Published:Updated:

"இது புதுக் குடித்தனம்!”

விகடன் டீம், படங்கள்: ஜெ.வேங்கடராஜ், அ.குரூஸ்தனம், கா.முரளி

‘‘ன் வீட்டுக்காரர் 17 வருஷத்துக்கு முன்னாடி கேரளாவுக்கு வேலைக்குப் போனார். இருக்காரா செத்தாரானுகூட தெரியல. ஒண்டுறதுக்கு இருந்த ஓலைக் குடிசையும் மழையில போயிருச்சு. அப்படியே என்னையும் வாரிட்டுப்போயிருந்தா, நிம்மதியா போய்ச் சேர்ந்திருப்பேன்’’ - அழுகையும் ஆத்திரமுமாகப் பேசுகிற கலியம்மாள் பாட்டி, கடலூரில் புகுந்த பெரு வெள்ளத் தாண்டவத்தின் ஒரு கண்ணீர் உதாரணம்.

‘‘நீங்க குடுக்குற பொருள் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு வரும். சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி வீட்டுக் கூரையை மாத்திருவேன்’’ என்கிறார் கலியம்மாள் நன்றிப் பெருக்குடன்.

 "இது புதுக் குடித்தனம்!”

கடலூர் ஒரு வடிகால் மாவட்டம். சேலம், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் தண்ணீர் கடலூர் வழியாகவே கடலில் கலக்கிறது. அதனால் சுனாமி, தானே புயல், பெருமழை என வருடம் தவறாமல் பேரிடர்கள் கடலூரைக் கலங்கடிக்கின்றன.
 
ஆனந்த விகடனும் ராகவா லாரன்ஸும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டம் மூலம், வெள்ள நிவாரணப் பொருட்களை (அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை, பாய், தட்டு... என 31 வகையான நிவாரணப் பொருட்கள்) மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சிலம்பிமங்கலம், தொட்டித்தோப்பு, அகரம், கீழ்அழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட கடலூர் மாவட்டக் கிராமங்களில் குடும்பம் ஒன்றுக்கு, ரூபாய் 4,500 மதிப்பில் 516 குடும்பங்களுக்கு சுமார் 23 லட்சம் செலவில் வழங்கினோம். உதவிபெற்ற அனைவரும் விளிம்புநிலை மக்கள்.

வில்லியநல்லூரில் நிவாரணப் பொருட்களை வாங்கிய ஒரு பெரியவர், ‘`அப்படியே சிறுகச்சிறுக இடுப்பு அளவுக்கு தண்ணி ஏறிப்போச்சுப்பா. ஊர்ல இளந்தாரிப் பசங்கதான் எங்களை மெயின் ரோட்டுல இருக்கிற கல்யாண மண்டபத்துக்குத் தூக்கிட்டு வந்தாங்க. பத்து நாள் அங்கதான் அடைஞ்சிக்கிடந்தோம். தண்ணி வத்தினதும் ஊருக்குள்ள வந்து பார்த்தா அடுத்த வேளை சோறு இல்லை; மாத்திக்க துணி இல்லை. குளுரு ஊசி போல குத்திக் கொல்லுது. அதைத் தாங்கிற மாதிரி இருக்கு நீங்க தந்த போர்வை’’ எனப் போத்திப்பார்த்து சந்தோஷப்படுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 "இது புதுக் குடித்தனம்!”
 "இது புதுக் குடித்தனம்!”

சிலம்பிமங்கலம்... இங்கு 25 குடும்பங்கள். கர்ப்பிணிப் பெண் சாந்தா, ``வெச்ச நாத்து வருஷா வருஷம் வெள்ளத்துல கருகினா... என்னத்துக்குண்ணே ஆவும் விவசாயம்? இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயமும் இருக்காது; விவசாயிங்களும் இருக்க மாட்டோம். இப்போ வரைக்கும் நிவாரணப் பொருட்களை ஊருக்குப் பொதுவா வெச்சு, பொங்கிச் சாப்பிடறோம். புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிற மாதிரி, நீங்கதான் நிறையப் பொருட்கள் தந்திருக்கீங்க. உண்மையிலேயே எங்களுக்கு இது புதுக் குடித்தனம்’’ - அழுதபடியே பேசுகிறார்.

ஒவ்வோர் ஊரிலும் நாம் லாரிகளில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்கி வைக்கும்போது, மக்கள் முகத்தில் படரும்  மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. “அம்மா வீட்டு சீதனம்போல அள்ளிக் கொடுத்திருக்கீங்க. லாரன்ஸ் தம்பியும் நீங்களும் நல்லா இருக்கணும்’’ என்பது அவர்களின் உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்.

 "இது புதுக் குடித்தனம்!”

கடலூரில் நிவாரணப் பொருட்களைச் சேர்த்த மகிழ்ச்சியை லாரன்ஸுடன் பகிர்ந்துகொண்டோம். ‘‘ஒரே விஷயம்தான் சார்... விவசாயி இல்லைனா நாம் இல்லை. அவங்க கஷ்டப்பட்டு உருவாக்குறதை நாம இஷ்டப்பட்டுச் சாப்பிடறோம். ஆனா, அவங்களுக்குக் கஷ்டம்தான் மிச்சம். அதை வருஷா வருஷம் கடலூர் விவசாயிங்க அனுபவிக்கிறாங்க. அவங்களுக்கு இன்னும் நிறைய, நிறைவா செய்வோம்’’ என நெகிழ்ந்தார் ராகவா லாரன்ஸ்.
 
பயணம் தொடரும்!

நிவாரணப் பொருட்கள் (ஒரு குடும்பத்துக்கு) : 

 "இது புதுக் குடித்தனம்!”

அரிசி-25 கிலோ மூட்டை, கோதுமை மாவு-5 கிலோ, ரவை-2 கிலோ, புளி-1/2 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ, உளுந்தம் பருப்பு-1/2 கிலோ, கடலைப் பருப்பு-1/2 கிலோ, எண்ணெய்-1 லிட்டர், சர்க்கரை-1 கிலோ, கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மி.தூள்-300 கிராம், டீத்தூள்-250 கிராம், காபி தூள்-200 கிராம், டெட்டால்-1 பாட்டில், குளியல் சோப்-4, துவைக்கும் சோப்-4, டூத் பிரஷ்-4, பேஸ்ட்-2, மெழுகுவத்தி-3, கொசுவத்தி-1 பாக்கெட், விக்ஸ் தைலம்-1, ஹார்லிக்ஸ் சேஷே பாக்கெட்-1, பிஸ்கட்-1 பாக்கெட், சைபால் -1, போர்வை-2, துண்டு-2, பாய்-2, தட்டு-4, டம்ளர்-4, டார்ச்லைட் - 1.

`அறம் செய விரும்பு' திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.