Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஹரிஹரன்

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஹரிஹரன்

Published:Updated:

வாராது வந்த மாமழையைப் பின்தொடர்ந்து வந்த பேரிடர், பக்கவாத்தியக் கலைஞர்கள் பலரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. உதாரணம், மிருதங்கவித்வான் திருவாரூர் வைத்தியநாதன் வீட்டுக்குள் நீர் புகுந்து, இவருடைய 20 மிருதங்கங்கள் பழுதாகிவிட்டிருக்கின்றன. அதையும் மீறி இவர் சீஸன் கச்சேரிகளில் வாசித்துவருகிறார்.

இவர்களுக்கு இசைத் துறையைச் சேர்ந்த சிலர் உதவுகிறார்கள். ஈர நெஞ்சங்கள் முற்றிலுமாக உலர்ந்துவிடவில்லை.

பாடகி எஸ்.சௌம்யா, டிசம்பர் 12-ம் தேதி ஈஞ்சம்பாக்கம் பெத்தெல் நகருக்கு தன் குழுவுடன் சென்று, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்திருக்கிறார். அங்கு முழங்கால் அளவுக்கு நீரும், குப்பைக்கூளமும், சேறும் சகதியும் இருப்பது கண்டு மனம் வேதனைப் பட்டிருக்கிறார். இவை அனைத்தையும் போட்டோ எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார்.

ஆர்டர்... ஆர்டர்...

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், மியூஸிக் அகாடமியின் இசைவிழாவைத் தொடங்கிவைத்துவிட்டார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அகாடமி மேடையில் கலாநிதி விருது பெறவிருக்கும் சஞ்சய் சுப்ரமணியன், அழகான ஆங்கிலத்தில் எளிமையாகப் படித்த தலைமை உரையை மயிலாப்பூர் கூட்டம் மெச்சியது.

சரிகமபதநி டைரி 2015

‘இசை, நோயைக் குணப்படுத்தக்கூடியது; துயரில் வாடும் மனதை அமைதிப்படுத்தக் கூடியது...' என்பதை எல்லாம் வலியுறுத்த மேல்நாட்டு அறிஞர்களை தனது வரவேற்புரையில் மேற்கோள்காட்டினார் அகாடமியின் தலைவர் என்.முரளி. உண்மை. ஆனால், இதற்கு அகாடமி உள்ளிட்ட அனைத்து சபாக்களும் சீஸன் கச்சேரிகளுக்கு `அனுமதி இலவசம்’ என அறிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் பேய் மழை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சாமானியர்களில் சிலராவது இசையைக் கேட்டு ஆறுதல் அடைந்திருக்க முடியும். மாறாக, பெரும் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கி, பட்டுப்புடவையிலும், கோட் சூட் அணிந்தும், ஹை ஹீல் ஷூவில் ஏறிக்கொண்டும் கச்சேரிகள் கேட்க வருபவர்கள் சங்கீதம் மூலம் ‘ஹீலிங்' தேவைப்படாதவர்கள்!

`ஒரு வருடம்கூட ரத்து ஆகாமல், தொடர்ந்து 89 வருடங்கள் சங்கீத சீஸன் நடந்துவருகிறது. எனவே, சீஸனை ஒத்திப்போடவெல்லாம் தேவை இல்லை’ என்கிற வாதமும் ஒருசிலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், 100 வருடங் களுக்குப் பிறகு இப்போதுதானே இப்படியொரு மழை பொழிந்து ஊரை நாசப்படுத்தியிருக்கிறது. சும்மா சப்பைக்கட்டு எதற்கு?

லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாடுவது மாதிரி... விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் முதல் தடவையாக டென்னிஸ் விளையாடுவது மாதிரி... மியூஸிக் அகாடமியில் முதல் கச்சேரி செய்வது. கடந்த வியாழன் அன்று அகாடமியில் கச்சேரி செய்துவிட்டார் அனன்யா அசோக்; டி.என்.சேஷகோபாலனின் மாணவி.

இனிமை கலந்த கரகரப்புக் குரல் அனன்யாவுக்கு. பெரிய மேடை கண்டு மிரண்டு போகாமல் ‘யாதும் என் மேடை... யாவரும் கேளீர்' அணுகுமுறையில் தோடி வர்ணத்தில் ஆரம்பித்தார். கேதாரகௌள ராகத்தில் குழலிசைப் பிரியனை (வேணுகாநலோலுநி)க் கண்டு களிப்படைந்தார்.

மெயினாக, பூர்விகல்யாணி. காலத்தால் அழியாத, காதுகளைவிட்டு அகலாத ‘மீனாக்ஷிமேமுதம்' (தீட்சிதர்) கீர்த்தனை. ‘மீனலோசனி... பாசமோசனி...'யில் நிரவல். தனது லிமிட் தெரிந்து அடக்கஒடுக்கமாகப் பாடினார் அனன்யா. கண்டிப்புமிக்க தமிழ் வாத்தியார்கூட 61 மார்க் கொடுத்துவிடுவார்!

சரிகமபதநி டைரி 2015

ஒன்றரை மணி நேரக் கச்சேரியில் அனன்யா ஒரே ஒரு தமிழ்ப்பாட்டு - அதுவும் கடைசியாக போனால்போகிறது எனப் பாடியது நியாயமே இல்லை. பிரதானமாக தமிழில் ஒரு பாடலை எடுத்து விரிவாகப் பாடினாலும் அகாடமி ‘ரெட் கார்டு' காட்டிவிட மாட்டார்கள் பெண்ணே!

`தமிழ்த் தியாகய்யர்’ பாபநாசம் சிவன், 100 திரைப்படங்களுக்குமேல் சுமார் 800 பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு கீர்த்தனைக்குச் சமம். ‘பீட்' மட்டுமே தெரிந்தவர் அவர்... ‘பீப் சாங்' அறியாதவர்!

மார்கழி மகா உற்சவத்துக்காக யூத் ஹாஸ்டலில் சிவனின் பேரனும் வித்வானுமாகிய பாபநாசம் அசோக் ரமணி மையமாக உட்கார்ந்து தொகுத்து வழங்க, ஹரிசரண் - சைந்தவி - சந்தோஷ் சுப்ரமணியன் மூவரும் சிவனின் திரைப் பாடல்களைப் பாடினார்கள். இந்தத் திரை இசைக் கோலத்தை ‘கிரிதர கோபாலா...'வுடன் சைந்தவி ஆரம்பித்துவைக்க, `மீரா’, `அசோக்குமார்’, `சகுந்தலை’, `பவளக்கொடி’, `சிவகவி’... எனப் பல படங்களில், பல குரல்களில் இடம்பெற்ற பாடல்கள்... கேட்க, கேட்க டைம் மெஷினில் அந்தந்தக் காலக்கட்டத்துக்குப் பயணப்பட்டார்கள் கூடியிருந்த ரசிகர்கள்.
`கிருஷ்ணா முகுந்தா முராரே’, `ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’, `மன்மதலீலையை வென்றார் உண்டோ’, `சொப்பன வாழ்வில்...’ போன்ற சிவனின் பாடல்களை மறக்க முடியுமா என்ன? கிரேட்!
ஜெயா டி.வி-யில் ராகா! ராகுல்காந்தி, கூட்டணி என்றெல்லாம் கணக்குப் போட்டுவிட வேண்டாம். இங்கே ராகா = ரஞ்சனி, காயத்ரி! ஜெயாவின் மார்கழி உற்சவத்தில் கடந்த வியாழன் அன்று பாடிய சகோதரிகளின் தீம் - பாபநாசம் சிவன். விட்டல் ரங்கன் வயலின், டெல்லி சாய்ராம் மிருதங்கம், குருபிரசாத் கடம். ‘தனி' முடிந்த பிறகும்கூட பாடகிகளுக்கும் ரசிகர்களுக்கும் மைக் திருப்திகரமாக அமையவே இல்லை என்பது அன்றைய பரிதாபமான ஹைலைட்!

பாவ சங்கீதப்பிரியைகள் சகோதரிகள். அன்று ரஞ்சனி பந்துவராளி ராகத்தை பல்வேறு நுட்பமான சங்கதிகளால் தோரணம் கட்டி மகிழ்விக்க, மத்யமாவதியில் மயக்கினார் காயத்ரி. நம் பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்திருந்தால் அனஸ்தீஷியா இல்லாமலேயே ஒரு ஆபரேஷன் செய்து முடித்திருப்பார். மத்யமாவதியில் ‘சரவணபவ குகனே...' பந்துவராளியில், ‘நின் அருள் இயம்பலாகுமோ...' என சிவனின் மாஸ்டர் பீஸ் பாடல்கள்!

கச்சேரி முடிந்து வெளியேறிய ரசிகர்களிடம் மைக் நீட்டி கருத்து கேட்டபோது, “மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் கட்டளைப்படி ரஞ்சனியும் காயத்ரியும் ஸ்வரங்களை மடை திறந்த வெள்ளம்போல் பாடினார்கள்...'' என்று ஒருவர் சொன்னது வெறும் பிரமையோ!

மாளவிகாவை நினைவிருக்கிறதா? சில வருடங்களுக்கு முன் விஜய் டி.வி `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாப் 5 வரை முன்னேறியவர் ராம் பரசுராமிடம் கர்னாடக இசையையும் முறைப்படி கற்றுவரும் இவரின் கச்சேரி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில்.

திரை விலகியபோது ஹேர் ஆயில் விளம்பர மாடல் மாதிரி மேடையில் தோன்றிய மாளவிகாவுக்கு அழுத்தமான குரல்... அதில் எம்.எல்.வி-யின் சாயல் லேசாக! கம்பீரநாட்டையில் கலகலப்பாக ஆரம்பித்தார். சண்முகப்ரியாவில் கோலிவுட் சங்கதிகளை எல்லாம் கலந்துகட்டி கவர்ச்சி யூட்டினார். அதேபோல சங்கராபரணத்தை மெயினாக எடுத்துக்கொண்டு தீட்சிதரின் ‘அட்சயலிங்க விபோ'வில் இலக்கணம் மீறாமல் பாடி, இன்றைய மற்ற இளம்பாடகிகளுக்குச் சவால்விட்டார்.

மாளவிகாவுக்குத் தேவை ஃபோகஸ். சினிமாவுக்கும் மற்ற மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் சில வருடங்களுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு முழுக் கவனத்தையும் கர்னாடக இசைப் பக்கம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால், வருடத்துக்கு இரண்டு கச்சேரிகள், ஒன்றரை மணி நேர ஸ்லாட்டில் வெறும் முப்பது பேருக்கு மட்டும்  பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
பார்த்தசாரதி சபாவில் ஷ்ரேயா தேவநாத் வயலின் சோலோ. ஜெ.வைத்தியநாதன் மிருதங்கம், புருஷோத்தமன் கஞ்சிரா.

வாசிக்கவேண்டிய விதத்தில் வயலினைக் கையாண்டால் அது காதுகளைக் குடைந்து எடுக்காமல் இதயத்தைத் தொடும். லால்குடி ஸ்கூல் தயாரிப்பான ஷ்ரேயா, அதில் ஓரளவு வெற்றிப்பெற்று வருகிறார்.

பௌளியும், கௌரிமனோகரியும், வாசஸ்பதியும் எந்தவித அநாவசியங்களும் ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் ஷ்ரேயாவின் வயலினில் இருந்து அமைதியாகப் புறப்பட்டு வந்து அரங்கில் சுழன்றன. சம்பிரதாயமான பைரவி சங்கதிகள், அருவியாகப் பொழிந்தன.

வெறும் சோலோவில் மட்டுமே உழன்று கொண்டிருக்காமல் இப்போதெல்லாம் நிறையப் பேருக்குப் பக்கவாத்தியமாகவும் வயலின் வாசிக்கிறார் ஷ்ரேயா. இது அதிகமாகும்போது இசை அறிவு பரந்துபடும். வாசிப்பு, பண்பட்டு மேலும் பிரகாசிக்கும்.

`முத்ரா’வுக்காக ஷேர்த்தலை டாக்டர் கே.என்.ரங்கநாத சர்மா... மதுரையில் இசைக் கல்லூரியில் நல்லாசிரியர். இவரது தயாரிப்பில் மாணவர்கள் மானாவாரியாக உருவாகிவருவது வருங்கால இசை உலகுக்கு உரம்.

சர்மாவுக்கு, கம்பீரமான குரல். ரீதிகௌள மற்றும் மத்யமாவதி ராக ஆலாபனைகள் சம்பிரதாய சுத்தம். ‘கிம்மிக்ஸ்' கிடையாது. தலைச்சுற்றவைக்கும் கணக்கு வழக்குகள் ஸ்வரங்களில் இல்லை. பின்னால் விருத்தம் பாடும்போது கையாண்ட ரேவதி, காபி, வராளி, கமாஸ் ராகங்களின்போது, சர்மா மெழுகுவத்தியாக உருகினார்; கேட்போரை உருக்கினார். சென்னை மட்டும் இவரது வாசஸ்தலமாக இருக்குமேயானால் இன்னும் நிறையவே வெளிச்சம் கிடைக்கும். விசிட்டிங் புரொஃபசர் மாதிரி, விசிட்டிங் பாடகர் இங்கே வேலைக்கு ஆகாது!

சர்மாவுக்கு வயலின் வாசித்த அபூர்வா கிருஷ்ணா, லால்குடி ஸ்ரீமதி பிரம்மானந்தம் / அனுராதா தரின் மாணவி. ஜூனியர் ஸ்லாட்டில் வாசித்துவரும் இவரை, சீனியருக்கு பக்கவாத்தியமாக உட்காரவைத்தது, முத்ராவின் ஆக்கப்பூர்வமான திட்டங்களில் ஒன்று.

ஜூனியர்மோஸ்ட்களுக்குக் கச்சேரிப் போட்டி நடத்தி, இசை உலக சீனியர்களை நீதிபதியாக உட்காரவைத்து பாட்டு - வயலின் - மிருதங்கம் பிரிவுகளில் முதலாவதாக மூவரை தேர்வுசெய்தது முத்ரா. ஜெயித்த பாடகரை சீனியர் பக்கவாத்தியத்-துடன் சீஸனில் மேடை ஏற்றினார்கள். அதே மாதிரி ஜெயித்த வயலின், மிருதங்கக் கலைஞர்-களுக்கு சீனியர்களைப் பாடவைத்தார்கள்.

அபூர்வா கிருஷ்ணா, வயலினில் வென்றவர். இவரது வாசிப்பில் பிரகாசமான எதிர்காலம் மின்னி மின்னி மறைந்தது நிஜம்!

- டைரி புரளும்...