Published:Updated:

பியானோ புயல்!

சார்லஸ், படம்: தி.ஹரிஹரன்

பியானோ புயல்!

சார்லஸ், படம்: தி.ஹரிஹரன்

Published:Updated:

`11 வயதே ஆன ஜேக்கப் சாமுவேல்தான் இந்தியாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் சென்சேஷன். பியானோவில் இவரது விரல்கள் விளையாடும் விளையாட்டு பிரமிக்கவைக்கிறது. ஜேக்கப் சாமுவேல் மாதிரி, ரஷ்யன் ஸ்டைலில் இவ்வளவு சர்வசாதாரணமாக பியானோவை வாசிக்க யாராலும் முடியாது’ என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியான `கே.எம்.கன்சர்வேட்டரி' மாணவரான ஜேக்கப், இப்போதே சர்வதேச இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்.

இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே, மொஸார்ட்டின் ஓர் இசைத் தொகுப்பை கீபோர்டில் வாசித்து அசத்தியவர். ஆறு வயதுக்குள்ளாகவே ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டனில்
கிரேடு-4 முடித்தவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பத்திரிகையான டெய்லி மெயில், `உலகின் பின்ட் சைஸ்டு பியோனிஸ்ட்' எனக் கொண்டாடுகிறது.

கேமராவைப் பார்த்ததும் என்ன பேசுவது என மிரண்ட ஜேக்கப் சாமுவேலுக்குப் பதிலாக அவரது தந்தை ஜெர்ரி பேசத் தொடங்கினார்.

பியானோ புயல்!

``நான் ஒரு பார்ட் டைம் கீபோர்டு பிளேயர். சர்ச்ல கீபோர்டு வாசிக்கிறதால வீட்டில் கீபோர்டு இருக்கும். அப்போ சாமுக்கு இரண்டு வயசு. பெட்ல படுத்துட்டிருந்தேன். திடீர்னு யாரோ கீபோர்டு வாசிக்கிற சத்தம் கேட்டது; ஒரு முழுப் பாட்டுக்கான இசையும் ஒலித்தது. என்னைத் தவிர வீட்டில் அப்போது யாருக்குமே கீபோர்டு வாசிக்கத் தெரியாது. எழுந்து பார்த்தால் ஆச்சர்யம். எங்க அம்மா, என் பையனைத் தூங்கவைக்க தினமும் ஒரு பக்திப் பாட்டு பாடுவாங்க. அந்தப் பாட்டுக்கு கீபோர்டு வாசிக்கிறான் என் பையன் ஜேக்கப் சாமுவேல். எங்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியல. `எந்தப் பயிற்சியுமே இல்லாம ஒரு முழுப் பாட்டுக்கு எப்படி இவனால் வாசிக்க முடியுது?’னு அசந்துட்டோம்.

உடனே அவனை ஒரு மியூஸிக் ஸ்கூல்ல சேர்க்க முயற்சித்தோம். சிலர் `ஐந்து வயதுக்கு மேலதான் கிளாஸ் எடுப்போம்’னு சொல்லிட்டாங்க. இன்னும் சிலர், அவன் ஏற்கெனவே வாசிக்கிற அதே விஷயங்களைச் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. எனக்குத் திருப்தியே இல்லை. என் தம்பி லெஸ்லி ஜார்ஜ், `நானே சொல்லித்தர்றேன்'னு ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூஸிக் சிலபஸ்படி சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சான். ஐந்து வயசுல கிரேடு-1 முடிச்சவன், ஆறு வயசுக்குள்ளாகவே கிரேடு-4 முடிச்சுட்டான். எங்க வீட்டு விசேஷங்கள், உறவினர்கள் கல்யாணம்னு எல்லா நிகழ்ச்சியிலும் சாமின் இசை நிகழ்ச்சி இருக்கும். இருந்தாலும், சாமின் அடுத்தகட்டம் என்னன்னு எங்களுக்குத் தெரியலை.

என் உறவினர் மூலமா ஏ.ஆர்.ரஹ்மானோட கே.எம். கான்சர்வேட்டரிக்குப் போனோம். சாம் வாசிக்கிறதைப் பார்த்துட்டு, `நீங்க பணமே கட்ட வேண்டாம். நாங்களே ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்'னு சேர்த்துக்கிட்டாங்க. அங்கேயே உள்ளே இருக்கிற ரஷ்யன் பியானோ ஸ்டுடியோவுக்குள் கூட்டிட்டுப்போனாங்க. சென்னையில் இப்படி எல்லாம் ஒரு இடம் இருக்குனு அப்பத்தான் தெரியும். முழுக்க முழுக்க பியானோக்களால் நிறைஞ்சு இருந்தது அந்த இடம். அங்கேதான் சாட்டர்ஜி சார் இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கூலில் ரஷ்யன் பியானோ ஸ்டுடியோ இன்ஸ்ட்ரக்டர் அவர்தான்'' என ஆச்சர்யம் விலகாமல் சொல்கிறார் ஜெர்ரி.

பியானோ புயல்!

``பையனோட திறமையைச் சரியா அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோனார் சாட்டர்ஜி சார். கீபோர்டைவிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து விரல்களால் வாசிப்பதைத்தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், சாட்டர்ஜி சாரோட ஸ்டைல், தோல்களின் பலம்கொண்டு பியானோ வாசிப்பது. கீபோர்டுக்கு மிக அருகில் உட்கார்ந்து ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோல வாசிப்பார்கள்.

கே.எம்.கன்சர்வேட்டரிக்குள்ள திடீர்னு ஒருநாள் ரஹ்மான் சார் வந்தார். அப்போ சாம் பியானோ வாசிச்சுக்கிட்டு இருந்தான். அப்படியே நின்னு பார்த்தவர், அவன் வாசித்து முடித்ததும் முகத்துல புன்னகையோட தம்ஸ்அப் காட்டினார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.

அதன் பிறகுதான் சாம் பெர்ஃபாமென்ஸ் பண்ண நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. கே.எம்.கன்சர்வேட்டரி மியூஸிக் ஸ்கூல் தொடக்க விழாவுக்கு வந்த முகேஷ் அம்பானிகிட்ட ரஹ்மான் சார், சாமை அறிமுகப்படுத்தினார். துபாய்ல நடந்த ரஹ்மான் சாரின் இசை நிகழ்ச்சியிலும் சாம் இடம்பிடித்தான். துபாய் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு கணவன், மனைவி வந்து பாராட்டினாங்க. `நியூயார்க்ல இன்னும் சில மாதங்களில் உலக இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கு. அதுல உங்க பையன் பெர்ஃபாம் பண்ணணும்'னு சொன்னாங்க. அவங்கதான் ஸ்பீக்கர்கள் தயாரிப்பதில் உலகப் பிரபலமான `ஹார்மான், ஜே.பி.எல்' நிறுவனங்களின் தலைவர் தினேஷ் பாலிவால் மற்றும் அவரது மனைவி இளா பாலிவால்.

நியூயார்க் இசை நிகழ்ச்சி பிரமாண்டமா நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, கொரியானு உலகம் முழுக்க இருந்து இசைக் கலைஞர்கள் வந்திருந்தாங்க. எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணிட்டான் சாம். ஒரு வாரத்தில் சென்னை திரும்பவேண்டிய நாங்க, மூன்று வாரங்கள் அங்கேயே இருந்து ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணினோம்'' என பெருமிதம் மின்னச் சொல்கிறார் ஜெர்ரி.

முழுக்க முழுக்க ரஹ்மானின் கே.எம்.கன்சர்வேட்டரியில் பயின்றுவரும் ஜேக்கப் சாமுவேலுக்கு, இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் ஒரே கனவு. யானியை ரொம்பப் பிடிக்குமாம். ``நல்ல கான்சர்ட் மியூஸிஷியன்னு பேர் வாங்கணும். மியூஸிக் நிகழ்ச்சிகள் மூலமா கிடைக்கிற பணத்தில் நிறைய உதவிகள் செய்யணும்'' என மெல்லிய கூச்சத்துடன் பேசுகிறான் ஜேக்கப் சாமுவேல்.

தம்ஸ்அப் தம்பி!

ஜேக்கப் சாமுவேல், முகேஷ் அம்பானி முன் இசையமைத்த வீடியோவை இந்த லிங்க்கில் காணலாம் :