பயணம் எளிதில்லை

ஆயிரம் பேர் பயணம் செய்யும், செல்லும் ரயிலில்கூட ஒரு பெண் தனியே பயணம் செய்வது எளிதாக

இந்திய வானம் - 18

இல்லை. தொடர்ந்து பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் அப்படி தனக்குத் தொல்லைகொடுத்த ஒருவரைப் பற்றி எஸ்.எம்.எஸ் மூலம் ரயில்வே காவல் துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அடுத்த ரயில் நிலையத்தில் ஏறிய காவல் துறையினர் அந்த ஆளை விசாரித்து எச்சரிக்கை செய்துவிட்டு இறங்கிப் போய்விட்டார்கள்.

தன்னை போலீஸைவைத்து மிரட்டுகிறாள் என அந்தக் குடிகாரன் கோபம்கொண்டு அந்தப் பெண்ணை மிக மோசமாகத் திட்டியிருக்கிறான். `தனியே வருகிறாள் என்றால், அவள் வேசைதான்' எனப் பகிரங்கமாகப் பேசியிருக்கிறான்.  அதைக் கேட்டு கோபம் அதிகமாகி அந்தப் பெண்ணும் சண்டையிட்டிருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அதற்கு மாறாக `உனக்கு எதற்கு தேவையில்லாத பிரச்னை. வேறு ஒரு படுக்கைக்கு மாறிப் போய்விடு’ என வற்புறுத்தியிருக் கிறார்கள். குடித்துவிட்டு தன்னிடம் தொல்லை தருபவனை இடம்மாற்ற ஒருவரும் முன்வரவில்லை. ஆனால், தனக்கு ஆயிரம் அறிவுரை சொல்கிறார்களே என அந்தப் பெண் நொந்துபோய்விட்டார்.

ஆனால், மனஉறுதியோடு அந்தக் குடிகாரனின் பேச்சை அப்படியே வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் மீண்டும் காவல் துறைக்கு அனுப்பியிருக்கிறார். இரண்டு ஸ்டேஷன் தாண்டி புகாரை விசாரிக்க வந்த காவல் துறையினர் அவரை ரயிலை விட்டுக் கீழே இறங்கி ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அப்போது மணி இரவு 12:30. தன்னால் இறங்கி வர முடியாது என அவர் சொன்னதும் அந்த ஆளைத் திரும்பவும் எச்சரிக்கைசெய்து விட்டிருக்கிறார்கள்.

`இவ்வளவுதான் நடவடிக்கையா?’ என அந்தப் பெண் வாதம் செய்தபோது `அவர் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்கிற பயணி. வேறு ஒன்றும் செய்ய முடியாது’ என காவலர்கள் அவரிடம் சண்டையிட்டிருக்கிறார்கள். அந்தப் பெண் விடவில்லை. ரயில்வே உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு அந்தச் செய்தியை அனுப்பி, விடியற்காலை வரை போராடியிருக்கிறார். குடிகாரன் நிம்மதியாக உறங்கிவிட்டிருக்கிறான். ஆனால் அவர், தனக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்காக விடிய விடியப் போராடியிருக்கிறார்.

இந்திய வானம் - 18

இந்தச் செய்தியை இணையத்தில் வாசித்த போது அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது.

அந்தப் பெண் என்ன தவறு செய்தார்? ரயிலில் ஒரு பெண் தனியே பயணம் செய்வது என்றால் அவள் யார்கூட வேண்டுமானாலும் படுத்துக் கொள்வாள் என்ற இழிவான சிந்தனை எப்படி உருவானது?

ரயில், பஸ், ஆட்டோ எதில் ஒரு பெண் தனியே வந்தாலும் உடனே எப்படி காமம் பீறிட்டுப் பொங்கிவிடுகிறது? கல்வி கற்பதற்கும் வேலைக்கும் அலுவலகத்துக்கும் மருத்துவக் காரணங்களுக் காகவும் பயணம்செய்கிற  பெண்கள் நம் வீட்டிலும் இருக்கிறார்களே! அது ஏன் இந்தப் பொது இடங் களுக்கு வந்தவுடன் பலருக்கும் மறந்துபோய் விடுகிறது?

உண்மையில் இது ஒரு சமூகநோய். ஒவ்வொரு நாளும் பயணத்தில் இதை  பெண்கள் பல்வேறு வடிவங்களில் எதிர்கொள்கிறார்கள். பயத்துடனும் அவமானத்துடனும் பயணம் செய்கிறார்கள். சகித்துக்கொள்ள முடியாமல்  புகார் அளிப்பவர் ஒரு சிலரே.

ஒருமுறை டெல்லி நிஜாமுதீனில் இருந்து குஜராத் சம்பர்கிராந்தி ரயிலில் அகமதாபாத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். அந்த ரயில் மதியம் புறப்படக்கூடியது. மறுநாள் காலை 6 மணிக்கு அகமதாபாத் போய் சேர்ந்துவிடும்.

ஏப்ரல் மாதம் என்பதால் ரயிலில் நிறையக் கூட்டம். வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நிறையக் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கைலாதேவி கோயில் திருவிழாவுக்குப் போகிறவர்கள் அந்த ரயிலில் இருந்தனர்.

30 வயது உள்ள ஒரு பெண் எங்கள் கம்பார்ட் மென்ட்டில் அமர்ந்திருந்தார். தனியே பயணம் செய்கிறார் என்பது அவர் ஒடுங்கி உட்கார்ந்து கொண்டு வருவதிலேயே தெரிந்தது.

கிராமப்புற குஜராத்தி பெண்களுக்கே உரிய முக்காடு. நெற்றியில் பெரிய பொட்டு. கையில் கண்ணாடி வளையல்கள். இடது மூக்கில் ஒரு வளையம். காலை ஒடுக்கிக்கொண்டு ஜன்னலை ஒட்டி உட்கார்ந்திருந்தார். காலடியில் இரண்டு பெரிய பைகள் இருந்தன.

கண்களில் பட்டு ஓடும் நிலக் காட்சிகளையும் தூரத்து வீடுகளையும் அடிவானத்தையும் பார்த்தபடியே வந்தேன். பகலில் ரயிலில் நீண்டதூரப் பயணம் செய்வது சுகமான அனுபவம். எத்தனையோ மாறுபட்ட நிலக் காட்சிகளை, ஆறுகளை, குடியிருப்புகளை, சின்னஞ்சிறு ஊர்களைக் காணலாம்.

வேகமாக ஓடிக்கொண்டிருந்த ரயில், பாயனா என்ற ரயில் நிலையத்தில் வந்து நின்றது. எதற்காக ரயில் நிற்கிறது என ஒருவருக்கும் புரியவில்லை. அது நிறுத்தமே இல்லாத இடம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நின்றுகொண்டே இருந்தது. ஆளுக்கு ஆள் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் கம்பார்ட்மென்ட்டில் இருந்து ஒருவர் இறங்கிப்போய் விசாரித்துவிட்டு, `இடஒதுக்கீடு கோரி, குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ரயில் பாதையை அந்த மக்கள் திரண்டு மறித்திருக் கிறார்கள்.  சில இடங்களில் ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்துவிட்டிருக்கிறார்கள். ஆகவே, ரயில் திரும்ப ஆக்ரா போகப்போகிறது' என்றார்.

அதுவரை யாருடனும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துவந்த அந்தப் பெண்ணின் முகம் கலக்கம் அடைந்தது. அவள் மெல்லிய குரலில் `ரயில் ரட்லம் போகாதா?’ எனக் கேட்டார்.

ரயில் ஆக்ரா திரும்பப்போகிறது என்பதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. ரயில் வந்த வழியே திரும்பவும் ஆக்ரா நோக்கிப் போகத் தொடங்கியது

`எதற்காக ஆக்ராவுக்குத் திரும்பிப்போகிறது... ஒருவேளை ரயில் ரத்துசெய்யப்படுமா?' என குழப்பமாக இருந்தது. அந்தப் பெண் செய்வதறி யாமல் `ரட்லம் போகாதா... ரட்லம் போகாதா?’ எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். எவருக்கும் பதில் தெரியவில்லை.

ரயில் ஆக்ரா கன்டோன்மென்ட்டுக்கு வந்து சேர்ந்தபோது இரவாகியிருந்தது. பயணிகள் ரயில் `புறப்படுமா... இல்லையா...’ எனத் தெரியாமல் பிளாட்பாரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். `ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது’ என்றார்கள்.

இந்திய வானம் - 18

அந்தப் பெண் தன்னைக் கடந்து போகிற வருகிறவர்களின் முகத்தைக் கலக்கத்துடன் பார்த்தபடியே ரயில் போகாமல் நின்றுவிட்டால் என்ன செய்வது எனப் புரியாமல் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தார்.

`ரயில் அஜ்மீர் வழியாகத் திருப்பிவிடப் படுகிறது’ எனப் பேசிக்கொண்டார்கள். `அப்படி யானால் தான் எப்படி ஊருக்குப் போவது, திரும்ப டெல்லிக்குப் போக வேண்டுமா,  இல்லை தன்னைப்போல வழியில் இறங்கவேண்டியவர் களை வேறு ரயிலில் போகச் சொல்வார்களா?’ எதுவும் அவருக்குப் புரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. அவர் தனது இயலாமையை நினைத்து அழத் தொடங்கினார்.

அவர் அழுவதை ஒருவரும் பொருட்படுத்தவே இல்லை. ஒரு முதியவர் அவரிடம் `இங்கிருந்து ரயில் பிடித்து டெல்லிக்குத் திரும்பப் போய்விடு’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த இரவில் தனியே எப்படிப் போவது?

திடீரென ரயில் புறப்படத் தொடங்கியது. பயணிகள் ஓடிவந்து ஏறினார்கள். ரயில் எந்த வழியாகப் போகப்போகிறது என ஒருவருக்கும் தெரியவில்லை. ரயில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. அவர்் ஜன்னலுக்கு வெளியே தெரியும் இருட்டை வெறித்தபடியே வந்தார்். அழுகை அடங்கவே இல்லை.

ரயில் `குவாலியர், ஜான்சி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது’ என்றார்கள். அப்படியானால் `உஜ்ஜைனியின் வழியாக ரட்லம் போய்விடும்' எனவும்... `இல்லை போகாது. இது மாற்றுவழியில் நேராக கோத்ரா போய்விடும்’ என்றும் ஆளுக்கு ஒருவிதமாகப் பேசிக்கொண்டார்கள்.

ரயில் எப்போது ஊர் போய் சேரும், ஒருவேளை வேறு ஏதாவது ஊரில் போய் இறக்கிவிட்டால் என்ன செய்வது... அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. அழுதுகொண்டே இருந்தார்.

நள்ளிரவில் ரயில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. ஆளுக்கு ஆள் இறங்கி ஓடி, கிடைத்த உணவுகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள். அவர் எதுவும் வாங்கவில்லை; சாப்பிடவும் இல்லை. அந்த முதியவர் அவருக்கு `தேநீர் வேண்டுமா?’ எனக் கேட்டபோதுகூட `தேவை யில்லை’ என மறுத்துவிட்டார்.

எப்படியாவது ரயில் தங்களை அகமதாபாத் கொண்டுபோய் சேர்த்துவிடும் என நம்பி பயணிகள் உறங்கத் தொடங்கினார்கள். அந்தப் பெண் அழுதுகொண்டிருக்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. ஒவ்வொரு நிலையத்தில் வந்து ரயில் நிற்கும்போதும்  பயத்துடன் வெளியே எட்டிப்பார்த்து, எந்த ஊர் எனப் பார்ப்பார். எதுவும் தெரிந்த ஊர் இல்லை. நிச்சயம் ரயில் தன்னை ஏதோ ஓர் ஊரில் கொண்டுபோய் விட்டுவிடப்போகிறது என்ற பயமும் வேதனையும் வாட்டின.

ரயில் எங்கெங்கோ சுற்றி, காலை 7:30 மணிக்கு ரட்லத்துக்குப் போய் சேர்ந்தது. அந்தப் பெண் இரவு முழுவதும் உறங்கவே இல்லை. தனது ஊர் ரயில் நிலையத்தைக் கண்ட சந்தோஷத்தில்  சேலையால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்். ரயில் நின்றதும் வேகவேகமாக இறங்கி ஓடிய போது, இனி ஒருபோதும் ரயிலில் தனியே பயணம்செய்ய மாட்டேன் என்ற முடிவோடு அவர் போனதுபோல் இருந்தது.

எதிர்பாராத தருணங்களில் இப்படி உருவாகும் இடர்பாடுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இயல்பான ஒரு நாளில் ரயிலில் பல நூறு பேர்களுக்கு மத்தியில் தனக்குப் பாதுகாப்பு இல்லை. நாயின் நாக்கு துடிப்பதுபோல தன்னை ஏதோ ஓர் ஆண் காம இச்சையுடன் வெறித்துக்கொண்டிருக்கிறான். ஆழ்ந்து உறங்கும்போதுகூட உடை லேசாக விலகியிருக் கிறதா, கால்கள் வெளியே தெரிகின்றனவா என கவனமாக இருக்கவேண்டியுள்ளது. முகம் தெரியாத ஒருவருடன் இரண்டு வார்த்தைகள் சம்பிரதாயமாகக்கூடப் பேச முடியவில்லை. அடுத்த நிமிடம் அவன் நோக்கம் மாறிவிடுகிறது என ஒரு பெண் வேதனைப்படுவது சகித்துக்கொள்ள முடியாத குற்றமாகப் படுகிறது.

ரயிலில் ஏறுவதற்கு முன்னர் ஒட்டப் பட்டிருக்கும் ரிசர்வேஷன் சார்ட்டில் தனது கம்பார்ட்மென்ட்டில் எத்தனை பெண்கள் வருகிறார்கள், அவர்களுக்கு என்ன வயது, யார் தனியாக வருகிறார்கள் என்பதை ஆர்வத்துடன் பார்ப்பது பலருக்கும் இயல்பாகி விட்டது. ஒருவேளை அவள் இளம்பெண் என்றால், அவளைப் பற்றிப் பேசப்படும் இரட்டை அர்த்தக் கேலிகள் சகித்துக்கொள்ள முடியாதவை.

இந்திய வானம் - 18

எந்த இடத்தில் ஒரு பெண்ணை தனியே சந்தித்தாலும் காம உணர்ச்சியைத் தவிர வேறு எதுவுமே ஒருவன் மனதில் தோன்றாது என்றால், உண்மையில் மனநோயாளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா... இதைத் தானா கல்வி உருவாக்கித் தந்திருக்கிறது?
தனியே பயணிக்க முடியாது என ஔவை, கிழவியாக வரம்பெற்று உருமாறினாள் எனச் சொல்வார்கள். அதுதான் இதற்கான ஒரே தீர்வா? சமீபத்தில் துருக்கியில் தனியே பயணம் செய்த சராய் சியாரா என்கிற 33 வயது பெண், பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப் பட்டிருக்கிறாள்.

23 வயது சௌமியா எனும் அழகான  பெண்ணை,   ஓடும் ரயிலில் வன்புணர்ச்சிசெய்து கீழே தள்ளிக் கொன்ற சம்பவம், சில ஆண்டு களுக்கு முன்னர் நடைபெற்றது. கோழிக்கோடு அருகே ரயிலில் ஒரு ஜெர்மன் பெண்ணை, சக பயணி வன்புணர்ச்சி செய்ததாக  செய்தி ஒன்றை சமீபமாகப் படித்தேன்.

எலிசா தூசெட் பாலித்தீவைச் சேர்ந்த இளம்பெண். கடந்த 10 ஆண்டுகளாகத் தனியே உலகைச் சுற்றிவருகிறாள். இவள் தனது பயண அனுபவங்கள் குறித்த ஒரு சொற்பொழிவில் தனியே பெண்கள் பயணம்செய்வதன் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார்.

` `தனியே பயணம் செய்ய வேண்டாம். அது ஆபத்து’ எனப் பலரும் என்னை எச்சரிக்கிறார்கள். அது என் மீதான அவர்களின் அக்கறை என்றே புரிந்துகொள்கிறேன். ஆனால்,  அந்தப் பயத்தின் காரணமாக முடங்கிப்போவதோ, துணை தேடுவதோ என்னால் இயலாது. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது.

தனியே பயணம் செய்கிற பெண்ணின் உடைதான் பிரச்னைகளுக்கு முதல் காரணம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. அது ஒரு சப்பையான காரணம். ஆண்களின் மனப்போக்குத்தான் உண்மையான காரணம். தன்னுடைய வீதியிலே ஒரு பெண் இரவில் தனியே நடந்துவர முடியாத சூழல்தானே உள்ளது.

நான் சிலவற்றைக் கணக்கில்கொண்டு பயணிக் கிறேன். கவர்ச்சிக்காக நான் ஒருபோதும் உடை அணிவது இல்லை. அதுபோலவே முன்பின் அறியாதவர்கள் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது இல்லை. என் ஹேண்ட்பேக்கில் நான் ஒரு விசில் வைத்திருக்கிறேன். நெருக்கடியான சூழலில் அந்த விசில் என்னைக் காப்பாற்றியிருக்கிறது. பயணத்தில் யாரிடமும் எனது முகவரி மற்றும் வசிப்பிடம் பற்றி பகிர்ந்துகொள்வது இல்லை. மன உறுதியும் தைரியமும்தான் பயணத்துக்கான தேவைகள்; கால மாற்றம்தான் இந்தப் பிரச்னையின் ஒரே தீர்வு.

மாறும் உலகின் கதவுகள் பெண்களுக்கான வழியை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இதை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பது அவர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால், எச்சரிக்கைகளை நாம் புறக்கணிக்கவேண்டியது இல்லை. அவை நம் மீதான அக்கறை என எடுத்துக் கொள்ளவேண்டியது தான்.

பத்து ஆண்டுகளாக தனியே பயணித்து வருகிறேன். இதில் பல்வேறு தொல்லைகளையும் சிக்கலையும் சந்தித்திருக்கிறேன். இந்த அச்சுறுத் தலுக்காக என்னை ஒடுக்கிக்கொள்ள மாட்டேன்.  அந்த உறுதிதான் என்னை வழிநடத்துகிறது’ என்கிறார் எலிசா தூசெட்.

பொது இடங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கத்தைக்கூடத் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டியிருக்கிறது என்றால், இது நம் கல்விமுறையின் தோல்வி எனச் சொல்வதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்?

-சிறகடிக்கலாம்...