Published:Updated:

நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்ய தொடர் - 9

நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்ய தொடர் - 9
நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்ய தொடர் - 9

நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்ய தொடர் - 9

எட்டு நாகந் தன்னைக் கையால் எடுத்தாட்டுவோம்

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்

கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்

கடுவிஷந்தனைக் கக்கி யாடுபாம்பே!

                           -பாம்பாட்டிச் சித்தர் பாடல் 25

பொருள்:

இந்த உலகத்தை எட்டு திசைகளிலும் ஒரு பாம்பும், யானையும், மலையும், தாங்கி நிற்பதாக ஓர் ஐதீகம். அகில உலகமும் இதில் அடங்கும். தேவர்களின் அரசனான இந்திரன் படைத்த மாயாஜால உலகத்தை, எங்கள் வல்லமையால் இங்கேயே படைத்து அனுபவிப்போம். கடுவிஷமென்பது குண்டலினியின் உச்சம்! கட்டுக்கடங்காத குண்டலினி சக்தியை எழுப்பிவிட்டால் எல்லாம் எங்கள் வசமாகும்!

'மதி நிறைந்த நன்னாள்' என்று ஆண்டாள் போற்றிப் பாடிய மாதமான மார்கழி மாதத்தின் ஒரு அதிகாலைப் பொழுதில், நாம் திருக்கடவூரில் இறங்கி சந்நிதித் தெருவில் நடந்தபோது, ஒலிபெருக்கியிலிருந்து ஒலிபரப்பான திருப்பாவை காற்றில் மிதந்துகொண்டிருந்தது.

சிரித்த முகத்துடன் கையில் அர்ச்சனைத் தட்டுகளை ஏந்தியபடி, ஆலயத்துக்குள் சென்று கொண்டிருந்தனர் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்...

நாம், அபிராமி அம்மன் கோயிலைக் கடந்து கிழக்கே செல்லும் வேப்பஞ்சேரி சாலையில் பயணித்தோம்..

அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, 'திருமெய்ஞானம்' என்னும் சிறப்புப் பெயர் கொண்ட ஆதிக்கடவூர் பெரிய பெருமான் ஆலயம். இங்கு மலர்க்குழல் மின்னம்மை என்னும் வாடாமுலையம்மன், பிரம்மபுரீஸ்வரர் என்னும் பெரிய பெருமானுடன் கோயில் கொண்டுள்ளார்.

'மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த

அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியலாக

பரவுமுறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை

இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே'

- என திருஞான சம்பந்தர், தேவாரப் பாமாலை சூடிப்போற்றிய புகழ் கொண்டது இந்தப் பழம் பெரும் சிவாலயம். சைவ ஆகம மரபில் முக்கியத்துவம் வாய்ந்த 'அகத்தியர் தேவாரத் திரட்டு' என்னும் அகத்தியர் தொகுத்த நூலில் உள்ள 263 பாடல்களில் 21 பாடல்கள் கடவூர் மயானத்தில் பாடப்பட்டவை என்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

திருமெய்ஞானம், பிரம்மபுரீஸ்வரர் கோயில் சந்நிதித் தெருவில் நுழையும்போதே, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தொன்மை உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

தெருவின் இடப்புறம் வீடுகளும் வலப்புறம் நெடிதுயர்ந்த மரங்களும் இருக்கின்றன. பரமசிவன் - பார்வதி சுதைச் சிலைகளைக் கொண்ட நுழைவு வாயிலைக் கடந்தவுடன், ஒரு நீண்ட - பரந்த பெரும் தாழ்வாரத்தில் நடக்கிறோம். பழைய செங்கல்தரையில் நடக்கும்போது சில நூற்றாண்டுகளைப் பின்னோக்கிக் கடக்கும் உணர்வு மேலிடுகிறது.

கோயில் கோபுரத்துக்கு முன் உள்ள இந்தத் தாழ்வாரம் தனித்துவமானது. ஆயிரம் பேர் அமரும் அளவு பிரமாண்டமாக உள்ளது. மேற்குப் பார்த்த சிவத்தலங்கள் நாற்பதில் ஒன்று இது. அழகிய கல் வேலைப்பாடுகளைக் கொண்ட பலிபீடத்தையும், கம்பீர நந்தியையும் கடந்து உள் செல்கிறோம்...

கம்பீர லிங்க ரூபமாக பெரிய பெருமான் அடிகள், கோயிலின் வெளிச்சுற்றில் வாடாமுலையம்மன். உள் சுற்றில் எழுந்தருளியுள்ள சங்கு சக்கரதாரியாகப் பிள்ளை பெருமாள், வில் தரித்த வேலவன் என பூரண கற்றளியாக தொன்மத்தைச் சுமந்தபடி, பெயருக்கேற்ற மயான அமைதியில் உறைந்து கிடக்கிறது இந்தச் சிவாலயம்!

கி.பி.557-ல் கட்டப்பட்ட பெரிய பெருமான் ஆலயம் பல்வேறு புராணச் சிறப்புகளைக் கொண்டது.

சிவபெருமான் நான்முகனான பிரம்மனின் அகந்தையை அழிக்க, அவனை நீராக்கி மீண்டும் உயிர்ப்பித்து படைப்புத் தொழிலை அளித்த இடம் இது. உயிர்களின் படைப்புத் தொழில் குறித்து இங்கு பிரம்மனுக்கு சிவன் ஞானோபதேசம் செய்ததால் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பிரம்மனை அழித்த பெயராக 'கடவூர் மயானம்' எனவும் அவனுக்கு மெய்ஞானம் போதித்த பெயராக 'திருமெய்ஞானம்' என்றும் பெயர் பெற்றது.

கோயிலின் திருச்சுற்று மதிலில் தெற்குப்புற வாயிலில் அமைந்துள்ளது பாம்பாட்டிச் சித்தரின் சுதைச் சிலை. தியானக் கோலத்தில் பாம்பாட்டிச் சித்தர் காட்சியளிக்கும் இந்தச் சிலைக்கு நேர் பின்புறத்தில் பிரம்ம தீர்த்தத்துக்கு அருகில் அமைந்துள்ளது பாம்பாட்டிச் சித்தரின் ஜீவ சமாதி பீடம்...

நாம் பாம்பாட்டிச் சித்தரின் ஜீவசமாதியை அடைந்தபோது, அங்கு வருடாந்தர குருபூஜையின் தொடக்கமாக கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஜீவசமாதி அறக்கட்டளை உறுப்பினர்களும், பக்தர்களும் பரவசத்துடன் பீடத்தைச் சுற்றி வலம் வருவதும் தியானம் செய்வதுமாக இருந்தனர். ஒலிபெருக்கியில் பாம்பாட்டிச் சித்தரின்

'தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்

சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்

தாக்கிய சிரசின்மேல் தைத்தபாதம் சற்குருவின் பாதமென்று

ஆடு பாம்பே..'

- எனும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரம்மபுரி, வில்வாரண்யம், சிவவேதபுரி, கடவூர் மயானம், பிரம்மபுரம், திருமெய்ஞானம் ஆகிய பெயர்களைக் கொண்ட இவ்வூர், இன்னும்கூட ஒரு பெருவனம் போலவும், பெரும் அமைதியுடனும் விளங்குகிறது. பாம்பாட்டிச் சித்தரின் ஜீவ சமாதி அமைந்த இடத்தில் இருந்த போது ஒரு வனத்துக்குள் இருக்கும் உணர்வே நமக்கு எழுகிறது!

சைவ மரபில் புனிதமானது எனப் போற்றப்படும் சிவத்தலங்களில் 'பஞ்ச மயானம்' என்பது முக்கியமானது. காசி, காஞ்சிபுரம், சீர்காழி, நாலூர் ஆகிய ஊர்களுடன் கடவூர் திருமயானமும் சேர்த்து பஞ்ச மயானக் கோயில்களாக விளங்குகின்றன.

பாம்பாட்டிச் சித்தர் இறுதி சமாதி கண்டுள்ள கடவூர் மயானம் குறித்து சித்தர் போகர், 'போகர் 2000' நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.

'சொல்ல வென்னால் பாம்பாட்டி மர்மந்தானும்

தோற்றமுடன் ஜோகியென்ற வம்மிசந்தான்

புல்லவே மசானகுறி யோகியப்பா

புகழ்பெரிய குருடனார் பெற்ற பிள்ளை

வெல்லவே மாலைசுற்றி தான் பிறந்த

வேதாந்தி பாம்பாட்டி யென்னலாகும்'

ஜோகி என்ற இருளர் வம்சத்தைச் சேர்ந்தவர். மயானத்தில் யோக நிலை கண்டவர். குருடன் பெற்ற பிள்ளை, பிறப்பிலேயே கழுத்தில் மாலை சுற்றி பிறந்ததால் பாம்பென்னும் குண்டலியைத் தன் ஆபரணமாக அணிந்தவர் என்பது பொருள்.

பாம்பாட்டிச் சித்தர் பதினெண் சித்தர்களில் ஒருவர். சித்தர்களின் எண்ணிக்கை ஒன்பது கோடி என்பது ஒரு கணக்கு. இதில் பதினெட்டு சித்தர்களுக்கு சிறப்புத் தன்மை ஏற்படக் காரணம், இவர்கள் பதினெட்டு பேரும் சிவபெருமானிடம் நேரடியாக நேத்ர, ஸ்பரிச, ஞான தீட்சையைப் பெற்றவர்கள்.

இவர்களில் பாம்பாட்டிச் சித்தர் தனித்தன்மை மிக்கவர். திருமூலர், சிவவாக்கியர் போலவே போலி வழிபாடுகளையும், கடவுளின் பேரால் செய்யப்படும் பொய்யான வழிபாடுகளையும் கடுமையாகத் தன் பாடல்கள் வழி சாடியவர். தாவரம், பறவைகள், விலங்குகள், புழு பூச்சிகள் என எல்லா உயிர்களிலும் இறைத்தன்மை உண்டு எனச் சொன்னவர்.

ஆலயங்களிலும் புனிதமான இடங்களிலும் மட்டும் ஆண்டவன் உறைவதில்லை. அன்பான மனித உள்ளங்களில் இறைவன் உறைந்துள்ளான், மனிதாபிமானமே ஆன்மிகம், அன்பில்லா வழிபாடு வீண் என, உலகுக்கு அன்பையும் மனித நேயத்தையும் தன் பாடல்கள் வழி எடுத்துச் சொன்னவர்.

'எள்ளளவும் அன்பு அகத்தில் இல்லாதார் - முக்தி

எய்துவது தொல்லுலகில் இல்லை'

என்ற பாடல் வரிகள் மூலம், எள் அளவுகூட உள்மனதில் அன்பு இல்லாதவர்கள் இறைவனை அடைய முடியாது என வலியுறுத்தியவர்.

‘சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணக்கலை சாற்றும் ஆகமம்

விதம்வித மானவான வேறு நூல்களும்

வீணான நூல்கள் என்று ஆடுபாம்பே'

என்ற பாடல் வழியே நான்கு வேதங்கள், ஆறுவகைச் சாத்திரங்கள், தந்திர நூல்கள், புராணங்கள் போன்ற பல நூல்களைக் கற்பதன் வாயிலாக மட்டும் இறைநிலையை அடைய முடியாது, அன்பின் வழி நின்று மனிதநேய மாண்புகளை உணர்ந்து, எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்தி, உள்ளத்தில் தூய அன்புடன் இறைவனை வணங்கி மேற்கொள்ளும் தவப்பயிற்சிகளினால் மட்டுமே முக்தி அடைய முடியும் என தன் பாடல்கள் வழி வற்புறுத்தியவர் பாம்பாட்டிச் சித்தர்.

இந்திய தாந்திரிக மரபில் பாம்பு என்பது குண்டலினி சக்தியின் குறியீடு. சிவனின் ஆபரணமாக பாம்பு இருப்பதே அதன் வெளிப்பாடு என்கின்றனர் சைவ சமய ஆய்வாளர்கள். பதினெட்டு சித்தர்களில் பாம்பாட்டிச் சித்தர் ஒருவர் மட்டுமே சிவனைப்போன்று நாகத்தை ஆபரணமாக அணிந்தவர்.

'ஆடுபாம்பே' என விளித்து பாம்பாட்டிச் சித்தர் பாடிய பாடல்கள் அனைத்துமே மேலோட்டமாக ஒரு கருத்தையும், உள்முகமாக குண்டலினியின் நுண்மையை, பயிற்சிகளை, சிறப்புகளை வலியுறுத்தும் மறைபொருள் கொண்டவை.

சிவனின் நாகாபரணத்தையே தன்னாபாரணமாகக் கொண்டவர் பாம்பாட்டிச் சித்தர். ஆனால் படிப்பறிவற்ற ஒரு காட்டுவாசியாக, பாம்பாட்டியாக இருந்தவருக்கு எப்படி இவ்வளவு நுட்பமான குண்டலினி சக்தி கை கூடி வந்தது? சிவபெருமானின் சிலிர்ப்பூட்டும் அந்தத் திருவிளையாடல் அடுத்த வாரம்...

- பயணம் தொடரும்...

அடுத்த கட்டுரைக்கு