Published:Updated:

வாட்ஸ்அப் முதலைகள் எங்கே?

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

`ஒவ்வொரு ஷேரும் ஓர் உயிரைக் காப்பாற்றும். அவசரம்... PLS... PLS... PLS... செம்பரம்பாக்கம் ஏரி

வாட்ஸ்அப் முதலைகள் எங்கே?

உடைந்துவிட்டது. பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி, சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. யாருமே உயிர்தப்ப முடியாது. உடனே உங்கள் இடத்தைவிட்டு தப்பிச்செல்லுங்கள். இதை உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் பகிர்ந்து அவர்களுடைய உயிரையும் காப்பாற்றுங்கள்.'

வெள்ளத்தால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத பாப்பநாயக்கன்பாளையத்தில் இருக்கும் முருகனுக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் இது. இதுபோன்ற அவசரச் செய்திகள் வந்தவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் தன் நண்பர்களுக்கு எல்லாம் ஷேர்செய்து உலகைக் காப்பாற்றுவது என்றால், முருகனுக்கு அவ்வளவு பிடிக்கும்.  உடனே அதை அவர் ஊருக்கு எல்லாம் பரப்ப ஆரம்பித்தார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் மெசேஜ் சென்னையின் சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து பரவியது. ஜாஃபர்கான்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை அடையாறு பாய்கிற வழி எங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்ப்பயத்தில் கதறி அழுதபடி மேடான இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். கையில் கிடைத்தவற்றை எல்லாம் அள்ளிக்கொண்டு ஓடினர். சில மணி நேரங்களில் அது வதந்தி எனத் தெரியவந்தது. அத்தனை பேருக்கும் உயிர் மீண்டது. ஆனால், அந்தப் படபடப்பு அடங்க பல மணி நேரம் ஆனது.

மழை வெள்ளத்தால் மட்டும் அல்ல, அதற்கு இணையாக வாட்ஸ்அப் வதந்திகளால் ஏற்பட்ட  பாதிப்புகளும் ஏராளம். `ஏரிகள் உடைந்துவிட்டன' என மழை ஆரம்பித்த நாளில் வதந்தி பரப்ப ஆரம்பித்தவர்கள், `முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் தப்பிவிட்டன’ என்றெல்லாம் பரப்பி சென்னைவாசிகளைக் கதிகலங்கவைத்தார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி, வசிப்பிடம் தந்து, உண்மையாகவே உதவியவர்கள் பல்லாயிரம் பேர் என்றால், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கு வேண்டாதவர்களின் முகவரி, செல்போன் நம்பர் தந்து, வீடு இழந்தவர்களை அலைக்கழிக்கவைத்தது சில வதந்திக் கும்பல்.

`எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ரத்தம் இல்லை' என்ற செய்தியைப் படித்துவிட்டு மழை வெள்ளத்தில் நீந்தி மருத்துவமனைக்குப் போய் நின்ற ரத்த தான ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. `பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி 10 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்; விஜய் 5 கோடி, ஆர்.ஜே பாலாஜி 1 கோடி’ எனப் பெரிய லிஸ்ட் ஒன்றும் சுற்றியது. ஆர்.ஜே பாலாஜி அதிர்ந்துபோய், `அய்யா சாமி, ஐயம் வெரி புவர் மேன். என்னால முடிஞ்சதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இப்படி எல்லாம் கிளப்பிவிடாதீங்கய்யா' என ட்விட்டரில் பதறினார்.

வாட்ஸ்அப் முதலைகள் எங்கே?

`பிள்ளையார் பால் குடிக்கிறார்’, `மேரி மாதா கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது’, `பைக்கில் லிஃப்ட் கேட்டு எய்ட்ஸ் ஊசி குத்திவிடுகிறார்கள்’ என 10 வருடங்களுக்கு  முன்னால் வாய் வழியாக வந்த வதந்திகள் பரவுவதற்குள் கொஞ்சம் சுதாரிக்க முடிந்தது. எஸ்.எம்.எஸ் காலத்தில் ஷேர் ஆட்டோ வேகத்தில் பரவிய இந்த வதந்திகள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களின் காலத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவுகின்றன. ஒரே நொடியில் பல்லாயிரம் பேருக்குச் சென்றடைகின்றன. வாட்ஸ்அப் குரூப்கள்தான் இ்ந்த வகை வதந்திகளை உருவாக்கும் தொழிற் சாலைக் கூடங்கள். வாட்ஸ்அப்பில் என்ன மெசேஜ் வந்தாலும் அதை, தான் இருக்கும் ஒவ்வொரு குரூப்புக்கும் அனுப்பவேண்டும் என்பதைக் கடமையாகக் கருதும் வாட்ஸ்அப் போராளிகளால், அது விட்டுவிட்டு இன்டர்நெட் சிக்னல் கிடைக்கும் தல்லாப்பட்டி பெட்டிக்கடைக்காரர் வரை சென்றடைகிறது. 

பேரிடர்களின்போதும், மக்கள் உணர்வுகள் மேலோங்கியிருக்கிற வேளைகளிலும்தான் இந்த வகை வதந்திகள் அதிகம் பரப்பப்படுகின்றன. வதந்திகளின் தன்மையும் நம் அடிப்படை உணர்ச்சி களைத்  தூண்டுகிற வகையிலானவையே. இதற்கு அப்துல் கலாமின் மறைவின்போது கிளப்பிவிடப் பட்ட வதந்திகள் சிறந்த உதாரணம். `அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ஒபாமா மதுரை வருகிறார்’ என்றும், `கலாமின் மறைவு நாளை இளைஞர் தினமாக ஐ.நா அறிவித்துவிட்டது’ என்றும் கிளப்பிவிட்டனர்.

எதிரி நிறுவனங்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதம்கூட இப்போது வாட்ஸ்அப் வதந்திகள்தான். `அந்தக் கடையில் ஒரு பெண்ணைக் கொன்று விட்டார்கள். அங்கே எந்தப் பொருளையும் வாங்காதீர்கள்', `இந்த நிறுவனத்தின் அதிபர் மதவெறி பிடித்தவர். அதனால் அதன் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்' எனப் பரப்பி, போட்டியாளர்களை காலிசெய்கிறார்கள்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே `கொடைக்கானல் - திண்டுக்கல் சாலையில் கார் ஒன்றில் இளம்பெண்  கடத்திச் செல்லப்படுகிறார். அவரைக் காப்பாற்றுங்கள், அவருடைய எண் *****, கார் எண் ******' என ஒரு மெசேஜ் வருகிறது. பதறிப்போய் அந்த எண்ணுக்கு போன் அடித்தால் `வாட் ரப்பிஷ் யு ஆர் டாக்கிங். ஐ அம் சிட்டிங் அட் ஹோம்' என ஆங்கிலத்தில் அடித்து விரட்டினார் அந்தப் பெண்.

``காலத்துக்கு ஏற்ப மனிதர்கள் இடையே  உருவாகிற மனநோய்களின் பரிணாம வளர்ச்சி களில் ஒன்றுதான் இது. இந்த வகை வதந்திகளால் மதக் கலவரங்களையும் சாதிவெறித் தாக்குதல் களையும்கூடத் தொடங்கிவைக்க முடியும். மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனமாக இருக்கும்போது அந்தச் சூழலைப் பயன்படுத்தி, அவர்களை வேதனைக்கு உள்ளாக்கி மகிழ்கிற வக்கிர மனநிலை இது. ஊரில் தெருநாய் வாலில் பட்டாசு கட்டி வெடிக்கிற அற்பத்தனத்தைப் போன்றது.

வாட்ஸ்அப் முதலைகள் எங்கே?

செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல்  அதைப் பரப்புபவர்களுக்கும் இதில் சம பங்கு உண்டு. இன்றைய சமூக வலைதளங்களில் தன் இயல்புக்கு மாறாக நல்லவர்களாகவும் அறிவுஜீவி களாகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் களாகவும் காட்டிக்கொள்ள அதிகம் மெனக் கெடுகிற நிலை உள்ளது. இதனால் இந்த வகை உதவி மெசேஜ்களை அதிகமாக ஷேர் செய்வதால் தன்னைப் பற்றி பொய்யான பிம்பத்தை உருவாக்க முடியும் எனக் கருதுகிறார்கள். தன்னைத்தானே சிலாகிக்கிற ஒருவகையான நார்ஸிஸம் இது'' என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

``இதுபோன்ற செய்திகளை யார் அனுப்பி யிருந்தாலும் புகார் வந்தால் யாரிடமிருந்து அனுப்பப்பட்டதோ, அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். அதை உங்களுக்கு யார் அனுப்பியிருந்தாலும் நீங்கள் உங்கள் அலைபேசியில் இருந்து பகிர்ந்தால் அதற்கு  நீங்கள்தான் பொறுப்பு. எனவே, எந்த வகையான தகவலாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பகிர வேண்டாம். வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதற்கு கட்டாய  சிறைத்தண்டனை உண்டு'' என்கிறார் சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையர் வெங்கடாஜலபதி.

உதவி என்பது நேரடியாகச் செய்யக்கூடியது.  அதில் நம்முடைய உழைப்பு, நேரம், பணம் என ஏதாவது ஒரு துளியாவது இருக்க வேண்டும். ஆனால், ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் வாட்ஸ் அப்பும் அதை எளிதாக்கிவிட்டன.  `உதவி கேட்டு வருகிற ஒரு செய்தியைப் பகிர்ந்தாலே நம் கடமை முடிந்தது’ என்ற புதிய கலாசாரத்தை உருவாக்கி வைத்திருக் கின்றன. அந்த மனோபாவம்தான் மாறவேண்டும். ஏனென்றால் வாட்ஸ்அப் வதந்திக் கும்பலுக்கான மூலதனமே இந்த மனோபாவம்தான்!