Published:Updated:

இனியன பெருகட்டும்!

இனியன பெருகட்டும்!

இனியன பெருகட்டும்!

மக்கே தெரியாமல் நமக்குள் புதைந்துகிடந்த பல நல்ல குணங்களை அடையாளம் காட்டிவிட்டு நம்மைக் கடந்து செல்கிறது 2015. கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி நின்றாலும்... உழைத்துச் சேர்த்த பொருட்களை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றாலும்... மனம் உடைந்து உட்கார்ந்துவிடாமல், இடறிய வேகத்திலேயே சுதாரித்து எழுந்து நிற்கும் வலிமை நமக்குள் ஊறியிருப்பதைப் புலப்படுத்திய ஆண்டு இது.

பசித்த வயிறுகளுக்குப் பரிமாற சமைத்த உணவை, கொட்டும் மழையில் இடுப்பளவு தண்ணீரில் இளைஞர்கள் சுமந்து சென்றார்கள். முகம் அறியா மனிதர்கள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து பலரைக் காப்பாற்றினார்கள். ஏதேதோ ஊர்களில் இருந்தெல்லாம் வந்து குப்பைகளை அள்ளிக் கொட்டினார்கள். மனித உயிர்களின் ஆதார உணர்ச்சியான அன்பும் கருணையும், யாரும் உத்தரவிடாமல், வேண்டுகோள் விடுக்காமல் தன்னியல்பில் விழித்துக்கொண்டன. அழுத விழிகள் துடைக்க ஆயிரம் கரங்கள் நீண்டன. துடித்த உயிர்கள் மீட்க ஆயிரம் கால்கள் நடந்தன. பயன்படுத்தப் படாமல் தூசி படிந்துகிடந்த மனிதமும் மனிதாபிமானமும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டன. 2015-ம் ஆண்டில் நாம் பற்றிக்கொள்ளவேண்டிய மகத்தான படிப்பினை, இந்த மானுடம்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழர்களின் அக, புற வாழ்வைச் சீரழிக்கும் மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் உச்சம் தொட்ட ஆண்டு இது. அரசியல் அமைப்புகள், சமூக இயக்கங்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் இணைந்து நடத்திய போராட்டங்களின் வலிமையால், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்’ என அறிவிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டன.

2016-ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. யார் வெற்றி பெற்றாலும், ‘கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?’ என உலுக்கிக் கேட்கவேண்டிய கடமை நமக்கு இருப்பதை நினைவில்கொள்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகும் தகுதி படைத்தோரைத் தேர்வுசெய்யும் தேர்தல் தீர்ப்பு நாளில், இன்னும் ஆய்ந்து, சீர்தூக்கி வாக்குகளைச் செலுத்துவோம். வரப்போகும் அரசேனும் மக்கள்நேய அரசாக இருப்பதை உறுதிசெய்வோம்.

சகிப்பின்மையின் கொடும் விளைவுகளை 2015-ம் ஆண்டு அழுத்தமாக உணர்த்திச் சென்றிருக்கிறது. மாற்றுக் கருத்தை அனுமதிப்பதும், அதை வெளியிடும் உரிமை மற்றவர்களுக்கு இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதுமே இப்போதைய தேவை. கருத்து மட்டுமா... உணவு, வழிபாடு, பண்பாடு என அனைத்திலும் வேற்றுமைகளை அங்கீகரிப்பதே, கூட்டுச் சமூக வாழ்வை இணக்கமாக வாழ்வதற்கான வழி.    2016-ம் ஆண்டில்,  அத்தகைய ஒற்றுமையான சமூக வாழ்வை உத்தரவாதப்படுத்துவோம்.

‘எனக்கு, எந்தத் துன்பமும் வரக் கூடாது’ என்பது அல்ல; ‘எந்தத் துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றலும் அறிவும் வேண்டும்’ என்பதுதான் எல்லோருக்குமான பிரார்த்தனை. அப்படியான ஆற்றலை, இந்தப் புதிய ஆண்டு நமக்கு வாரி வழங்கட்டும். மனித உறவுகளைக் கொண்டாடும் தருணங்களை இந்த ஆண்டு இயற்கை நமக்குப் பரிசளிக்கட்டும்!

புதிய நம்பிக்கை பொங்கட்டும். புதிய உற்சாகம் ஊறட்டும். புதிய தேடல்கள்  தொடரட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!