Published:Updated:

விமானம் தேவையில்லை, மேகத்தில் மிதக்கலாம்... மேகமலை அதிசயம்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் 8

விமானம் தேவையில்லை, மேகத்தில் மிதக்கலாம்... மேகமலை அதிசயம்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் 8
விமானம் தேவையில்லை, மேகத்தில் மிதக்கலாம்... மேகமலை அதிசயம்! ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் 8

`அன்பு’ என்று பெயர் வைத்திருப்பார்கள்; எரிந்து எரிந்து விழுவார்கள். `பாரி’ என்று பெயர் இருக்கும்; பர்ஸை எடுக்கவே மனசிருக்காது. கல்யாணம் என்று பெயர்கொண்ட மனிதருக்கு ஒரு தடவை(!)கூட திருமணம் ஆகியிருக்காது. அதாவது, பெயருக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், மேகமலைக்கு மட்டும் இது பொருந்தாது. மேகங்கள் மலையைத் தவழுவதால்தான் இதற்கு `மேகமலை’ என்று பெயர். உண்மையில் இது மிகச் சரி! `மேகத்துக்குள்ளேயே போறோமோ!’ என்று நம்மைச் சந்தேகப்படவைப்பது மேகமலையின் ஸ்பெஷல். இந்த வாரம் நான் மேகத்துக்குள்ளும் மலைகளுக்குள்ளும் தவழ்ந்துவிட்டு வந்த அனுபவம் ரொம்ப அலாதியானது.

`10 கி.மீதான். 15 நிமிஷத்துல வந்துடுவேன்’ என்று வாக்குறுதி கொடுப்பது சில இடங்களுக்குத்தான் பொருந்தும். மேகமலைக்குச் செல்பவர்கள், தயவுசெய்து இப்படி வாக்குறுதி கொடுக்காதீர்கள். மேகமலையில் உள்ள கைடு ஒருவருக்கு, `மதியத்துக்குள்ள வந்துடுவோம்ணே’ என்று தேனியில் இருந்து காலையில் மெசேஜ் அனுப்பினால், சாயங்காலம் சூரியன் மறையும்போதுதான் மேகமலைக்குள் டயர் பதித்தோம். காரணம், இங்குள்ள பாதை மட்டுமல்ல; இயற்கை வசீகரமும் அப்படி! 

சின்னமனூரிலிருந்து 30 கி.மீ-தான் மேகமலை. முதல் பாதி கி.மீட்டர்கள் மலைப்பாதை. பிறகு, தேயிலைத் தோட்டங்கள்... அப்புறம் கரடுமுரடான ஆஃப் ரோடு. இதை ரோடு எனச் சொல்ல முடியாது. சேறு, சகதி எனச் சொல்லலாம். 200 மிமீ கிரவுண்டு க்ளியரன்ஸ்கொண்ட டாடா ஹெக்ஸா காரே செம அடிவாங்கியது. ஹேட்ச்பேக், செடான் காரில் செல்பவர்கள், கொஞ்சம் யோசித்துவிட்டு மேகமலைக்குச் செல்லலாம். 

தேனிக்காரர்களைச் சந்தித்துவிட்டுத்தான் மேகமலைக்குத் திரும்ப வேண்டும். தேனியில் புகைப்பட நிபுணர் ரெடியாக இருந்தார். அங்கிருந்து சின்னமனூர். சின்னமனூர், கம்பம் தாண்டி வலதுபுறம் திரும்பினால் குமுளி, தேக்கடி. இடதுபுறம் ஸ்டீயரிங்கைத் திருப்பினால் மேகமலை. சின்னமனூரிலிருந்து பேருந்து வசதியும் உண்டு. `நான்-வெஜ் சாப்பிடலைன்னா அலர்ஜி ஆகிடும்’ என்று புகைப்பட நிபுணர் வேண்டுகோள்வைத்திருந்தார். எனவே, சின்னமனூரிலேயே சிக்கன், மட்டன் போன்ற வஸ்துக்களை பேக் செய்துகொண்டோம். காரணம், மேகமலையில் இருப்பது ஒரே ஓர் உணவகம். அசைவம் சமைத்துக் கொடுக்கவும் அவர்களைவிட்டால் வேறு வழியில்லை. நீங்களும் இதை முயலலாம். 

மலையடிவாரத்தில் ஒரு செக்போஸ்ட். வழக்கமான செக்கிங். கையெழுத்து போட்டுவிட்டு மலையேறினோம். புது கார் வாங்கினால் பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் பூஜை போட்டு எலுமிச்சையை நசுக்கி பயணத்தைத் தொடர்வார்களே... அதுபோல் மேகமலைக்குப் பயணம் செல்லும் ஆன்மிக பார்ட்டிகளுக்கு இங்கே அற்புதமான ஒரு ஆப்ஷன் உண்டு. பழநி முருகன் ஆலயம். ``காணிக்கை செலுத்திட்டுப் போங்க தம்பி... எல்லாம் நல்லபடியா நடக்கும்’’ என்று கோயில் பூசாரிப் பாட்டி எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். சேற்றில் சிக்கிய எங்கள் காரை டிராக்டர் உதவியுடன் வெளியே எடுத்தது, மயிரிழையில் நிலச்சரிவிலிருந்து தப்பித்தது, வெண்ணியார் என்ற இடத்தில் காலைப் பனிமூட்டத்தில்... சாலையே தெரியாமல் மதியம் வரை காத்திருந்து கிளம்பியது, 6 மணிக்குப் பிறகு கீழே இறங்கி செக்போஸ்ட்டில் நீண்ட நேரம் காத்தது... என பாட்டியின் அர்ச்சனை வீண்போகவில்லை. 

இந்த செக்போஸ்ட்டில் விசித்திரமான ஒரு விஷயம் உண்டு. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள். 30 கி.மீ. இதையெல்லாம் தாண்டி, கீழே இறங்கும்போது இந்த செக்போஸ்ட்டில் நீங்கள் ஆறரை மணிக்குள் கையெழுத்துப் போட வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகலாம். ஆம்! 6.30 மணிக்குமேல் வருபவர்கள் யாராக இருந்தாலும், அப்படியே செக்போஸ்ட்டில் அகதிகள்போல் அடைக்கப்படுகிறார்கள். வடிவேலு போட்ட கோடுபோல், இந்த செக்போஸ்ட் கோட்டைத் தாண்டி யாரும் போகக் கூடாது. விடியும் வரை மலையடிவாரம்தான் உங்களுக்கு ஸ்டே பாயின்ட். ``அநியாயமா இருக்கே... அப்போ மேலேயே 4 மணிக்குப் பிறகு கீழே இறங்கத் தடை போடவேண்டியதுதானே?’’ என்று தாமதமாகக் கீழே இறங்கிய பிறகு கோபமாகச் சத்தம் போட்டேன். ``சார், நாங்க யாரையும் 6.30 மணிக்குமேல் விட மாட்டோம். ஒருதடவை ஆம்புலன்ஸையே ரிட்டர்ன் பண்ணியிருக்கோம்னா பார்த்துக்கோங்க!’’ என்று பெருமையாகச் சொன்னார்கள் அதிகாரிகள். என் பாராட்டை எதிர்பார்த்திருப்பார்கள்போல. ``கொள்கை என்ன?'' என்று கேட்டபோது `தலை சுத்துது' என்று சொன்ன ரஜினிபோல், எனக்குத் தலை சுற்றியது. `சிஸ்டம் சரியில்லை’ என்று ரஜினி சொன்னது சரிதான்.

18 கொண்டை ஊசிகளும் செம ஷார்ப். எந்த காரும் இரண்டாவது கியரைக்கூடத் தாண்ட முடியவில்லை. ரியர்வியூ மிரர் வழியாகப் பார்த்தால், திருப்பம் தெரியவே இல்லை. அந்தளவுக்கு வளைவுகள். கட்டைவண்டிப் பயணம் மாதிரி இருந்தது. ஆனால், ஜாலியாக இருந்தது. மேகமலை போன்ற இடங்களுக்கு நான் 4 வீல் டிரைவ் வாகனங்களை ரெக்கமண்ட் செய்கிறேன். சிங்கிள் ரோடுதான். தடுப்பு எதுவும் கிடையாது என்பதால், புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள், பின் சீட்டில் அமர்ந்து வருவது நல்லது.

சில கி.மீட்டர்கள் தாண்டியதும், தன்னந்தனியாக ஒரு டீக்கடை இருந்தது. மேகமலைக்குச் செல்பவர்கள், இங்குள்ள கடையில்தான் அதிரசம், முறுக்கு, வடை, பிஸ்கட் போன்ற உணவுகளை பேக் செய்துகொள்கிறார்கள். ``35 வருஷமா கடை வெச்சிருக்கேன் தம்பி. விலங்குகளால இதுவரை எந்தத் தொந்தரவும் இல்லை. மனுஷங்களுக்குத்தான் பயப்படணும். ரோடு போடுறேன்னு சொல்லி பாறையைப் பேக்குறாய்ங்க. ஆனை, புலி, காட்டெருமை எல்லாம் இப்போ இந்தப் பக்கம் வர்றதே இல்லை’’ என்று நொந்துபோய்ப் பேசினார் டீக்கடைத் தாத்தா. ``அனிமல்ஸ்லாம் உண்டா தாத்தா?’’ என்று நான் கேட்டதற்குத்தான் இப்படி அவரிடமிருந்து பதில் வந்தது.

பாதையெங்கும் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள், திடும் திடும் என இறங்கும் பள்ளத்தாக்குகள், கியர் மாற்றுவதுகூட தெளிவாகக் கேட்கும் அளவு காட்டுக்கே உரிய அமைதி. ஒருகாலத்தில், மேகமலை தனியார்வசம் இருந்ததாம். அந்தத் தனியார் நிறுவனத்தால் இதைச் சரிவரப் பராமரிக்க முடியவில்லை. 2009-ம் ஆண்டில் இந்த அழகு மேகமலையை, சுற்றுலாத்தலமாக அறிவித்தது தமிழக அரசு. யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் `எங்க ஏரியா... உள்ள வராதே’ என்று விலங்குகள் ராஜ்யம் நடந்துகொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். கடைக்காரத் தாத்தா சொன்னதுபோல், பாறைகளை உடைக்கும் சத்தத்துக்கு விலங்குகள் மேகமலைச் சாலையில் அண்டுவதே இல்லைபோலிருக்கிறது. தனியாரிடமே இருந்திருக்கலாம் மேகமலை! போனால் போகட்டும் என காட்டுக்கோழிகள், மான்கள், பறவைகள், சிங்கவால் குரங்குகள் மட்டும் மேகமலைக்கு கெஸ்ட்களாக வந்து போகின்றன. காட்டு மாடுகள், சிங்கவால் குரங்குகள், பெயர் தெரியாத குட்டி விலங்குகள் பார்த்தோம்.

தரமான சினிமாவுக்கு நடுவே இளையராஜாவின் BGM போல, நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள் விழும் சத்தம் மனம் மயக்கியது. பார்ப்பதற்கே கிளாமராக இருந்தன சில அருவிகள். கால் நனைத்தால், இன்னும் சொக்கியது. போதாததற்கு பச்சைப்பசேல் டீ எஸ்டேட்டுகள் வேறு. பாதை கரடுமுரடாக இருந்த டென்ஷன் எனக்கு மறந்தே போய்விட்டது.

மேகமலையில் டிராக்டர்கள் அதிகம் உலவுகின்றன. காரணம், சேற்றில் சிக்கிய கார்களை வெளியே எடுக்க டிராக்டர்கள்தான் சரியான சாய்ஸ். டோலக்பூரைக் காப்பாற்ற வந்த சோட்டா பீம் மாதிரி, டிராக்டர்கள்தான் மேகமலை கார் பயணிகளின் சோட்டா பீம். கொஞ்சம்போல லம்ப்பாக பணம் மட்டும் எடுத்து வைக்க வேண்டும். `கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற ரீதியில் டிரைவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சேறு, சகதி போன்றவற்றில் கார் ஓட்டுபவர்களுக்கு ஒரு டிப்ஸ். சண்டைக்காட்சிகளில் தெலுங்கு ஹீரோக்களுக்கு கை நரம்புகள் புடைக்குமே... அந்தளவு ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்து கார் ஓட்டுங்கள். முதல் கியரிலேயே ஆக்ஸிலரேட்டரை வேகமாகவும் மிதிக்காமல், மெதுவாகவும் மிதிக்காமல் `கிராஜுவலாகச்’ சென்றால் எந்தப் பிரச்னையும் இருக்காது. கார் அலைபாயாது. சில கார்கள் சேற்றில் தாறுமாறாகப் போய் மலையிலிருந்து உருண்டதையெல்லாம் சொல்லி பீதியூட்டினார்கள். 

போகப் போக செல்போன் டவர் காலியாகி இருந்தது. BSNL மட்டும் நெட்வொர்க் கிடைக்குமாம். ஹைவேவிஸ் எனும் பகுதி வந்திருந்தது. இங்கே மேலணை, கீழணை என இரண்டு அண்ணன்-தம்பி அணைகள். லொக்கேஷன்தான் வேறு வேறு. பார்ப்பதற்கு ட்வின்ஸ்போல் இருந்தன. தேயிலைத்தோட்டங்கள், நீர்த்தேக்கங்கள்... செல்ஃபிகளாகக் குவிக்கலாம். ஹைவேவிஸ் என்பதற்கு தமிழில், `பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். அதாவது, பசுமையான - கூரிய மலை என்று அர்த்தம். நிஜம்தான். கடவுள், பச்சை நிறத்தில் கையெழுத்துப் போட்டதுபோல இருந்தது. இது பேரூராட்சி என்றார்கள். ஆனால், ஐஸ்க்ரீம் நடுவே இருக்கும் செர்ரி பழம்போல் குட்டிக் கிராமமாய் பச்சையாய்ச் சிரித்தது ஊர். 

இங்கு ஒரே ஒரு டீக்கடை. இதுதான் ஹோட்டலும். மவுன்ட் ரோட்டுக்கு ஸ்பென்ஸர் பிளாஸா மாதிரி, மேகமலைக்கு இந்த செந்தில் டீ ஸ்டால்தான் லேண்ட் மார்க். நீங்கள் மேகமலைக்கு வந்து தங்குவதென்றால், இவர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட வேண்டும். (04554-232318) கொஞ்ச நாளைக்கு முன்பு வரை இங்கு `Golden Fish Fry’ எனும் மீன்வறுவல் பிரசித்தமாம். அணைக்கட்டில் அப்படியே பிடித்து வறுத்துத் தருவார்களாம். இப்போது அணையில் மீன் பிடிக்கத் தடை என்றார்கள். வாங்கி வந்த சிக்கன், மட்டனைச் சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டுக் கிளம்பினோம். ``என்னாச்சு... சேத்துல மாட்டிக்கிட்டீயளா...’’ என்று இழுத்து இழுத்து மதுரை பாஷையில் பேசியபடி நம்முடன் இணைந்துகொண்டார் கைடு தவிடு என்பவர். 

மேகமலையில் தங்குவதற்கு இப்போதுதான் ரிசார்ட்கள் முளைக்க ஆரம்பித்திருக்கின்றன. நாங்கள் தங்கவேண்டிய அரசு விடுதி, அணைக்குப் பக்கத்தில் வெளியே இருந்து பார்க்க செம ரம்மியமாக இருந்தது. உள்ளே, அமானுஷ்யப் படங்களுக்கு செட் போடாமல் ஷூட்டிங் எடுக்கலாம்போல்! பூச்சிப்பட்டைகளை வெளியேற்றிவிட்டு, இரவு குளிரக் குளிரத் தூங்கினோம். ஊட்டி மாதிரி இரண்டு மடங்கு குளிர் பின்னியது. மேகமலைக்கு வந்தால், ஜெர்க்கின் எடுக்க மறக்காதீர்கள். இரவு மிருகங்களின் நடமாட்டம் இருந்ததாக மறுநாள் காலையில் சொன்னார் கைடு தவிடு.

“அண்ணே... சட்டுபுட்டுனு கிளம்புங்க. வெண்ணியார் அணைகிட்ட 14 ஆனைங்க நிக்குதாம்’’ என்று சினிமாவில் அரக்கப்பரக்க வந்து சேதி சொல்லும் கேரக்டர்போல் அதிகாலையிலேயே வந்திறங்கினார் தவிடு. அதே கடையில் கட்டஞ்சாயா குடித்துவிட்டு, ஜெர்க்கின் மாட்டிக்கொண்டு, `ஜெய்ஹிந்த்’ அர்ஜுன் படைபோல் கிளம்பினோம்.

ஹைவேவிஸில் இரண்டு கி.மீ பயணித்தால், `தூவானம்' எனும் இடம் வந்தது. மலையின் முனையில் இருக்கும் இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர், சுருளி அருவிக்குச் செல்வதாகச் சொன்னார்கள். மலைமுகட்டிலிருந்து வெளியேறும் நீர், பள்ளத்தாக்கிலிருந்து மேல்நோக்கி வரும் காற்றில், சேவாக் பேட்டிங்கில் சிக்கிய பந்துபோல் சிதறிக் காற்றில் மிதக்கின்றன. இதனால்தான் இந்த இடத்துக்குப் பெயர் `தூவானம்'. ஜெர்க்கினைத் தாண்டி குளிர் உடம்புக்குள் பரவியது. 

இந்த நீர் செல்லும் வழியே ஜீப்போடு கவிழ்ந்து... யானைகளிடமிருந்து தப்பித்து... கரடிகளுக்குக் கண்ணாமூச்சி காண்பித்துவிட்டு... செந்நாய்களுக்கு பெப்பே காட்டிவிட்டு... என்றுதான் உயிர் பிழைத்த பல அட்வெஞ்சர் கதைகளைச் சொன்னார் தவிடு. நம்ப முடியவில்லையென்றாலும், ஃபேன்டசி படத்துக்கான கதைபோல் இருந்தது. ``சாயங்காலமா இருந்தா இந்த இடத்துல யானைங்களைப் பார்த்திருக்கலாம்!’’ என்றும் சொன்னார். 

அப்புறம், மணலாறு. இங்குள்ள பாலத்தை லாங்ஷாட்டில் பார்த்தால், அத்தனை அழகாய் இருக்கிறது. `இதுலயா போகப்போறோம்?’ என்று குழந்தைபோல் உற்சாகமானேன். அணை நீருக்குமேல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம்தான் செல்ல முடியும். மணலாறு டீ எஸ்டேட்டில், டீ வாசம் ஆளைத் தூக்கியது. மூக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘ஒரு டீ குடிக்கலாமே’ என்று டீக்கடையைத் தேடினேன். ஒரு டீக்கடைகூட இல்லை. நாக்கைக் கட்டுப்படுத்தித்தான் ஆக வேண்டும். 

எந்த அணையையும் விடவில்லை. அணைகளில் இறங்கி லேசாக கால் நனைத்து க்ளோஸ்-அப்பில் சென்று போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர். அணைகளில் கால் நனைக்கும்போது, ``அட்டைங்க ஏறிப்புடும்ணே... பார்த்து’’ என்று எச்சரித்தார் தவிடு.  அணைக்குப் பக்கத்தில் பச்சைப்பாம்பு, தேன்கூடு என செம விருந்து கிடைத்தது. மணலாறைக் கடந்து மகாராஜா மெட்டு என்றோர் இடம் வந்தது. ஒரு வியூ பாயின்ட்டாக நினைத்துக்கொண்டு, இங்கிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் பார்த்தேன். பனோரமா மோடில்கூட சிக்கவைக்க முடியாமல் அற்புதமாக இருந்தது. இங்கிருந்துதான் `மூல வைகை ஆறு’ உருவாகிறது என்கிறார்கள். 

`எப்போடா யானையைப் பார்ப்போம்’ என்றிருந்தது. `வெண்ணியார் 3 கி.மீ’ என்று போர்டு தென்பட்டது. கண்களைக் கூர்மையாக்கினோம். யானைக் கூட்டம் பார்ப்பதென்றால் சும்மாவா? உற்சாகமாக இருந்தது. மறுபடியும் `வெண்ணியார் 2 கி.மீ’ என்று சொன்னார்கள். பல 2 கி.மீ-கள் தாண்டிய பிறகும், எல்லோரும் `இன்னும் 2 கி.மீ போங்க’ என்று ஒரே மாதிரி சொன்னார்கள். அட, தீரன் தாத்தாக்களா!? 

யானை வாசம் அடிக்கிறதா என, கதவைத் திறந்துகொண்டுதான் பயணித்தோம். வாவ்! யானைக் கூட்டம். லேட்டானாலும் க்யூட்டாக யானைகள் பார்த்தது சூப்பர் அனுபவம். நேற்று வந்த யானைகள்; இன்னும் அங்கேயே மேய்ந்துகொண்டிருப்பதாகச் சொன்னார் தவிடு. பிறவிப் பயனே அடைந்ததுபோல் இருந்தது. யானைக் கூட்டத்துக்கு நடுவே வெண்ணியாரின் அழகை வர்ணிக்க மறந்தேவிட்டேன். சில குழந்தைகளைப் பார்த்ததும், கொஞ்சித் தீர்க்கவேண்டும்போல் ஆசை ஏற்படுமே... வெண்ணியாரை அந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். கவிஞர்கள் பார்த்தால் சும்மாவிட மாட்டார்கள். வெறித்தனமான கவிதைகள் வெண்ணியாருக்கு நிச்சயம்! 

அதுமட்டுமில்லை, மின்சாரத்துக்கு வெண்ணியார் போன்ற அணைகள்தான் ஆதாரம். மின்சார வாரியத்துக்கு 24X7 வேலை இருக்கும்போல. எத்தனை அணைகள்! மேகமலையில் மொத்தம் ஐந்து அணைகள் இருப்பதாகச் சொன்னார்கள். மேலணை, கீழணை, தூவாணம், வெண்ணியார்... அடுத்து இரவங்கலார் அணை. இங்குதான் விலங்குகளைப் பார்க்க ட்ரெக்கிங் வசதி இருப்பதாகச் சொன்னார்கள். இதற்கு அனுமதி வாங்க வேண்டும். அணையின் அந்தக் கரையில் மற்றொரு யானைக் கூட்டம், தண்ணீர் அருந்துவதாகச் சொன்னார்கள் அதிகாரிகள். ஆனால், நாம் சென்ற நேரம், பனி மூடி கண்களை மறைத்திருந்தது. சுத்தமாகக் கண்ணே தெரியவில்லை. புரொஜெக்டர் லைட் போட்டும் கார் ஓட்டவே முடியவில்லை. ட்ரெக்கிங்கெல்லாம் சாத்தியமே இல்லை! 

இரவங்கலார் அணையில் சம்பந்தமே இல்லாமல் ஹால்ட் அடித்தோம். பயமாகவும் ஜாலியாகவும் இருந்தது. பனி விலக மூன்று மணி நேரம் ஆனது. பனி விலகியதும்தான் தெரிந்தது - இரவங்கலார் அணையின் மொத்த அழகுத் தாண்டவமும். வெண்ணியாருக்கு அண்ணனாக அழகில் இறங்கி அடிக்கிறது இரவங்கலார். `அவதார்’ படத்தின் லொக்கேஷன்போல் இருந்தது. அணையில் இறங்க முடியவில்லை; உள்ளே போக முடியவில்லை; போட்டிங் இல்லை; மீன் பிடித்தல் இல்லை; ஆனாலும் அணையின் அழகு கண்ணைச் சிமிட்டவிடவில்லை. வார்த்தைகளுக்குள் இரவங்கலாரைச் சிக்கவைக்க முடியவில்லை. இதில் பறவைகளின் பார்க்கிங் வேறு! கழுகுகள், மயில்கள், துணை நடிகர்கள்போல் பெயர் தெரியாத பறவைகள் என்று... குளிரில் எத்தனை பறவைகள்! மழையில் எடை அதிகமான சிறகுகளுடன் மொட்டை மரங்களில் பார்க் ஆகி, வெறிக்க வெறிக்க நம்மைப் பார்த்துக்கொண்டிருந்தன. அடுத்து  வட்டப்பாறை, போதப்புல் மேடு, க்ராஸ் ஹில், சன்னாசி மொட்டை - இன்னும் மேகமலைக்குக்கு அழகு சேர்க்க வரிசைக்கட்டி நிற்கின்றன எக்கச்சக்க இடங்கள்! எல்லாமே இயற்கை படைத்த விருந்து.

சில இடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து வந்துவிடுவோம். மேகமலையில் இது முடியவில்லை. இங்கே எல்லாமே பெயருக்கு ஏற்றபடியே நடந்ததுதான் ஆச்சர்யம். திடீர் திடீரென மழை தூறி தூவானமாய் காட்சியளித்த தூவானம், மணல் மணலாய் ஓடிய அணைநீரில் கட்டப்பட்ட மணலாறு பாலம்...  பச்சைப்பச்சையாய்த் தெரிந்த பச்சைக் கூமாச்சி மலை... மேகத்துக்குள் தவழ்ந்து தவழ்ந்து சென்றதுபோலவே இருந்த மேகமலை... எதையும் வார்த்தைகளுக்குள் வர்ணிக்க முடியவில்லை. மயங்கத்தான் முடிகிறது. தியேட்டரில் படம் பார்க்கும்போது, காட்சி முடிந்ததும் அவசர அவசரமாக பைக் பார்க்கிங்கைத் தேடி ஓடுவோம். சில படங்களில் மட்டும் வெளியே போக மனமில்லாமல் எழுந்து நின்று கைதட்டியபடி லயித்திருப்போம்... இயற்கையின் அப்படிப்பட்ட தரமான படைப்பு - மேகமலை. 

மற்ற பாகங்கள்