Published:Updated:

வேண்டாம் இன்னொரு பேரிடர்!

வேண்டாம் இன்னொரு பேரிடர்!

வேண்டாம் இன்னொரு பேரிடர்!

வேண்டாம் இன்னொரு பேரிடர்!

Published:Updated:
வேண்டாம் இன்னொரு பேரிடர்!

ழை, வெள்ளத்தின் பாதிப்புகள் இன்னும் நீங்கவில்லை. தலைநகர் சென்னையின் சில இடங்களில், மூன்று வாரங்களைக் கடந்தும் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீதிகளில் சாக்கடை நீரின் துர்நாற்றம் சகிக்கமுடியவில்லை. ஊரெல்லாம் குப்பைக்கூளங்கள். சாக்கடை நீர் வீதிகளுக்குள் புகுந்த பல இடங்களில் வாந்தி, பேதி, காய்ச்சல், காலரா என கடும் தொற்றுநோய்கள் பரவுகின்றன. ஆனால், எல்லாவற்றையும் மூடிமறைக்கும் தன் வழக்கமான பாணியையே இதிலும் பின்பற்றும் தமிழ்நாடு அரசு, தொற்றுநோய் பரவுவதை ஒப்புக்கொள்ளக்கூடத் தயங்குகிறது; பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கைகூட தராமல் மௌனம் காக்கிறது.

இந்த மூடிமறைக்கும் போக்கும் அலட்சியமும்தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் காரணம். கனமழை பெய்யும் என நிபுணர்கள் எச்சரித்தும் அரசு அதைப் புறக்கணித்தது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது எனத் தெரிந்தும், அதை உரிய நேரத்தில் திறந்துவிடுவதில் அலட்சியம் காட்டியது. இரண்டின் விளைவுகள் என்ன என்பதை தமிழக மக்கள் கண்டார்கள். பல லட்சம் மக்கள் இப்போது வரை மழை, வெள்ளத்தின் துயரத் தருணங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பேரிடரின் பின்விளைவாக இப்போது பரவிவரும் தொற்றுநோய்கள் மக்களை அச்சுறுத்திவருகின்றன.

பாய்ந்து வந்தது, மழைநீர், ஆற்றுநீர் மட்டுமா... அதில் நச்சுக்கள் நிறைந்த சாக்கடை நீரும் கலந்திருந்தது. சேறும் சகதியும் நிறைந்திருந்தது. இந்தக் கழிவுநீர் பூமியின் மேற்பரப்பில் வடிந்து; காய்ந்துவிட்டாலும் கழிவின் சுவடுகள் தரையின் மீது படிந்திருக்கின்றன. அது துர்நாற்றத்தைத் தொடர்ந்து பரப்பியபடி இருக்கிறது. அந்த வழியே சென்று வரும் வாகனங்கள், இந்தச் சாக்கடை மண்பரப்பை மேலும் கிளறிவிடுகின்றன; எங்கும் பரப்புகின்றன. நாள்கணக்காக தண்ணீர் தேங்கி நின்றதன் விளைவாக, நிலத்தடி நீர் மோசமாகப் பாதிக்கப்பட்டு, அருந்தத் தகுதியற்றதாக மாறிவிட்டது.

சாலைகளின் நிலையோ படுமோசம். வெள்ளநீர் பாய்ந்த பெரும்பாலான சாலைகள், அடியோடு பெயர்ந்து, தகர்ந்துவிட்டன. அதன் வழியே வாகனங்கள் சென்று வரும்போது பெரும் தூசு மண்டலம் கிளம்புகிறது. சென்னை நகரத்தில் காற்று மாசின் அளவு, அதன் அனுமதிக்கப்பட்ட வரம்பைக்காட்டிலும், கடந்த ஒரு மாதத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளது. மாசு என்பது, தூசு மட்டுமல்ல... குவிந்துகிடக்கும் ஆபத்தான கழிவுகளில் இருந்து உருவாகும் நச்சு வாயுக்களும்தான். அவையும் காற்றில் பரவி, நம் சுவாசத்தில் கலக்கின்றன. இவை உருவாக்கப்போகும் உடல்நலக் கோளாறுகள் பெரும் நோய்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை.

வெள்ளத்தின் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நூறு பள்ளி மாணவர்களுக்கான கட்டடங்களை பல்லாயிரம் பேர் பயன்படுத்தும்போது சுகாதாரக் குறைவு ஏற்படுவது இயல்பு. அவை சரியாக, முறையாக சீர்செய்யப்பட்டதா என்பதை பரிசோதிப்பது அவசியம். சாக்கடை நீர் புகுந்த வகுப்பறைகளின் சுத்தத்தை உறுதிப்படுத்துவதும் அவசியம். ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் ஒன்றாகப் புழங்கும் இடத்தில் பாதுகாப்பும் ஆரோக்கியமும் பன்மடங்கு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இன்னொரு பேரிடரைத் தாங்கும் வலிமை மக்களுக்கு இல்லை. அரசு விரைந்து செயலாற்றவேண்டியது அவசியம்!