பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உயிர் பிழை - 17

மருத்துவர் கு.சிவராமன்

ப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்தான். ஆனால், அடையாற்று வெள்ளத்தில் சென்னை மூழ்கும் காலம் என்பது நமக்குப் பரிச்சயம் இல்லாதது. கடலோர மீனவனுக்கும் ஆற்றோர விவசாயிக்கும் அவ்வப்போது வரும் இந்த வலியைப் பார்த்து `அச்சச்சோ...'வென உச்சுக் கொட்டி நகர்ந்த  நகரத்து மனிதர்களைப் புரட்டியெடுத்தது  இந்த மழை வெள்ளம். அலைபேசி இயங்காமல், மின்சாரம் இல்லாமல், பால் பாக்கெட் வாங்காமல், ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாமல், வானம் பார்த்து ரொட்டி வாங்கும் நிலை நமக்கு வரும் என நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம். 

இவ்வளவு கனமழை நம் வாழ்நாளில் புதிது. ஆனால், `இனி இப்படித்தான்' என்கிறது, சுற்றுச்சூழலியல். இனி பருவமழைகள் இராது. முன்பனிக்காலம், பின்பனிக்காலம் எல்லாம் இலக்கியத்தோடு மட்டும்தான். மிக அதிக வெப்பம், கடும் பனி அல்லது அடைமழையும் வெள்ளமும் மட்டும்தான் இனி வரும் என்கிறார்கள். இந்தப் பேரிடர்கள் பெயர்த்தெடுப்பது சாலைகள், ஏரிகளை மட்டும் அல்ல, நலவாழ்வையும் சேர்த்துத்தான். சென்னையின் பேரழிவை மட்டும் கொஞ்சம் உற்றுப்பார்த்தால், கடந்த 30 வருடங்களில் இயற்கையின் சமச்சீர் நிலையை எல்லா வகையிலும் அழித்து, சூழலில் நாம் நடத்திய வன்முறையின் விளைவைத் தவிர்த்து வேறு காரணம் எதுவும் தெரியவில்லை.

உயிர் பிழை - 17

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என எல்லா உயிருக்கும் பொதுவானது இந்த பூமி எனும் Ecocentrism புரிதல் இருந்த உலகின்  மூத்தகுடிகளின் வரிசையில் உள்ளவர்கள் நாம். இந்தப் புரிதலை விட்டு விலகி, வளர்ச்சி என்ற பெயரில் சுயநல வீக்கத்துக்காக `உன் ஒருத்தனுக்காகப் படைத்ததுதான்டா இந்தப் பூவுலகு' என மனிதனை மட்டுமே மையப்படுத்தும் Anthropocentrism எனும் ஒட்டுமொத்த சுயநலச் சித்தாந்தத்துக்குள் நம்மைச் செருகியதுதான் பல நேரங்களில் எந்த முகாந்திரமும் இல்லாமல் உயிர் பிழை உருவாவதற்குமான ஒரு முக்கியக் காரணம்.

`இப்ப மணிதானே தெரியணும்? அது நல்லாத்தான் தெரியுது. எனக்கு எதுக்கு புது வாட்ச்?' என புதிதைத் தவிர்த்து, 24 வருடங்களாக தன் எச். எம். டி வாட்சை  காதைத் திருகி திருகி, செல்லமாகக் குலுக்கி கைக்கடிகாரம் அணிந்திருந்த நம் அப்பாக்களை அவ்வளவு லேசாக மறக்க முடியாது. ஆனால், இந்த மரபை நசுக்கி, சமீபமாக `பழசா? வித்துடு கண்ணு' என பழசைத் தூக்கி எறியச் சொல்லி பாட்டிகள் அடிக்கும் வணிகக் கும்மியை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கிறோம். இது, பல நோய்க் கூட்டத்தை, குறிப்பாக உயிர் பிழையை வரவேற்கும் கும்மி என்பது அந்த பாட்டிகளோடு சேர்த்து நம்மில் பலருக்கும் தெரியாது. உலுக்கும் பேரிடருக்கும் சரி, உயிர்  பிழைக்கும் சரி, நுகர்வோர் கலாசாரத்தில் நடத்தப்படும் சூழல் சிதைவுகள் மிகமிக முக்கியக் காரணம். 

அவசியம் இல்லாமல், `விலை குறைவு; அடுத்த வெர்ஷன்; அதிரடி அழகு' என்ற மிடுக்கு வரிகளுடன் விற்பனை செய்யப்படும் பல தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம் நாம். பயன்படக்கூடிய ஆனால் பயன்படுத்தாமல் குவியும் குப்பைகள், குறிப்பாக எலெக்ட்ரானிக் கணினிக் குப்பைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். இப்படிக் குவியும் குப்பைக்கிடங்கில் உலகில் நமக்கு இரண்டாம் இடம். ஒருபுறம் தினம் ஒன்றுக்கு  3,000 டன்னுக்கு மேலான திடக்கழிவுகளை அழகான பள்ளிக்கரணை ஏரியில் போட்டதில், காணாமல் போனது அந்த ஊர் குடிதண்ணீர் மட்டுமல்ல; வகைவகையான நீர்த் தாவரங்களும்,  நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் மீன் இனங்களும்தான்.  காய்ச்சல் வந்தால் கோழி அடிச்சு குழம்பு வைத்துக் குப்புறப்படுத்து எழுந்த காலம் உண்டு. அஞ்சால் அலுப்பு மருந்தை ½ டம்ளர் குடித்துவிட்டு அடுத்த வேளை வேலைக்குப் போன பருவம் உண்டு. இப்போது ஜுரம் 99 டிகிரியைத் தாண்டினாலே `டெங்குவா, இல்லை டெங்கு மாதிரியா?' என மருத்துவமனைக்குப் பதறி ஓடும் மோசமான நிலைக்குக் காரணம், சீரழிந்துபோன குப்பை மேலாண்மை. இன்னொரு பக்கம் மேலாண்மையே இல்லாமல் குவியும் கணினிக் குப்பைகள், உயிர் பிழை உருவாகவும் காரணமாகி வருகின்றன. எப்படி?

உயிர் பிழை - 17

`மனிதன் உயிர்வாழ அத்தியாவசியமானவை எவை?' எனும் ஐந்து மார்க் கேள்வியில், இனி காற்று, உணவு, உடை, உறைவிடம் என எழுதினால், ஐந்துக்கு நான்கு மதிப்பெண்தான் கிடைக்கும். முழு மதிப்பெண் பெற அதில் 4ஜி வசதி உள்ள செல்போனையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். அந்த அளவுக்கு செல்போன் நம் அன்றாட வாழ்வில் ஒட்டியிருக்கிறது. அவசரத் தொடர்பு ஊடகமாக இருக்க வந்த அறிவியல் உபகரணம் இது. இதன் அளப்பரிய பயன் மறுப்பதற்கே இல்லை. ஆனால், அவசியமே இல்லாமல் 24 மணி நேரமும் சட்டைப்பையிலும் விரல் நுனியிலும் ஒட்ட ஆரம்பித்ததன் விளைவு இன்னும் விலாவாரியாக ஆராயப்படவில்லை. ஒருகாலத்தில் சிகரெட் இப்படி கையில் இருந்தபோது எந்த மருத்துவரும், `இது புற்றுக்குக் காரணம்' எனச் சொல்லவில்லை. மாறாக புகைப்பது பிரெஸ்டிஜ் குறியீடாக இருந்தது. விஷயம் ஆய்ந்து தெரியவந்தபோது புகைக்குள் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட நேரடி புகைக்காரணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது அலைபேசியின் ஆன்டனா உமிழும் ரேடியோ கசிவு ஆற்றலுக்கும் (RF-EMF) இதே கேள்விதான். `இது, உடல்நலத்தைப் பாதிக்குமா?' என்ற கேள்விக்கு, `இது ஒன்றும் எக்ஸ்-ரே, காமா-ரே மாதிரி கிடையாது. எனவே, டி.என்.ஏ-வை எல்லாம் சிதைக்காது. போதாக்குறைக்கு, International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP) பரிந்துரைக்கும் பாதுகாப்பு வரம்புக்கும் குறைவாகத்தான் இந்த டவர் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்படவே வேண்டாம்' என்கின்றன செல்போன் கம்பெனிகளும் அரசாங்க அறிக்கைகளும். ஆனால், `இந்த  ரேடியோ கசிவு ஆற்றலை (RF-EMF) ஆன்டனாவுக்கு அருகாமையில் உள்ள மூளைப்பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்சிதைமாற்றத்தில் மாற்றத்தைத் தருகின்றன’ என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த ஆய்வைச் செய்தவர்கள் அமெரிக்க அரசின் `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த்' நிறுவனத்தார். இந்த விளைவு, மூளைப் புற்றுக்கட்டியை உருவாக்கக்கூடும் என்ற சந்தேகங்களை விதைக்கச் செய்துள்ளது.

அவ்வப்போது வரும் தலைவலியைத் தாண்டி வேறு எந்தத் தொந்தரவும் இல்லாத கணினிப் பொறியாளர் அவர். ஒருநாள் காலையில் வலி கொஞ்சம் தீவிரமாக இருக்கவே நண்பரின் வற்புறுத்தலில் மருத்துவரைச் சந்திக்க... வழக்கமான கண் சோதனை, ரத்தக் கொதிப்பு சோதனை, சைனசைடிஸ் சோதனை, மைக்ரேன் இருக்குமா என்ற சிந்தனையைத் தாண்டி..எதற்கும் இருக்கட்டுமே, என  மருத்துவர் வலிந்து சொன்னதில் சி.டி ஸ்கேன் எடுத்துப்பார்த்தார். அதிரவைத்தது அதன் முடிவு. வந்திருப்பது லேசான தலைவலி அல்ல, `கிளையோமா' எனும் மூளைப்புற்றுக்கட்டி. அவர் புகைத்தது இல்லை, மது அருந்தியதும் இல்லை, குடும்ப உறுப்பினரில், மூத்தோர் இளையோர் எவருக்கும் புற்றுக்கான மரபு ஏதும் இல்லை. அறுவைசிகிச்சை, கீமோ என பாதுகாப்பான பயணத்தில் இருக்கும் அவருக்கு உள்ள ஒரே கேள்வி `எப்படி எனக்கு இது  வந்தது?' என்பதுதான்.

 அலைபேசி ஓர் அவசர தொலைதொடர்பு சாதனம். அதை மறந்துவிட்டு `அட, உன் போன்ல கேமரா இல்லையா... எந்த யுகத்துலடா இருக்கே நீ... வெறும் 8 பிக்ஸல்தானா... வாட்ஸ்அப் இல்லையா... மொத்தம் எத்தனை ஆப்பு?’ என கேள்விகளைக் கேட்டு நல்ல நிலையில் பணியாற்றும் அலைபேசிகளைத் தூர எறிந்ததில் குவியும் குப்பைகள் அலைபேசிகளாக, பிற கணினிகளாக கிட்டத்தட்ட வருடத்துக்கு 2,400 மெட்ரிக் டன்னுக்கும் மேலே...’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே இது மாதிரியான புத்திசாலி போன்கள் அவசியம் இல்லாமல் சேமித்துவைக்கும் டேட்டா (இப்போது ரமணனும் மழையும் குறித்த மீம்ஸ் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு கோடி மக்கள் போனில் உறைந்திருக்கும்). இந்த டேட்டாக்களை சேமித்து வைக்கும் சர்வர்கள், அவை 24/7 இயங்க ஓடும் ஜெனரேட்டர்கள், இதற்கான தடையில்லா மின்சாரத்துக்காக `நாங்க அணுவைப் பிளக்குறோம்’ என பொய் சொல்லி, அதன் மூலம் கடலில் தள்ளும் கனநீர் என இவை எல்லாம் புற்றுக்காரணிகளை ஏதோ ஒருவகையில் புதுப்பிப்பவை அல்லது உசுப்பிவிடுபவையே.

தூக்கி எறியப்படும் செல்போன் பிளாஸ்டிக்கு களும் அதில் ஒட்டியிருக்கும் நுணுக்குத் துணுக்கு ரசாயனங்களும் இந்த பிரபஞ்சத்துக்கு முற்றிலும் புதிதானவை. செரிக்க முடியாத விஷ வஸ்துக்கள்.  நிலத்திலும் குளத்திலும் கொட்டப்படும் இந்தக் கூறுகள் காற்றில் கலக்கும். அந்த காற்றைக் குடித்து காலை நடைப்பயிற்சி செய்யும் வெகுஜனம் `காற்று வாங்கப் போனேன்; புற்று வாங்கி வந்தேன்' எனத் திரும்ப வேண்டியிருக்கிறது. இப்படியான காற்று நச்சு, உலகிலேயே மிக அதிகம் இருப்பது நம் டெல்லியில். அதற்கு அடுத்தடுத்த படியில் மும்பையும் சென்னையும் இருக்கின்றன.  உயிர் பிழை உருவாக்கும் புற்றுக்காரணிகள் பட்டியலில் பல இப்படியான குப்பையின் மூலம் காற்றுக்குள் கலந்தவைதான். `புகைக்காதே; குடிக்காதே' என வளர்க்க முடியும். `சுவாசிக்காதே' எனச் சொல்ல முடியுமா? 

 இன்னும்கூட மிச்ச மீதியிருக்கும் இயற்கை தந்த நலச் சொத்து பழங்கள். அந்தப் பழத்தின் சுவைக்காக, அதனைக் கருவறுத்து, வீங்கவைத்து, வேகமாக விளையவைத்த வன்முறையாளர்கள் நாம். கருவறுத்த விதையில்லா ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பப்பாளி எனும் வீரிய ஒட்டுரகப் பட்டியலை விளைவிக்கவும், விளைந்த கனிகளை பிற புள்ளினம் புழுவினத்திடம் இருந்து தனக்கு மட்டுமெனக் காக்கவும் நாம் நடத்தும் வன்முறைகள் இன்னும் ஏராளம். இதற்காக பூச்சிக்கொல்லி ஆர்கனோ பாஸ்பரஸ் ரசாயனங் களை வகைவகையாகத் தெளித்ததில் அவை கனியோடு மட்டுமல்லாமல், காற்றில் நீரில் கலந்து நம் கருவறை வந்து மரபணுவின் சுவரை உரசி உரசிப் பார்க்கிறது. அதில் சில உரசல் தீப்பிடிக்க வைக்கிறது. கிளையோமாவாக, அடினோ கார்சினோமாவாக கிளைக்கிறது.

மரபணு மாற்றம் பெற்ற பி.டி. கத்திரிக்காய்க்கு உச்ச நீதிமன்றம் இன்னும் தடை போட்டு யோசித்துக்கொண்டிருக்க, மெதுவாக `மரபணு மாற்றிய பி.டி கடுகு விவசாயம் செய்ய அனுமதி கொடுக்கலாமா?' என யோசித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. பி.டி கத்திரி மாதிரியே அத்தனை ஆபத்தையும் உள்ளே ஒளித்துவைத்திருக்கும் பி. டி  கடுகு, `தாளிக்கையில் வெடிக்குமா, உள்ளே போய் வெடிக்குமா?' என்பது சத்தியமாகத் தெரியாது.

- உயிர்ப்போம்...