Published:Updated:

ஞானத் தகப்பன்!

டிசம்பர் 19 - அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் நினைவு நாள்ரா.கண்ணன், ஓவியம்: ம.செ.

ஞானத் தகப்பன்!

டிசம்பர் 19 - அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் நினைவு நாள்ரா.கண்ணன், ஓவியம்: ம.செ.

Published:Updated:

தோ, 90-வது வருடத்தின் வாயிலில் அடியெடுத்து​வைக்கிறது விகடன் குழுமம். இது ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம்போல. மூன்று தலைமுறைகளாகத் தொடரும் பயணம். இந்தத் தருணத்தில் இந்த ஜோதி எங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது எத்தனை பெரிய பாரம்பர்யத்தின் பெருமை, எவ்வளவு முக்கியமான சமூகக் கடமை, அரிய பெரிய பொறுப்பு என்பதை எங்களுக்குக் கற்றுத்தந்தவர் எங்களின் நல்லாசிரியர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்.

டிசம்பர் 19 - தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடியாக, அறநெறிகளின் வழிகாட்டியாகத் திகழ்ந்த எங்கள் ஞானத் தகப்பனின் முதல் நினைவு தினம். ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்பதை எப்போதும் தன் மனதில் நிறுத்தி, எங்களை வழிநடத்திய மாமனிதரை வணங்குகிறோம். 

எளிமைதான் அடையாளம்; எழுத்துதான் இயக்கம்; அன்புதான் ஆயுதம்; பணிவுதான் கேடயம்; துணிவுதான் துணை; பொருள் பொதிந்த புன்னகை; அதிரும் வெடிச்சிரிப்பு; காதுகள் சிவக்கும் கோபம்; உடைந்து அழும் கருணை; அள்ளி அணைக்கும் அன்பு... என விகடன் தாத்தாவும் அவரும் வேறு வேறு அல்ல. 

எளியவர்கள் பக்கமே எப்போதும் நிற்பார். கடைசி மனிதனையும் தனக்கு சரிநிகராகப் பாவித்த மனசு. ‘மனிதர்கள் அற்புதமானவர்கள். மனிதர்கள் அபத்தமானவர்கள். மனிதர்கள் அப்படித்தான். அதனாலென்ன, எல்லோர் மீதும் எப்போதும் அன்பு செலுத்து’ என்பார்.   
      
உயிர்நேசர். பறவைப் பண்ணை வைத்திருந்தார். ஆசியாவிலேயே ஒரு தனிமனிதர் வைத்திருந்த மிகப் பெரிய பண்ணைகளில் ஒன்று. அவரின் செல்லப்பிராணிகளின் கதைகள் ஏராளம் உண்டு. நாங்களும் அவற்றில் சேர்த்தி.  
 
கறாரான ஆசிரியர். ‘என் கட்டுரையில் ஓர் எழுத்தைக்கூட நீக்கவும் கூடாது; ஒரு புள்ளியைக்கூட சேர்க்கவும் கூடாது’ என வார்த்தைச் சிலம்பம் சுற்றும் பிரபலங்களின் படைப்புகளையும் செதில் செதிலாகச் செதுக்குவார்.

ஞானத் தகப்பன்!

முதல் வரி, நான்காவது வரியாக மாறும். ஏழாவது வார்த்தை, இரண்டாவது வார்த்தையாகச் சேரும். படைப்பாளியின் வார்த்தைகளை வைத்தே ஆபரேஷன் முடியும். திருத்தப்பட்ட வடிவத்தை அனுப்பி, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் வாங்கச் சொல்வார். திகைப்பும் வியப்புமாகப் பார்க்கிற படைப்பாளிகள், சரணடைந்துவிடுவார்கள். எங்களுக்கெல்லாம் அது தினமும் பாடம். தாளின் ஓரத்தில் ‘குட்... வெரி குட்’ என அவரின் அங்கீகாரம் பெற, ஒவ்வொரு கட்டுரை எழுதும்போதும் போட்டி போடுவோம்.  

பத்திரிகைப் பணிகளில் தவறு நேரும். சொற்பிழையோ, பொருட்பிழையோ, தகவலில் தவறோ, ஏதேனும் நிகழும். ‘ஒரே ஒரு தப்புதான... ஒரு சின்னத் தப்புதான...’ என சமயங்களில் மனசு சமாதானம் சொல்லும். சமாளிக்கக் கிளம்பும். எல்லாம் அவரின் கவனத்துக்கு வரும் வரைதான். அந்தத் தவறைக்கூட அவர் சுட்டிக்காட்டும் விதமே சுவாரஸ்யமாக இருக்கும். ‘அச்சச்சோ புக் பிரின்டாகி வெளியே போயிருச்சே. இப்போ என்ன செய்யலாம்? எல்லார் வீட்டுக்கும் போய் நேர்ல விளக்கம் சொல்லிட்டு வந்துடுறீங்​களா?’ எனக் கேட்பார். ‘விகடன்ல ஒரு தப்பு வந்தா, அது ஒரு தப்பு மட்டுமே இல்லே... அஞ்சு லட்சம் தப்பு. அத்தனை புத்தகத்திலும் அதே தப்பு அச்சாகிருச்சுல்ல!’ என்றார் ஒருமுறை. நாம் பார்க்கிற வேலையின் பெரும் பொறுப்பை பொட்டில் அடித்தாற்போல புரியவைப்பார்.
 
‘காதல்’ படம் சினிமா விமர்சனம் அவரின் ஒப்புதலுக்காக முன்வைத்தேன். 50 மதிப்பெண்கள் அளித்திருந்தோம். விமர்சனத்தை ரிஜெக்ட் செய்து அனுப்பிவிட்டார். விளக்கம் கேட்கப் போனேன். ‘ஏன் சார், ஹீரோ ஒரு ஏழைப் பையன். ஹீரோயின் பணக்காரப் பொண்ணு. ரெண்டு பேரும் வேற வேற சாதி. அவங்க வீட்ல பிரச்னை. அதனால ஊரைவிட்டு ஓடிப்போறாங்க. திருட்டுக் கல்யாணம். தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி 657 படம் வந்திருக்கும்ல. இந்தப் படத்துக்குப் போய் 50 மார்க்கா?’ என்பது அவர் கோபம். காரணம், அவர் படத்தைப் பார்த்திருக்கவில்லை. நான் அந்தப் படத்தின் சிறப்பை விளக்க ஆரம்பித்தேன். அவர் குரல் உயர, கோபத்தில் அறை அதிர்ந்தது. என் விளக்கத்தில் நானும் உறுதியாக இருந்தேன். அவர் விடவே இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு, ‘நான் இப்பவே படம் பார்க்கணும்’ என்றார். படம் பார்த்தார். ‘ ஐ’ம் கன்வின்ஸ்டு. ரெவ்யூவை அப்பிடியே பிரின்ட்டுக்கு அனுப்பிடுங்க’ என்றவர் என்னை அணைத்து, ‘ஒரு ஸாரி... ஒரு தேங்க்ஸ்’  என்றார். தன் நிலைப்பாட்டில் ஒருவன் எத்தனை உறுதியாக நிற்கிறான் என்பதை, வாதங்களில் கண்டுபிடிப்பார். அவரின் கோபத்துக்குத் தயங்கி, நிலைகுலைந்து விட்டுவிடவே கூடாது. ‘படம் பார்க்காம நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாதுதான்’ என்றவர், ‘உங்களால்தான் இன்னிக்கு ஒரு நல்ல படம் பார்த்தேன். அதான் தேங்க்ஸ்’ எனச் சிரித்தார்.

ஓர் அரசியல் பதிவு. ஆளும் கட்சி -  நீதிமன்றம் குறித்த ஒரு பரபரப்புச் செய்தியில் ‘பதில் மரியாதை?’ என இரண்டே வார்த்தைகள் சேர்த்தேன். அவ்வளவுதான், நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு. ஆசிரியருக்கு கோர்ட் சம்மன். ‘அடடா... நான் சேர்த்த வார்த்தைகளால் கோர்ட் வரை இவரைக் கொண்டுவந்துவிட்டோமே’ என எனக்குள் குற்றஉணர்ச்சி. ஆசிரியருடன் நானும் நீதிமன்றம் சென்றிருந்தேன். என் தவறு குறித்து ஏதேனும் பேசுவார் என நினைத்தேன். அவர் எதுவுமே கேட்கவில்லை. நீதிமன்றக் கோபுரங்களின் மாடங்களில் அமரும் மணிப்புறாக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நாலைந்து நாட்கள் ஓடிவிட்டன. மனசு தாங்காமல் நானே போய்க் கேட்டேன்... ‘அந்த ரெண்டு வார்த்தைகள் நான்தான் சேர்த்தேன் சார். அதைப் பத்தி நீங்க கேட்கவே இல்லையே’. என்னை அருகில் அழைத்து, என் கன்னம் தடவி வாஞ்சையாகச் சிரித்தவர் சொன்னார்... ‘ஆமா, தெரியும்தான். நான் எடிட் பண்றப்போ, அந்த வார்த்தைகளைக் கண்டுபிடிச்சு நிறுத்தியிருந்தேன்னா, அது உங்க தப்புன்னு சொல்லியிருப்பேன். எப்போ அதை பப்ளிஷ் பண்ண அனுப்பிட்டேனோ, அப்பவே அது உங்க தப்பு இல்லை. அந்தத் தப்புக்கு நான்தான் பொறுப்பு’ என்றார். அதனால்தான் அவர் நல்லாசிரியர்!

அவருக்கு பிரிவு உபசார விழா. அலுவலக நண்பர்கள் அத்தனை பேரும் கூடிய பெரு நிகழ்வை அன்று நான்தான் தொகுத்து வழங்கினேன். எமோஷனலான கூட்டம்.

மதிய விருந்து நேரம்... நான் இறங்கி வெளியே போய்விட்டேன். ‘எம்.டி கூப்பிடுறார்...’ எனப் பரபரப்பாக ஆளாளுக்கு என்னைத் தேட, உள்ளே ஓடினேன். அதுவரை சாப்பிடாமல் காத்திருந்தவர், ‘உங்களைத்தான் தேடினேன். இங்க உக்காருங்க’ என தனக்குப் பக்கத்தில் என்னை அமரவைத்தார்.

பசியாற எல்லோருக்கும் பிடிக்கும். பரிமாற வெகு சிலருக்கே பிடிக்கும்.

இது அவர் போட்ட சோறு!