டையாறும் கூவமும் விட்டுச்சென்ற அழுக்குகளில் இருந்தும் அழுகைகளில் இருந்தும் இன்னும் மீள முடியவில்லை. சங்க இலக்கியத்தில் எத்தனை ஆறுகள், நீர் நிலைகள் குறித்த எவ்வளவு சேதிகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆறு சார்ந்த  நாகரிகங்களையும் அழகியலையும் வாழ்வியலையும் பெரிதாக வர்ணிக்கும் பல பாடல்களைக்கொண்ட சங்க இலக்கியம் ஓர் இடத்திலாவது ஊருக்குள் புகுந்ததாக எந்த ஆற்றையும் பற்றி எங்கும் பாடவில்லையே; வீட்டுக்குள் புகுந்த நீர்ப்பெருக்கைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே.பெரும் வெள்ள அழிவு குறித்து எங்கும் பதிவு இல்லையே... ஏன்?

இப்படி பேரிடர்கள் இல்லாத மரபுக்கு, நம் மண் காரணமா... நம் வாழ்வியல் காரணமா... அதில் ஊடே ஒளிந்திருக்கும் சூழலுக்கு இசைவான தொழில்நுட்பம் காரணமா? அப்படி உயரிய நுட்பங்களை தம் நுண்ணறிவில் வைத்த மரபுக்குள், நாம் பேசும் இந்த உயிர்ப் பேரிடருக்கும் வழிகாட்டும் நுட்பங்கள் ஒளிந்திருக்காதா என்ற சிந்தனையுடனும் உலுக்கும் கேள்விகளுடனும் நெல்லையைத் தாண்டி பயணித்துக்கொண்டிருந்தேன். போகிற வழியில் பொங்கிவரும் தாமிரபரணியைக் கடந்தபோது, வாகனத்தில் இருந்த வானொலியில் ஓர் அறிவிப்பு, தாமிரபரணியில் 30,000 கன அடி நீர் திறந்துவிடுகிறார்கள் என்று. வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நதியின் குறுக்கே நெல்லைக்கு அருகே உள்ள மருதூர் தடுப்பணையை ஒரு எட்டுப் பார்த்து வரலாம் எனப் பயணித்தேன்.

உயிர் பிழை - 18

கொஞ்சம் அதீத தைரியத்துடன் தடுப்பணையின் விளிம்புகளில் கிராமத்து நண்பர்களின் கைப்பிடித்து நடந்து, சீறிவரும் நீரை அணையின் விளிம்பில் நின்று சில நிமிடங்கள் பார்த்தபோது, விரிந்தும் பொங்கியும் தெரிந்தது பொருநை நதி மட்டும் அல்ல, விசாலமான அறிவோடு சூழலியல் நுண்ணறிவின் உச்சத்தோடு கட்டப்பட்ட தொழில் நுட்பமும்தான்.  1502-ம் ஆண்டில் வெறும் 60,000 ரூபாயில் கட்டப்பட்ட அந்த அணைக்கட்டு, சுமார் 4,000 அடி நீளமான தடுப்பணைச் சுவர்; அந்தத் தடுப்பணையின் ஒவ்வொரு 500 அடி நீளத்திலும் மணல், சகதி, மற்றும் தாவரக் கழிவைச் சல்லடையிட்டு நிறுத்தி ஆற்று நீரை மட்டும் ஓடவைக்கும் அணையின் பிரமாண்ட அமைப்பும் நம் முன்னோரின் சூழலியல் அறிவைப் பறை சாற்றியது. கூடவே, பெருகி ஓடிவரும் ஆறு, அது வடிய ஏரி, அதில் இருந்து கண்மாய், அதில் இருந்து குளம், குட்டை என ஒவ்வொரு படியாக நீரைத் தேக்கிவைத்து மேலாண்மைசெய்த அனைத்தையும் மருதூரைச் சுற்றிப்பார்க்க முடிந்தது. தொழில்நுட்பம் மெக்கல்லேயில் இருந்து தொடங்கியதாகச் சிலாகிக்கும் இந்திய நவீனம் வெட்கித் தலைகுனியவேண்டிய இடம் மருதூர் அணை. சிந்தனை மெள்ளத் திரும்பியபோது ஆற்றில் 40,000 கன அடியைத் தாண்டி வெள்ளம் செல்வதாகச் சொன்னார்கள். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சுலோச்சனா முதலியார் பாலத்துக்கு வெகு கீழே தாமிரபரணி ஆர்ப்பரிப்போடு, ஆனால் கொலைவெறி ஏதும் இல்லாமல் கொக்கிரக்குளம் மண்டபங்களை முழ்கடித்துக்கொண்டு ஓடியது. தாமிரபரணி ஓரத்தில் பிறந்து, அடையாற்றின் ஓரத்துக்குப் பிழைப்புக்கு வந்த பலருக்கு இன்னமும் ஏன் இந்த வெள்ளப்பெருக்கு என் வீட்டுக்குள் நுழைந்தது எனத் தெரியாமல் ஃபிரிட்ஜையும் தொலைக் காட்சியையும் மொட்டைமாடி வெயிலில் காயப்போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மழையும் மடை திறந்த வெள்ளமும்கூட மறுபடி மறுபடி சொல்வது எல்லாம்,  நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை நம் மரபில் ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன என்பதைத்தான். உயிர் பிழைக்க, உயிர் பிழை உருவாகாது இருக்க... பாரம்பர்யங்களை உற்றுப்பார்ப்பதில் மரபை உரசிப்பார்ப்பதில் நாட்டார் வழக்காற்றியல் எச்சங்களை, காலங்களுக்குள் பொதிந்துகிடக்கும் மருத்துவக் குறிப்புகளைக் கூர்ந்து கவனிப்பதில் மட்டுமே சாத்தியம் ஆகும். Reverse Pharmacology எனும் ஆய்வுமுறை இப்படித்தான். `ஓ... இந்த மருந்தால் இவ்வளவு நாள்  நோய் குணப்படுகிறதா? இந்தப் பழக்கம் இந்த இனக்குழுவுக்கு இந்தப் புற்றை இவ்வளவு நாள் கொடுக்கவில்லையா? இந்த உணவு உயிர் பிழை உருவாகாமல் தடுக்கிறதா? அப்படியானால், இது பெரும்பாலானோருக்குச் சாத்தியப்படுமா?' என யோசிக்கிறது.

வழக்கமாக மருந்தை நுண்ணிய மூலக்கூறுகளாகச் செதுக்கி, உருவாக்கிய பின்னர் அதை சோதனைக் குழாய், செல், எலி, ஆரோக்கிய மனிதன், நோய் வாய்ப்பட்ட சிறு கூட்டம், பின்னர் பெரும் நோயாளிக் கூட்டம் என ஆராயாமல், அப்படியே தலைகீழாக இவ்வளவு சரியாக நோயாளிக்குப் பயன் அளிக்கிறதா? அப்படியானால், பயன்படும் மருந்தில் எந்தக் கூறு இந்தப் பயனைத் தரக்கூடும் என புரட்டிப்போட்டு ஆராயும் முறைதான் Reverse Pharmacology. பாரம்பர்ய மருத்துவ அனுபவங்களை அப்படித்தான் ஆராயச் சொல்கிறது தற்போதைய விஞ்ஞான அறிவு. இதுவரை அப்படி Reverse Pharmacology Research  எனும் குணப்பட்ட நோயாளியிடம் இருந்து குணமாக்கிய மருந்தைத் தேடியதில் நம் நாட்டு மூலிகைகள் பல, புற்றைத் தடுக்க, கட்டுப்படுத்த, பிற மருத்துவத்தோடு துணை நிற்க, பக்கவிளைவைத் தடுக்க, துணை நிற்பதைப் பட்டியலிட்டிருக்கிறது. ஏறத்தாழ 82 மூலிகைகளை அப்படிப் பட்டியலிட்டுச் சொல்கிறது Journal Of Medicinal Plants Research-ல் 2010-ம் ஆண்டு வெளியான  ஆய்வுக் கட்டுரை.

சேராங்கொட்டை (Markers Nut) - துணி துவைத்துத் தொழில் செய்யும் குடும்பத்தார், துணிகளில் அடையாளத்துக்கு சட்டை காலர் ஓரத்தில் குறியீட்டுக்குப் பயன்படுத்தும் கனியின் விதை இது. அதன் விதைப் பால் உடலில் பட்டால் தீவிரக் கொப்புளங்களை உருவாக்கும். இந்த விதைப் பாலின் Extract (பிரித்தெடுக்கும் சத்து)பல புற்று நோய்களுக்குப் பயன்படுவதை சித்த மருத்துவம் வெகுகாலம் முன் ஆவணப் படுத்தினாலும், நவீன Reverse  Pharamacologyஆய்வுகள் அதில் உள்ள Biflavonoids எந்த அளவுக்கு ஈரல் புற்றுநோயில் பயன்படுகிறது, அதிலும் குறிப்பாக ஈரல் புற்றுநோயில் முக்கிய marker-ஆகப் பயன்படும் ரத்த Alpha Fetoprotein-ஐ எப்படிக் குறைக்கிறது எனப் பட்டியலிட்டுள்ளது.

வெந்தயம் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்; ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் என மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுவந்தது. இப்போது அதையும் தாண்டி அளப்பரிய செய்கையைச் செய்யுமோ என நம் மேவாய்க் கட்டையைச் சொறிய வைக்கத் தொடங்கியுள்ளது. ஆம்... வெந்தயத்தின் சத்துக்கள் மார்பகப் புற்று, குடல் புற்று, நுரையீரல் புற்று இவற்றின் காரணிகளை, நம் உடலின் Apoptosis எனும் சுய செல் கட்டுப்பாட்டுத்திறனைச் சீராக்கி, புற்றுநோய் வராது தடுக்கும் பணியைச் செய்கிறது என ஆய்வறிக்கைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டன.

அமுக்கராங்கிழங்கு - மூட்டு வலிக்குத்தான் இது எனப் பேசப்பட்ட மூலிகை. Urethane-ஐ செலுத்தி ஆய்வு விலங்குகளின் நுரையீரலிலும் வெள்ளையணுக்களிலும் செயற்கையாக ஆய்வுக்கு என உருவாக்கப் பட்ட புற்றில் அதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவதிலும், செல்லணுக்களைச் சீராக்குவதிலும் சிறப்பாகப் பணிபுரிவதை ஆராய்ந்து வியந்திருக் கிறது நவீன தாவர மருந்தியல் விஞ்ஞானம்.

நோனி (நம் ஊர் நுணா அல்லது மஞ்சணத்தி மரத்தின் சித்தப்பா, பெரியப்பா குடும்பம் இது). இந்த நோனியின் பழச்சாறு இன்று கடுமையாக வணிகப்படுத்தப்படும் ஒரு பழம். ஒரு சமயத்தில், `நோனி சாறு குடித்தால் ஆண் குழந்தை பிறக்கும்' என்ற அளவுக்கு பயனை அதிகப்படுத்தி Direct Marketing செய்யப்பட்ட இந்தச் சாறு, உண்மையில் புற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கொண்டது. அதன் திறனை அதன் பயன்பாட்டு Limitations-ஐ தாண்டி, `ஒரு பாட்டில் விற்றால் ஆட்டோவில் திரும்பிப் போகலாம். ஒரு கேஸ் விற்றால், விடுமுறைக்கு அட்லாண்டா போகலாம்' என்ற வணிக பேரத்தில் சிக்கி, ஒரே இரவில் மருத்துவராக மண்டையைக் கழுவி மாற்றப்பட்ட பலரும் பேச ஆரம்பித்ததில், நோனியின் உண்மைப் பயன் உறங்கிவிட்டது. புற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதிலும், குறிப்பாக பிற புற்று மருந்துகளோடு பக்கபலமாக இருப்பதாகவும் அறியப்பட்டது. இன்னும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கூட்டுச்சிகிச்சையில் பயன் படுத்தப்பட்டால் நோனி புற்றுப்பந்தை விரட்டி யடிக்கும் தோனியாகும் வாய்ப்பு மிக அதிகம்.

முருங்கைக்காய் - `அந்த' விஷயத்துக்கு மட்டுமே அதிகம் பேசப்படும் இந்தக் காயிலும் Burkitt Lymphoma எனும் ஒரு வகைப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும், தோலில் ஏற்படும் புற்று வளர்ச்சியைக் (Skin Papillomas) கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மருதாணி - ஒளவைப் பாட்டி காலத்தில் இருந்து அலியா பட் காலம் வரை பெண்னை அழகுபடுத்தும் சங்கதி. இப்போது அது அழகுக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்துக்கும் குறிப்பாக உயிர் பிழை உருவாகாது தடுக்கவும் உதவும் என்கிறது Reverse Pharmacology ஆய்வுகள். ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் நுரையீரல் புற்று, மார்பு புற்று, Melanoma புற்று... என பல புற்றுகளில் தடுப்பளவில் வெற்றிகாண ஆரம்பித்துள்ளது. இந்த மருதாணி உடலில் மட்டும் அல்ல, உயிரிலும் சீக்கிரம் வண்ணம் தீட்டி மகிழவைக்கும் என்கின்றன ஆய்வுகள்.

உயிர் பிழை உட்பட்ட அத்தனை நாட்பட்ட வாழ்வியல் நோய்களுக்கும் (Non Communicable Lifestyle Diseases) தனி மூலக்கூறுகளால் மருத்துவம் செய்துவிட முடியாது. ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் குறைக்கும் ஒரு மருந்து நீரிழிவை, ஒட்டுமொத்தமாக நீக்க பயன் தராது. அதேபோல் புற்றுநோய்க்கும் செல் அழிவைத் தரும் மூலக்கூறு மட்டும் போதாது. புற்றுச்செல் அழிக்கப்பட வேண்டும். புது புற்றுச்செல் உருவாகாமல் இருக்க செல்வாழ்வைச் சீராக்க (Apoptosis) வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலைச் சரியாக்க வேண்டும். உடம்புக்குளேயே புற்று செல்லை அழிக்கும் Natural Killer Cells-ஐ சரிவர உருவாக்க வேண்டும். புற்றுக்காரணிகளால்  (Carcinogen) தூண்டப்படும் உடலின் சில புரதங்களை உசுப்பாமல் இருக்க வேண்டும். `மஞ்சள் சேராங்கொட்டை முதலான பாரம்பர்ய மரபு மூலிகைகள்தான் இப்படி Multiple Targets-ஐ சீராக்கும் Multiple Modulators-ஐ தன் அகத்தே கொண்டிருக்கின்றன. தனி மூலக்கூறுகள் அல்ல' என்கின்றனர் புற்றை ஆராயும் ஆய்வாளர்கள் பலர்.

அப்படியானால், மருதாணி பூசிய கையில், முருங்கைக்காய் சாம்பாரும் வெந்தயக் குழம்பும் சாப்பிட்டு, நோனி குடித்து வந்தால் புற்றை ஜெயித்துவிடலாம் என அவசரப்பட வேண்டாம். இந்த முடிவுகள் எல்லாமே ஆரம்பப்  புள்ளிகள்தான். அடுத்தடுத்த ஆய்வுகள் நகர்ந்தால் மட்டுமே இவை மருந்துகளாக மாற முடியும். மாறவிடுவார்களா என்பது இன்னோர் இக்கட்டான கேள்வி. காப்புரிமைக் கட்டப்பஞ்சாயத்துப் பேசி கந்துவட்டி மீட்டர்வட்டி பார்க்க யத்தனிக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் 1 கீமோவுக்கு 60 லட்சம் வரை வாங்க வாய்ப்பு உள்ள இந்த வணிகத்தில், காட்டு யானைச் சம்பா சோற்றில் மஞ்சள் தூள் போட்டு புற்றைப் போக்க முன்வரவே மாட்டார்கள். ஆனால், நாம் அந்த அனுமதிகளுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருந்தாக அவை வரும்போது வரட்டும். மரபு சுமந்துவந்த தொழில்நுட்பம் இது. இந்த நுண்ணறிவு பரிமாறும் கறிவேப்பிலையிலும் மஞ்சளிலும் வெந்தயத்திலும் ஆடாதொடையிலும் நம்மை இம்மி அளவு காத்துக்கொள்ள முடியும் என்னும்போது இன்னும் எதற்குத் தாமதம்?

- உயிர்ப்போம்...

புற்றை யோகா தடுக்குமா?

உயிர் பிழை - 18

புற்றுக்கும் மனதின் அழுத்தத்துக்குமான தொடர்பு, நவீன அறிவியலால் முழுமையாக நிருபிக்கப்படவில்லை. ஆனால், நம் மரபு மருத்துவ முறைகள் அனைத்தும் குறிப்பாக சித்த மருத்துவம், சீன மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவ முறைகள் அனைத்தும் யோகாசனப் பயிற்சியை, வாழ்வியல் நோய்கள் அனைத்துக்குமே குறிப்பாக புற்றுக்குத் தடுப்பாக வலியுறுத்துகின்றன. யோகாவுக்கும் மதத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. வேத மறுப்பைத் தொடங்கிய, உருவ வழிபாட்டுக்கு எதிராக அன்று குரல்கொடுத்தவர்கள் காட்டிச்சென்ற உயிர்ப் பயிற்சிதான் யோகா. மூச்சுப் பயிற்சியும் ஆசனப் பயிற்சியும் நிச்சயம் புற்றின் உருவாக்கத்தை ஒதுக்கும்.

யோகா - சூர்ய நமஸ்காரம் - தினசரி யோகா என்ன செய்யலாம்?

நடைப்பயிற்சியை முடித்து 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்களுக்குப் பின்னர் காற்றோட்டமான வெளிச்சமான அறையில் யோகாசனப் பயிற்சியை தொடங்குங்கள்.

மனத் தூய்மையும் செயல் தூய்மையும்தான் யோகாவின் முதல் இரு வாசல் படிகள். அழுக்குகளை முதலில் அகத்தில் கழுவிவிட்டு, பின்னர் உடல் அங்கங்களைத் தூய்மைசெய்வது நல்லது.

எல்லா தசைகளையும் மூட்டுகளையும் இலகுவாக்கும் முதல்கட்ட யோகாசனப் பயிற்சியைச் செய்வது, கிட்டத்தட்ட உடற்பயிற்சிக்கான warm up.

அடுத்து சூரிய நமஸ்காரம். இதை மூச்சுப் பயிற்சியுடன் சேர்த்து மூன்று முறை செய்வது நல்லது.

உயிர் பிழை - 18

அடுத்ததாக, நின்று, உட்கார்ந்து, படுத்துச் செய்யும் ஆசனங்கள். தடாசனம், திரிகோணாசனம், அர்த்த சக்கராசனம், பத்மாசனம், யோக முத்திரை, வஜ்ராசனம், பவன முக்தாசனம், மச்யேந்திராசனம், விபரீத கரணி, சர்வாங்கசனம், தனுராசனம், நவாசனம், அர்த்த மயூராசனம் என ஆசனங்களை அதற்கு உரிய மூச்சு ஓட்டத்தோடு செய்வது.

ஆசனங்கள் முடிந்த பின்னர் நாடி சுத்தி மற்றும் பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி. குறிப்பாக, கபாலபாதி எனும் நாடிசுத்தி, உடலில் சேரும் நச்சுக்களை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும்.

Instant Relaxation Technique, Quick And Deep Relaxation Technique எனும் யோக நித்திரைகள். தியானப் பயிற்சி. Pranic Energization Technique எனும் வடிவமைக்கப்பட்ட யோகா மூலம் புற்றின் வளர்ச்சியைத் தடுக்க இயலும் என, யோகா பல்கலைக்கழக மூத்த ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆசனங்களை யோகா புத்தகம் பார்த்து, இணையம் பார்த்து எல்லாம் செய்ய முயற்சிக்காமல், சரியான யோகா ஆசிரியரிடம் சேர்ந்து நேரடியாகக் கற்றுச்செய்வது மட்டுமே சரியான பலன் தரும்.