அலசி ஆராய்வது அப்பாடக்கர்
தட் ‘பாட்டுப் பாடலாமா வேணாமா?’ மொமண்ட் :

இந்த 2015ல் எந்தப் பாட்டு ஹிட் ஆச்சோ இல்லையோ, சிம்புவோட பீப் சாங் சர்ச்சையாகிச் சந்தி சிரிக்குது. அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை, சிம்புவுக்கு மட்டும் விவகாரமான விஷயங்களை யாரோ எங்கிருந்தோ ‘ரிலீஸ்‘ பண்ணிடறாங்க. ஆனா கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சதில ஒரு விஷயம் பளிச்சுன்னு தோணுச்சு. சிம்பு பாடின பாட்டெல்லாம் எடுத்துப் பாருங்க. ‘லவ் பண்ணலாமா, வேணாமா?’, ‘எவன்டி உன்னைப் பெத்தான்?’ இப்படிப் பல பாடல்கள் கேள்விக்குறியாகவே முடியுது. ஏன், சிம்புவோட பீப் சாங் கூட கேள்விக்குறியோடதான் தொடங்குது. அதனாலதான் பாருங்க, இப்போ அந்தப் பாட்டும் கேள்விக்குறி ஆகியிருக்கு. சிம்புவும் கேள்விக்குறி ஆகியிருக்கார்!
தட் ‘அம்மா அம்மா நீங்க எங்கே அம்மா?’ மொமண்ட் :

‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தில் அனிருத் மியூசிக்கில் வந்த பாட்டு ‘அம்மா அம்மா நீ எங்கே அம்மா?’. இப்போ அனிருத் எங்கே இருக்கார்னு தேடவேண்டிய நிலைமை. அம்மா எங்கேன்னும் தேட வேண்டிய நிலைமை. ‘கடவுள் இருக்கான் கொமாரு’ மாதிரி வாட்ஸ்-அப்ல வாய்ஸ் கொடுத்திருக்காங்க ஜெயலலிதா. ‘தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?’னு டிசைன் டிசைனா போஸ்டர் அடிச்ச ஊராச்சே. பொதுவா கடவுள் அசரீரியாத்தான் பேசுவார். அதேமாதிரி மனிதனால் தண்டிக்கப்பட்டு, (குமார)சாமியால் விடுவிக்கப்பட்ட தெய்வமான ஜெயலலிதாவும் கடவுள் அசரீரி மாதிரி வாட்ஸ்-அப்ல பேசியிருக்காங்க. இதில் ஒருத்தர் என்கிட்டே ஒருத்தர் டவுட் கேட்டார், ‘தலைமறைவான யுவராஜ்தான் வாட்ஸ்-அப்பில் பேசிக்கிட்டிருந்தார். இவங்களும் ஏன் தலைமறைவு ஆகி வாட்ஸ்-அப்பில் பேசுறாங்க?’னு. இன்னொருத்தர் இன்னும் புத்திசாலி. ‘என் அம்மா அப்பா வைத்த பெயராகிய ஜெயலலிதா என்ற பேரையே மறந்துட்டேன்னு சொல்றாங்க. அவங்க அப்பா அம்மா வெச்ச பேர் கோமளவல்லிதானே?’னு கேட்டார் பாருங்க, ஒரு டவுட்டு! அம்மாவின் ஆணைக்கிணங்க நான் அப்பீட் ஆகிட்டேன்.
தட் ‘மம்மி எனக்கு ரெண்டு டவுட்டு’ மொமண்டு :
‘நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ, எம்.பி.க்களின் ஒரு மாதச் சம்பளத்தை வழங்கவேண்டும்’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்க. எனக்கு இதில் ரெண்டு டவுட்டு.
டவுட்டு 1 : இந்த ஒருமாதச் சம்பளம்கிறது ஜெயலலிதா ‘மாதச் சம்பளமாக ஒரு ரூபாய்தான் வாங்குகிறேன்’னு சொன்னாங்களே, அந்த ஒரு ரூபாயா?
டவுட்டு 2 : இன்னமும் ஜெயலலிதா மாதச் சம்பளமாக ஒரு ரூபாய்தான் வாங்குகிறாரா?
தட் ‘தேவாவே சொன்னார்’ மொமண்ட் :

’இந்தியாவிலேயே அதிகம் லஞ்சம் வாங்குவது ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான். சம்பல் கொள்ளையர்களை மிஞ்சிவிட்டார்கள்’ - சொன்னது யார் தெரியுமா? நிதின் கட்காரி. அவர் எந்தத் துறைக்கு அமைச்சர் தெரியுமா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். ஆர்.டி.ஓ ஆபீஸ் எந்தத் துறையின்கீழ் வருதுனு தெரியுமா? நிதின் கட்காரி துறையின்கீழ்தான். அவர் லஞ்சத்தை ஒழிக்க என்ன பண்ணப் போறார் தெரியுமா? யாருக்குத் தெரியும்? அவர்தாங்க சொல்லணும்!
தட் ‘கெணத்தைக் காணோம்’ மொமண்ட் :


க்ளீன் இண்டியா வந்த புதுசில தாம்பரம் தனபாலில் இருந்து தமன்னா வரைக்கும் (ஒரு ரைமிங்தான் பாஸ்!) ஆளாளுக்குத் துடைப்பமும் கையுமா க்ளீன் இண்டியானு போஸ் கொடுத்தாங்க. இப்போ சென்னை முழுக்க குப்பைகளாக் குவிஞ்சிருக்கு. எங்கேடா தூய்மை இந்தியாகாரங்கனு பார்த்தா ஏதோ வானதி சீனிவாசனும் தமிழிசை சௌந்தர்ராஜனும் ரெண்டு மூணு இடத்தில் குப்பை கூட்டுறமாதிரி போஸ் கொடுத்திருக்காங்க. நீங்கதான் மிஸ்டு கால் கொடுத்து லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்ததாச் சொன்னீங்களே. அவங்கல்லாம் எங்கே? இப்படித்தான் தேர்தலுக்கு முன்னால ‘நமோ டீக்கடை’, ‘நமோ மீன்கடை’ எல்லாம் ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியலை. இப்போ ‘க்ளீன் இண்டியா‘ இயக்கத்தைக் காணோம்!
தட் ‘சரியாத்தான் பேசுறாரா?’ மொமண்ட் :

கேரளாவில் முத லமைச்சரே ஃபங்ஷனுக்கு வரக்கூடாதுனு சொல்லிட்டு விசிட் அடிச்சுட்டு வந்திருக்கார் மோடி. அங்கே ஒரு கூட்டத்தில் ‘கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும் மாறி மாறி கேரளாவைக் கெடுத்துட் டாங்க. நாங்கதான் மூணாவது சக்தி. அதாவது சிவபெருமானோட மூணாவது கண் மாதிரி’னு பேசியிருக்கார். சிவபெருமானோட மூணாவது கண் நெற்றிக் கண். அதைத் திறந்தா எதிரில் இருக்கிற எல்லாமே அழிஞ்சிடுமாமே. இவர் தெரிஞ்சுதான் பேசினாரா?
தட் ‘இவருக்கு மட்டும் ஏன் இப்படி?’ மொமண்ட் :

எழும்பூர் தாயகம் ஆபீஸில் இருந்து ரெண்டு மஞ்சள் சால்வை வாங்கிட்டு நேரா தேனாம்பேட்டைக்கு பஸ் பிடிச்சுப் போய் அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்துடறாங்க. எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு, வைகோ ம.தி.மு.கவை வளர்க்கிறதுக்காக ம.தி.மு.க.வை நடத்துறாரா? தி.மு.க.வை வளர்க்கிறதுக்காக ம.தி.மு.க.வை நடத்துறாரா?