Published:Updated:

உங்கள் மனிதம் சாதியற்றதா?

ஜெயராணி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

``சாதி, மக்களின் கருணையைச் சிதைக்கிறது'' - அம்பேத்கர்

`இது சென்னைடா' என்கிறார்கள்... `எங்க ஊரு மெட்ராசு' என்கிறார்கள். எட்டுத் திக்கும் `மனிதம்’ என்ற சொல் ஓங்கி ஒலிக்கிறது. யாரை நிறுத்திக் கேட்டாலும் தன்னைக் காப்பாற்றிய அல்லது தனக்கு உதவிய முகம் தெரியாத ஒருவர் பற்றி சிலாகித்துப் பேசுகிறார்கள். பத்திரிகைகளில், சேனல்களில், ரேடியோவில் இன்னும்கூட இந்தச் சிலாகிப்பு அடங்கவில்லை. உதவுவதும்கூட ஒருவகையான கும்பல் மனப்பான்மையாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இந்தச் சமூகமும் இந்த மனிதர்களும் இதற்கு முன்னர் இப்படி இல்லை. அதனால், இன்னும் சில நாட்களுக்கு மனிதர்கள் மனிதத்தன்மை யோடு நடந்துகொண்ட ஆகப்பெரிய சாகசக் கதைகளைப் பேசிக்கொண்டிருப் பார்கள். அதன்பிறகு வெள்ளத்தோடு அடித்து வரப்பட்ட மனிதம் என்னவாயிற்று என ஹேபியஸ் கார்ப்பஸ் மனு போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது.

உங்கள் மனிதம் சாதியற்றதா?

இந்தச் சமூகம் தனது பழைய மூர்க்கத்தனத்துக்கு, பழகிய வன்மத்துக்கு, சக மனிதரை சமம் எனக் கருதாத அறச் சிதைவுக்கு, சாதிப் பாகுபாடு எனும் வரலாற்றுக் குற்றச் செயலுக்கு எத்தனை வேகமாகத் திரும்பும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் வெகுதொலைவு செல்லவேண்டாம். உங்கள் தெருவில் மலைபோல் குவிந்துகிடக்கும் உங்கள் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் சுத்தம் செய்துகொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களைப் பாருங்கள் போதும். சீரழிந்த சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற உழைக்கும் இவர்கள் யார்? `நாற்றம் குடலைப் புரட்டுகிறது' என நீங்கள் அனைவரும் மூக்கை மூடிக் கொள்ளும்போது எந்தவிதக் கவசங்களும் இல்லாமல், எந்தவிதப் புலம்பலும் இல்லாமல் மாநகரத்தின் கசடுகளை, கழிவுகளை, குப்பைகளை தங்கள் கைகளால் அள்ளவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏன் வந்தது? மழை வெள்ளத்தில் இருந்து சென்னைவாசிகளை மீட்க நீண்ட கரங்கள், அதே வெள்ளம் கொண்டுவந்து சேர்த்த இந்தக் கழிவு வெள்ளத்தில் இருந்து இவர்களைப் பாதுகாக்கும் ஓர்மையற்றுப்போனது எப்படி? இந்தக் கழிவுகளால் அவர்களுக்கு நோய்கள் வராதா? அவர்கள் உயிர் இழக்க மாட்டார்களா? `என் சக மனிதரை இந்த இடரில் இருந்து காப்பாற்றுவேன்' என யாரும் கிளம்பவில்லையே ஏன்? குறைந்தபட்சம், `எனக்காக இந்த வேலையைச்  செய்யும் மனிதர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், கௌரவமான தங்கும் இட வசதிகள், நல்ல உணவு, வேலைக்கு ஏற்ற ஊதியம் எல்லாம் வழங்கப்படுகிறதா?' என்றுகூட யாருமே கவலைப்படவில்லையே, ஏன்?  உங்கள் மனிதத்தில் படிந்திருக்கும் சாதியக் கறையை இதைவிட வேறு எதுவும் வெளிச்சமிட்டுக் காட்டிவிட முடியாது.

மீட்புப் பணியிலும் நிவாரணப் பணியிலும்  புயல்போன்ற வேகத்தோடு பங்கெடுத்த பொதுச் சமூகம், துப்புரவுப் பணி என வரும்போது மட்டும் பதுங்கிக்கொண்டது. உண்மையில் சென்னையின் சீரமைப்பு என்பது துப்புரவுப் பணியில் இருந்துதான் தொடங்குகிறது.  ஏற்கெனவே குப்பைகளாலான சென்னை மாநகரத்தில் இன்று வீட்டு உபயோகப் பொருட்கள், கடைகளில் / அலுவலகப் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதமடைந்து பெருங்குப்பையாகிவிட, பல்லாயிரம் டன் குப்பைக் கழிவுகளால் நகரமே மூழ்கிப்போயிருக்கிறது. இவை அனைத்தையும் அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல் எனத் தெரிந்திருந்தும், நகராட்சிகளில் இருந்தும் தனியார் ஏஜென்ட்கள் மூலமாகவும் தலித் மக்களை அந்த வேலையைச் செய்ய இழுத்து வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. துப்புரவுப் பணியை தலித் மக்களே செய்ய வேண்டும் என்ற சாதிய வழக்கத்தை அரசே பின்பற்றும்போது, அது பொதுச் சமூகம் நிகழ்த்தும் சாதியக் கொடுமைகளை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? 

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களோடு வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தலித் மக்கள் குறிப்பாக அருந்ததியர், ஆதி ஆந்திரா பிரிவைச் சேர்ந்தவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர்  சென்னையைச் சுத்தம் செய்யும் கொடுமையில் (இதை எப்படி பணி எனச் சொல்ல இயலும்?)  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அடிமாடுகளைப்போல நகராட்சி லாரிகளில் ஏற்றித்தான் இங்கே கொண்டுவந்தது அரசு. கோத்தகிரியில் இருந்து 12 மணி நேரம் லாரியில் நின்றபடியே வந்துசேர்ந்தனர். இப்போது சென்னையில் ஆங்காங்கே உள்ள மாநகராட்சிப் பள்ளிகளிலும் மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களில் பலருக்கு தாம் என்ன வேலைக்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாது.

உங்கள் மனிதம் சாதியற்றதா?

தேங்கிய தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும், சின்டக்ஸ் டேங்கைச் சுத்தம்செய்ய வேண்டும், உணவுப்பொட்டலங்களை வழங்க வேண்டும் என பல பொய்களைச் சொல்லி கூட்டிவந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில்  ஊர் திரும்பிவிடலாம் என்ற உத்தரவாதத்தோடு அழைத்துவரப்பட்டவர்கள், 10 நாட்களுக்கும் மேலான கடுமையான வேலையில் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.  திருவண்ணாமலை நகராட்சியைச் சேர்ந்த ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தான் அதிகாலை 4 மணிக்கு தூக்கத்திலேயே அழைத்து வரப்பட்டதாகச் சொன்னார்.

`‘என்ன... எதுக்குனு சொல்லல. திடீர்னு வந்து கதவைத் தட்டிக் கூட்டிட்டு வந்துட்டாங்க. கூட்டுற பெருக்குற மாதிரி வேலைதான்னு சொன்னாங்க. ஆனா, மலை மாதிரி குவிஞ்சிருக்கிற குப்பையை வெறுங்கையில அள்ளி தலையில சுமக்க வைக்கிறாங்க. சத்தியமா முடியலைங்க. ரெண்டு தடவை மயக்கடிச்சு விழுந்துட்டேன்’' என்றார்.

கோடம்பாக்கத்தில் இந்தப் பணியாளர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் புலியூர் பள்ளியில்  தண்ணீர் வசதி இல்லை. 12 மணி நேரம் சாக்கடைக் கழிவுகளைத் தலையில் சுமக்கும் வேலைகளைச் செய்துவிட்டுவந்தவர்களுக்கு குளிக்கக்கூட நீர் வழங்கவில்லை அரசு நிர்வாகம். பல நாட்கள் கை கால்களை மட்டும் கழுவிவிட்டுத் தூங்கப் போகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகக் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதிகாலை 6 மணிக்கே பணிக்குக் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், காலைக்கடனைக் கழிக்க பொதுக் கழிப்பறைகளைத் தேடி இருட்டில் அலையவைக்கிறது அரசு. `எங்களுக்கு, சோறுகூட வேணாம்; குளிக்கவும் கழிக்கவும் தண்ணி கொடுக்கச் சொல்லுங்க’ என்கிறார்கள் பரிதாபமாக.

அரை மணி நேரம்கூட ஓய்வெடுக்க அனுமதி இல்லாமல் வேலைவாங்கப்படும் இந்தப் பணியாளர்களுக்கு வயிறார உணவு அளிக்கவும் இல்லை. கடந்த 10 நாட்களாக காலை உணவாக உப்புமாவும் பொங்கலும் வழங்கப்படுகின்றன. ரவையையும் அரிசியையும் தவிர அவற்றில் ஒன்றும் இல்லை. மதிய உணவாக கொழ கொழப்பான சாம்பார் சாதம். இரவு பெரும்பாலும் சோறும் பருப்புக் குழம்பும்.  இந்தப் பணியாளர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலை குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்ததும் இரவு உணவில் முட்டையும் சில எலும்புத் துண்டுகளும் சேர்ந்திருக்கின்றன. உணவின் சுவை பிடிக்காமல் பலரும் வெறும் வயிற்றோடு வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் இருந்து பிழைப்புத் தேடி திருப்பூரில் குடியேறிய தலித் தொழிலாளர்களும் ஒப்பந்த ஊழியர்களாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசிச் சோற்றை வடித்துக்கொட்டுகின்றனர். எதிர்ப்புக் காட்டிய பிறகு மிக மெல்லிசாக தலைக்கு நான்கு சப்பாத்திகள் தற்போது வழங்கப்படுகின்றன. கூடவே, வெள்ளத்தைப்போல அடித்துக்கொண்டு ஓடும் பருப்புக் குழம்பு. இந்த உணவும் இரவு 10 மணி அளவில்தான் பரிமாறப்படுகிறது. கழிவுகளின் நாற்றத்தில் உழன்று அடித்துப்போட்ட அலுப்புடன் வருகிறவர்களை பசியில் துடிக்கவைத்து, பாதித் தூக்கத்தில் எழுப்பி உணவைத் தருகிறார்கள். உணவு பிடிக்காததால் இந்தப் பணியாளர்கள் பெரும்பாலும் டீ பிஸ்கட்டோடு இருந்து விடுகின்றனர்.

எங்கெங்கிருந்தோ அடித்து வரப்பட்ட குப்பைகள், மனித மலம் கலந்த சாக்கடை, அதில் ஊறி அழுகிக்கிடக்கும் பொருட்கள், செத்த நாய், எலி போன்ற உயிரினங்கள் அதில் இருந்து கிளம்பும் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம் என கழிவுகளின் இருப்பே, நம்மை எத்தனை பெரிய அருவருப்புக்குள் தள்ளுகிறது? மூக்கை மூடுகிறோம், வாயைப் பொத்துகிறோம், கதவை அடைத்துக்கொள்கிறோம். ஆனால், இந்தப் பணியாளர்களைக் கவனித்தீர்களா? அரசு இவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவில்லை. நிவாரணப் பணிசெய்த தன்னார்வலர்களிடம், `டி.டி ஊசி போடுங்கள்' என பொதுச் சமூகம் அலறிக்கொண்டே இருந்தது. ஆனால் ஊசிகள், கண்ணாடித் துண்டுகள், நாப்கின்கள், அழுகிய உணவுப் பொட்டலங்கள் எல்லாவற்றையும் வெறுங்கையால் அள்ளும் இந்த மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ என நாம் பதற்றப்படவே இல்லை. முதலில் ஏற்பட்ட பெருமழையில், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுந்தரம் என்ற பணியாளர் அடையாற்று வெள்ளத்தில், அடித்துச் செல்லப்பட்டார். இப்போதுவரை அவரது உடல்கூட கிடைக்கவில்லை. இப்போது ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாளையம் என்ற கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பழனிச்சாமி என்கிற பணியாளர், திருவான்மியூரில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்.

உங்கள் மனிதம் சாதியற்றதா?

செங்கல்பட்டில் குப்பை அள்ளும் பணிக்காக சென்ற மற்றொரு தொழிலாளி, அதே குப்பை லாரி ஏறியதில் உடல் நசுங்கி இறந்துவிட்டார்.உயிரிழப்புகள் மட்டுமல்ல... வாந்தி, பேதி, காய்ச்சல், கால் வீக்கம் என ஏராளமான நோய்களும் இவர்களைத் தாக்குகின்றன. ஆனால், பெரும் பாலான பணியாளர்களுக்கு பூட்ஸ், கையுறை, மாஸ்க் என எதுவுமே வழங்கப்படவில்லை. கண்துடைப்புக்காக மருத்துவர்கள் பயன்படுத்தும், ஊசி பட்டாலே கிழிந்துவிடும் சர்ஜிக்கல் க்ளவுஸை வழங்கி, தன் போலிப் பொறுப்புஉணர்வை அம்பலப்படுத்திக்கொண்டது அரசு.

``சாக்கடைக் கழிவை கையில அள்ளி, தலையில் சுமந்துட்டுப் போய் லாரியில கொட்டணும். துர்நாத்தம் தாங்கலங்க. அப்படியே கையைக் கழுவிட்டு மதியம் சோறு திங்கணும். எப்படி முடியும்? இதனால நான் ராத்திரி மட்டும்தான் சாப்பிடுறேன். தூக்கத்துலகூட நாத்தம்தான் தெரியுது. இப்படி ஒரு பொறப்பு பொறந்திருக்கவே கூடாதுங்க’’ என்கிறார் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சரி, இவர்களுக்கு என்ன சம்பளம் இருக்கும் என நினைக்கிறீர்கள்! நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலைசெய்ய 500 ரூபாய் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும் அளவில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏஜென்ட் கமிஷன் போக 250 ரூபாய் கிடைக்கலாம். அதுவும் நிச்சயம் இல்லை. வேலையைச் செய்ய மறுத்தனர் அல்லது குறைவாகச் செய்தனர், கூடுதல் சப்பாத்தி கேட்டனர், பூட்ஸ் கேட்டனர், அவ்வளவு ஏன் இப்படி ஒரு கட்டுரை எழுத உண்மைத் தகவல்களை அளித்தனர் எனத் தெரிந்தால், அதைச் சொல்லியே அவர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படும்.

நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் எட்டு நாள் வேலைக்கு 2,000 ரூபாய் சம்பளம். இதைவிடவும் மலிவாக வேறு எங்கும் பணியாளர்கள் கிடைப்பார்களா என்ன? இதற்குப் பதிலாக இவர்களை சங்கிலியில் கட்டி அடிமை களைப்போல சாட்டையில் அடித்து வேலை வாங்கியிருக்கலாம். பெரிய வேறுபாடு இல்லை. மீட்புப் பணியாளர்கள் குறித்தும், நிவாரணப் பணி செய்பவர்கள் குறித்தும், சிலாகிக்கும் நமக்கு துப்புரவுப் பணியாளர்களின் இந்தத் தியாகம் ஒரு பொருட்டே  அல்ல. நிவாரணப் பணி செய்தோரின் பெயர்களை வரிந்து வரிந்து பரப்புரை செய்பவர்களே, உங்களில் யாருக்கேனும் கழிவுகளை தலையில் வாரிச் சுமக்கும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் பெயரேனும் தெரியுமா? தெருவில் இறங்கி அவர்களை நெருங்கி யாரேனும் கேட்கத் துணிந்திருக்கிறீர்களா?

இது எதைப் பற்றியும் கவலைப்படாமல், `ஏன் எங்கள் தெருவைச் சுத்தம் செய்யவில்லை, எங்களால் துர்நாற்றத்தில் குடியிருக்க முடியவில்லை’ என மேட்டுக்குடிகளும் சாதி இந்துக்களும் போராட்டம் செய்யும் அநியாயம் எல்லாம் வேறு நடக்கிறது. வடசென்னை மக்களும் முஸ்லிம்களும் தம் தெருக்களைத் தாமே சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சாதி இந்துக்கள் மட்டும் துப்புரவுப் பணியாளர் களை அனுப்பச் சொல்லி போராட்டம் செய்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டபோது சாதி இந்துக்கள் வேடிக்கை பார்த்தனர். `அல்லா உங்களைக் காப்பாற்றுவார்' என வாழ்த்தினர். ஆனால், துப்புரவுப் பணியில் கரம் கோக்கவில்லை. ஏன் சொல்லுங்கள்? சாதி இந்து உளவியலின்படி துப்புரவுப் பணியைச் செய்வது தாழ்த்தப்பட்டவர்களின் வேலை. அதனால்தான் ஊரைச் சுத்தப்படுத்தும் பொதுப் பணியில் ஈடுபடாமல் கைகட்டி நிற்கிறார்கள்.

மனிதக் கழிவுகளும் செத்த உயிரினங்களும் நிறைந்த குப்பைகளை அள்ளும் பணியை, துப்புரவுப்

உங்கள் மனிதம் சாதியற்றதா?

பணியாளர்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் பொது சமூகத்துக்கு, மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்குத் தெரியும்தானே! 2013-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, மனிதக் கழிவோடு நேரடித் தொடர்புள்ள எந்த வேலையிலும் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம்தான். `இந்தக் குப்பைகள் மனிதக் கழிவு அல்ல' என அரசு வாதிடலாம். ஆனால், சாக்கடைகள், மலக்குழிகள், கழிவறைகள் எல்லாம் வெள்ள நீரில் கலந்து குப்பைகளில் தேங்கிவிட்ட நிலையில், எல்லாமே மனிதக் கழிவாகத்தான் மாறுகிறது. துப்புரவுப் பணியாளர்கள் பலரும், மனிதக் கழிவையும் செத்த உயிரினங்களையும் கைகளால் அப்புறப்படுத்தியதாக உறுதியளிக்கிறார்கள் எனும்போது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு அரசு தண்டிக்கப்படுமா?

சரி, இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்டது. யார் இதைச் சுத்தம் செய்வார்கள்? தன் வீடும் தெருவும் கழிவாகிக் கிடக்கும் இந்தத் தருணத்திலாவது, இந்்தக் கேள்வி ஒவ்வொருவரையும் உலுக்க வேண்டும். அப்படி உலுக்கினால் மட்டும்தான் துப்புரவுப் பணியை இயந்திரமயப்படுத்த அரசு முன்வரும். `எம்மைப் போன்ற மனிதர்களுக்கு இனிமேல் இந்த இழிவு நடக்கக் கூடாது' என பொதுச் சமூகம் அரசுக்கு நெருக்கடி அளிக்கிறதோ, அன்று மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் குற்றத்தைத் தடுக்க, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாயைக்கொண்டு இயந்திரங்களை வாங்க முறையாகச் செலவிடும். சாட்டிலைட்டுகளையும் ஜி-சாட்டுகளையும் ஏவி விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணிவகிக்கும் இந்தியா, ஏன் இன்னும் துப்புரவுப் பணிக்கான இயந்திரங்களை வாங்கவில்லை என யோசியுங்கள்; கேள்வி கேளுங்கள்.

சக மனிதர்களை, கைகளால் கழிவுகளை அள்ளச் செய்யும் மனிதக் கூட்டம் நாகரிகச் சமூகமாக, நேயம்கொண்டதாக இருக்க முடியுமா? தூய்மை என்பது யாரோ செய்து நாம் அனுபவிக்கவேண்டியது இல்லை. நாமே நமக்குச் செய்துகொள்ளவேண்டியது என்பதுதான் மனித அறத்தின், சாதிய அழிப்பின் தொடக்கம். மனிதத்தோடு மனிதமாக அதையும் தொடங்கிவையுங்கள்!