Published:Updated:

இந்திய வானம் - 19

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

சலங்கை அணிந்த ஒட்டகம்

ஆறு மாதங்களுக்கு முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஓர் ஒட்டகத்தைக் கண்டேன். மெலிந்துபோய் உடல் முழுவதும் சிறிய காயங்களுடன் வங்குவத்திப்போனதாகத் தனியே நின்றிருந்தது. `கோயிலில் எதற்காக ஒட்டகம் வைத்திருக்கிறார்கள்?’ எனக் கேட்டபோது, ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஒட்டகம் கோயிலில் இறந்துபோய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். ஒட்டகங்களை தனிநபர்களோ அல்லது நிறுவனமோ வளர்க்க வேண்டும் என்றால், முறையான அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி வாங்கி வளர்த்தாலும், `எதற்காக கோயிலுக்கு ஒட்டகம்?’ எனப் புரியவே இல்லை. கோயிலைவிட்டு வெளியே வந்தபோதும், வேதனைபடிந்த அந்த ஒட்டகத்தின் முகம் நினைவில் இருந்தது.

ராஜஸ்தானின் புஷ்கரில் நடைபெறும் ஒட்டகச் சந்தையைக் காண ஒருமுறை சென்றிருந்தேன். ஆண்டுதோறும் கார்த்திகை மாதப் பௌர்ணமியை ஒட்டி ஒன்பது நாட்கள் இந்த மேளா நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அந்தியூரில் வருஷம்தோறும் குதிரைச் சந்தை நடைபெறுகிறது இல்லையா, அதைப்போல பல மடங்கு பெரியது இந்த மேளா.

ஆயிரக்கணக்கான ஒட்டகங்களை ஒருசேரப் பார்ப்பது வியப்பான ஓர் அனுபவம். உண்மையில் இந்த மேளா ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் என விலங்குகளை விற்பனைசெய்யும் மாபெரும் சந்தை. இத்துடன் பந்தயப் போட்டிகளும் ஆடல் - பாடல் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. சிவப்புத் தலைப்பாகை அணிந்த முகங்கள், வரிசை வரிசையாகக் கூடாரங்கள், ஒட்டகச் சாணத்தைச் சேகரிக்கும் பெண்கள், ஒட்டகங்களுக்குத் தண்ணீர்த்தொட்டிகள், வெளிநாட்டுப் பயணிகள்... என அந்த இடம் ஒரு விசித்திர உலகமாக இருந்தது. காலில் சலங்கை அணிந்த ஒட்டகங்களை அங்குதான் முதன்முறையாகக் கண்டேன். பூ வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார நூல்கள் அணிவிக்கப்பட்டு, ஒட்டகங்கள் வண்ணமயமாக பவனிவந்தன.

இந்திய வானம் - 19

குதிரைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து ஆட விடுவதை, சில விழாக்களில் கண்டிருக்கிறேன். புஷ்கரில் சலங்கை அணிந்த ஒட்டகங்கள் நடந்து செல்லும்போது எழுப்பும்   ஓசை ரம்மியமாக இருந்தது. நூறு  ஆண்டு களுக்கும் மேலாக நடந்துவரும் சந்தை இது.

ஒட்டகத்தில் பயணம்செய்வது எளிதானது அல்ல... கப்பலில் போவதுபோல முன்னும் பின்னுமாக ஆட்டம்போடுவதால் இடுப்பு எலும்பு வலிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் பாலை மணலில் ஒட்டகத்தில் போவது மிகவும் சிரமம்.

ஒட்டகங்களை புஷ்கர் மேளாவில் விற்பனை செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டுவருகிறார்கள். நாட்கணக்கில் பயணம்செய்து அவர்கள் புஷ்கரை வந்தடைகிறார்கள். நான்கைந்து விவசாயிகள் ஒன்றுகூடி 10 முதல் 50 ஒட்டகங்களை ஒன்றாக விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். சந்தையில் இள ஒட்டகங்கள் கழுத்தில் வண்ண மாலைகளோ, கறுப்பு நிறக் குறியீடுகளோ செய்யப்பட்டு அடையாளம் தெரிவதற்கு எளிதாக நிறுத்தப்படுகின்றன. வாங்க விரும்புகிறவர்கள் ஒட்டகத்தின் பற்களை, தோல் நிறத்தை, கால்களைப் பரிசோதனை செய்து பார்க்கிறார்கள். `அதைவைத்து ஒட்டகத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்கிறார்கள். ஓர் ஒட்டகத்தின் விலை, 3,000 ரூபாய் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை போகிறது. ஆடு, மாடுகளைப்போலவே பேரம்பேசி ஒட்டகங்களை வாங்குகிறார்கள்.

பார்வையற்ற ஒரு ரைக்கா விவசாயி, ஒட்டகங்களை சந்தையில் விற்பதற்காக வந்திருந்தார். `எப்படி இவ்வளவு தூரம் பயணம்செய்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு `ஒட்டகங்களின் துணை இருந்தால் போதும். கண்பார்வை அவசியம் இல்லை. ஒட்டகங்களுக்கு வழி தெரியும்’ என்றார்.

`எத்தனை ஆண்டுகளாக புஷ்கருக்கு வருகிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, `நினைவுதெரிந்த நாளில் இருந்து வந்து போய்க்கொண்டிருக்கிறேன். முன்னர் இவ்வளவு கூட்டம் இருக்காது. இப்போது பெரிய திருவிழாபோல ஆகிவிட்டது’ என்றார்.

அவர் பேசப் பேச வியப்பாக இருந்தது. `எனக்கு பிறவியிலேயே கண்பார்வை போய்விட்டது. என் தந்தையிடம் இருந்த முப்பது ஒட்டகங்களை மேய்க்கச் செல்லும்போது நானும்  செல்வேன். அதன் மூலம் ஒட்டகங்களின் நடை, சத்தம், வாசனையைக்கொண்டு என்னால் ஒட்டகங்களை எளிதாக மேய்க்க முடிந்தது. இப்போது என்னிடம் 18 ஒட்டகங்கள் இருக்கின்றன’ என்றார்.

`ஒட்டகப் பால் விசேஷமானது என்கிறார்களே நிஜமா?’ என என் நண்பர் அவரிடம் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்...

`ஒட்டகப் பால் சிறந்த மருந்து. ஒட்டகம் பல்வேறுவிதமான இலை-தழைகளைத் தின்னக்கூடியது என்பதால், அதன் பாலில் மருந்துச் சத்துக்கள் இருக்கும். ஒட்டகப் பால் குடித்த ஆண், எண்பது வயதிலும் ஒரு பெண்ணைக் கர்ப்பிணி ஆக்கிவிடுவான். உடலுக்கு அவ்வளவு வலிமை தரக்கூடியது’ என்றார்.

ரைக்கா இனத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒட்டகம் வளர்ப்பவர்கள். அவர்களின் திருமணச் சீதனமே ஒட்டகங்கள்தான். கன்று ஈன்ற பசுவின் பாலைச் சீம்பாலாக இனிப்பு கலந்து உண்பதுபோல ஒட்டகப் பாலையும் இனிப்பு கலந்து படைக்கிறார்கள்.

ஒட்டகம் மூன்று வயதை அடைந்தவுடன் அதை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக, இரும்புக்கோலால் சூடு போட்டுவிடுகிறார்கள். சிலர் நம்பர் போடுவதும் உண்டு. இறந்துபோன ஒட்டகங்களைக் காட்டில் கொண்டுபோய் போட்டுவிடுவார்கள். அதை ரைக்கா இனத்தவர் உண்பது இல்லை. சில வேளைகளில் ஒட்டகங்களை தேள் அல்லது பாம்பு கடித்துவிட்டால், அதன் கழுத்தில் மந்திரித்த கயிறு கட்டிவிடுவது உண்டு. மழை வரப்போவது ஒட்டகங்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும் என்பதால், அதை முன்னறிவிப்பாக விவசாயிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் பெண் ஒட்டகங்களை விற்பனைக்குக் கொண்டுவர மாட்டார்கள். இப்போது பெண் ஒட்டகங்களும் விற்கப்படுகின்றன. கால மாற்றத்தில் ஒட்டகத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. இப்போது ஒட்டகத்தை நம்பி யாரும் பயணிப்பது இல்லை. கனரக வாகனங்கள் வந்துவிட்டன. ஒட்டகத்தை ராஜஸ்தான் தனது மாநில விலங்காக அறிவித்திருப்பதுடன், இறைச்சிக்காக ஒட்டகத்தைக் கொல்வதையும் தடை செய்திருக்கிறது.

`தி ஸ்டோரி ஆஃப் வீப்பிங் கேமல்’ என்ற சிறந்த ஆவணப்படம் ஒன்று உள்ளது. அதில் தாயோடு சேர முடியாத குட்டியை, ஒட்டகத்துடன் சேர்க்க யாழ் இசையைப் பயன்படுத்துகிறார்கள். இசை கேட்டு ஒட்டகம் கண்ணீர்விடுவதுடன், தனது குட்டியுடன் சேர்ந்தும்விடுகிறது.

இந்திய வானம் - 19

ஒட்டகத்தில் ஏறி அரை மணி நேரம் பயணம் செய்வதே, நமக்கு எல்லாம் அலுப்பாகிவிடுகிறது. ஆனால், நான்கு ஒட்டகங்களுடன் ஒரு பெண் தனியே 1,700 மைல் பயணம் செய்திருக்கிறார். அதைப் பற்றி படித்தபோது வியப்பாக இருந்தது.

1977-ம் ஆண்டில் ரோபின் டேவிட்சன் (Robyn Davidson) என்கிற பெண், ஆஸ்திரேலியாவின் ஆலீஸ் ஸ்பிரிங் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடைவதற்காக, பாலைவனத்தில் நான்கு ஒட்டகங்கள், ஒரு நாயுடன் 1,700 மைல்கள் தனியே பயணம் செய்திருக்கிறார். நான்கு மாத காலப் பயணம் அது. ஒட்டகத்தில் இவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்வது எளிது அல்ல. ஆனால், ரோபின் உறுதியாக இருந்தார். ஆகவே, மூன்று மாத காலம் அவர் ஒட்டகங்களைப் பழக்குவதற்காகப் பயிற்சிகளை மேற்கொண்டார். ஒட்டகங்களுக்கு எப்படி உணவு அளிப்பது, சேணம் அணிவிப்பது, மருந்து தருவது என, அவர் போராடிக் கற்றுக்கொண்டார்.

பயணம் தொடங்கிய முதல் நாள், 20 கிலோமீட்டர் தூரம் போவதற்குள் ஒட்டகங்களில் ஒன்று, கால் தசைப்பிடிப்புக் காரணமாக நடக்க முடியாமல் நின்றுபோனது. முதல் நாள் இரவு வெட்டவெளியில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபடியே எப்படி மீதம் இருக்கிற 1,680 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கப்போகிறோம் எனப் பயமாக இருந்தது. மறுநாள் காலை எழுந்து ஒட்டகங்களுக்கு மருந்து கலந்த எண்ணெய் தேய்த்துவிட்டு, மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். நான்கு நாட்களின் முடிவில் அவர் பூர்வகுடிமக்களின் வசிப்பிடம் ஒன்றைக் கண்டடைந்தார். அவர்கள் ரோபினை வரவேற்று, தங்கவைத்து உணவு அளித்தார்கள். ஒரு பெண் தனியே பாலையைக் கடந்துபோக முயற்சிப்பது அவர்களுக்கு ஆச்சர்யம் அளித்தது. மறுநாள் அவள் கிளம்பும்போது உணவும், போதுமான தண்ணீரும் தோல் பையில் நிரப்பி உதவிசெய்தார்கள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் ஒருநாள் திடீரென மழையை எதிர்கொண்டார். எங்கே ஒதுங்குவது எனத் தெரியவில்லை. ஒட்டகங்களுடன் நனைந்தபடியே அவர் இரவு தங்குவதற்காக இடம் தேடி அலைந்தார். அந்த இரவை தன்னால் மறக்கவே முடியாது எனக் குறிப்பிடுகிறார் ரோபின். பயண வழியில் நான்கில் ஓர் ஒட்டகத்துக்கு மூக்கு வீங்கி நோயுற்றது; மற்றவை சீராக நடந்தன.
வழியில் எங்கோ தொலைந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே அவர் பயணம் மேற்கொண்டார். இரவில் ஸ்லீப்பிங் பேக்கில் படுத்து உறங்கி, கிடைத்த உணவை உண்டு, சலிப்பு இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்தார்.

வலியோடும் வேதனையுடனும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து பயணித்து, பாதி வழியைக் கடந்தபோது ஒட்டகங்கள் நடக்க முடியாமல் கால்கள் வீங்கிச் சிரமப்பட்டன. அந்த நாட்களில் காட்டு எலிகளை வேட்டையாடிச் சாப்பிட்டிருக் கிறார் ரோபின். தண்ணீர் கிடைப்பதுதான் பெரிய சவாலாக இருந்திருக்கிறது. அவரது தோல் உலர்ந்துபோனது. உதடுகள் வெடித்து ரத்தம் சொட்டின. மூக்கின் நுனி சிவந்து எரிச்சல் கண்டது. நான்கு மாத முடிவில் ஒட்டகங்களுடன் கடலைக் கண்டபோது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார். ஒட்டகங்களும் முதன்முறையாகக் கடலைக் கண்டன. அந்தச் சந்தோஷத்தில் ஓடி கடல்நீரைக் குடிக்க முயன்று தோற்றன.

`ஒட்டகங்கள், மிகுந்த புத்திசாலிகள்; இயற்கையைப் புரிந்துகொண்டவை. அவற்றைக் கொண்டு எந்தச் சவாலையும் எதிர்கொண்டு பயணிக்க முடியும்’ என ரோபின் டேவிட்சன் ஒட்டகங்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

இந்தப் பயணத்தைச் சென்ற ஆண்டு `டிராக்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி யுள்ளார்கள். நேஷனல் ஜியோகிராஃபி சேனலின் ஒளிப்பதிவாளர் ரிக், இதை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒட்டகங்களுடன் ஒரு பெண் தனியே பயணம் செய்யும்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளும், நீண்ட பயணத்தின் வழியே தன்னை அறிந்துகொள்ளும் தேடலும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டகத்தைப்போலவே சிலரது வாழ்க்கையும் மற்றவர்களுக்கான சுமைதூக்கியாகவே முடிந்துவிடுகிறது. அவர்களின் கஷ்டங்களை உடன் இருப்பவர்களும் உறவினர்களும் புரிந்து
கொள்வது இல்லை. `இவ்வளவுதான் வாழ்க்கை’ என ஒடுங்கிவிடுகிறார்கள். ஆனால், கஷ்டத்தில் உதவும் கரங்கள்தான் வாழ்க்கையின் மகத்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அதற்கு உதாரணம், சென்னை வெள்ளத்தின்போது இளைஞர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட உதவிப் பணிகள்.

பெட்ரோல் பங்கில் வேலைசெய்கிறார் பரணீதரன். 70 வயது இருக்கும். அடிக்கடி சந்திக்கிறவர் என்பதால் உரிமையுடன் `மழைக்கு ஊருக்குப் போனீங்களா?’ எனக் கேட்டேன்.
`எங்க போறது, ஊர்ல யாரு இருக்கா?’ என விரக்திக் குரலில் கேட்டார்.

`சொந்த ஊர்ல யாருமே இல்லையா?’

`இருக்காங்க... ஆனா, போக முடியாது; போனாலும் மரியாதையா இருக்காது. தேடிப் போய் எதுக்கு அவமானப்படணும்?’

`உங்க வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துருச்சா?’ எனக் கேட்டேன்.

`வீட்டுக்குள்ளே முழங்கால் அளவு தண்ணீர் வந்துருச்சு. படகில் வந்துதான் காப்பாத்திக் கூட்டிட்டுப்போனாங்க. என் மனைவிக்கு ஞாபக இழப்பு வந்து பல வருஷம் ஆகுது. மழைக்குள்ள என்ன நடக்குதுனே அவளுக்குத் தெரியலை. நாலு நாள் அவளை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டப்பட்டேன்.’

`அப்போகூட ஊருக்குப் போகணும்னு தோணலையா?’

`போகக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன்.’

`அப்படி என்ன கோபம்?’

`ஊர்மேல என்ன கோபம்? கூடப்பிறந்தவங்க, சொந்தக்காரங்க மேலதான் கோபம். சண்டைபோட்டுப் பிழைப்பு தேடி மெட்ராஸுக்கு வந்தேன். இங்க பாதிப்பேருக்கு மேல நம்மளப்போல வந்தவங்கதானே. சொந்த ஊர் கொடுக்காத எத்தனையோ விஷயங்களை, இந்த ஊர் கொடுத்திருக்கு. வெயிலோ, மழையோ என்ன நடந்தாலும் இந்த ஊரைவிட்டுப் போக மாட்டேன்.’

அவரது குரலில் இருந்த அழுத்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவரே சொன்னார்... `கஷ்டத்துல உதவுறதுக்கு இத்தனை ஜனங்கள் இருக்கிறப்போ, எனக்கு என்ன பயம்? என் பேரன் வயசு இருக்கும், பதினாறு வயசு பையன் ஒருத்தன், என் வீட்டுக்குள்ளே புகுந்து என் பொண்டாட்டியைத் தூக்கிட்டு வெளியே வந்து படகில் ஏத்திவிட்டான்.  யாரு பெத்த பிள்ளைகளோ ஓடி ஓடி உதவிசெஞ்சாங்க. இன்னொரு தம்பி நாங்க தங்கியிருந்த பள்ளிக்கு வந்து சாப்பாடு, தண்ணி பாட்டில், போர்வை எல்லாம் குடுத்துச்சு. இந்த இளவட்டப் பசங்க செய்த உதவியை நினைச்சு கண்ணீர் வந்துருச்சு. என் வாழ்க்கையில் இதை எல்லாம் இப்போதான் முதல் தடவையா பார்க்கிறேன். மழை பெஞ்சா புதுசா செடி முளைக்கும்னு சொல்வாங்க. இந்த ஊர்ல மழை பெஞ்சு நல்லவங்க நிறைய முளைச்சிருக்காங்க. அவங்க எல்லோரும் நல்லா இருக்கணும்.’

இவரைப்போல நூறாயிரம் பேர் சென்னையில் ஓடி ஓடி உதவிகள்செய்த இளைஞர்களை, தன்னார்வக் குழுக்களை வாழ்த்துகிறார்கள். மழையோ, வெள்ளமோ தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. ஆனால், இந்த இளைஞர் எழுச்சி புதிது. மகத்தான இந்த இளைஞர் சக்தியை ஒன்றிணைத்துச் செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் பெரிய மாற்றங்கள் நிச்சயம் நிகழும்.

அதற்கான வழிகாட்டுதலை சிந்தனை யாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். அதுதான் இந்த நம்பிக்கை வெளிச்சத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் சிறந்த செயல்பாடு.

- சிறகடிக்கலாம்...