Published:Updated:

ஐரோப்பாவின் நம்பிக்கை!

எஸ்.கே.கவின்

ஐரோப்பாவின் நம்பிக்கை!

எஸ்.கே.கவின்

Published:Updated:

ஜெர்மனி என்றதுமே அடால்ஃப் ஹிட்லரின் முகம் நினைவுக்கு வந்தால் நீங்கள் இன்னும் வரலாற்றிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியே வாருங்கள். நிகழ்காலத்தில் நவீன ஜெர்மனியின் நிஜ முகம் அதன் சான்ஸிலர் (பிரதமர்) அங்கலா மெர்கெல் (Angela Merkel). ஜெர்மனிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான நம்பிக்கையூட்டும் ஒரே முகமாகவும் அறியப்படுபவர். `Person of the Year - 2015’ என தன் அட்டையில் பிரசுரித்துப் பெருமிதப்படுத்தி யிருக்கிறது `டைம்' பத்திரிகை.

மேற்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் மெர்கெல். சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் கெடுபிடிகள் அதிகம். கருத்துச் சுதந்திரம்..? ம்ஹூம். எங்கும் எப்போதும் ரஷ்ய உளவாளிகள் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் மெர்கெலின் பால்யம் கழிந்தது. கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஜெர்மனி உருவாகாதா என்ற ஏக்கத்துடன்தான் வளர்ந்தார். இளவயதிலேயே அதற்கான அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டார். அறிவியலில் பேரார்வம். ஓர் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றத் தொடங்கிய மெர்கெல், 1986-ம் ஆண்டில் குவான்டம் வேதியியல் பிரிவில் டாக்டரேட் பட்டமும் பெற்றார்.

1989-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஒன்றிணைந்த ஜெர்மனி உருவான சமயத்தில், மெர்கெல் தீவிர அரசியலில் இறங்கினார். கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார். அவரது வளமான அரசியல் அறிவும் பொறுப்பான அணுகுமுறையும் கட்சித் தலைவர் ஹெல்மட் கோலைக் கவர்ந்தது. ஒன்றிணைந்த ஜெர்மனிக்காக 1990-ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தலில் கிழக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பிரதிநிதியாக மெர்கெலை முன்னிறுத் தினார் ஹெல்மட். மெர்கெல் வெற்றிபெற்றார். சான்ஸிலர் ஹெல்மட் தலைமையில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியமைக்க, அமைச்சரவையில் மெர்கெலும் இடம்பிடித்தார். பெண்கள் மற்றும் இளைஞர்நலத் துறை அமைச்சர். பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.

ஐரோப்பாவின் நம்பிக்கை!

நேர்த்தியான செயல்பாடுகள், தைரியமான நடவடிக்கைகள், கட்சியினரை அரவணைத்துச் செல்லும் பாங்கு என மெர்கெல் கட்சிக்குள் நல்ல பெயர் எடுத்தார். 1998-ம் ஆண்டு தேர்தலில் ஹெல்மட் அரசு தோற்கடிக்கப்பட்டது. அந்தச் சூழலில் மெர்கெல் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். கட்சிக்கு நிதி திரட்டுவதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரச்னை ஒன்று எழுந்தது.  அதில் ஹெல்மட் சம்பந்தப்பட்டிருந்ததால் மற்றவர்கள் வாய் திறக்கப் பயந்தனர். ‘மை டியர் லிட்டில் கேர்ள்’ என, தந்தை ஸ்தானத்தில் வாஞ்சையுடன் மெர்கெலை அழைப்பார் ஹெல்மட். இருந்தாலும் மெர்கெல் நெற்றிக்கண் திறந்தார். ‘இனி ஹெல்மட் இன்றி, கட்சியைப் புதிதாகத் தொடங்க வேண்டும்’ என வெளிப்படையாக அறிவித்தார். அது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஹெல்மட் ஆதரவாளர்கள் மெர்கெலை ‘பெண் ஹிட்லராக’ உருவகித்து விமர்சித்தார்கள். அத்தனையையும் தாண்டி, ஹெல்மட்டை விலக்கி ஓரம் கட்டிவிட்டு, 2000-ம் ஆண்டில் கட்சியின் தலைவராக அமர்ந்தார் மெர்கெல். ஜெர்மன் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அரசியல் கட்சித் தலைவர்.

இந்த நடவடிக்கைகளால் ஜெர்மானியர்களின் அபிமானத்தைச் சம்பாதித்த மெர்கெல், 2005-ம் ஆண்டு தேர்தலில் ஜெர்மனியின் முதல் பெண் சான்ஸிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மானியர்களின் நம்பிக்கையைப் பெற்று, தற்போது மூன்றாவது முறை அந்தப் பதவிக்கு நியாயம் செய்துகொண்டிருக்கிறார்.

2009-ம் ஆண்டு முதலே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடான கிரீஸின் நிலைமை இந்த ஆண்டு மிக மோசமாகிப் போனது. அது உலக அளவிலும் பொருளாதாரப் பாதிப்பு களை ஏற்படுத்தியது. எந்தச் சூழலிலும் உடனடியாக முடிவெடுத்து ஜெர்மனியின் நிலைப்பாட்டை அழுத்தமாகப் பதிவுசெய்யும் மெர்கெல், கிரீஸுக்காகவும் குரலெழுப்பினார். ‘கிரீஸ் பொருளாதாரப் பிரச்னையில் சமரசத்துக்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதே சமயம், ஐக்கிய ஐரோப்பிய பொருளாதாரக் கொள்கைகளையும் விட்டுத்தரக் கூடாது.’ கிரீஸின் பாதகச் சூழல் ஓரளவு சீராகக் காரணம் மெர்கெலின் நடவடிக்கைகளே.

ஐரோப்பாவின் நம்பிக்கை!

தீவிரம் அடைந்திருக்கும் சிரியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக் உள்நாட்டுப் போர்களினால், அங்கிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள், கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளைத்தான் வந்தடைகின்றனர். 2015-ம் ஆண்டில் அந்த அகதிகளுக்குப் பெரும் அளவில் தஞ்சம் அளித்தது ஜெர்மனிதான். மெர்கெல், ஜெர்மனியின் எல்லையைத் திறந்தேவைத்திருந்தார். பிற ஐரோப்பிய நாடுகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சியிலேயே சலசலப்பு எழுந்தபோதிலும், சுமார் எட்டு லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் மெர்கெல்.

ஆனால், நவம்பரில் பிரான்ஸ் மீதான ஐ.எஸ்-ஸின் தாக்குதலுக்குப் பிறகு, அகதிகளின் போர்வையில்தான் தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழை கின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தபோது, மெர்கெல் கதவுகளை மூடவேண்டிய கட்டாயம் உருவானது. ‘ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஜெர்மனியில் சட்டம், ஒழுங்குப் பிரச்னைகள் தலைதூக்குகின்றன. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருப்பதால், இனி ஜெர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்றார். அதே சமயம் தீவிரவாதத்துக்கு எதிரான தைரியமான நடவடிக்கைகளை எடுத்துவரும் வலிமையான தலைவராகவும் மெர்கெல் கவனிக்கப்படுகிறார்.

ஐரோப்பாவின் நம்பிக்கை!

ஜெர்மனி - ரஷ்யா, நிரந்தர எதிரிகள். மெர்கெலுக்கு நாய்கள் என்றால் அலர்ஜி; பெரும் பயமும்கூட. மெர்கெலை முதன் முதலில் சந்தித்தபோது புடின் அவருக்குப் பரிசளித்தது ஒரு நாய் பொம்மை.

ஐரோப்பாவின் நம்பிக்கை!

எனினும் புடினைக் கையாள்வதில் மெர்கெலும் சளைத்தவர் அல்ல. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. பின்னர் மெர்கெலின் முயற்சியால் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் 2015-ம் ஆண்டில் கையெழுத்தானது. இருந்தாலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை மெர்கெல் நீக்கவில்லை. எப்போதும் ஜெர்மனியிடம் வாலாட்டும் ரஷ்யாவைத் திறம்பட அடக்கி ஆள்வதிலும் மெர்கெல் கில்லாடிதான்.

`கொடுங்கோன்மைக்கு எதிராக தீவிரத்துடனும் வலிமையுடனும் செயல்படும் உலகத் தலைவர்கள் அருகிவிட்ட நிலையில், அங்கலா மெர்கெல் அப்படிப்பட்ட சிறந்த சர்வதேசத் தலைவராகச் செயலாற்றி வருகிறார்' எனப் புகழாரம் சூட்டியிருக் கிறது `டைம்' பத்திரிகை. இன்றைய உலக அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் பிரதான சக்திகளுள் ஒருவராக இருக்கிறார், மனிதாபிமானமும் பெருந்தன்மையும் கொண்ட இந்த இரும்புப் பெண்மணி!

இரண்டாம் இடம் யாருக்கு?

ஐரோப்பாவின் நம்பிக்கை!

டைம் பத்திரிகையின் 2015 - உலகின் சிறந்த மனிதருக்கான தேர்வுப் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் ஹோலெந்தே, இந்தியப் பிரதமர் மோடி, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மலாலா உள்ளிட்ட 58 பேர் இடம் பெற்றிருந்தனர். முதல் இடத்தில் மெர்கெல் தேர்வுபெற, அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த நபரைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. அவர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர், அபுபக்கர் அல்-பாக்தாதி.