச் சிரிக்கிறார்.

ரங்கராஜ் பாண்டே: ``இந்தப் படம் நான் பார்த்தேனே... ஏதாவது க்ளூ கொடுத்தால் டக்குனு சொல்வேன். க்ளு எல்லாம் சொல்ல மாட்டீங்களா? சரி விடுங்க, நானே யோசிக்கிறேன். ஆங்... பிடிச்சுட்டேன்... அந்தப் பொண்ணுக்கு காது கேட்காது. அதனால `காது... காதும்மா'னு செல்லமாக் கூப்பிடுவார். கரெக்ட்டா?''

ஐஸ்வர்யா: ``ரொம்ப ஈஸி கொஸ்டின். `காதும்மா', `காதும்மா'னு செல்லமாக் கூப்பிடுவார். விஜய் சேதுபதி படம் முழுக்கக் கலக்கியிருப்பார்.''  

 "சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா?”


 
``இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரை எத்தனை முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்?''

பதில்: 33 முறை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ``இது ரொம்பக் கஷ்டமான கேள்விப்பா. இதுவே நீங்க `மோடி இந்த ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் இந்தியாவில் இருந்தார்?’னு கேட்டா, அதைக் கணக்கிட்டுச் சொல்றது சுலபம். மோடி அநேகமாக உலகத்தில் இருக்கிற 75 சதவிகித நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்னு நினைக்கிறேன். இந்தப் பயணத்தால் இந்தியாவுக்கு ஒரு பயனும் கிடையாது.''

வானதி சீனிவாசன்: ``இதை போன வாரம்கூட ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னேன். இப்ப டக்குனு ஞாபகம் வரலை. நான்தான் முதல்லேயே சொன்னேனே தம்பி, `நம்பர்ல வீக்கு’னு. ஆனால், மோடி உலகச் சுற்றுப்பயணம் செய்வது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். மோடியின் ஆட்சியில் இந்தியா நிமிர்ந்து வளர்கிறது. இதையே நீங்க தலைப்பாகூட வைக்கலாம் பிரதர்.''

ரங்கராஜ் பாண்டே: ``சரியான நம்பர் ஞாபகத்துக்கு வரலை. 14 நாடுகளில் இருந்து 18 நாடுகள் வரை இருக்கலாம்.''

 ஐஸ்வர்யா: ``அவங்க கவர்மென்ட் விஷயமா எவ்வளவோ நாடுகளுக்குப் போவாங்க. அது எப்படி எனக்குத் தெரியும்? ஒரு யூகத்துல சொல்றேன்... 10 நாட்டுக்குப் போய் இருப்பாரா?'' பதிலைச் சொன்னதும். ``என்னது ஒரு வருஷத்துல 33 முறை வெளிநாடுகளுக்குப் போய் இருக்காரா? ஏன் இப்படி அலையுறார்?'' என்றவர் சுதாரித்து, ``நமக்கு எதுக்கு பாஸ் பாலிட்டிக்ஸ் கொஸ்டின். சினிமாவைப் பத்தி ஏதாவது கேளுங்க'' என்கிறார்.

``ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் திரையரங்கம் வாங்கியதாகக் கூறப்படும் நிறுவனத்தின் பெயர் என்ன?''

பதில்: ஜாஸ் சினிமாஸ்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ``அந்த நிறுவனத்தின் பெயர் தெரியவில்லை. ஆனால், 1,000 கோடி ரூபாய்க்கு 11 தியேட் டர்கள் வாங்கியதாகச் செய்திகள் படித்தேன். அவர் ஒரு தியேட்டர் மட்டும் வாங்கி யிருந்தால், எனக்கு ஞாபகம் இருக்கும். 11 தியேட்டர்களின் பெயரையும் எப்படி என்னால் மனப்பாடம் செய்ய முடியும்?''

வானதி சீனிவாசன்: ``இந்தத் திரையரங்கம் வேளச்சேரியில் இருக்குனு தெரியும். ஆனா, என்ன பேருனு ஞாபகத்துக்கு வரலை. ஏதோ சினிமாஸ்னு முடியும். கடைசியில, ஒரு கேள்விக்குக்கூட சரியான பதில் சொல்ல முடியலையேப்பா.''

ரங்கராஜ் பாண்டே: பட்டெனப் பதில் வருகிறது... ``ஜாஸ் சினிமாஸ். இந்தப் பதில்கூட இந்த வரியையும் சேர்த்து எழுதணும். ஜெயலலிதா தோழி சசிகலாவோ, அவரோட உறவினர்களோ தியேட்டரை வாங்கினாங்களா, இல்லையானு எல்லாம் எனக்குத் தெரியாது. இதுகுறித்த செய்தியைப் படிச்சேன்... அவ்வளவுதான். சரி, மொத்தத்துல நான் பாஸா... ஃபெயிலா?''

ஐஸ்வர்யா: சிரித்தவர்... ``திஸ் இஸ் டூ மச். சினிமாவைப் பத்தி கேளுங்கனு சொன்னதுக்கு பாலிட்டிக்ஸ் கலந்த சினிமா கொஸ்டீனா? சரி, ஜெயலலிதா தெரியும். சசிகலானா யாரு... ஜெயலலிதா ஃப்ரெண்டா? தியேட்டர் எல்லாம் வாங்கியிருக்காங்களா... ரொம்ப வசதியானவங்க போல. சரி, உங்க கேள்விகளுக்கு எல்லாம் நான் யதார்த்தமா, பதார்த்தமா பதில் சொன்னேன்னு எழுதி, என்னை பாஸ் பண்ணிவிடுங்க பாஸ்.''
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism