Published:Updated:

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்!

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று வாழ்ந்த பாரம்பர்யம் நமது. நம் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டில் தொடங்கி, மிளகு, கிராம்பு வரை ஒவ்வொன்றுமே உயிர் காக்கும் சஞ்சீவினிகள்!

பொதுவாக, மசாலா பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்று ஒரு பார்வை உள்ளது. எதுவுமே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஞ்சறைப்பெட்டி அருமருந்து

அளவுக்கு மீறும்போதுதான் நஞ்சாகிறது. மசாலா பொருட்களை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதுபோலவே அவற்றை அடிக்கடி சாப்பிடவோ, தொடர்ந்து சாப்பிடவோ கூடாது. இவை வயிற்று மந்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை எதிர்க்கும் ஆற்றலைத் தரும்  இந்த மசாலா பொருட்களை அறவே தவிர்க்கவும் முடியாது.

இன்று, சாம்பார் பொடி முதல், கரம் மசாலா வரை அனைத்துமே பாக்கெட்களில் வந்துவிட்டன. ஆனால், இயன்றவரை இந்த பாக்கெட் பொருட்களைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கவர்கள், செயற்கைப் பதப்படுத்திகள், ஒவ்வாமையை ஏற்படுத்தி நம்மை நோயாளிகளாக்கும் ஆபத்து உள்ளது. மசாலா பொருட்களைத் தனித்தனியாக தரமானதா எனப் பரிசோதித்து வாங்கி, முறையாக அரைத்துப் பயன்படுத்தினால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் முதல் அதிமதுரம் வரை நாம் சமையலில் பயன்படுத்தும் மணமூட்டிகள், சுவையூட்டிகள், மசாலா பொருட்களின் பலன்களைச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

மஞ்சள்

• மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும்.

• மஞ்சளில்  பாலிபீனாலிக்  கூட்டுபொருட் களால் ஆன குர்குமின் என்ற சத்து இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.

• மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது, எழும்புகள் உறுதியாகும். ஆர்த்ரைடிஸ் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

மிளகு

• மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற  சத்துக்களைக் கொண்டது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.

• மிளகில், பைப்பரின் (Pipirine) எனும் சத்து உள்ளது. மிளகின் வாசனைக்கு இதுதான் காரணம்.

• மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாதம் சாப்பிடலாம். மிளகு சூப், மிளகு ரசம் மழை மற்றும் குளிர் காலங்களில் பருகலாம்.

• மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

சீரகம்

• சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.

• உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

• பித்தத்தைச் சரிசெய்வதால், ‘பித்த நாசினி’ என சித்த மருத்துவத்தில் சீரகத்தைப் புகழ்கிறார்கள்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• 200 கிராம் சீரகத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை விட்டு, நன்றாகக் கலந்து காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதை அரைத்துப் பொடித்துவைத்து, தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

• சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.

கருஞ்சீரகம்

• மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

• கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள்  பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பெருங்காயம்

• பெருங்காயம் ஒரு பிசின். இந்தியாவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

• வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக் கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவேதான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்துவந்தனர்.

• வயிற்று வலி, மார்பு வலி போன்றவை  ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனை வெல்லம் சேர்த்துத் தயாரித்த சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுவர, வலி குறையும்.

• மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.

• பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால், வாதப் பிரச்னைகள் குணமாகும்.

காய்ந்த மிளகாய்

• பித்தம், கப நோய் போன்றவற்றைச் சரிசெய்யும். ஆனால், மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

• 50 மி.லி நல்லெண்ணையில், 10 காய்ந்த மிளகாய் சேர்த்து, நன்றாகச் சூடுபடுத்த வேண்டும். பின்னர், மிளகாயை நீக்கிவிட்டு, எண்ணெயை மட்டும் எடுத்து, தலைக்குக் குளித்துவந்தால் தலைவலி நீங்கும்.

• அல்சர், அழற்சி, வாய்ப்புண் போன்றவை இருப்பவர்கள், காய்ந்த மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• மிளகாய் காரமானது என்பதால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமைக்கும்போது இரண்டு பங்கு தனியா (மல்லி) சேர்த்துச் சமைக்க வேண்டும். எனவேதான், நம் முன்னோர்கள் ஒரு பங்கு மிளகாய்ப் பொடிக்கு, இரண்டு பங்கு மல்லிப் பொடி சேர்ப்பார்கள். 

• காய்ந்த மிளகாய் வலியை நீக்கும் தன்மை கொண்டது. புளிச்சகீரை போன்றவற்றில் மிளகாய் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம்.

புளி

• புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.

• குமட்டல் இருக்கும் சமயங்களில்  புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து  குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.

• பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.

• அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது. 

கொடம் புளி

• ‘மலபார் புளி’ என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

• கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

• கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

• கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

கடுகு

• கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும்.

• கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

• கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும்.  குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

• எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.

சோம்பு

• சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு.

• சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது.

• சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள்.

• 10 மி.லி சோம்புத் தீநீருடன் (சித்த மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தினால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

தனியா

• தனியாவை, மல்லி, கொத்தமல்லி விதை என்றும் அழைப்பார்கள்.

• தனியா, கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். எனவே, இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.

• பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டைப்பாய்டு காய்ச்சல் இருக்கும்போது, தனியாவைப் பொடி செய்து, நீரில் கலந்து குடிக்கலாம்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும். வியர்வையை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

• கர்ப்பகாலங்களில் பல பெண்களுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருக்கும். கொத்தமல்லி விதையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைசுற்றல் நீங்கும்.

சுக்கு

• இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.

• சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

• பசியின்மையைச் சரிசெய்யும்.   உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு  பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

• சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

• செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய்

• ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப்  பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

• ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.

• கபத்தைக் குறைக்கும்  தன்மை ஏலக்காய்க்கு உண்டு. பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

• ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன. ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

பூண்டு

• பூண்டு, பிசுபிசுப்பும் காரத்தன்மையும் கொண்டது. இது, வெப்பத்தை திசுக்களுக்குள் கடத்த வல்லது. 

• கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மை சக்தி பெருகும்.

• பார்வையைத் தெளிவாக்கும், நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். கொலஸ்ட்ராலைக் கரைக்கும். ரத்தக் குழாய் அடைப்பைக் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• வாயுப் பிரச்னை கொண்டவர்கள், அரை டம்ளர் பாலில், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு மூன்று பூண்டுப் பற்களைச் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளர் பாலாகச் சுண்டியதும் குடிக்கவும்.

• பாக்டீரியா தொற்றால், தொண்டை கட்டிக்கொண்டால், பூண்டை நசுக்கி, ஒரு துணியில் வைத்துக் கட்டி, அனலில் காட்டினால், பூண்டு எண்ணெய் வெளிவரும். இதனுடன், தேன் கலந்து தொண்டையில் ஒற்றிஎடுக்கலாம்.

இஞ்சி

• வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

• இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமான மணடலத்தைச் சீர் செய்கிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

• இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளது. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில்  சேர்த்துவருவது நல்லது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• இஞ்சி டீ அருந்தலாம். பசியின்மைப் பிரச்னை இருப்பவர்கள், 100 கிராம் சீரகத்துடன், இஞ்சித் தூறலை நெய்யில் வதக்கி, நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, பிரச்னை சரியாகும்.

• புற்றுநோயை உருவாக்கும் செல்களை  அழிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ஜூஸ்கள் தயாரிக்கும்போது, இஞ்சியைச் சிறிதளவு சேர்த்து அரைத்துப் பருகலாம்.

வெந்தயம்

• வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்தது. ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

• வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. ரத்தக்கழிச்சல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

• வெந்தயத்தை வறுத்துப் பொடிசெய்து, வைத்துக்கொள்ளவும். தினமும் ஐந்து கிராம் வெந்தயப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிக்க, கெட்ட கொழுப்பு நீங்கி, உடல் எடை குறையும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைக் கட்டுக்குள் வைக்கும், தாய்ப்பால் அதிகரிக்க வழிவகுக்கும். வெந்தயக்களி செய்து சாப்பிடலாம்.

• மோரில் வெந்தயத்தைப் போட்டு அருந்தலாம், வெந்தயத்தில், லெனோலைக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

ஓமம்

• வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய பொருட்களில் ஓமத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.

• வயிறு வலி, அஜீரணக் கோளாறுகள், இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகளைச் சரி செய்யும் ஆற்றல், ஓமத்துக்கு உண்டு.

• ஓமத்தை வறுத்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வயிற்று வலி  நீங்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• பல்வலியைப் போக்கும் ஆற்றல் ஓமத்துக்கு உண்டு. சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.

• வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும்.

• ஓமத்தில் இருந்துதான், தைமால் (Thymol) என்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

கிராம்பு

• கிராம்பு, இனிப்புச் சுவையும் காரச்சுவையும் ஒருங்கேகொண்டது. சுருசுரு என இருக்கும் இது, பூஞ்சைத் தொற்றுக்களை அழிக்கும்.

• கிராம்பு, பற்பசைகளில் பயன்படுத்தப் படுகிறது. கிராம்புத் தைலமும் பல்வலிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

• வாந்தி வரும் உணர்வு இருந்தால்,  தண்ணீரில் சிறிது அளவு கிராம்பு போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வாந்தி உணர்வு மறையும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• பல்வலி முதலான பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்னைக்கு, கிராம்பை நன்றாகப் பொடித்து, வலி ஏற்படும் இடத்தில் வைத்தால் வலி குறையும்.

• கிராம்பு சிறந்த மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது.

• வைட்டமின் கே சத்து உள்ளது. கிராம்பில் இருந்து எடுக்கப்படும் பல்வேறு எண்ணெய்களும், உடலுக்கு நன்மை தரும். எனினும், கிராம்பை மிகக் குறைவாக சமையலில் பயன்படுத்தினால் போதுமானது.

லவங்கப் பட்டை

• மசாலா பொருட்களிலேயே மிகமிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது லவங்கப் பட்டைதான்.

• லவங்கப் பட்டைக்கு, நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பான டிரைகிளிசரைடு  அளவை, இயற்கையானமுறையில் குறைக்க லவங்கப் பட்டை உதவும்.

• பி.சி.ஓ.டி பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், லவங்கப் பட்டையைச் சாப்பிட்டு வந்தால், மெள்ள மெள்ள பிரச்னை சரியாகும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• லவங்கப் பட்டையை நன்றாகப் பொடித்து, 500 மி.கி லவங்கப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவந்தால், உடலில் சர்க்கரை அளவு குறையும்.

• லவங்கப் பட்டையில் மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

• பிரியாணியில் லவங்கப் பட்டை சேர்ப்பதால், எண்ணெய் காரணமாக ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகள் தடுக்கப்படும்.

பிரிஞ்சு இலை

• பிரிஞ்சு இலை, குருமா, பிரியாணி, குஸ்கா போன்ற பல்வேறு விதமான டிஷ்கள் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

• பிரிஞ்சு இலையில் கிட்டத்தட்ட அனைத்து  அத்தியாவசியச் சத்துக்களுமே அதிக அளவு நிறைந்திருகிறது. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிக அளவு  உள்ளன.

• பிரிஞ்சு இலை செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். இமயமலைப் பகுதியில்தான் பிரிஞ்சு இலை கிடைக்கிறது. பிரிஞ்சு இலை, நல்ல நறுமணம் கொண்டது. நறுமணம் அற்ற இலைகள் போலிகள் என அறிந்துகொள்ளலாம்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து மிக அதிக அளவில் இருக்கிறது. மாங்கனீசு சத்தும் அதிக அளவு உள்ளது.

• அல்சர் போன்ற பல்வேறு வயிற்றுப் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆர்த்ரைடிஸ், தசை வலிகள் போன்றவற்றுக்கு, பிரிஞ்சு இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

சாதிக்காய்

• சாதிக்காய் இனிப்புப் பண்டங்களில் சுவையூட்டியாகவும், மசாலா பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதிக்காயின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாதிப்பத்ரியும் மசாலா பொருள்தான்.

• சாதிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். விந்து கெட்டிப்படும்.

• கால் டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி, அரைத் தேக்கரண்டி கசகசா, ஏலக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்திவர,  நல்ல தூக்கம் வரும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• ஜாதிக்காயை நன்றாக அரைத்து, பேஸ்ட் போல செய்து, தண்ணியில் கலந்து குடித்துவந்தால், வயிற்றுப்போக்கு சரியாகும்.

• ஆன்டிஏஜிங் கிரீம்கள் தயாரிப்பில் ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயை அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கும்.

• ஜாதிக்காய் பேஸ்ட்டை பருக்கள் மீது தடவிவர, முகப்பருப் பிரச்னை நீங்கும்.

கசகசா

• கசகசா  ருசிக்காகப்  பயன்படுத்தப்பட்டாலும் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, குடல் புண்களை ஆற்றும்தன்மை மிகுந்தது.

• பாப்பி செடியில் இருந்து கசகசா கிடைக்கிறது. கசகசா சிறந்த ஆண்மைப் பெருக்கி என்கிறது சித்த மருத்துவம்.

• இதைச் சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கிறது. கசகசா உடலை வலுவாக்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• கசகசாவைப் பாலில் கலந்து குடித்துவந்தால், தூக்கமின்மை பிரச்னை சரியாகும். சித்த மருத்துவமுறையில் கசகசா லேகியம் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்.

• சீதபேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கொண்டது.

• கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கல்கண்டு, போன்றவற்றை சம அளவு  அரைத்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும்.

அன்னாசிப்பூ

• செரியாமை நோயைக் குணப்படுத்தும். இனிப்புகள் செரிமானம் ஆகத் தேவையான என்சைம்களைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. உணவை அழகுபடுத்தவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.

• பன்றிக் காய்ச்சலுக்கு அன்னாசிப்பூவில் இருந்துதான் மருந்து தயாரிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில், அன்னாசிப்பூ இதழ் ‘தக்கோலம்’ என அழைக்கப்படுகிறது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால், அன்னாசிப்பூவைக் கொதிக்கும் நீரில் போட்டு, மேலே தட்டு வைத்து மூடி, கொதிக்கவைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டிப் பருகிவர, உடல் பலமாகும்.

• அன்னாசிப்பூ, பசியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மசாலா பொருட்களில் அன்னாசிப்பூ பயன்படுத்துவதால்தான், சுவையும் கூடுகிறது நிறைய சாப்பிடவும் முடிகிறது.

• அன்னாசிப்பூவுக்கும், அன்னாசிப் பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது, அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து கிடைக்கிறது.

குங்குமப்பூ

• குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், மேனி பொலிவு பெறும்.

• குங்குமப்பூவைச் சாப்பிடுவதற்கும், குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

• நம் ஊர்களில் விற்கப்படுபவை பெரும்பாலும் தரம் குறைந்தவையே. குங்குமப்பூதான் இந்தியாவில் விலை உயர்ந்த பூ. காஷ்மீரில்தான் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• குங்குமப்பூ, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை ஆகியப் பிரச்னைகளைச் சரிசெய்யும். இனிப்புகளில் குங்குமப்பூச் சேர்த்துச் சாப்பிடலாம்.

• கர்ப்பிணிகள் குங்குமப்பூவைச் சாப்பிடுவதால், இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வலுவடையும்.

• சூடான பாலில் குங்குமப்பூவைக் கலந்ததும் நல்ல சிவப்பு நிறம் வந்தால், அது போலியான குங்குமப்பூ. பாலில் கலந்ததும், பல மணி நேரத்துக்கு பிறகு, தங்க நிறத்துக்கு மாறுவதே தரமான குங்குமப்பூ.

திப்பிலி

• திப்பிலி, இனிப்புச்சுவையும் காரத்தன்மையும் கலந்தது. உடல் சூட்டைத் தேக்கிவைக்க உதவும். திரிகடுகத்தில் திப்பிலி முக்கியமானது.

• திப்பிலி, சளியைப் போக்கும், குரல் வளத்தைப்  பெருக்கும். மூக்கடைப்புப் பிரச்னையைச் சரிசெய்யும்.

• ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், திப்பிலிப் பொடி இரண்டு கிராம் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர குணம் கிடைக்கும். கோழை வெளியேறும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• குளிர் காலத்தில், திப்பிலி ரசம், திப்பிலிப் பால், திப்பிலிக் கஞ்சி போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம்.

• கண்டந்திப்பிலி வேர் மருத்துவக் குணம் நிறைந்தது. மாதவிடாய் காலத்தில் திப்பிலியை உணவில் சேர்த்துவர, சினைமுட்டை நன்றாக உருவாகும்.

• புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல், திப்பிலிக்கு உண்டு. தொடர்ந்து, திப்பிலியைச் சாப்பிட்டுவந்தால் எந்த நோயும் அண்டாது.

திரிகடுகம்

• திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த கூட்டுக் கலவை . சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்துக் கலந்து, திரிகடுகப் பொடியாகப் பயன்படுத்தலாம்.

• தலைவலி, பித்தம், வாந்தி ஆகிய பிரச்னைகள் நீங்கும். கோழை, சளி, ஆஸ்துமா பிரச்னைகளை திரிகடுகம் போக்கும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை உடலில் சமநிலைப்படுத்தும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• திரிகடுகத்தை டிகாக்‌ஷன் போல செய்துகொள்ளலாம். தண்ணீரில் திரிகடுகப் பொடியைப் போட்டு, சூடுபடுத்தி வடிகட்டி, டிகாக்‌ஷனைச்  சேமித்துவைத்துகொள்ள வேண்டும். திரிகடுகம் டிகாக்‌ஷனை பாலில் ஊற்றி, சிறிது பனைவெல்லம் சேர்த்து, திரிகடுகம் பால் தினமும் அருந்தலாம்.

• திரிகடுகம் டிகாக்‌ஷன், ஒரு டம்ளர் தண்ணீர், பனை வெல்லம் ஆகியவற்றைக் கலந்து கொதிக்கவைத்து, ஆறவைத்துப் பருகினாலும் உடல் பலம் பெறும்.

இந்துப்பு

• இந்துப்புக்கு, சைந்தவம், பாறை உப்பு என்ற பெயர்களும் உள்ளன. இது, சற்று ஊதா நிறத்தில் இருக்கும்.

• மலக்கட்டை சரிசெய்யும் ஆற்றல் இந்துப்புக்கு உண்டு. வயிற்றில் உருவாகும் வாயுப்  பிரச்னைகளையும் சரிசெய்யும். சிறுநீரைப் பெருக்கும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• இந்துப்பு 20 கிராம், சீரகம் 10 கிராம், ஓமம் 25 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 100 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சூரணம் போல செய்து மோரில் கலந்து குடிப்பது நலல்து.

• சுளுக்கு ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.

• உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்ற  உப்பை உணவில் சேர்ப்பதைவிட, இந்துப்பை  மிகச் சிறிதளவு சேர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் சோடியம் அளவு குறைவாக இருக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் தடலாடியாக அதிகரிப்பது தடுக்கப்படும்.

கறிவேப்பிலை

• கறிவேப்பிலை, வாசனைக்கும் ருசிக்கும் மட்டும்  சமையலில் பயன்படுத்தப்படுவது இல்லை. இதில், பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கின்றன.

• கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், மந்தம், மலக்கட்டு நீங்கும்.

• கறிவேப்பிலையுடன் சுட்ட உப்பு, புளி, வறுத்த மிளகாய், வறுத்த உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையலாகச் செய்து சாப்பிட்டுவர, கழிச்சல், பித்த வாந்தி குணமாகும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• கறிவேப்பிலையைச் சாப்பிட்டுவந்தாலும், கறிவேப்பிலைத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துவந்தாலும், முடி நன்றாகக் கருகருவென வளரும்.

• சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கும். குறிப்பாக, பாதங்களைக் காக்கும்.

• ரத்த சோகையைத் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.

எள்

• ‘இளைச்சவனுக்கு எள்ளு’  என்பது பழமொழி, உடல் எடை கூட நினைப்பவர்களுக்கு  எள்ளு சிறந்த தீர்வு.

• எள், கால்சியம் நிறைந்தது. பாலில் இருக்கும் கால்சியத்தைவிட,  எள்ளில் இருக்கும் கால்சியம் மிக அதிகம். எலும்புகள் பலம் அடைய எள் சாதம் சாப்பிடலாம்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• உடல் மெலிந்த குழந்தைகளுக்கு எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய் போன்றவை  சாப்பிடக்கொடுக்கலாம். எள்ளில், மக்னீசியம் சத்து அதிக அளவு உள்ளது. சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் எள்ளுக்கு உண்டு.

• எள்ளை அளவாகப் பயன்படுத்துவதே நல்லது. வெள்ளை எள்ளைவிட, கறுப்பு எள்தான் சிறந்தது.

• கல்லீரலைக் காப்பதில் முக்கியப் பங்கு எள்ளுக்கு உண்டு. எனவே, அனைவருமே எள் சாப்பிடலாம். எள்ளைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, இரவு நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.

வால் மிளகு

• வால் மிளகு குளிர்ச்சித்தன்மை கொண்டது. மேலும், இதைச் சாப்பிடும்போது நாக்கில் ஒரு விறுவிறுப்புத்தன்மையை உணர முடியும்.

• இரும்புச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து போன்றவை வால் மிளகில் அதிகம்.

• தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• சைனஸ்  பிரச்னை உள்ளவர்கள் வால்மிளகு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.

• தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், வால்  மிளகை  நெய் விட்டு வறுத்து, அரைத்துப் பொடித்துவைத்து, அரை தேக்கரண்டி வால் மிளகுப் பொடியை எடுத்துத் தேனில் குழைத்து, நன்றாகத் தொண்டையில் படுமாறு வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தொண்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும்.

• வாயுப் பிரச்னை உள்ளவர்கள், அல்சர் கோளாறு உள்ளவர்கள் வால் மிளகைக் குறைவாகப் பயன்படுத்துவதே நல்லது.

கடுக்காய்

• இரவு நேரத்தில்  உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு  தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.

• கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் விளக்கினால், பல் உறுதியாகும். ஈறில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• 25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியை எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் குடித்துவந்தால், கண் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

• 20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைக்குச் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண் குணமாகும்.

• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவைதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.

கல்பாசி

• கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

• கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச் சுவைகொண்டது.

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள்.

• கல்பாசிப்பூ, செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குணமாக்கும்.

• உடல் வெப்பத்தைக் கட்டுக்குள்வைக்கும். ஆன்டிபாக்டீரியல் மருந்தாகச் செயல்படுகிறது. சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். வெறுமனே கல்பாசியைச் சாப்பிடக் கூடாது. உணவுப்பொருளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.

அதிமதுரம்

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

• தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும். கப நோய்களைக் குணப்படுத்தும் கண் நோய்கள் நீங்கும், பார்வை தெளிவடையும். வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் அதிமதுரம் சரி செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும். ப்ராஸ்டேட் மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

- பு.விவேக் ஆனந்த்,

படங்கள்: தே.தீட்ஷித்