ஆஃப் த ரெக்கார்டு!
• தான் திட்டமிட்ட படங்கள் சரியாக அமையாததால் மணியான இயக்குநர் ஒரு வாரிசு நடிகரை அறிமுகப்படுத்த முடிவெடுத்து மதுபான நடிகரை அழைத்திருக்கிறார். நடிகரின் மகனை தன் இயக்கத்தில் அறிமுகப்படுத்துகிறேன் எனக் கேட்க, நடிகர் என்ன நினைத்தாரோ, பையன் படிச்சிட்டு இருக்கான், இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என சொல்லி நிராகரித்துவிட்டாராம். இயக்குநர் அப்செட்!

• சொன்ன நேரத்தில் ஷூட்டிங் வராமல், கால்ஷீட் சொதப்பி அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகுபவர் செல்லம் நடிகர். தற்போது தான் தயாரித்து இயக்கிவரும் படத்தின் ஷூட்டிங்கில் இதுபோல சில விஷயங்கள் நடக்க, தயாரிப்பாளராக மிகவும் வேதனைப்பட்டாராம். உடனே தன்னுடைய தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து, படம் தயாரிக்கும்போதுதான் என்னால் உங்கள் கஷ்டத்தை உணர முடிகிறது என்று கூறி மன்னிப்பு கேட்டாராம்!
• தோழிகளாக இருந்து வந்த நம்பர் நடிகைகள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க தயார் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். தற்போது அப்படி ஒரு படமே அவர்கள் நட்பைக் கெடுத்துள்ளது. அந்தப் படத்துக்காக பெரிய நம்பர் நடிகைக்கு அதிக சம்பளமும், தனக்கு அதில் பாதியும் கொடுத்ததால் சின்ன நம்பர் நடிகை கடுப்பாகி விட்டாராம். இந்த ஈகோ மோதலில் இருவரும் மீண்டும் பேசிக்கொள்வதே கஷ்டம் என்கிறார்கள்!
• ஷட்டரை சாத்திய ரீமேக் படத்தில் சிறப்பாக நடித்த நடிகைக்கு பாராட்டுகள் குவிந்தன, கூடவே பட வாய்ப்புகளும். வருகிற வாய்ப்புகள் எல்லாம் அது மாதிரி கேரக்டரில் நடிக்கச் சொல்லியே, வருகிறார்களாம். கிளாமர் தூக்கலாக எதிர்பார்ப்பதால் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறாராம்!
• ஓரமான கரை படத்தில் நடிக்க அழைத்தபோது படத்தில் இரண்டு நாயகிகள், அதில் உங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் என்று கூறிவிட்டு, தற்போது ரன் நடிகையையும் நடிக்க வைத்து விளம்பரத்தில் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள், இன்னொரு நடிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு என்னை ஏமாற்றி விட்டார்கள் என படக்குழு மீது அதிருப்தியில் உள்ளாராம் ஸ்வீட் நடிகை!