Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

சரிகமபதநி டைரி 2015

ண்பர் ஆதவனுக்கு, கர்னாடக இசை மீது அலாதி ஆர்வம்போல! தன்னுடைய சகா வருணனை தூத்துக்குடி பக்கம் ஆகாய மார்க்கமாக அனுப்பிவைத்துவிட்டு, கடந்த மூன்று வாரங்களாக இங்கே சென்னையில் சீஸன் டிக்கெட் வாங்காமலேயே சங்கீத மழையில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருக்கிறார்!
தமிழ் இசைச் சங்கத்தில்...

73-ம் ஆண்டு தமிழ் இசை விழாவை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடங்கி வைத்தார் கவிஞர் வைரமுத்து. தனது உரையில், தமிழ் இசைக்காக மீட்டெடுப்புப் போராட்டம் நடத்தி, வெற்றிவாகை சூடிய ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரை, கம்பீரமான தமிழில் வானுயரப் பாராட்டி னார். கூடவே, தனது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்' புனைவில் உடுக்கையை மையப் படுத்தி முழு அத்தியாயம் எழுதியதையும், ‘சிந்து பைரவி' படத்தில் தனது பாடலில் தமிழுக்காக வாதாடியதையும் இன்றைய நல்லுலகம் அறியச்செய்தார்.

இங்கே, தவில் மன்னர் ஹரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு ‘இசைப் பேரறிஞர்' பட்டமும், அகவை 80 கண்ட ஓதுவார் வேதாரண்யம் சு.முத்துக்குமாரசாமி தேசிகருக்கு ‘பண் இசைப் பேரறிஞர்' பட்டமும் வழங்கப்பட்டன.

ஏற்புரையில், தாளக்கட்டுகளையும் ஜதிகளையும் வைத்தே ஏ.கே.பி பேசியது ரொம்ப டெக்னிக்கல். தொடர்ந்து விழா மேடையிலேயே தமது நாகஸ்வரக் குழுவுடன் உட்கார்ந்து, கோயில்களில் கம்பீரநாட்டையில் மல்லாரி இசைப்பதையும், திருமணங்களில் நலங்கு, ஊஞ்சல், முகூர்த்தம் சமயங்களில் நாகஸ்வரம் - தவிலின் பங்களிப்பையும் பழனிவேல் வாசித்து கெட்டிமேளத்துடன் முடித்தபோது, கல்யாண வீடு மாதிரி பைன்ஆப்பிள் பழரசக் குவளைகள் அடங்கிய தட்டை யாராவது ஏந்தி வருவார்களா என கண்கள் தேடின!

சரிகமபதநி டைரி 2015

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில்...

மரபு மீறி, தனி ஆவர்த்தனத்தில் இருந்து ஆரம்பித்து கச்சேரி நிகழ்வுகளை ரிவர்ஸில் எழுதினால் என்ன?

மிருதங்க மேதை திருச்சி சங்கரன் முகம்தான் பார்க்கும் கண்களுக்கு சிடுசிடு கடுகடுவென இருக்கும். ஆனால், இவருடைய வாசிப்பு காதுகளைக் கொஞ்சித் தவழும். 17 நிமிடங்களுக்கு சங்கரன் வாசித்த ‘தனி'யில் சொற்கள் அடர்த்தியாக வந்துவிழுவது கொள்ளை அழகு (உப பக்கவாத்தியமாக எஸ்.வி.ரமணி - கடம்)! மிருதுவாக வாசிக்கும்போது மட்டும் அல்லாமல், அடித்து வாசிக்கும் போதும் சத்தம் காது ஜவ்வுகளைக் கிழிப்பது இல்லை. அனுபவம் பேசுகிறது இவரது கைவிரல்களில். பாட்டுக்கு வாசிக்கும்போதும் பாடகரை இம்சிப்பது இல்லை. அனுசரணையின் உச்சம். பல்லாண்டு வாழ்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வயலின், எஸ்.வரதராஜன். தேனின் இனிமையையும் ஏர்கண்டிஷனின் குளுமையையும் வரதுவின் வாசிப்பில் அனுபவித்து மகிழ முடிகிறது. அமீர்கல்யாணி மற்றும் ஸாவேரி ராக ஆலாபனைகளில் ராம பாணத்தின் சூரத்தனத்துக்கு ஒப்பானதாக இருந்தது வரதராஜனின் வில்!

மேற்சொன்ன மூவரையும் துணைகொண்டு பாடினார்கள் மல்லாடி சகோதரர்கள்.

சரிகமபதநி டைரி 2015

சலநாட ராகத்தில் திருவையாறு பஞ்சநதிஸ்வரர் மீது தீட்சிதர் பாடியுள்ள ‘பரமேஸ்வர ஜகதீஸ்வர...' பாடலுடன் ஆரம்பித்தார்கள். திருவையாறு வரை போய்விட்டு தியாகராஜரை மறந்துவிடலாகுமா? ‘பட்டிமாட்டைப் போல் தின்று திரிந்தேன்; வயிற்றுக்காக பரலோபிகளைப் புகழ்ந்தேன். துஷ்டர்களுடன் கூடித் தீயச்செயல்களைப் புரிந்து அவதூறுகளுக்கு ஆளானேன்; என்னை எப்படி நீ காப்பாற்றுவாயோ?' என, தியாகராஜர் நம் சார்பாகக் கதறும் (எடுல ப்ரோதுவோ தெலிய - சக்ரவாகம்) பாடல்; அமீர்கல்யாணியில் ‘மாநமு லேதா'; ஸாவேரியில் ‘ராம பாண த்ராண சௌர்ய...' என மல்லாடிகள் தியாகராஜ ஒபேராவே வழங்கிவிட்டார்கள். நடுவே, ‘ஆனந்த நடேசா' என தோடியில் தமிழ்ப் பாட்டு ஒன்றும் உண்டு. நிறைவான டின்னர்!

மியூஸிக் அகாடமியில்...

சப்த ஸ்வரங்கள் மாதிரி மேடையில் ஏழு பேர். நடுநாயகமாக சித்ரவீணை ரவிகிரண். இடது பக்கத்தில் உதவிக்கு இன்னொரு சித்ரவீணை. அக்கரை சுப்புலட்சுமி (வயலின்), கே.வி.பிரசாத் (மிருதங்கம்), வியாசவிட்டலா (கஞ்சிரா), எஸ்.வி.ரமணி (கடம்). இத்துடன் தம்புரா லேடி. கூட்டினால் ஏழு வருதா?

அந்நாளில், லால்குடி ஜெயராமனை சாகித்ய வில்லுக்குச் சொந்தக்காரராக வர்ணிப்பது உண்டு. அதே மாதிரி, ரவிகிரணுக்கு சாகித்ய மீட்டுகள்! இவர் வாசிக்கும்போது பாடல் வரிகள் மிகத் தெளிவாகப் புரிகின்றன.

திருவாரூர் கமலாம்பாள் மீது தீட்சிதர் பாடியிருக்கும் `அஷ்டமா வரண கமலாம்பாள் நவாவர்ண’ கீர்த்தனைகளில் ஒன்றான ` ஸ்ரீ கமலாம்பிகே அவாவ'வை கண்ட ராகத்தில் ரவிகிரண் வாசித்தது, கச்சிதம்.

மெயின் கல்யாணி. ராகம் - தானம் - பல்லவிக்கு பைரவி. இரு ராகங்களையும் சித்ரவீணையில் ரவிகிரண் குழைத்துக் கொடுக்க, அது சந்தனமாக மணத்தது; சுகமோ சுகம்!
இன்றைய பேரிடர் சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிறையவே நிதி தேவைதான் என்றாலும், கல்யாணியில் தியாகராஜர் பாடிய ‘நிதிசால சுகமா...'வை ரவிகிரண் வாசித்தார். இட்ஸ் ஓகே. அவர் பாடிய காலகட்டம் வேறுதானே!

சரிகமபதநி டைரி 2015

மழலை மேதையாக இசையுலகில் அறிமுகமானவர் ரவிகிரண். ஆரம்பப் புகழ் வெளிச்சத்தில் மயங்கி, தலைகுப்புற விழுந்து காணாமல்போகாதவர். சித்ரவீணையுடன் இரண்டறக் கலந்து, அதன் நெளிவுசுளிவுகளில் மூழ்கித் திளைத்து, இன்று உலகம் சுற்றும் வாலிபராக ‘மெல்ஹார்மனி'கள் பல நிகழ்த்தி, சாதனை புரிந்துவருபவர். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மியூஸிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு இவர் பெயர் அடிபட்டு, விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. சீக்கிரமே அவார்டு பிராப்தி ரஸ்து!

சுப்புலட்சுமியின் வாசிப்பில் எப்போதுமே குற்றம், குறை காண இயலாது. அன்றும்!

ஊத்துக்காடு வேங்கடகவி என்றால் உயிரையே விடக்கூடியவர் ரவிகிரண். அன்னாரின் பாடல்கள் மீது அரிய பல ஆராய்ச்சி எல்லாம் செய்துவருபவர். ஆனால், அகாடமி கச்சேரியில் கவிராயரின் பாடல் ஒன்றை filler மாதிரி வாசித்து விட்டுவிட்டது ஏன்?

அதே மாதிரி கல்யாணியில் நிரவல், ஸ்வரம் முடிந்ததும், ‘தனி' விடாமல், பைரவியும் ராகமாலிகையும் முடிந்த பின்னர் தாமதமாக 8:53 மணிக்கு விட்டது ஏன்?
நாரதகான சபாவில்...

ஓ.எஸ்.தியாகராஜன் இரண்டு வருடங் களுக்கு முன்னர் எப்படி அசத்தலாகப் பாடினாரோ, அப்படியே போன வருடமும் பாடினார்; போன வருடம் பாடிய மாதிரியே இந்த வருடமும் பாடினார். அப்படியே அடுத்த வருடமும் பாடுவார் என்பது திண்ணம். நேர்மையாளர்!

ஹாலுக்குள் நுழைந்ததும் ஓ.எஸ்.டி., உருவில் தியாகராஜரைக் காண முடிந்தது. காணாமல்போன ராம விக்கிரகம் காவிரிக் கரையில் கிடைத்துவிட, தன் இஷ்ட தெய்வத்தை வீட்டுக்குள் அழைக்கும் விதமாக ‘ரா... ரா... மாயிண்டிதாக ரகு...' என அஸாவேரியில் இந்த தியாகராஜன் பாடியது அந்த தியாகராஜரை நினைவூட்டியது!

ஹாலில் கண்ணயர்ந்துவிட்ட சிலரை மலயமாருதம் பாடி எழுப்பிவிட்டு, கரகரப்ரியாவைக் கையில் எடுத்தார் தியாகராஜன். இப்படி ஓர் அட்டகாசமான கரகரப்ரியாவைக் கேட்டு நிஜமாலுமே நாளாச்சு. இந்த சூப்பர் ராகத்தை அங்குலம் அங்குலமாக வளர்த்துச் சென்று, சிற்பம் மாதிரி செதுக்கி, ரசித்து, மகிழ்ந்து, மகிழ்வித்தார். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்ட மாதிரி கரகரப்ரியா சங்கதிகள் ஆழ்வார்ப்பேட்டை, அண்ணாமலைபுரம், அடையாறு எனப் பெருக்கெடுத்து ஓடின... யாருக்கும் எந்தவித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல்!

இப்படி ஓர் ஆலாபனையைத் தொடர்ந்து, ‘சக்கநி ராஜமார்கமு...' கீர்த்தனையை ஓ.எஸ்.டி பாடியது மிகப் பொருத்தம். அழகிய, அடுக்கான சங்கதிகள் எனும் ராசவீதிகளும், புஷ்டி தரும் பால், ஏடு முதலியனவும் கொட்டிக்கிடக்கும் பாடல் இது. ஸ்ரீ வில்லிபுத்தூர் திரட்டுப்பாலாக இனித்தது!

மைசூர் வி.ஸ்ரீகாந்த், திருவாரூர் பக்தவத்சலம், திருப்பனித்துரா ராதா கிருஷ்ணன் மூவரும் வயலின், மிருதங்கம், கடத்தில் ஓ.எஸ்.டி-க்கு அசுரபலம் அளித்தார்கள்.

பாரத் கலாச்சாரில்...

கச்சேரி நிறைவுபெறும் சமயம் எம்.எஸ் பிரபலப்படுத்திய ‘குறையொன்றும் இல்லை...' பாடினார் அருணா சாய்ராம். இவருக்கு மிருதங்கம் வாசித்த கே.வி.பிரசாத், அந்த நாளில் எம்.எஸ்-ஸுக்கு நிறையவே கச்சேரிகள் வாசித்திருக்கிறார். இப்போது அருணா அதே எம்.எஸ் பாட்டைப் பாட, பிரசாத்துக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்துவிட... பாவம், அடக்க முடியாமல் அழுதுவிட்டார். மைக் எடுத்து ஏதோ சொல்ல நினைத்தார்; முடியவில்லை. தொண்டை அடைத்தது.

சரிகமபதநி டைரி 2015

அருணா சாய்ராமின் குரலுக்கு என்றே உருவாக்கப்பட்டதோ என நினைக்கக்கூடிய ராகங்களில் ஒன்று அடாணா! தியாகராஜரின் ‘ஏல நீ தயராது...' பாடலை, ‘பாலகநகமய சேல...' என்ற அனுபல்லவியில் ஆரம்பித்து, அடாணாவில் அதட்டலாக ஸ்வரங்கள் பாடிய அருணாவுக்கு முன்புபோல் கூட்டம் அலைமோதுவது இல்லையே!

காம்போதியை பளீரென உச்ச ஸ்தாயியில் தொடங்கி, சற்று நேரம் கீழே, நடுவே, மேலே என ‘ஆக்டேவ்' மாற்றி பயணம்செய்து, ‘இன்னும் கொஞ்சம் காம்போதியை இவர் பாட மாட்டாரா?' என்று விரும்பிய நேரத்தில் ஆலாபனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கோபாலகிருஷ்ண பாரதியின் ‘திருவடி சரணம்...' பாடலை எடுத்து, ‘எடுத்த ஜனனம் கணக்கெழுத தொலையாது...' வரிகளை ஜம்ஜம் என நிரவல்செய்த அருணாவுக்கு, பழைய கிரேஸ் இல்லையோ! ஆரம்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இந்த சீஸனை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. அடுத்த டிசம்பர் வரை காத்திருப்போம்!

- டைரி புரளும்...