Published:Updated:

குப்பைகளின் தலைநகரம் சென்னை?

ந.பா.சேதுராமன், படம்: ஆ.முத்துக்குமார்

`லக நாடுகளின் குப்பைத்தொட்டி' என தமிழ்நாட்டை, குறிப்பாக அதன் தலைநகர் சென்னையை கூகுளில் அடையாளப்படுத்தக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை. இதோ இந்த மழை வெள்ளம் தன் பங்கையும் சேர்த்துக் கொட்ட, நாறுகிறது நகரம்!

சென்னையை மூழ்கடித்தது வெள்ளம் என்றால், அந்த வெள்ளத்தை பூமிக்குள் ஊறவிடாமல் தடுத்ததில் பெரும்பங்கு, மக்கா குப்பையான பாலித்தீனுக்கும் உண்டு; அதை வீதியில் வீசி எறிந்த நம் ஒவ்வொருவருக்கும்  உண்டு. வீதியில் குப்பைகளை வீசுவதால் வரக்கூடிய பேராபத்தை விளக்கிச்சொல்லி விழிப்புஉணர்வை ஏற்படுத்தி மக்களை வழிநடத்தாமல், அந்தக் குப்பைகளைக் கையாளத் தெரியாமல் கைவிட்ட அரசுக்குப் பெரும்பங்கு உண்டு.

`சென்னை வெள்ளத்தில் கரையேறிய குப்பைகளின் எடை தோராயமாக ஒரு லட்சம் டன் இருக்கலாம்’ என்கிறார்கள். டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 4,700 டன், 7-ம் தேதி 5,400 டன் என்ற கணக்கில் குப்பைகளை அள்ளியிருப்பதாக சென்னை மாநகராட்சி ஏதோ ஒரு கணக்கு சொல்கிறது. இன்னும் 15 நாட்கள் ‘அள்ளல்’ பணியை இடைவிடாமல் தொடர்ந்தால் மட்டுமே ஒரு லட்சம் டன் குப்பைகளையும் அள்ளி முடிக்க முடியும். அப்படி அள்ளி முடித்தவற்றைக் கொட்ட சென்னையில் பெரிய அளவில் இரண்டு இடங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஒன்றரை லட்சம் மக்கள் சுற்றிலும் வசிக்கும் 300 ஏக்கர் பரப்பளவிலான வடசென்னை கொடுங்கையூர் குப்பைமேடு. அடுத்ததாக, சுற்றிலும் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் 200 ஏக்கர் பரப்பில் அமைந்த தென்சென்னை பெருங்குடி குப்பைமேடு. 

குப்பைகளின் தலைநகரம் சென்னை?

மணலியில் 5 ஏக்கர், திருவொற்றியூரில் 22 ஏக்கர், மாதவரத்தில் 3.6 ஏக்கர், அம்பத்தூர் மண்டலத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டில் 5.32 ஏக்கர், சேக்காட்டில் 10.42 ஏக்கர், மதுரவாயலில் 1.65 ஏக்கர், வளசர வாக்கத்தில் 1.50 ஏக்கர், ஆலந்தூரில் 15 ஏக்கர் என 564.49 ஏக்கர் பரப்பில் இப்படியான வட்டாரவாரியான குப்பைமேடுகள் இருக்கின்றன. அனைத்தும் அவற்றின் கொள்ளளவை மீறி வழிந்து கொண்டிருக்கின்றன. அடித்துப் பெய்த கன மழை இந்தக் குப்பைகளை வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச்சென்று சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் நிரப்பிவிட்டது.

சதுப்புக் காட்டை ஆக்கிரமிக்கும் பெருங்குடி குப்பை!

1979-ம் ஆண்டு முதல் தினமும் 2,500 டன் குப்பைகளை உள்வாங்கிக் கொண்டு சத்தமின்றி கிடக்கிறது பெருங்குடி குப்பைமேடு. ஒக்கியம் துரைப்பாக்கம் தொடங்கி கண்ணகி நகர், பள்ளிக்கரணை, பெருங்குடி பகுதிவாசிகளும் சில நேரங்களில் இங்குள்ள ஐ.டி நிறுவன ஊழியர்களும் இந்தப் பெருங்குடி குப்பைமேட்டை அகற்றக் கோரி நூற்றுக்கணக்கில் போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டனர். ஒரு சிறுமாற்றம்கூட இதுவரை இல்லை. பிரச்னைகள்தான் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அடிக்கடி பெருங்குடி குப்பை மேட்டில் சிலர் தீயை வைத்துவிட, அதை அணைக்கப் பிடிக்கும் நேரத்தைவிட அதனால் ஏற்பட்ட புகைமூட்டம் அகல அதிக நேரம் பிடிக்கும். இங்கு வசிக்கும் மக்கள் தொண்டைப்புண், கண் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறு, சுவாசம் தொடர்பான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தென்சென்னையில் இருந்து அன்றாடம் 250 லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைக்கு, இங்கு போதுமான இடம் இல்லாமல் போகவே சத்தம் இல்லாமல் குப்பைமேட்டை ஒட்டியே இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியையும் குப்பைமேடு ஆக்கிவிட்டனர். இதனால் நிலத்தடி நீரில் கசப்புத்தன்மை ஏறிப்போனதுடன், அதைப் பயன்படுத்துவதால் கைகளில் தோல் உரிந்து நமைச்சல் எடுக்கிறது.

சென்னை மாநகராட்சியின் குப்பைகள் கையாளும் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், ``குப்பைமேட்டை விரிவாக்கம் செய்ததாகச் சொல்வது தவறு. அதன் எல்லை வரை சாலை போட்டிருக்கிறோம். குப்பை மேட்டை இடமாற்றம் செய்வது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு முடிவுக்கு வந்த பின்னர் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுவிடும்'’ என்றனர். ஆனால் உண்மை இது அல்ல.

குப்பைக் கிடங்கின் நுழைவாயிலில் மட்டுமே சுவர் இருக்கிறது. மற்ற இடங்களில் சுவரை உடைத்துவிட்டார்கள். பின்பகுதி வழியாக, பள்ளிக் கரணைச் சதுப்பு நிலத்தின் 75 ஏக்கர் பரப்பளவு இப்போது குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தெளிவாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்

குப்பைகளின் தலைநகரம் சென்னை?

``ஒருகாலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்தெல்லாம்கூட இங்கு பறவைகள் வந்து தங்கிப் போகும். இப்போது நாங்கள் வீட்டில் வளர்க்கிற கோழிகள்கூட அங்கே மேயப் போவது இல்லை. அவ்வளவு விஷமாகிவிட்டது அந்தச் சதுப்பு நிலக் காடு'' என்கின்றனர் பெருங்குடி மக்கள்.

கொடுங்கையூர் கொடுமை

மாட்டு வண்டிகள் மூலமாகவே 1986-ம் ஆண்டு வரையில் நாள் ஒன்றுக்கு 200 டன் அளவு குப்பைகள் கொடுங்கையூர் குப்பை மேட்டில் கொட்டப்பட்டுவந்தது. 1987-ம் ஆண்டு முதல் குப்பைகள் லாரிகளில் வர ஆரம்பித்தன. 200 டன் என்பது 250 டன்னாக உயர்ந்தது. அம்பத்தூர், அண்ணாநகர், திரு.வி.க நகர், மாதவரம், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இருந்து 2,850 டன் திடக்கழிவும், 500 டன் கட்டடக் கழிவும் கொட்டப்பட்டு, மொத்தம் உள்ள 300 ஏக்கரில் 255 ஏக்கர் ‘இனி தாங்காது உயரம்’ என்பதுபோல நிறைந்து நிற்கிறது. எஞ்சியிருக்கும் 45 ஏக்கர் காலி குப்பைமேடு முழுதாக மூடிக்கொள்ள வெறும் நான்கு ஆண்டுகளே போதும்.

விஷக்காய்ச்சல், தோல் வியாதிகள், நுரையீரல் நரம்பு மண்டல நோய்களால் பலவீனமாகிக்கொண்டிருக்கும் இந்தப் பகுதி மக்களுக்கு, போதுமான மருத்துவ சிகிச்சைகள்கூட இதுவரை தரப்படவில்லை.

சென்னை மாநகராட்சியின் தமிழ் மாநில தொழிலாளர் அணி தலைவர் ஜி.ஹாத்தீம்பேக், ‘`வெளிநாடுகளில் பத்துக்கு பத்து என்ற அளவில் வீடு இருந்தாலும் குப்பைகளை வைப்பதற்கு என ஒரு ஸ்டோரேஜ்  தனியாக இருக்கும். அப்படி வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். அதேபோல் ஒவ்வொரு வீட்டுக்கும் எத்தனை குப்பை நிரப்பும் பைகள் வேண்டுமோ அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து கொடுத்துவிடுவார்கள். மக்கள்  அதில்தான் குப்பைகளைப் போட்டுவைக்க வேண்டும். குப்பைப் பையை வீடுகளுக்கே வந்து மாநகராட்சியினர் எடுத்துப்போவார்கள். அப்படி எடுக்கும்போது பிளீச்சிங் பவுடரை அந்த வீட்டில் தெளித்துச் சுத்தப்படுத்திவிட்டும் செல்வார்கள். அப்படி ஒரு நிலை இங்கு வர வேண்டும்.

மீத்தேன் வாயு, பாறைகளுக்குக் கீழே கிடைக்கிறது; சாணத்தில் கிடைக்கிறது என ஆய்வுசெய்கிறார்கள். அதை எடுக்க திட்டம் தீட்டுகிறார்கள். இவற்றைவிட அதிகமான மீத்தேன் வாயு, குப்பைமேட்டில் கிடைக் கிறது. அதை எடுக்கலாம். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கலாம். தரம் பிரிக்க முடியாத குப்பைகளில், குறிப்பாக பிளாஸ்டிக்கை உயர் அழுத்த முறையில் எரித்து, அதில் இருந்து கிடைக்கும் வெப்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்’' என்கிறார்.

குப்பைகளைச் சீரமைக்க என்ன திட்டம் ?

குப்பைகளின் தலைநகரம் சென்னை?

அரசின் சார்பில் 96.5 கோடி ரூபாய் மதிப்பில் (ஏரோபிக்ஸ் புராசஸ்) ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் இடங்களைச் சீரமைக்கும் திட்டம் என அடிக்கடி பல திட்டங்கள் பேசப்படும்.

“குப்பைகளைத் தரம் பிரித்து நவீன தொழில் நுட்பத்துடன் கையாளக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகளை மூடுதல், சென்னையின் 200 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து அவற்றைப் பயன்படுத்துதல், பணிகளை மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரரை அழைத்தல் எனத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன.

குப்பை மாற்று தொழிற்சாலைத் திட்டத்துக்கான கட்டடம் கட்டுதல், பராமரித்தல், தரம் பிரித்து ஒப்படைத்தல் என மூன்று பிரிவுகளாக வேலைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒப்பந்தப்புள்ளி கோரி தேர்வாகும் நிறுவனமே முழு முதலீட்டைச் செய்து, குப்பைகளைத் தரம் பிரித்து, பின்னர் அதைத் தாமே விற்பனை செய்துகொள்ளலாம். அந்த நிறுவனமே அதில் மின்சாரம் தயாரித்தும் லாபம் ஈட்டிக் கொள்ளலாம் என்றெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக் கின்றன. ஆனால், இவை யாவுமே நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் இருக்கின்றன” என்கிறார் சென்னை மாநகராட்சி கண்காணிப்பாளர் பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவர்.

குப்பையை, உரமாக மாற்றுவது எப்படி?

சென்னையில் தற்போது வள்ளுவர்கோட்டம், சாந்தோம் உள்பட நான்கு இடங்களில் குப்பை மாற்று நிலையங்கள் அமைந்துள்ளன. வீடுகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கட்டடக் கழிவுகள், இவை தவிர மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சேகரிக்கும் குப்பைகள் ஆகியவை இங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. முதலில், உரம் தயாரிப்பு பிளான்ட்டின் கன்வேயரில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அப்போதே மாநகராட்சி ஊழியர்கள் பாலித்தீன் பைகள், ஆவின் பால் கவர்கள், கனமான பிளாஸ்டிக்குகள், உலோகங்கள் போன்றவற்றைத் தனியே எடுத்துவிடுவார்கள். பாய்கள், அட்டைகள், காகிதங்கள் போன்ற மறுசுழற்சியும் மக்கும் தன்மையும்கொண்ட குப்பைகளை இன்னொரு பக்கம் எடுத்தும் விடுவார்கள். 100 மி.மீ அளவுக்கும் குறைவான தடிமன் கொண்ட, பொருட்கள் பிரமாண்டமான கட்டமைப்பைக்கொண்ட ‘ட்ரோமெல்’ இயந்திரத்தின் துளைகள் வழியாக வடிகட்டப்படும். அடுத்தடுத்த அரைப்பு, சலிப்புக்குப் பின்னர் அதன் மீது நீர் தெளித்து, திறந்தவெளியில் காற்றோட்டமாக வைக்கப்பட்டு, இறுதியாக பவுடர்போல அரைத்து எடுக்கப்படுகிறது. பின்னர் இதுவே உரமாகப் பயன்படுகிறது.

நடைமுறையில் நத்தை வேகத்தில் இருக்கும் இந்த முறையைச் சரியாகப் பயன்படுத்தினால், 500 டன் குப்பையில் 350 டன் குப்பையை உரமாக மாற்றிவிடலாம். மீதி உள்ள 150 டன்னில், 100 டன் கட்டடக் கழிவைக் கழித்துவிட்டால் 50 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எஞ்சும். சென்னையில் வெள்ளம், நீரோட்டப் பாதையை நோக்கி ஓடாமல் அப்படியே நொண்டுவதற்கு முக்கியப் பங்காற்றுவது இந்த பிளாஸ்டிக்தான். கிராமங்களில் வேளாண் நிலத்தையும், நகரங்களில் குடிநீருக்கான நிலத்தடி நீரையும் விஷமயமாக்கி, ஆறு, ஏரி, கடல் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் சிதைத்து, அங்கு வாழும் உயிரினங்களுக்குப் பேராபத்தாகத் திகழ்கிறது பிளாஸ்டிக்.

பிளாஸ்டிக் எங்கிருந்து வந்தது?

`உருக்கத்தக்க ஒரு பொருள்' என்ற அர்த்தத்தில் அமைந்த கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானது தான் `பிளாஸ்டிகோஸ்' என்ற சொல். இதுவே பின்னாளில் பிளாஸ்டிக் ஆனது. அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால், 1862-ம் ஆண்டில் ‘செல்லுலோஸ்’ என்ற பொருளால் தயாரிக்கப்பட்டு லண்டனில் கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டது ஒரு பொம்மை. இதுதான் பிளாஸ்டிக்கின் ஆதித் தாய். அதற்கு அவர் வைத்த பெயர் `பார்க்ஸ்டைன்'. பின்னர் விலங்குகளின் நகங்கள், ஆமை ஓடுகள், ஒரு வகையான பூச்சிகள் போன்றவை இதற்கு கனமும் நெகிழும் தன்மையும் சேர்க்க பயன்படுத்தப் பட்டன. பின்னர் படிப்படியாக கற்பூரம், நைட்ரிக் அமிலம், மரப்பட்டைகள், பசைகள் கலந்து ‘செல்லு லாயிட் பிளாஸ்டிக்’ பொருட்கள் உருவாகின.

1862-ம் ஆண்டில் ஒரு புள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்த விஷ வித்து, இரண்டாம் உலகப்போரில் அடுத்த கட்டத்தை எட்டியது. ராணுவ வீரர்களுக்கு மருந்துகள், உணவுகள், ரசாயனக் குண்டுகள் போன்றவற்றைக் கொண்டு செல்ல ‘பாலி - எத்தீன்’ என்ற பைகள் பயன்படுத்தப் பட்டன. பின்னர், மனிதப் பயன்பாட்டில் மிக முக்கியமான ஒரு பொருளாகவே மாறிவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டில் தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

பிளாஸ்டிக்கை அழிக்கவே முடியாதா?

பிளாஸ்டிக் கழிவுகளை, உரிய உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோபுரப் புகைப் போக்கியில், திட்டமிடப்பட்ட உயர் அழுத்த முறையில் நெகிழ வைத்து மீண்டும் மறுசுழற்சிக்குக் கொண்டுவர முடியும். இதன்மூலம் புதிய மறுசுழற்சி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாம். ஆனால், இதுபோன்ற முறைகளை நாம் முயற்சிகூடச் செய்துபார்ப்பது இல்லை.

சரியாகக் கையாண்டால், குப்பைகளால் லாபம்தான். குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல், சரியான திட்டங்கள் போடாமல் கிடப்பில் போட்டவர்களால்தான் பிரச்னையே. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சுயலாப நோக்கு சென்னையை குப்பைகளின் தலைநகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றாமல், நமக்கு பேரிடர்களில் இருந்து விடுதலை இல்லை. அந்த மாற்றத்துக்கு நாம் ஒவ்வொருவரும் தயாராவோம். அரசாங்கத்தை மாற்றத்தை நோக்கிச் செயல்பட அழுத்தம் தருவோம்.

 மாநகராட்சி குப்பைகளை எப்படி அள்ளுகிறது?

தனியாரிடம் வாடகைக்குப் பெற்ற 357 லாரிகள் போக, சென்னை மாநகராட்சியின் 584 குப்பை லாரிகள், 60 ஜே.சி.பி இயந்திரங்கள், 22,500 ஊழியர்கள்... என இரவு பகலாகக் கண்விழித்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

குப்பையிலும் ஊழல்!

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு (தொகுப்பு) மையம் நடப்பு ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஒரு குப்பை தொகுப்பு மையம், 98 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை மதிப்புகொண்டது. ஒரு வார்டுக்கு 40 முதல் 90 வரையிலான எண்ணிக்கையில் குப்பை மையங்களை அமைத்தார்கள். ஆனால் இப்போது, அந்தக் குப்பைத் தொகுப்பு மையங்கள் எங்கே போயின என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒன்று அமைக்கப்பட்டதற்கான சுவடுகூட இல்லை. இதைக் கிளறினால் மிகப் பெரிய ஊழல் நாற்றம் வெளிப்படுவது உறுதி!