Published:Updated:

''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..!'' மருத்துவர் கு.சிவராமன்

''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..!'' மருத்துவர் கு.சிவராமன்
''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..!'' மருத்துவர் கு.சிவராமன்

''ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரவசங்களுக்குள் துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது..!'' மருத்துவர் கு.சிவராமன்

''ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரவசங்களுக்குள்ளும்கூட துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டது'' என்று 'உயிர் மெய்' புத்தகம்  வெளியீட்டு விழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேசினார்.

சித்த மருத்துவர் கு.சிவராமன் எழுதிய, 'உயிர் மெய்' தொடர் கட்டுரைகள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதை, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலணி கவிக்கோ மன்றத்தில் நடந்தது. மருத்துவர் விக்ரம் குமார் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் வெளியிட முதல் பிரதியை தோல் நோய் சிகிச்சை மூத்த மருத்துவர் முருகு சுந்தரம் பெற்றுக் கொண்டார். 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் ஏ.ஆர்.சக்கரவர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ''மகப்பேறு மருத்துவர் என்ற முறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிரைச் சந்தித்து வருகிறேன். கணவன்-மனைவிக்கு மட்டுமல்ல குடும்பத்தில் அனைவருக்குமே குழந்தைப் பாக்கியம் குறித்தப் புரிதலைப் பெறுவதற்கு இந்த 'உயிர் மெய்' புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. பெரும்பாலும், பெண்களுக்கு பெண்களே எதிரியாக உள்ளனர். அது மாற வேண்டும். இந்த புத்தகம் அதற்கு உதவும்'' என்றார். 

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ''காதல், காமம். இரண்டும் புனிதமான சொத்து. ஆணும் பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் சரணடைய வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டால் வாழ்க்கை தித்திப்பாகும். அதற்கு இந்த நூலை வாசிக்க வேண்டும். அவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. மன அழுத்தத்துக்கான விடுதலையை இந்தப் புத்தகம் தரும். ஆண்- பெண் என்ற அளவில் இருவருக்கும் உணர்வு அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. 'பெண்ணுக்கு பெண்களே எதிரி' என்று மருத்துவர் சக்கரவர்த்தி சொன்னார். அதாவது, பெண்ணுக்குள் இருக்கும் ஆண் சிந்தனையின் வெளிப்பாடுதான் அந்தப் பிரச்னைக்கு காரணம். இப்போது, அந்த சிந்தனைகள் மாறிக் கொண்டு இருக்கிறது. உயிர் மெய் புத்தகம் அந்த பிரச்னைக்கு சரியானத் தீர்வுகளைச் சொல்கிறது'' என்றார்.


எழுத்தாளர் சு.வெங்கடேசன், ''மருத்துவத்தை மயக்கும் காதல் மொழியிலும், காதலை அறியவேண்டிய மருத்துவச்  சொல்லாடல்களுடனும் அறிமுகப்படுத்தும் நூலிது. காமம் கசிந்து உயிராய் துளிர்விடும் முதல் துளியின் ஆற்றலை, அழகை, அவசியத்தை துல்லியமாய் வரைந்துகாட்டி இருக்கிறார் மருத்துவர் கு.சிவராமன். அவருக்கு வாழ்த்துகள்'' என்று பேசினார்.


ஏற்புரை ஆற்றிய மருத்துவர் கு. சிவராமன், ''தினம் தினம் சந்திக்கும் நோயாளிகளின் உரையாடல்களின் புள்ளியில் இருந்து இந்த நூல் தொடங்கினாலும், அதில் விரித்து வரைய வரைய உருவான கோலத்தில் ஆச்சரியமளிக்கும் பல்வேறு தகவல்கள் வந்து விழுந்தது உண்மை. நிறைய கண்ணீர்த்துளிகள். சில ஆச்சரிய ஒலிகள். சில சிலிர்ப்பூட்டும் அறிவியல் ஆய்வுகள். எல்லாவற்றின் ஊடாக சங்கத்தமிழ் முதல் சினிமாத்தமிழ் வரை கொஞ்சம் கூடுதலாகவே காதல் மொழியாகவே உயிர்மெய் பேசுவது ஓர் ஆனந்த அனுபவம்தான். 
நம் மனசுக்குப் பிடித்ததைப் பாசாங்கின்றி பேசும்போதுதான், அது மற்றவர் மனசுக்கும் பிடிக்கும். எழுதப்போவது காதலும் காமமும் பற்றி. ஆணும் பெண்ணும் நடத்தும் உயிர் உரசல் பற்றி. எழுதும் தளமோ ஏராளமான குடும்பங்கள் புழங்கும் விகடன் வீட்டு முற்றம். ‘கரணம் தப்பினால் மரணம் மாதிரி. கொஞ்சம் பிசகினாலும் முகம் சுளிக்க வைத்துவிடுமே’, என எச்சரிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் எழுதியதுகூட புது அனுபவம்தான். ஒவ்வொரு வாரமும் கட்டுரையின் முதல் பிரதியை, வீட்டின் வளர்ந்த குழந்தைகள் தயக்கமின்றி படித்து நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தபோதுதான், எனக்குப் பெருமூச்சு வந்துபோகும். அதேக் கட்டுரை, இளையோருக்கும் - பிள்ளை பெற காத்திருப்போருக்கும் என நான் எழுதி நிற்க, 55 வயது பெண் வாசகி ஒருவர், தொலைபேசி குறுஞ்செய்தியாக, 'முப்பது வருசம் முன்னரே இரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டேன்; ஆனால், உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் இதில் இத்தனை கவித்துவமும் உண்மையும் இருப்பது உணராமலேயே எங்களுக்குள் அவசரமாய் நிகழ்ந்துவிட்டதே என ஆதங்கமாய் உள்ளது’ என குசும்பாய் எழுதிய வரிகள் எனக்கு மறக்க முடியாதவை.
காதலும் காமமும் சிலாகிப்பிலும் பரவசத்திலும் பரிமாறப்பட்டு புதிய உயிர் ஜனித்தக் காலம் மாறி ஊசியும் மருந்தும் வலியிலும் வேதனையிலும் பரிமாறப்பட்டு உயிர் ஜனிக்கும் சங்கடம் பெருகி வருகின்றது. இங்கு மட்டுமல்ல. அநேகமாய் வளர்ச்சி வேகத்தில் செல்லும் அனைத்து உலக நாடுகளிலும் இந்த வலி பெருகித்தான் வருகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரவசங்களுக்குள்ளும்கூட துரிதமும் வணிகமும் புகுந்துவிட்டதுதான்.  அதற்கு ஒரு முக்கியக் காரணம். “அய்யோ... அதுதான்னு நினைக்கின்றேன். இன்னும் காணோம்” என நமுட்டுச் சிரிப்புடன், வெட்கமும் பெருமிதமுமாய், காதலோடு சொல்லி, கணவனின் மார்புக்குள் புதைந்து மகிழும் தம்பதியர் சில காலமாய்ச் சற்று குறைந்து வருவதாகவே தெரிகின்றது. மருத்துவப் புள்ளிவிவரங்களும் அதனையே வேறு வேறு தரவுகளோடு விவரிக்கின்றது. 
“கண்ணுக்குள் நூறு நிலவா? என சிலாகித்துப் பாடியது மாறிப்போய், கண்ணில் எந்த கம்பெனி மஸ்காரா?” என சின்சியராய்க் கேட்கும் வணிகக்காதல் வளர்ந்து வருகின்றது. உயிர் மெய் உற்றுப்பார்த்த புள்ளி அதுதான். கூடவே நாம் மறந்துபோன உணவும் வாழ்வியலும், தமிழ் மருத்துவமும், அதில் ஏராளமாய்த் தொக்கி நிற்கும் அறிவியல் உண்மையும், நவீன அறிவியலின் நுணுக்கமானப் புரிதலும், தேர்ந்த உயர் சிகிச்சைகளும் கூடவே இவை எல்லாவற்றிலும் பிணைந்து கடக்கும் அறமற்ற வணிகமும் குறித்தும் உயிர் மெய் உரக்கப் பேசுகிறது'' என்றார்.
மருத்துவர் சங்கர், விழாவை தொகுத்து வழங்க... மருத்துவர் ராஜலெட்சுமி நன்றி கூற விழா முடிந்தது..!

அடுத்த கட்டுரைக்கு