Published:Updated:

ஒரு நாள் அவதார்!

ஒரு நாள் அவதார்!

ந்த வார ஒருநாள் அவதாரில் வடிவேலுவின் காமெடி குரூப்பைச் சேர்ந்த சங்கர். “ ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்துல நடிச்சதுக்கு அப்புறம், எல்லோரும் என்னை ‘அம்பானி’ சங்கர்னு அடைமொழி வெச்சுக் கூப்பிட்டா, நீங்க இளநி வியாபாரம் பார்க்கணும்னு இழுத்துட்டு வர்றீங்க. நியாயமா பிரதர்?” - டாக்ஸியில் இருந்து இறங்கும்போதே கவுண்டர் கொடுத்த சங்கருக்கு, இனி ‘ஆபரேஷன்’ ஆரம்பம்.

ஒரு நாள் அவதார்!

இளநீர் கடைக்காரரிடம் சங்கரை அறிமுகப் படுத்தினால், ‘ஆமா ஆமா தம்பியைப் பல படத்துல பார்த்திருக்கேன். இவரே இளநீ மாதிரிதானே இருக்காரு. சீவிருவோமா?’ என அரிவாளைத் தூக்கினார். ‘நல்ல ஆளுப்பா நீ... எது எது என்னென்ன ரேட்டுனு எட்ட நின்னே சொல்லிட்டு, உட்கார்ந்துக்கோங்க. நாங்க யாவாரத்தைப் பார்த்துக்குறோம்!’ என மதுரைத் தமிழில் பெடலெடுத்தார் சங்கர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அரே பாய்.. கித்னே ருப்யே?’’ என ஹிந்தியில் இளநீர் கேட்டார் ஒரு வடஇந்தியப் பையன். ‘ஆப்கா.. ஆப்கா’ என இழுத்த சங்கர் ‘30 ருபீஸ் ஒன்லி!’ எனச்சொல்லி இளநீரைக் கொடுத்து அனுப்பப் பார்த்தார். அந்தப் பையனோ ‘இங்கேயே குடிக்கணும். சீவிக்கொடுங்க!’ என சங்கரிடம் திருப்பி நீட்ட, பென்சில் சீவுவதுபோல இளநீரைச் சுரண்டிக்கொண்டிருந்தார் சங்கர். பிறகென்ன? கடுப்பான கடைக்காரர், ‘இப்படிப் புடிச்சு, அப்படி வெட்டணும்’ என ஒரே போடாக இளநீரைப் பிளந்ததோடு, ‘எங்கே பக்கத்துல கெடக்குற மட்டையையெல்லாம் வெட்டிக்காட்டு!’ என சீரியஸாகவே வேலை வாங்கினார்.

ஒரு நாள் அவதார்!

‘நடிகரை வெச்சு ஏதோ ஷூட்டிங் எடுக்குறாங்கனு சொன்னாங்க, எங்கே?’ என சங்கரிடமே விசாரித்த பெரியவரிடம், ‘அய்யா... அந்த நடிகரே நான்தான்யா!’ என வடிவேலு பாணியில் சங்கர் சொன்னது கலகல. ‘இப்படியெல்லாம் தலையைச் சொறிஞ்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தா, வியாபாரம் நடக்காது!’ என எழுந்த கடைக்காரர், வருவோர் போவோரிடம் எல்லாம் ‘சார் இளநி சாப்பிடுறீங்களா, தம்பி இளநி வேணுமானு கத்தணும்!’ எனச் சொல்லிக்கொடுத்ததோடு, கடைக்காரரே கத்தியும் காட்ட, “யோவ் நீ கத்துற கத்துக்கு, தொண்டையை நனைக்கவே நாலைஞ்சு இளநீர் சாப்பிடணும்போல?’’ என அட்வைஸ் கொடுத்துவிட்டு, ரோட்டில் நடந்துசென்றுகொண்டிருக்கும் பெண்களைக் குறிவைத்து, வியாபாரத்தை ஆரம்பித்தார் சங்கர். ஆனால், அவர் நினைச்சது நடக்கவே இல்லை!

திடீரென வந்த நான்கு, ஐந்து பேர் ஆளுக்கு இரு இளநீர்களைக் குடிக்க, கடைக்காரருக்கு டபுள் ஹாப்பி! அதுவரை விரட்டி, விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்த சங்கரை, ‘இந்தா, நீ ஒரு இளநியைக் குடிச்சுட்டு தெம்பா நில்லு!’ என பதிலுக்குக் காத்திருக்காமல், சீவிக்கொடுத்தார். ‘குடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் காசு கேட்கமாட்டியே?’ என சங்கர் கேட்க, ‘ச்சே ச்சே அப்படியெல்லாம் பண்ணுவேனா?’ என்றார் கடைக்காரர். ‘அப்படியே கேட்டா, சம்பளத்துல கழிச்சுக்கிட்டு மிச்சக் காசைக் கொடுத்துடு!’ என கடைக்காருக்குப் பல்பு கொடுத்த சந்தோஷத்தில், குடித்த இளநியை ஸ்டைலாகத் தூக்கிவீசினார் சங்கர்.

ஒரு நாள் அவதார்!

பக்கத்து கடையில் இருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இருவர், ‘ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் தருவாங்க?’, ‘சென்னையில வீடு இருக்கா, இல்லையா?’, ‘கல்யாணம் ஆகிடுச்சா?’, ‘வயசு என்ன?’ என சங்கரைச் சுற்றி கேள்விகளால் வட்டமடித்துக்கொண்டிருக்க, பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு திரும்பினார். ‘என்னடா எல்லாம் சொல்லிட்டேனேனு பார்க்குறீங்களா? இப்பெல்லாம் பசங்க ஃபாஸ்ட்டா இருக்காங்க பிரதர். இப்ப என்கிட்ட பேசுனதையே ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸா போட்டு ஷேர் பண்ணுவாங்க, டிவிட்டர்ல போட்டு ரீ-டிவீட் வாங்குவாங்க. நமக்கும் ஓசியில பப்ளிசிட்டி கிடைக்கும்ல?’ எனக் கரைத்துக் குடித்த ராஜதந்திரங்களைக் கக்கினார் சங்கர். சொல்லி முடிப்பதற்குள், சிலபேர் சங்கரை ஓரமாக ஒதுக்கி ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டார்கள். ‘நான் சொல்லலை?’ - இது சங்கர் பன்ச்!

ஒரு நாள் அவதார்!

“ஒருநாள் இளநீர் வியாபாரியா இருந்தது செம்ம அனுபவம் பிரதர். இளநீர் அடிக்கடி குடிச்சிருக்கேன். ஆனா, அந்தக் கடையில என்ன நடக்குதுனுகூட நின்னு கவனிக்கமாட்டேன். ஆனா, இப்போதான் ‘எல்லா இடத்துக்கும் ஒரு கதை இருக்கு’னு தோணுது. நான் சுரண்டிக்கிட்டு இருந்த அதே இளநீரை, கடைக்காரர் ஒரு சீவுல பொளக்குறார்னா, அவர்கிட்ட இருந்தும் கத்துக்க நிறைய விஷயம் இருக்குனுதானே அர்த்தம்!’ என ஃபீலிங் காட்டிய சங்கரிடம், ‘மதுரைக்கு வந்தா கவனிப்பீங்களா?’ எனக் கடைக்காரர் கேட்க, ‘எப்பவேணாலும் வாங்க. மதுரைக்குப் பக்கத்துல சத்தியமங்கலம் வந்துட்டு, நடிகர் சங்கர நாராயணன் வீடு எங்க இருக்கு?னு கேளுங்க போதும்!’’ என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

-கே.ஜி.மணிகண்டன், படங்கள் : ஜெ.வேங்கடராஜ்