Published:Updated:

உலக சினிமா, விவசாயம், மலையக வாழ்வு... ஸ்ட்ரெஸ் குறைக்க தங்கர்பச்சான் கையாளும் வழிமுறைகள்! #LetsRelieveStress

உலக சினிமா, விவசாயம், மலையக வாழ்வு... ஸ்ட்ரெஸ் குறைக்க தங்கர்பச்சான் கையாளும் வழிமுறைகள்! #LetsRelieveStress
உலக சினிமா, விவசாயம், மலையக வாழ்வு... ஸ்ட்ரெஸ் குறைக்க தங்கர்பச்சான் கையாளும் வழிமுறைகள்! #LetsRelieveStress

ங்கர்பச்சான்... படைப்பாளிக்கே உரிய அத்தனை குணங்களும் நிரம்பியவர். எந்தச் சூழலிலும் எவருக்காகவும் தனது கருத்துகளையும் கொள்கைகளையும் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக திரைத்துறையில் இருந்துகொண்டே தனது படைப்புகள் வாயிலாகவும் களப்பணி ஆற்றுவதன் மூலமும் தொடர்ந்து பணியாற்றிவருபவர். தமிழர் வாழ்வின் மீது பேரன்பும், அவர்களது அறியாமையின் மீது பெருங்கோபமும் கொண்ட மண்வாசனை மாறாத பச்சைத் தமிழர். அவர், தனக்கு எதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது, அதிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக்கொள்கிறார் என்பது குறித்து இங்கே விளக்குகிறார்...  

 ''எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்படும் இழப்புகள் அதனால் உண்டாகும் மனஅழுத்தம், மனப்பதற்றம், இவற்றிலிருந்தெல்லாம் மிக எளிதாக வெளியில வந்துடுவேன். ஆனா, இந்தச் சமூகம் சார்ந்து நடக்கிற விஷயங்களைப் பார்க்கும்போதுதான் ரொம்பவும் கொதித்துப்போய் மனஅழுத்தத்துக்கு ஆளாகிடுவேன்.

 பொதுவா நான் கோயில்களுக்குப் போறது கிடையாது. சில சமயம் குடும்பத்துடன் போவேன். ஆனா, அங்கே போனதுக்கப்புறம் நடக்கிற விஷயங்களைப் பார்த்தா, நம்மை மீறிக் கோபம் வெளிவரும். நம்முடைய கோயில்கள் எவ்வளவு அருமையான கலை வடிவங்கள்! அதை நாம பாதுகாக்க வேண்டாமா? அங்கே போய் இவங்க இஷ்டத்துக்கு பெயின்ட் அடிச்சுவெக்கிறாங்க, சுவத்துல, சிற்பங்கள்ல கிறுக்கிவெச்சுடுறாங்க. 

இப்போ சமீபத்துல, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு நானும் என் மனைவியும் போயிருந்தோம். அங்கே, சம்ஸ்கிருதத்துலதான் சுவாமிக்கு அர்ச்சனை பண்ணணும்ங்கிறாங்க. முருகன் நம்ம கடவுள். அவருக்கு சம்ஸ்கிருதத்துல அர்ச்சனை பண்றது எந்தவிதத்துல நியாயம்? நமக்குப் புரியாத மொழியில் பூசை பண்ணும்போது கஷ்டமா இருக்கு. இதைச் சொன்னா, எல்லாரும் நம்மை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. 'தேங்காயை உடைச்சியா? கையில கொடு'-னு வாங்கிக்கிட்டு நான் கிளம்பிக்கிட்டே இருக்கேன். இதையெல்லாம் எப்போ மாத்தப்போறோம். நம்ம கலை வடிவங்களை எப்படிப் பாதுகாக்க போறோம்னு கவலையா இருக்கு.

இதேமாதிரி திருமண வீடுகள்ல சாப்பிடப் போகும்போது 28, 30 வகைகள்ல, கூட்டு, பொரியல்னுவெக்கிறாங்க. அதை நிறையப் பேர் சாப்பிடாமலேயே இலையை மூடிவெச்சிடுவாங்க. எவ்வளவு உணவுப்பொருள்கள் வீணாகுதுனு பாருங்க. 

நாம சாப்பிடுற இலைக்கு ஒரு காய் பொரியலாக வருதுன்னா அந்தக் காய்க்குப் பின்னால ஒரு விவசாயக் குடும்பத்தோட உழைப்பு இருக்குங்கிறதை யாருமே நினைக்கிறதில்லை. இதுக்குத்தான் முதல்ல சட்டம் கொண்டு வரணும். அதுக்குக் கட்டுப்பாடு கொண்டு வரணும். இலையில என்ன தேவையோ அதை வாங்கி நிச்சயம் சாப்பிட்டுடணும். மிச்சம்வைக்கக் கூடாது. உங்ககிட்ட பணம் இருக்குதுங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாமா?

நம்ம மொழியை, நம்ம ஆட்கள் எப்படிக் கையாளுறாங்க பாருங்க... தமிழனா இருப்பார். ஆனா, தமிழைப் பேச மாட்டார். கண்டதையும் பேசிக்கிட்டு இருப்பார். தமிழ்ல பேசுறதையே கௌரவக் குறைச்சலாவும் நினைப்பார். வேற்றுமொழிக்காராங்கக்கிட்ட அவன் மொழியில பேசலாம். ஆனா,  தேவைப்படாத இடத்துலகூட ஆங்கிலத்துல பேசுறது ரொம்ப அசிங்கமா இருக்கு. மொழிங்கிறது நம்ம இனத்தோட சொத்து. அதை நாம பாதுகாக்காம யார் பாதுக்காப்பாங்க? 

உலகத்துலேயே வேற எந்த நாட்டுலயும் இப்படி ஒரு விஷயம் நடக்கவே நடக்காது. இங்கே மட்டும்தான் இப்படி நடக்குது. சில வீடுகள்ல அப்பா-மகன் வேற்று மொழியிலதான் உரையாடுறாங்க. ஐய்யய்யய்யோ... நம்மால இதையெல்லாம் பார்த்தா தாங்க முடியலை. அரசாங்கத்துக்குத்தான் அக்கறையில்லை. நமக்காவது இருக்க வேணாம்? 

வேட்டியைக் கட்டிக்கிட்டு, வெளி மாநிலங்களுக்கோ தலை நகரங்களுக்கோ போனால், நம்ம மேல மரியாதையே இருக்குறதில்லை. ஒருமுறை சினிமா தேர்வுக்குழுவுக்குப் போயிருந்தேன். அங்கே இருந்தவங்க என்னைப் பார்த்து கிசுகிசுனு பேசிக்கிட்டு சிரிச்சாங்கா. அப்புறம்தான் தெரிஞ்சுது... இங்கருந்து போகும் அரசியல்வாதிகள் பண்ற திருட்டுத்தனங்களெல்லாம் அங்கே உள்ளவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.

சுப்ரீம் கோர்ட்டுக்கு நடையா நடக்கிறதைப் பார்த்துட்டு, நம்ம மேல அவங்களுக்கு ஒரு மரியாதையே இல்லை. அதனால தமிழர்களை ரொம்ப வினோதமாகவே பார்க்கிறாங்க" என்றவரிடம், ``உங்களுடைய படங்கள் தோல்வி அடையும்போது அதை எப்படி எடுத்துக்குவீங்க?’’ என்று கேட்டோம்.

''நம்ம மக்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்னுட்டு போயிடுவேன். பொதுவாகவே  நான் என்னுடைய தேவைக்காகப் படம் பண்ணுறது குறைவு. மக்களுக்காகத்தான் படங்கள் எடுக்குறேன். ஆனா, அது அவங்ககிட்ட போய்ச் சேர முடியாத மாதிரி அவங்க புத்தியை பலவிதங்கள்ல மழுங்கடிச்சுவெச்சிருக்கோம். அந்த வேலையை ஒரு அரசாங்கமே செய்றதுதான் இன்னும் வேதனையான விஷயம்.

இப்படிப்பட்ட விஷயங்கள்தாம் எனக்கு மிகுந்த வலியையும் வேதனையும் தருபவை. 
இந்த மாதிரி மனஅழுத்தம், மன இறுக்கம் தரக்கூடிய நேரங்கள்ல நிறைய உலக சினிமாக்களைப் பார்ப்பேன். தொடர்ந்து 25, 30 படங்களைக்கூடப் பார்ப்பேன். அப்படித்தான் என் மனதை மடை மாற்றிக்கொள்வேன்.

என் உதவியாளரின் குழந்தை இருக்கு. அந்தக் குழந்தையோட சேர்ந்து விளையாட ஆரம்பிச்சிடுவேன். குழந்தைங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது நாமும் குழந்தையாகிப் போயிடுவோம். அவங்களோட உலகம் எனக்கு ரொம்ப நெருக்கமானதா இருக்கும். 

இல்லைன்னா, எங்க ஊருக்கு அல்லது என் விவசாய நண்பர்களுடைய தோட்டத்துக்குக் கிளம்பிப்போயிடுவேன். அங்கேபோய் ஒரு வாரம் பத்து நாள் தங்கி, அங்கேயே விவசாயம் பார்ப்பேன். நாட்டு மாட்டை ஏர்ல பூட்டி ஓட்டுவேன். விவசாயிங்களோட விவசாயியா வேலை பார்க்கும்போது, அந்த வெள்ளந்தியான மனிதர்களுடன் இருக்கும்போது, ஒவ்வொரு நிமிஷமுமே நாம மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி இழந்திருக்கோம்ங்கிறது தெரியும். மனசு ரொம்ப லேசாகிடும்.

இதைவிட இன்னொரு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம் இருக்கு. தமிழ்நாடு முழுவதுமுள்ள மலைப் பிரதேச மக்களின் தொடர்புகள் எனக்கு இருக்கு. நீலகிரி, தேனி போன்ற பகுதிகளுக்குக் கிளம்பிப் போய் மலையக மக்களோடு மக்களாகத் தங்கிடுவேன். அங்கேயே குளிச்சு, அங்கேயே சாப்பிட்டு, பத்து நாள்கள் தூங்கி எழுந்திரிப்பேன். மனசு ஈரத்துணியை இறுக்கிப் பிழிஞ்ச மாதிரி லேசாக ஆகிடும். கவலைகள் எல்லாம் காத்துல பறந்துபோயிடும்'' என மனஅழுத்தத்துக்கு வித்தியாசமான தீர்வுகளைச் சொன்னார்.