Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படம்: சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படம்: சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:

சை உலகில் சேர்ந்திசைக்க வேண்டிய கலைஞர்கள், ‘கோஷ்டி கானம்’ பாடிக் கொண்டிருக் கிறார்கள். `டிசம்பர் சீஸனை ஒத்திப் போட வேண்டும்’ என ஒரு கோஷ்டி... `ஒட்டுமொத்தமாக ரத்துசெய்ய வேண்டும்’ என இன்னொரு கோஷ்டி... ‘நாங்கள் பாடியே தீருவோம்' என ஒரு கோஷ்டி... ‘இந்தச் சோகமான சூழலில் எங்களால் பாட இயலாது' என மற்றொரு கோஷ்டி.

சீஸனை நடத்துவதா... வேண்டாமா என சபாக்கள் மத்தியிலும் கடந்த 8-ம் தேதி வரை குழப்பம். உயர்நிலைக் குழு வட்டமேஜை மாநாடு நடத்தி ‘நடத்தலாம்' என முடிவுக்கு வந்தது. `பாதிக்கப் பட்டவர்களுக்கு இசையின் மூலம் ஆறுதல் சொல்லலாம்’ என்றும், `கச்சேரியாக  அல்லாமல் பிரார்த்தனைப் பாடல்களாக அவை இருக்கட்டும்’ என்றெல்லாம் அபிப்பிராயங்கள்.

வானம் பிளந்து மழை கொட்டித் தீர்த்த டிசம்பர் முதல் தேதி அன்று கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் தொடக்க விழாவை நடத்தி, திருச்சூர் சகோதரர் களுக்கு ‘இசைப் பேரொளி' விருதும், அஸ்வினி விஸ்வநாதனுக்கு ‘நடன மாமணி' விருதும் வழங்கி, மூவருக்கும் ஒண்ணே கால் லட்சம் ரூபாய் பண முடிப்பும் கொடுத்தது. விருது பணத்தில் ஒரு பங்கு வெள்ள நிவாரண நிதிக்கு சென்றதா என்ற தகவல் இல்லை.

சரிகமபதநி டைரி 2015

கடந்த 9-ம் தேதி அன்று வாணிமஹாலில் தியாக பிரம்ம கானசபாவின் `36-வது இசை, இயல், நாடக விழா’, ஏதோ குற்றஉணர்வு இருப்பது மாதிரி ஓர் இறுக்கமான சூழலில் நடந்தது. ஆழ்வார்திருநகரில் இருந்து ரங்கராமானுஜ ஜீயர் சுவாமிகள் வந்திருந்தார். பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி, நடனமணி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் உள்ளிட்ட ஆறு பேருக்கு ‘வாணி கலா சுதாகரா' விருது வழங்கினார்.

வெள்ளத்தில் இருந்தும் அழிவில் இருந்தும் பாதுகாக்கக் கோரி கிருஷ்ண பகவானைப் பிரார்த்திக்கும்விதமாக விழா மேடையில் ரஞ்சனியும் காயத்ரியும் பாகவதத்தில் இருந்து இரு சுலோகங்களை உருக்கமாகப் பாட, அதற்கு ஏற்ப ஸ்ரீநிதி அபிநயித்தது, உணர்ச்சிப் பிழம்பு.

நிற்க.

‘இசை மற்றும் நாட்டிய விழாவை இப்போது இல்லாமல் அடுத்த மாதம் வைத்துக் கொள்ளலாமே? சென்னையில் இத்தனை பேர் துயரில் வாடிக்கொண்டிருக்கும்போது இப்படி விழாக்கள் நடத்துவது பொருத்தமானதாக இருக்குமா?' என முதலில் முகநூலில் மணி அடித்தவர், ஸ்ரீநிதி சிதம்பரம்.

அவரே தனது அடுத்த போஸ்ட்டில், ‘ஒட்டுமொத்தக் கலைஞர்களும் இந்த முடிவுக்கு வந்தால் மட்டுமே அது அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். அனிதா ரத்னமும் சித்ரா விஸ்வேஸ்வரனும் தனஞ்செயனும் டிசம்பரில் நிகழ்ச்சிகள் தரப்போவது இல்லை என அறிவித்துவிட்டார்கள்.

பாட்டு வட்டத்தில், ‘சந்தோஷமாகப் பாட இது தருணம் அல்ல...’ எனச் சொல்லி தனது டிசம்பர் கச்சேரிகளை ரத்துசெய்துவிட்டார் விஜய் சிவா. ‘இத்தனை மக்கள் வீடுகள் இழந்து, அடிப்படைத் தேவைகளுக்காக அல்லல்படும் போது, விழாக்களுக்கான நேரம் இது அல்ல என்பது என் கருத்து...' எனச் சொல்லி சீஸன் கச்சேரிகளில் இருந்து விலகிக்கொண்டுவிட்டார் பாம்பே ஜெயஸ்ரீ.

சரிகமபதநி டைரி 2015

நித்யஸ்ரீயும் உன்னிகிருஷ்ணனும்கூட தங்கள் கச்சேரிகளை டிசம்பர் 15-ம் தேதி வரை ரத்து செய்துவிட்டார்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஜேசுதாஸ், ஜனவரி முதல் வாரத்தில்தான் இந்தியா திரும்புவதாக அறிவித்துவிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க, சீஸனில் கச்சேரிகள் செய்து அதன் மூலம் வரக்கூடிய சன்மானத்தை நிவாரண நிதிக்கு அளித்துவிடப்போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள், அருணா சாய்ராம், ரஞ்சனி - காயத்ரி, லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமி உள்ளிட்ட சில கலைஞர்கள்.

‘சலூன்கள் திறந்திருக்கின்றன... மளிகைக் கடைகளை மூடுவது இல்லை. பெட்டிக்கடைகளும் திறந்துதான் இருக்கின்றன. அதுமாதிரி பாடறது எங்கள் தொழில்... எதுக்காக அதை கேன்சல் செய்யணும்?' என பிரபல பாடகர் ஒருவர் லாஜிக் பேசியதாகவும் தகவல்.

ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர், உன்னி கிருஷ்ணன், சசிகிரண் மாதிரியான பாடகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் இறங்கியதும் நடந்தது.

சரிகமபதநி டைரி 2015

ஆக, டி.எம்.கிருஷ்ணா, சுதா ரகுநாதன், (உடல்நலம் காரணம்) ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, விஜய் சிவா மாதிரியான சில சூப்பர் ஸ்டார்களும், ஸ்டாரினிகளும் இல்லாமல் சென்னையில் இசை முழக்கம் தொடங்கிவிட்டது. பாடுபவர்கள் பாடட்டும், கேட்பவர்கள் கேட்கட்டும் என சபாக்கள் கதவுகளைத் திறந்துவிட்டன. நாம் காது திறப்போம்.

டிசம்பர் 7-ம் தேதி, முன் தினம் வரை மூடியிருந்த வானம் லேசாகத் திறக்க, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் சஞ்சய் சுப்ரமணியன், (இன்னும் இரு வாரங்களில் ‘சங்கீத கலாநிதி' விருதுபெற இருப்பவர்) கச்சேரி நடந்த நாரதகான சபா அரங்கம் முக்காலே மூணு வீசம் நிரம்பியிருந்தது. சஞ்சய் காட்டில் வெயில்!

ரீதிகௌள ராக வர்ணத்தில் ‘வார்ம் அப்' முடித்து, அடியார்கள் துயர்துடைக்கும் ‘தட்சிணாமூர்த்தி'யை தீட்சிதர் சார்பில் சங்கராபரணத்தில் துதித்துவிட்டு கீரவாணிக்குள் நுழைந்தார் சஞ்சய்.
தூக்கத்தில் எழுப்பி பாடச் சொன்னாலும் கீரவாணியைக் குடைந்து அகழ்வாராய்ச்சி செய்துவிடக்கூடிய சஞ்சய் அன்று உதார் பிடிகளால் உறுமினார். கார்வையில் தொலைதூரப் பயணம்செய்தார். தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா' பாடலில் ‘பாகுக ஸ்ரீரகு ராமுநி' வரிகளை நிரவலுக்கு எடுத்து கீரவாணியின் முழு ரூபமும் கண்முன் தெரியச் செய்தார். முழு கச்சேரியின்போதும், காவிரிக்கரையோரம் அமர்ந்து தி.ஜானகிராமனின் சிறுகதை படித்த உணர்வு!

பக்கவாத்தியக் கலைஞர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வந்துவிடும் சக்தி சஞ்சய் பாட்டுக்கு உண்டு. அன்று நாகை முரளிதரன் (வயலின்), மன்னார்குடி ஈஸ்வரன் (மிருதங்கம்), கே.வி.கோபால கிருஷ்ணன் (கஞ்சிரா) தங்களுடைய பெஸ்ட் கொடுத்தார்கள்!

சரிகமபதநி டைரி 2015

இசை ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய ‘சீஸனில் கேட்டே தீர வேண்டும்' பட்டியலில் இந்த முறை இளைஞர் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
சில வருடங்களுக்கு முன் குரலில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு இசைப் பயணத்தில் லேசான இறங்குமுகம் கண்ட பாலமுரளி, கடல் கடந்து சென்று குரலுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பி யிருக்கிறார். இப்போது ‘அட' போடவைக்கிறது அவரது பாட்டு. சரளமான ஏற்ற இறக்கங்கள்... மேல் பஞ்சமத்தைத் தொடும்போது குரல் மாற்றி சாகசம் செய்யும் லாகவம்... நடுநடுவே மூச்செடுத்து சங்கதிகளுடன் கபடி விளையாடும் நேர்த்தி... இடையே மதுரை சோமுவின் பிடிகள் என இரண்டு மணி நேரமும் இளமைத் துள்ளலுடன் விறுவிறு, சுறுசுறு!

பிரம்ம கான சபாவில் மாயா மாளவ கௌள ராக ஸ்வரங்களில் ஜெட் வேகம், பிலஹரி ஆலாபனையில் ஸ்வரபேதம் செய்து யமன் கல்யாணியை நுழைத்தபோது அலட்டல் இல்லாத அநாயசம்... போதும், கண்ணுபடப் போகுதய்யா சின்னப் பாடகரே!

- டைரி புரளும்...