Published:Updated:

மிதந்து வந்த மீட்பர்கள்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

சென்னை வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்ற பலரும் ஓட, விலங்குகளைக் காப்பாற்ற ஓடியது ‘புளூ  கிராஸ்’ அமைப்பு. இந்த மீட்புப் படைக்குத் தலைமைதாங்கி, 6,000 விலங்குகளை மீட்டிருக்கிறார் டான் வில்லியம்ஸ். முன்னாள் ராணுவ வீரரான இவர் தலைமையில் 33 பேர், இந்தக் கடும் மழையில் சென்னையின் பல முனைகளுக்கும் சென்று நாய், பூனை, மாடு, பன்றி என அனைத்து விலங்குகளையும் மீட்டிருக்கிறார்கள். 

``ஒவ்வொரு வருஷமும் பருவமழை தொடங்கும் முன்னாடியே விலங்குகளைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ், உணவு, வெட்ரினரி டாக்டர்ஸ், தன்னார்வலர்கள் என ஒரு டீம் ரெடியா இருப்போம். இந்த வருஷமும் மழைக்குத் தயாராத்தான் இருந்தோம். ஆனா, இவ்வளவு பெரிய வெள்ளத்தை எதிர்பார்க்கலை.

மிதந்து வந்த மீட்பர்கள்!
மிதந்து வந்த மீட்பர்கள்!

நவம்பர் 13-ம் தேதி சென்னையில் பலத்த மழை வந்தது. அப்போ நாங்க முதலில் போன இடம் ஐயப்பன்தாங்கல். நிலா வெளிச்சம்கூட இல்லாம அடர்ந்த இருட்டா இருந்தது. மின்சாரம் இல்லை. இடுப்புக்கு மேல தண்ணீர் அதிகமாகிட்டே இருந்தது. படகு இருந்தால்தான் காப்பாற்ற முடியும்னு தோணுச்சு. உடனே வாடகைக்கு ஒரு படகு எடுத்தோம். அந்தத் தெருவில் நிற்கக்கூட இடம் இல்லை. நீந்திக்கிட்டு இருந்த ஆடு, மாடு, நாய் எல்லாத்தையும் சேர்த்து சுமார் 50 விலங்குகளை ஒரே இரவில் காப்பாற்றினோம். அடுத்த நாள் நிலைமை இன்னும் மோசம். தினமும் படகு வாடகைக்கு எடுத்தால் செலவு அதிகம்னு, எங்க புளூ கிராஸ் நிர்வாகத்திடம் பேசி, உடனே சொந்தமா ஒரு படகை வாங்கினோம்.  அந்தப் படகு மூலமா ஊரப்பாக்கம், முடிச்சூர், மடிப்பாக்கம், கோட்டூர்புரம்னு பல இடங்களுக்கு அலைஞ்சு விலங்குகளைக் காப்பாற்றினோம். சில விலங்குகள் பக்கத்தில் போனாலே, நம்மைக் காப்பாற்ற வந்திருக்கார்னு புரிஞ்சுக்கும். சில விலங்குகள் ரொம்பப் பயப்படும். விலங்குக்கும் நமக்கும் சின்ன கெமிஸ்ட்ரி இருக்கணும். இல்லைன்னா, கஷ்டம்தான். நாய் புத்திசாலி, டக்குனு புரிஞ்சுக்கும். பூனை, மாடு, பன்றி எல்லாம் உடனே நம்மை நம்பிடாது. அது மனசுல நாம இடம்பிடிக்க கொஞ்ச நேரம் ஆகும்.

மிதந்து வந்த மீட்பர்கள்!
மிதந்து வந்த மீட்பர்கள்!

தெருவுக்குள் தண்ணீர் வர்றதுக்கு முன்னாடியே நாய்கள் எல்லாம் வீட்டு மொட்டை மாடியில ஏறிடுச்சு. ஒரு வீட்டு மாடியில மட்டும் 10 நாய்கள் இருந்தன. எல்லாத்துக்கும் பிரெட், பிஸ்கட் கொடுத்து பத்திரமா மீட்டோம். முடிச்சூர்ல ஒரு வீட்டுக் கூரையில ஒரு நாய் எப்படியோ ஏறிடுச்சு. அஞ்சு நாட்கள் அந்த மழையிலயே நின்னு குரைச்சுக்கிட்டே இருந்திருக்கு. பக்கத்து வீட்டுல இருந்தவர், `சார், எனக்கு நாயே பிடிக்காது. ஆனா, அஞ்சு நாள் சாப்பாடு தண்ணி இல்லாம உயிரைப் பிடிச்சுட்டு இந்த நாய் கதறுறதைப் பார்க்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. எப்படியாவது காப்பாத்துங்க’னு போன் பண்ணார். உடனே அந்த நாயை மீட்டோம்.

நாய்களைச் சுலபமா மீட்டுடலாம். மாடுகளைக் காப்பாத்துறது கொஞ்சம் சிரமம். பிறவியிலேயே நீச்சல் அடிக்கும் திறனை விலங்குகளுக்கு இயற்கை கொடுத்திருக்கு. ஆனால், எவ்வளவு நேரம்தான் நீச்சல் அடிக்கும்? `முடிச்சூர்ல 39 மாடுகள் சிக்கியிருக்கு’னு சொன்னாங்க. அங்க போனா ஆறு மாதிரி ஒவ்வொரு தெருவுலயும் தண்ணீர் பாய்ஞ்சு ஓடுது. படகுலயே துடுப்பு போட முடியலை. அந்த ஏரியாக்காரங்க, `இதுக்கு மேல போகாதீங்க, நீங்க மாட்டிக்குவீங்க'னு சொன்னாங்க. ஆனால், மாடுகள் எல்லாம் மிரண்டுபோய் உயிருக்குப் போராடுவதைப் பார்த்துட்டுத் திரும்பிவர முடியலை. போட்டைவிட்டு இறங்கி எல்லாரும் தண்ணிக்குள்ள குதிச்சோம். ஒரு மாட்டின் எடை சுமார் 500 கிலோவுக்கு மேல இருக்கும். நாங்க பக்கத்துல போனா எங்களைப் பார்த்து மிரளுது. அதனால் நாங்க அதுங்க கழுத்துல கயிற்றை வீசி, படகுல கட்டி 39 மாடுகளையும் அன்னிக்குக் காப்பாத்தினோம். அதேமாதிரி அடையாறு ஆத்துல ஒரு எருமை தண்ணியில அடிச்சுட்டுப் போகுது. எங்க வாலன்டியர் கொஞ்சம்கூட யோசிக்கலை. உடனே தண்ணியில குதிச்சு, வெள்ளத்துலயே நீந்தி எருமையைக் காப்பாத்தினார். மேடவாக்கம் பகுதி ஒரு குட்டையில, கர்ப்பிணி மாடு ஒண்ணு விழுந்து நீந்த முடியாமக் கத்திக்கிட்டு இருந்தது. உடனே காப்பாத்தினோம். இப்ப குட்டி போட்டு தாய் - சேய் இருவரும் நலம்.

மிதந்து வந்த மீட்பர்கள்!
மிதந்து வந்த மீட்பர்கள்!

நாய், பூனை, மாடு, பன்றிகள் மட்டும் அல்ல; பாம்பு, எலியைக்கூடக் காப்பாத்தியிருக்கோம். மேடவாக்கம் பகுதியில ஒரு வீட்டுல சாரைப்பாம்பு புகுந்திருச்சு. வீட்டுக்குள்ள  இருந்தவங்க கதவு பக்கத்துல இருக்கும் டேபிள் மேல உட்கார்ந்திருக்காங்க. இவங்களுக்கு நேர் எதிர்ல அந்தப் பாம்பு ஒரு சேர்ல சுத்திக்கிட்டு இருக்குது. விரட்டினால் தண்ணியில் பாம்பு இவங்க பக்கம் வந்துடும்னு பயந்து, ஒண்ணுமே செய்யாம அமைதியா இருந்திருக்காங்க; அதுவும் அமைதியாகிருச்சு. ரெண்டு நாள் அந்த வீட்டில் உள்ளவங்ககூட அந்தப் பாம்பும் இருந்திருக்கு. ‘பாம்பு இருக்கா... இருக்கா?’னு இவங்களும் பார்த்து செக் பண்ணிட்டே இருந்திருக்காங்க. அதுவும் செக் பண்ணியிருக்கும். நாங்க அந்தப் பாம்பை மீட்டபோது `பாவம் சார். அது ரெண்டு நாளா ஒண்ணும் சாப்பிடலை’னு சொன்னாங்க. இதுவே வேற நேரமா இருந்திருந்தா பாம்பை அடிச்சே கொன்னுருப்பாங்க.

சில பேர் வீட்டுக்குள்ள தண்ணீர் வந்ததும், ஆசைப்பட்டு வளர்த்த நாய், பூனையை  எல்லாம் வீட்டுக்குள்ளயே கட்டிவெச்சுட்டுக் கிளம்பிட்டாங்க. அதை அவிழ்த்துவிட்டு இருந்தால்கூட உயிர் பிழைச்சிருக்கும். இப்படி வீட்டில் வளர்த்த நாய்கள் இறந்ததை மட்டும் கணக்கு எடுத்தாலே பல ஆயிரங்களைத் தாண்டும். ஊரப்பாக்கத்துல ஒரு வீட்டுல வயசான அம்மா மட்டும் இருந்தாங்க. அவங்ககிட்ட, ‘இருங்க வந்துடுறோம்’னு சொல்லிட்டு வீட்டுல இருந்த எல்லாரும் வெளியே போயிருக்காங்க.  ஆனால், ரெண்டு நாளா வரலை. நாங்க அங்கே போகும்போது அந்த அம்மா சாப்பாடு, தண்ணீர் இல்லாம பயந்து முடங்கிக்கிடந்தாங்க. அவங்களைக் காப்பாத்தி வெளியே கொண்டுவந்தோம்.

மிதந்து வந்த மீட்பர்கள்!

ஊரப்பாக்கத்துல ஒரு வீட்டுல நாயைக் கட்டிப்போட்டுட்டுப் போய்ட்டாங்க. நாங்க அதைக் காப்பாத்தப் போனா, அது வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குது.வேற வழியில்லாம தினமும் ஒருத்தர் வேளச்சேரியில இருந்து கிளம்பி ஊரப்பாக்கம் போய் பிஸ்கட், பால் ஊத்திட்டு வர்றோம். இப்போ வரைக்கும் இது தொடருது. ஆனா, இந்த மழை வெள்ளத்துல எந்த ஏழையும் அவங்க வளர்த்த ஜீவன்களை விட்டுட்டுத் தப்பிச்சுப் போகலை. வீடே மூழ்கிப்போயிருந்தாலும், அவங்களுக்கே சாப்பாடு இல்லைன்னாலும் பிரெட் வாங்கிப் போட்டாங்க.
இப்போ மனிதர்களுக்குத்தான் அதிக உதவிகள் தேவை. விலங்குகளுக்கு நாங்க இருக்கோம். எல்லாத்தையும் இழந்து நிற்கிற மக்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க.  எங்கக்கிட்ட வெள்ளத்துல மீட்கப்பட்ட நிறைய நாய்கள், பூனைகள் இருக்கு. வேணுங்கிறவங்க வந்து தத்தெடுத்துக்குங்க” என்கிறார் டான் வில்லியம்ஸ்!