Published:Updated:

இந்திய வானம் - 17

India Vaanam - S.Ramakrishnan
பிரீமியம் ஸ்டோரி
News
India Vaanam - S.Ramakrishnan ( India Vaanam - S.Ramakrishnan )

எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னையின் இருண்ட காலம்

கவிதை எழுதி ரசிக்கிற அளவுக்கு மென்மையானது மட்டுமே அல்ல மழை. சமயங்களில் அதன் உக்கிரம் மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாதது என்பதை சென்னையில் பெய்த கனமழை நிரூபித்துள்ளது.

`வடகிழக்கு பருவமழையின் தீவிரம்' என இயற்கையைக் காரணம் காட்டினாலும் சென்னை வெள்ளத்தின் முக்கியக் காரணம் ஏரி, குளங்கள், கால்வாய்கள், மழைநீர் போகிற வழி அனைத்தையும் அடைத்துவிட்டு கொள்ளை லாபம் அடைந்த ரியல் எஸ்டேட் தொழிலின் பேராசை, அதற்குத் துணை நின்ற அதிகாரிகள், அனுமதி தந்த மாநகராட்சி நிர்வாகம், துணைபோன அரசியல்வாதிகள் ஆகியோர்தான். இவர்கள் அடித்த கொள்ளைக்கு சென்னைவாசிகள் கொடுத்த விலை மிக மிக அதிகம். 

`மழையின் காரணமாக பள்ளி விடுமுறை’ என சந்தோஷப்பட்ட பிள்ளைகள் அடுத்த சில நாட்களில் பயத்துடன், `எப்போ மழை நிக்கும், நம்ம வீடு மழையில மூழ்கப்போகுதா?' எனக் கேட்டதற்கு எவரிடமும் பதில் இல்லை. என் வாழ்வில் இவ்வளவு கனமழையை ஒரு போதும் கண்டதே இல்லை. 1989-ம் ஆண்டில் ஒருமுறை கல்கத்தாவில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஆந்திரா புயலில் மாட்டியிருக்கிறேன். ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. ஓர் இரவு முழுவதும் ரயிலில் மின்சாரம் இல்லாமல் இருந்தேன். நடுக்காட்டில் ரயில் நின்றிருந்தது; உதவிக்கு யாருமே வரவில்லை; உணவு கிடைக்கவில்லை. 

வானில் இருந்த ஒட்டுமொத்த மழையும் ஒன்றாக பூமிக்கு இறங்குகிறதோ எனும்படியாகக் கொட்டியது மழை. இடியுடன் கூடிய மின்னல்வெட்டு. `ஊ, ஊ...' என ஊளையிடும் சூறைக்காற்று. `இன்று, புயல் ஒட்டுமொத்த ரயிலையும் அடித்து இழுத்துக்கொண்டு போகப்போகிறது. வெள்ளத்தில் மிதக்கப்போகிறோம்' என மக்கள் பயந்து அலறினார்கள். யாருக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால், மறுநாள் காலை மழை வெறித்தது. அன்று மதியம் மீட்பு பணிகள் நடைபெற்று உதவி கிடைத்தது. எங்கெங்கோ சுற்றி அலைந்து, சென்னை வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அந்த புயலை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. ஆனால், அந்தப் புயல் தந்த அனுபவத்தைவிட நூறு மடங்கு மோசமான அனுபவமாக இருந்தது சென்னையைத் தாக்கிய கனமழை.

இந்திய வானம் - 17

நவம்பர் 10-ம் தேதி அன்று கனமழை தொடங்கியது.  ஆறு மணி நேரத்துக்குள் 66 மி.மீ மழை சென்னையில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 16 அன்று 256 மி.மீ மழை. மெள்ள உயர்ந்து 23 மற்றும் 24-ம் தேதிகளில் மழை உச்சத்தைத் தொட்டது. `மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்துள்ளது' என ஊடகங்கள் அறிவித்தன.  `போர்க்கால வேகத்தில் துயர்துடைப்புப் பணிகள் நடைபெறுகின்றன'  என அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் வாய்ஜாலம் காட்டினார்களே ஒழிய, மீட்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

அடுத்த சில நாட்கள் வெயில் அடித்தது. `இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது' என மக்கள் சந்தோஷம் கொண்டார்கள். ஆனால், `சென்னையில் மிகக் கனமழை பெய்யவுள்ளது' என நாசா எச்சரிக்கை செய்தது; பி.பி.சி செய்தி வெளியிட்டது. அதுபற்றிக் கேட்டபோது சென்னை வானிலை மையம், `அப்படி எதுவும் இல்லை. லேசாகவோ, கனமாகவோ மழை பெய்யக்கூடும்' என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது.

`சந்திராயனுக்கு ராக்கெட் விடுகிறோம்' எனப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நமக்கு அடுத்த சில நாட்களில் எங்கே, எவ்வளவு மழை பெய்யப்போகிறது என்பதைக் கண்டறியும் அதிநவீனத் தொழில் நுட்பத்தை சாத்தியப்படுத்த முடிய வில்லை. இவ்வளவுதான் நமது விஞ்ஞான சாதனை.

ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் இருந்தபோது ஒவ்வொரு நாளும் எந்த இடத்தில் எப்போது மழை பெய்யும், எவ்வளவு பெய்யும் என துல்லியமாக அறிவிப்பதைக் கண்டிருக் கிறேன். ஆனால் நாம் இன்றும், `மேக மூட்டம் காணப்படும், மிதமான மழை பெய்யும்' என வானிலை அறிக்கை வாசிக்கும் அளவில்தான் இருக்கிறோம். இது நமது இயலாமையின் அடையாளம்.

ஞாயிறு மழை இல்லை. வெயில் அடித்துக்கொண்டிருந்தது. `அவ்வளவுதான், இனி மழை பெய்யாது' என சென்னைவாசிகள் நினைத்தார்கள். ஆனால் திங்கட்கிழமை காலை சென்னையில் மறுபடியும் தொடங்கியது மழை. அப்படியே வலுத்துப் பெய்யத் தொடங்கி செவ்வாய்க்கிழமை முழுவதும் அடர்மழை. நாள் முழுவதும் நிற்கவே இல்லை. மழையின் சப்தம் ஏதோ வெட்டவெளியில் மாட்டிக்கொண்டதைப்போல அச்சத்தை ஏற்படுத்தியது.

ஊழிக்காற்றின் பேரோசைபோல சப்தம், உக்கிரமான பெருமழை, கண்ணாடி ஜன்னலை மழை தட்டும் ஓசை பயமாக இருந்தது.  படுக்கை அறை ஜன்னலில் காற்றின் வேகம் தாங்க முடியாமல் சிறிய விரிசல் உருவாகிவிடவே, உள்ளே தண்ணீர் புகத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் படுக்கை, தலையணை, கட்டில் யாவும் தண்ணீர். அந்த இடைவெளியை எப்படி அடைப்பது என துணியைக்கொண்டு திணித்து அடைத்தோம். அப்படியும் தண்ணீர் சீறியது. படுக்கை அறைக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் அள்ளி அள்ளி வெளியே ஊற்றத் தொடங்கினோம்.

பக்கத்துக் குடியிருப்பில் ஒரு வீட்டில் டாய் லெட்டில் தண்ணீர் போகாமல் வெளியே ததும்பி வீட்டுக்குள் மலம் மிதக்கத் தொடங்கியது. நகரம் எங்கும் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அருகில் உள்ள கடைக்குப் போய் தேவையான பிரெட், காய்கறிகள் வாங்கிக்கொண்டு வரலாம் என குடையோடு வெளியே வந்தேன். சாலையில் மூன்றடி தண்ணீர். கடைகளில் எதுவும் இல்லை. நகரின் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

இந்திய வானம் - 17

`கே.கே.நகர் வெள்ளத்தில் மிதக்கிறது; வேளச்சேரியில் படகு விட்டிருக்கிறார்கள்; துரைப்பாக்கம் மூழ்கிவிட்டது' என மக்கள் பேசிக்கொண்டார்கள். எல்லா முகங்களும் இருண்டுபோயிருந்தன. யுத்தகாலத்தில் கிடைத்த உணவுப்பொருட்களை அடித்துப் பிடித்து வாங்குவதைப்போல மக்கள் எந்தக் கடை திறந்து இருந்தாலும் தள்ளுமுள்ளு செய்து பொருளை வாங்கினார்கள்.  ஒரு பிரெட் பாக்கெட்டின் விலை 75 ரூபாய்; அரை லிட்டர் பால் பாக்கெட் 150 ரூபாய்; ஒரு வாழைப்பழம் 50 ரூபாய்; ஒரு மெழுகுவத்தி 20 ரூபாய்... என கிடைத்த பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பினேன். மின்சாரம் இல்லாததால் எங்கும் கொசு. மின்சாரத்தில் இயங்கும் கொசுவிரட்டிகள், கொசு பேட்டுகள் எதுவும் இயங்காது. கொசுவத்திச் சுருள்கள் மட்டுமே ஒரே வழி. இதனால் ஒரே ஒரு கொசுவத்திச் சுருள் 20 ரூபாய், 30 ரூபாய் வரை விற்கப்பட்டது.

எவரது செல்போனும் வேலை செய்யவில்லை. ரேடியோ மட்டுமே துணை. தொலைக்காட்சி செய்தியில் காட்டப்படும் சென்னை வெள்ளத்தைக் கண்டு பயந்துபோன உறவினர்கள், நண்பர்கள் தொடர்புகொள்ள முடியாமல் தத்தளித்தார்கள். யாரும் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மகன், மகள், உறவினர், நண்பர்களுக்கு என்ன ஆனது என வெளியூர்வாசிகளுக்கு தெரியவில்லை. இரண்டு பக்கமும் பதைபதைப்பு.

`சாலைக்கு சென்றால் செல்போன் எடுக்கிறது’ என்றார்கள். மழைக்குள்ளாக குடையை எடுத்துக்கொண்டு சாலைக்குச் சென்றேன். செல்போன் விட்டுவிட்டு எடுத்தது. ஒரு நண்பர் `என்  தந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை. உதவ முடியுமா?' எனக் கேட்டார். யாரிடம் கேட்பது, யார் போன் வேலை செய்கிறது எனப் புரியவில்லை.

சாலையில் வயதான பெண் நின்றுகொண்டு, கடைக்குப் போன தனது பேரனை காலை முதல் காணவில்லை என அழுது சப்தமிட்டுக் கொண்டிருந்தார். சிலர் குடிநீர் கேன் தேடி அலைந்துகொண்டிருந்தனர். பெரும்பான்மைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு திருமண மண்டபத்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. திருமண வரவேற்புக்கான பந்தல் சரிந்து கிடந்தது. அதன் உள்ளே போக முயன்ற சாலையோரவாசிகளை அனுமதிக்க மறுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாலையில் அலை அடித்துப் போவதுபோல தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மழை நிற்கவில்லை. சாலையில் மரங்கள் முறிந்துகிடந்தன. பைக், கார்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடந்தன. ரயில், விமானம், பஸ் எதுவும் ஓடவில்லை. ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் ரிப்பேர் ஆகி நின்றிருந்தது. அதன் ஒட்டுநர், `சைதாப்பேட்டையில் பயங்கர வெள்ளம். ஒரு குழந்தையின் பிணம் மிதந்து போவதைக்கண்டேன். நிறைய வீடுகள் தண்ணீரில் முழ்கிப்போயுள்ளன. மீட்புப் பணிகள் எதுவும் சீராக நடைபெறவில்லை. மருத்துவ உதவிகள் இல்லை. மெடிக்கல் ஸ்டோர்கள் இயங்கவில்லை. மக்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள்' என்றார்.

இன்னொருவர், `பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ஒரு கணவன் மனைவி  எனது பக்கத்து வீட்டில் மாட்டிக்கொண்டார்கள். கனமழையைத் தாங்க முடியாமல் குழந்தைக்கு ஜன்னி வந்துவிட்டது. இந்த இரவில் எந்த மருத்துவரிடம் காட்டுவது, என்ன முதலுதவி செய்வது எனத் தெரியாமல் வாய்விட்டு அழுதார்கள். எங்கள் வீட்டுக்கு அழைத்துவந்து மெழுகுவத்தி வெளிச்சத்தில் அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு உறக்கமற்று உட்கார்ந்திருந்தோம். இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது'' என்றார்.

சாலையில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தில் வாகனங்களில் மாட்டிக்கொண்டவர்கள், பேருந்து, ரயில் நிலையத்தில் போக்கிடம் இன்றித் தவித்தவர்கள், விமானம் ரத்தாகி சிக்கிக்கொண்டவர்கள், வீட்டுக்குள் கொஞ்சங் கொஞ்சமாக தண்ணீர் புகுந்துகொண்டிருப்பதைக் கண்டு பயந்தபடியே நாற்காலியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள், நோயாளிகள், கல்லூரி வளாகத்தில் சிக்கிக்கொண்ட விடுதி மாணவர்கள், ஏழை எளிய மக்கள்... என ஆளுக்கு ஒருவகையான துயரத்தைச் சந்தித்தார்கள். கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னைவாசிகளை மழை உலுக்கி எடுத்துவிட்டது.

தாம்பரத்திலும், அடையாறிலும், வேளச்சேரியிலும், பழைய மகாபலிபுரம் சாலையிலும், ஈக்காட்டுத்தாங்கலிலும் மழை வெள்ளத்தில் தண்ணீர் முதல் தளம் வரை வந்துவிட்டது. பத்தடி தண்ணீர், பதினைந்து அடி தண்ணீர்.

பல்வேறு செய்திகளைக் கேட்கக் கேட்க அடிமனதில் பயம் கொப்பளிக்கத் தொடங்கியது. என்ன ஆகப்போகிறது சென்னைக்கு, எப்படி இதைச் சமாளிப்பது, மின்சாரம் இல்லாமல் போனதுடன் அத்தனை உபகரணங்களும் செயலற்றுப்போய்விட்டன. கையில் இருந்த பணமும் சொற்பம். இதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கப் போகிறோம், என்றைக்கு மின்சாரம் திரும்ப வரும், எப்போது உணவுப் பொருட்கள் கிடைக்கும் என அச்சமாக இருந்தது. எனக்கு இருந்த அதே அச்சம் சென்னையில் வசித்த ஒரு கோடிப் பேருக்கும் ஏற்பட்டது.

இந்திய வானம் - 17

2005-ம் ஆண்டில் ஒரேயொரு முறை சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. அப்போது கே.கே.நகரில் வசித்து வந்தேன். எனது வீதியில் இடுப்பளவு தண்ணீர். ஆனால் அது இரண்டு நாளில் சீராகிவிட்டது. அதைத் தவிர சென்னையில் இவ்வளவு மழை பெய்து நான் கண்டதே இல்லை.

மின்சாரம் இல்லாத இரவு, அடர்ந்த இருளைக்  கரைத்்துக்கொண்டு விடாமல் பெய்த மழை, புலம்பிக் கதறும் மக்களின் வேதனைக் குரல்கள்...  இதன் பெயர்தான் நரகமா? கொசுக்கடி தாங்க முடியவில்லை. அட்டையை வைத்து விசிறிக்கொண்டு கை, கால்களில் துணியைச் சுற்றிக்கொண்டு கிடந்தோம். துளி உறக்கம் இல்லை. விடிய விடிய  மழை  கொட்டிக்கொண்டே இருந்தது.

நள்ளிரவில் பயத்துடன் இருட்டில் நின்றபடியே மழையை பார்த்துக்கொண்டிருந்தேன். வேட்டையாடும் மிருகத்தைப்போல மழை சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. தனது பாதையை அடைத்து, வீடு கட்டிக் கொண்டவர் களை பழிவாங்கத் துடிக்கிறதா மழை... ஆறு, கடலில் கலக்கும் முகத்துவாரங்களை மூடிய அநியாயத்துக்கு எச்சரிக்கை செய்கிறதா மழை? மழையைப் பார்க்கும்போது எத்தனை பேரை பலிகொள்ளக் காத்திருக்கிறதோ என பயமாக இருந்தது.

வீடு இழந்தவர்கள், முகாமில் தங்கவைக்கப்பட்டவர்கள் நிலை மிக மோசம். அழுகையும் விம்மலும் பிரார்த்தனையும்  தாங்க முடியாத கோபமுமாக மக்கள் தவித்துப் போனார்கள். குழந்தைகளின் பசிக்கு என்ன செய்வது எனப் புரியாமல் பெண்கள் அழுது புலம்பினார்கள். மழையைச் சபித்தார்கள். தங்களுக்கு உதவ யாருமே கிடையாதா என மன்றாடினார்கள். விடிகாலை ஐந்து மணிக்கு மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. வாசலுக்கு வந்தேன். சாலையைக் கடக்க முடியவில்லை. கடுமையான வெள்ளப்போக்கு. இருட்டுக்குள்ளாக மக்கள் பாலும் உணவும் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்.

இரண்டு, மூன்று மணி நேரம் மழை வெறித்தது. வெயில்முகம் தென்பட்டது. பல இடங்களில் தன்னார்வக்குழுக்களும் இளைஞர்களும் ஆர்வமாக முன்வந்து உதவிப்பணிகளை செய்யத் தொடங்கினார்கள்; உணவு தந்தார்கள். சிலர், அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக்கொண்டவர்களை தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றினார்கள். நாய்க்குட்டிகளைக்கூட அவர்கள் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னைவாசிகள் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம். அதிகாரிகள் என மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மழையைப் பார்த்து மக்கள் அடைந்த பயம் இன்னும் விலகவில்லை. இந்தத் துயரத்தை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.

`இந்த நகரில் வசிப்பவர்களில் எத்தனை பேர் இந்த நகரைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? இந்த நகரில் வாழ்வதற்கான அத்தனை சுகங்களும் வேண்டும் என நினைப்பவர்கள், நகரின் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது, அதற்கு என்ன வழி, யார் காரணம் என ஏன் யோசிப்பதே இல்லை?’ என `எஜுகேட்டர்ஸ்' என்ற ஜெர்மானியப் படத்தில் ஒரு கதாபாத்திரம் கேள்வி கேட்கும். அந்தக் கேள்வி சென்னைக்கும் பொருந்தக்கூடியதே.

நாம் சென்னை குறித்துக் கவலைப்படவும், அதன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறியவும் பெருமழை நம்மை எச்சரித்துள்ளது. நமது சுயலாபங்களுக்காக இயற்கையைச் சூறையாடியதற்குத் தந்த பதிலடி இது. பேரிடர் துயரத்தில் இருந்து விடுபட்டு முழுமையாக இயல்புநிலை திரும்ப பல மாதங்கள் ஆகக்கூடும். ஆனால், இதற்கான நிரந்தரத் தீர்வு என்பது அரசு மற்றும் நம் அனைவரின் கைகளிலும்தான் இருக்கிறது.

- சிறகடிக்கலாம்...