Published:Updated:

“சென்னைக்கு சமர்ப்பிக்கணும்!”

சார்லஸ்

க்காவ் ஓப்பன் பாட்மின்டன் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறார் பி.வி.சிந்து. பாட்மின்டன் அரங்கில் அதிரடி கிளப்பும் சிந்துவுக்கு வயது 20. இதோ,  பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டிகளில், சென்னை அணிக்காக சிந்து விளையாட ஒப்பந்தமான  ஏலத்தொகை 65 லட்ச ரூபாய். இந்தியாவில் சாய்னாவுக்கு அடுத்தபடியாக அதிக ஏலத்தொகை சிந்துவுக்குத்தான். சென்னையின் முகமாக மாறியிருக்கும் சிந்துவிடம் பேசினேன்.

‘‘நீங்கள் ஹைதராபாத் பெண். ஆனால், சென்னைக்காக விளையாட வருகிறீர்கள். ஏலத்தில் உங்களுக்குத்தான் கடும் போட்டி. எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘இது மிகப் பெரிய கௌரவம். என் கனவுகளை நனவாக்கிய என் அப்பா, அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் பிறந்தது, வளர்ந்தது ஹைதராபாத் என்றாலும், சென்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் அம்மா விஜயா, சென்னையில் படித்து வளர்ந்தவர். சரளமாகத் தமிழ் பேசுவார். வீட்டிலும் அடிக்கடி தமிழ் ஒலிக்கும். ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் பாட்மின்டன் லீக் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி  தேடித் தந்து, அந்த வெற்றியை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என விரும்புகிறேன்.’’

 “சென்னைக்கு சமர்ப்பிக்கணும்!”

‘‘சென்னை அணியின் உரிமையாளர் விஜய் பிரபாகரன் யார் எனத் தெரியுமா?’’

‘‘ரொம்ப நல்லா தெரியுமே. அவங்க அப்பா விஜயகாந்த் அங்கிள் நடிச்ச நிறையப் படங்கள் பார்த்திருக்கேன். செமயா ஃபைட் பண்ணுவார். இப்போ பாலிடிக்ஸ்ல கலக்கிட்டிருக்கார். விஜய்யை இப்போதான் தெரியும். ரொம்ப நல்லா பேசினார்.’’

‘‘காயம் காரணமாக இந்த ஆண்டில் பல மாதங்கள் விளையாடாமல் இருந்தீர்கள். ஆனால், மீண்டு வந்த சில வாரங்களிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?’’

‘‘காயம் என்பது, ஒரு விளையாட்டு வீரருக்குத் தவிர்க்க முடியாதது. காயம் பட்டுவிடக் கூடாது என விளையாடினால், வெற்றிபெற முடியாது. காயம் காரணமாக ஆல் இங்கிலாந்து ஓப்பன், இந்தியன் ஓப்பன் போட்டிகளில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதில் பெரிய வருத்தம். காயத்தில் இருந்து உடல் மீண்டாலும், மனம் மீண்டும் பழைய நிலைக்கு வர ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை நோக்கித்தான் மக்காவ் ஓப்பன் போட்டியில் விளையாடினேன். எதிரில் விளையாடும் வீராங்கனையின் பலம் பற்றி யோசிக்காமல், என் பலத்தை முழு அளவில் பயன்படுத்தி விளையாடினேன். சாம்பியன் பட்டம் கிடைத்திருக்கிறது.’’

‘‘ஒரு போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனைகளைத் தோற்கடிக்கிறீர்கள். ஆனால், திடீரென அடுத்த  போட்டியில் உங்களைவிட பின்னால் இருக்கும் வீராங்கனைகளிடம் தோல்வி அடைகிறீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’’

‘‘பாட்மின்டன் போட்டி என்பது, பல நேரங்களில் அரை மணி நேரத்துக்குள்ளாகவே முடிந்துவிடும் மிகவும் வேகமான போட்டி. கொஞ்சம் அசந்தால்கூட எதிரில் ஆடுபவர் ஐந்தாறு புள்ளிகளை எடுத்துவிடுவார். மீண்டும் அவரைப் பிடிப்பது மிகவும் சிரமம். பெரிய வீராங்கனை, சிறிய வீராங்கனை என்பது அல்ல. அந்தப் போட்டியில் அன்று யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, அவரால்தான் வெற்றிபெற முடியும்.’’

 “சென்னைக்கு சமர்ப்பிக்கணும்!”

‘‘ ‘பயிற்சியாளர் கோபிசந்தின் அகடாமியில் நிறையப் பேர் பயிற்சிபெறுகிறார்கள். அதனால் அவரால் தனிக்கவனம் செலுத்த முடியவில்லை’ என அவரிடம் இருந்து வந்துவிட்டார் சாய்னா நேவால். நீங்கள் தொடர்ந்து கோபிசந்திடம்தான் பயிற்சிபெறுகிறீர்களே?’’

‘‘கோபிசந்த் அண்ணாவிடம் நிறைய வீரர், வீராங்கனைகள் பயிற்சிபெறுவது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. நிறையப் பேரோடு விளையாடும்போது அவர்களிடம் இருந்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அகடாமியில் தினமும் நான்கு செஷன்களாகப் பயிற்சி நடக்கும். காலை 4:30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கினால், மாலை 6 மணி வரை இருக்கும். இடையில் ஃபிட்னெஸ், யோகா பயிற்சிகளும் உண்டு. ஒலிம்பிக் என்பது டாப் வீரர்கள் மோதும் அரங்கம் என்பதால், கன்சிஸ்டென்சி முக்கியம். அதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். ஸ்டாமினாவை இழக்காமல் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் என் ஸ்டைல். நான் கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் என்பதால் இயல்பாகவே அக்ரசிவ் ஆட்டம்தான் வரும். அதிகமாக ஸ்மாஷ் ஷாட்டுகளை அடிப்பேன்.   டிஃபென்ஸிவாகவும் ஆட வேண்டும் என்பது கோபிசந்த் அண்ணாவின் அட்வைஸ். இப்போது டிஃபென்ஸிவாகவும் ஆட ஆரம்பித்திருக்கிறேன்.’’

‘‘உங்கள் அடுத்த கோல் என்ன?’’

‘‘2016-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸுக் காகத் தயாராகிறேன். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித்தர வேண்டும்.''