சினிமா
Published:Updated:

என் ஊர்!

திராவிட நாடு இல்லையேல் திருமணமும் இல்லை!

##~##

' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் தான் நாம் என்றாலும், சொந்த ஊரைப் பற்றி நினைக்கும்போது, என் ஊர் என்ற பற்றுதல் அடிமனதில் இருந்து வெளிப்படத்தானே செய்கிறது?'' என்ற கேள்வியுடன் விருத்தாசலம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் ரத்தின.புகழேந்தி!

 ''தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான ஊர்களில், விருத்தாசலமும் ஒன்று. 'முதுகுன்றம்’ என்பது விருத்தாசலத்தின் பழமையான பெயர். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இவ்வூர் 'முதுகுன்றம்’ என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. விருத்தம் என்றால், பழமை; அசலம் என்றால், மலை. அதனால் 'பழமலை’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

என் ஊர்!

இங்கு உள்ள இறைவனின் பெயர், பழமலைநாதர். அவர் முதுகுன்றீசுவரர் ஆகி, இன்று விருத்தகிரீஸ்வரர் ஆகிவிட்டார். இந்தக் கோயில் மிகவும் பழமையானது. பதின்மூன்றரைக் கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த இரிடேசியஸ் வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கோயில் கட்டப்பட்டு இருப்பதாக, நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

என் ஊர்!

நம் ஊரின் பெயர் தமிழில் இல்லையே என்பது இவ்வூர் மக்களின் ஆதங்கம். அதனால் ஊர்ப் பெயரை தமிழில் மாற்றும் கோரிக்கையை, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழந்தை தமிழரசன் மூலம் டெல்லி வரை எடுத்துச் சென்றும், அது நிறைவேறாமல் போனது. அதற்காக, திருமுதுகுன்றம் எழுத்தாளர்களை ஒன்றுசேர்த்து ஒரு கூட்ட மைப்பை ஏற்படுத்தி போராடியும் பார்த்து விட்டோம். ஆனாலும், அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை.

'ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ்’ என்பார் கள். விருத்தாசலத்தின் அழகை மெருகூட்டுவது, மணிமுத்தாறு. புண்ணிய நதி என்று மக்களால் நம்பப்படுகிறது. கோயிலை ஒட்டிய ஆற்றின் பகுதியை 'புண்ணிய மடு’ என்பர். மாசி மகம் அன்று  முன்னோர் வழிபாட்டுக்காகச் சுற்றி உள்ள கிராமத்து மக்கள், மணிமுத்தாறில் கூடுவர். காணும் பொங்கல் அன்று உள்ளூர் மக்கள் திரளாகக் கூடி, சிறுவர்கள் பட்டம் விடுவதையும் பெண்கள் கும்மியடிப்பதையும் இளைஞர்கள் கபடி ஆடுவதையும் கண்டு களிப் பர். 70-களில் அரசியல் கூட்டங்கள் மணிமுத்தாற் றங்கரையில்தான் நடக்கும்.

என் ஊர்!

தமிழகத்தின் ஒரே பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி, விருத்தாசலத்தில்தான் அமைந்து உள்ளது. அரசு பீங்கான் தொழிற்சாலை மூடப் பட்டாலும், பல தனியார் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இங்கு உள்ள அரசு நூலகம், பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

'திராவிட நாடு கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று பெரியாரிடம் ரத்தத்தால் கையெழுத்திட்டு கொடுத்த   வாக்குறுதியை சாகும்வரை காப்பாற்றிய கொள்கை மறவர் அண்ணன் ராஜு வாழ்ந்தது இந்த ஊரில்தான்.

''கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது'' என்ற தமிழர்களின் வணிக அறத் தைக் காப்பாற்றும் இவ்வூர் வணிகர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். அண்மையில் இங்கு அமைக்கப்பட்ட புறவழிச் சாலையால், நகரத்தின் பரப்பளவு விரிவடைந்து உள்ளது. அதனால், விளைநிலங்கள் வீட்டு மனைகள் ஆகி வருகின்றன. இங்கு உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் முந்திரி, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் பல புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அரசியலிலும் இலக்கியத்திலும் பல திருப்பு முனைகளைக் கண்டது விருத்தாசலம். கன்னியா குமரியையும் காஷ்மீரையும் இணைக்கும் தொடர் வண்டிகள் விருத்தாசலத்தைத்தான் தொட்டுச் செல்கின்றன!'

படங்கள்: ஜெ.முருகன்