Published:Updated:

பள்ளியைக் காப்பாற்றும் பஞ்சாயத்து!

சே.சின்னத்துரை, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பள்ளியைக் காப்பாற்றும் பஞ்சாயத்து!

சே.சின்னத்துரை, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:

ல்லா கேட்டுக்கங்க... இனிமே நம்ம ஊர்க்காரங்க யாரும் பிள்ளைகளை தனியார் பள்ளிக் கூடத்துல சேர்க்கக் கூடாது. நம்ம ஊரு பஞ்சாயத்து ஸ்கூல்லதான் படிக்க வைக்கணும். ஒரு குழந்தையும் படிக்க வராததால அந்த ஸ்கூல் சீரழிஞ்சு கிடக்கு. இப்படியே போனா, இதுதான் சாக்குனு கவர்மென்ட்டு, நம்ம ஊரு பள்ளிக் கூடத்தையே இழுத்து மூடிட்டுப் போயிடும். பாடுபட்டுக் கொண்டுவந்த பள்ளிக் கூடத்தை மூடவிடக் கூடாது. அதனால தனியார் பள்ளிக்கூடத்துல பிள்ளைங் களைப் படிக்க வெச்சிருக்கிறவங்க, அங்கே இருந்து மாத்தி நம்ம ஊர் பள்ளிக்கூடத்துலயே சேர்க்கணும். இது நம்ம ஊர்க் கட்டுப்பாடு. யாரும் மீறக் கூடாது” - கம்பீரமான குரலில் அறிவித்தார் ஊர்ப் பெரியவர். இது, ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சொல்லப்படும் சினிமா பஞ்சாயத்துத் தீர்ப்பு அல்ல; மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த நிஜ சம்பவம்.

எங்கும் தனியார் பள்ளிகள் மட்டுமே கோலோச்சும் நிலையில், அரசுப் பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கை மட்டுமே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்படும் நிலையில்... இந்தச் செய்தி நம்பிக்கை ஒளியைச் சுடர்விடச் செய்கிறது. மேலூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கும் மட்டங்கி பட்டி என்ற கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கை 6 பேராகச் சுருங்கிவிட்ட நிலையில்தான், மேலே சொன்ன ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற்றது. இப்போது இந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 64.

பள்ளியைக் காப்பாற்றும் பஞ்சாயத்து!

மட்டங்கிபட்டி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத விவசாயக்கூலிகள் நிறைந்த கிராமம். ‘தங்கள் குழந்தைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் வேண்டும்’ என்ற தாகத்தில் 1948-ம் ஆண்டு 50 காசு, 25 காசு என 300 ரூபாய் வரை சேர்த்து இந்தப் பள்ளியைக் கட்டினார்கள். பின்னர் இது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக உருவெடுத்தது. எத்தனையோ பேர் இந்தப் பள்ளியில் படித்து நல்ல வேலைகளில் சேர்ந்தனர். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மாநிலம் எங்கும் ஒரு தொற்றுநோயைப் போல பரவிக் கிடக்கும் தனியார் பள்ளி மோகம் மட்டங்கிப் பட்டியையும் விட்டுவைக்கவில்லை. மக்கள், தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினார்கள். படிப் படியாக உள்ளூர் பள்ளியில் கூட்டம் குறைந்தது. கடந்த கல்வி ஆண்டில் வெறும் ஆறு மாணவர் களாகச் சுருங்கிப்போனார்கள். ஆசிரியர்களும் ஆர்வம் இழந்து பாடம் நடத்திக்கொண்டிருக்க... ‘பள்ளி, எப்போது வேண்டுமானாலும் மூடப் படலாம்’ என வந்த தகவலால் ஊர் அதிர்ந்தது. சுதாரித்துக்கொண்ட ஊர்ப் பெரியவர்கள், கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.

“முன்னாடி எல்லாம் பக்கத்து ஊர்க்காரங்களோட புள்ளைக இங்க வந்து படிக்கும். இப்ப எல்லா புள்ளைகளும் பிரைவேட் ஸ்கூலுக்குப் போய் ஆயிரக்கணக்குல ஃபீஸ் கட்டி படிக்கிறாங்க. என் பையனும் மேலூர்ல இருக்கிற பிரைவேட் ஸ்கூல்லதான் படிச்சான். இப்போ நிலைமை மாறிடுச்சு. ‘பிரைவேட் ஸ்கூல்ல இருந்து டி.சி வாங்கிட்டு வந்து நம்ம ஊர் ஸ்கூல்ல சேருங்க’னு சொன்னப்போ பலபேரு கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. ‘இது பஞ்சாயத்துத் தீர்ப்பு. கட்டுப்படாதவங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவைப்போம்’னு சொன்னோம். ‘நம்ம ஊர் கவர்மென்ட் ஸ்கூல் மேல நமக்கே நம்பிக்கை வரலைனா எப்படி?’னு பேசப் பேச, எல்லாரும் கட்டுப்பட்டாங்க.

ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒண்ணுசேர்ந்து, ‘பஞ்சாயத்து ஸ்கூலைப் பாதுகாப்போம். எவ்வளவு வசதி வந்தாலும் இந்த ஸ்கூல்லதான் படிக்கவைப்போம்’னு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கிட்டோம். படிப்படியாக, எல்லா குழந்தைகளும் சேர ஆரம்பிச்சாங்க. ஆறு பேர் இருந்த ஸ்கூல்ல இப்ப 64 பேர் படிக்கிறாங்க” என நெகிழ்கிறார் கருப்பண்ணன். இவர், இந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர்.

தனியார் பள்ளியில் இருந்து டி.சி வாங்கி அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பது வெறும் வீம்பு நடவடிக்கையாக மாறிவிடக் கூடாது இல்லையா? தனியார் பள்ளியில் எவை எல்லாம் தரமானவை எனப் பெற்றோர் நினைக்கி றார்களோ, அவை எல்லாம் நம் ஊர் அரசுப் பள்ளியிலும் இருக்க வேண்டும் என கிராமத்தினர் நினைத்தார்கள். அப்போதுதானே மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்? எனவே கிராமத்தினரே முன்நின்று பள்ளியின் ஒவ்வொரு நடவடிக்கை யிலும் பங்கேற்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கிலம் கற்றுத்தருவது, கராத்தே, யோகா கற்றுக்கொடுப்பது என பள்ளியின் போக்கையே மாற்றினார்கள். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடந்தது. குறைகள் கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், சுகாதாரம், சத்தான உணவு என இப்போது தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடுகிறது மட்டங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

பள்ளியைக் காப்பாற்றும் பஞ்சாயத்து!

“பல ஊர்கள்ல மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமா அரசுப் பள்ளிகளை மூடிட்டு வர்ற நிலையில, ஊர் மக்கள் ஒண்ணுசேர்ந்து தங்கள் ஊரின் அரசுப் பள்ளியை மீட்டெடுத்தது முக்கியமான விஷயம்” என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.

“பல போராட்டங்களுக்குப் பின்னாடி இந்த ஸ்கூலுக்கு உயிர் வந்திருக்கு. காரணம், இந்த ஊர் மக்கள்தான். குழந்தைகளுக்கு நல்ல துணி, சிலேட், புத்தகப் பைனு ஊர்க்காரங்களே காசு போட்டு வாங்கித் தர்றாங்க. இங்க படிக்கிற ஒவ்வொரு குழந்தை மேலயும் ஊர்க்காரங்க ஸ்பெஷல் கவனம் செலுத்துறாங்க. ஒரே ஒரு தடவை கூட்டின கிராம சபைக் கூட்டத்துலயே இப்படி ஒரு மாற்றம் வரும்னு நாங்க எதிர் பார்க்கலை. எல்லா கிராமமும் இதேபோல இருந்துச்சுன்னா, தமிழ்நாட்டு கல்வித் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி கொண்டுவந்தா இன்னும் நிறையப் பிள்ளைங்க வருவாங்கனு மக்கள் சொல்றாங்க. அடுத்த வருஷம் அதையும் செயல் படுத்திக்காட்டுவோம்” என்கிறார் உறுதியான குரலில்.

ஒவ்வொரு நாளும் அழிவின் விளிம்பை நோக்கிச்செல்லும் அரசுப் பள்ளிகளை மீட்டு எடுக்க யாரோ வரவேண்டியது இல்லை. அந்தந்த கிராமத்தினர் ஒன்றுசேர்ந்தாலே போதும் என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்கள் இந்த மக்கள். அரசுப் பள்ளிகளை மீட்டெடுப்பது எப்படி என்பதற்கு தமிழ்நாட்டுக்கு வழிகாட்டு கிறது மட்டங்கிப்பட்டி!