Published:Updated:

“ஹெலிகாப்டரிலும் வாட்ஸப்பிலும் ஆட்சி நடத்த முடியாது!”

சரவெடி சந்துருநா.சிபிச்சக்கரவர்த்தி, ஆ.விஜயானந்த் , படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: ஹாசிப்கான்

ழை வெள்ளம், நிர்பயா வழக்கு, சிம்பு சர்ச்சை என எதைப் பற்றி கேட்டாலும் பளிச் பதில் சொல்கிறார் நீதிபதி சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். மழை வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் நிவாரணப் பணி, இலவச சட்ட ஆலோசனை, மாணவர்களுக்கு சட்ட வகுப்பு என பரபரப்பில் இருந்தவரை ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம்.

‘‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டீர்கள். பாதிப்பு உங்களுக்கு உணர்த்தியது என்ன?’’

“பருவமழை என்பது வருடம்தோறும் வரக்கூடியதுதான். இயற்கைச் சீற்றங்களும் பாதிப்புகளும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம் முழுவதிலும், மழைக்கு முன்பே முன்னேற்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். ஆனால் நமக்கு, ‘செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கலாம்’ என முடிவெடுக்கவே மூன்று நாட்கள் ஆகிவிட்டன. பொறியாளர்கள், தலைமையின் உத்தரவுக்காகக் காத்துக்கிடந்தார்கள். சுருளி அணையில் தண்ணீர் திறந்துவிடவும் அம்மாவின் ஆணைக்காகக் காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் அவர் ஒருவரே செய்ய வேண்டும் என்றால், பிறகு எதற்கு அமைச்சரவை, எதற்கு இத்தனை அதிகாரிகள், எதற்கு இந்த அரசு? இது இயற்கைப் பேரிடர் அல்ல... மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பேரிடர்.”

`` `துன்பத்தில் இருந்து மக்களை எல்லாம் மீட்பேன்’ என முதலமைச்சர் சொல்கிறாரே?’’

“ஹெலிகாப்டரில் பறந்துகொண்டும் வாட்ஸ்அப்பில் பேசியும் ஆட்சி நடத்திவிடலாம் என முதலமைச்சர் நினைக்கிறார். மழை வெள்ளத்தில் அரசின் செயல்பாடுகளைப் பார்த்தபோது, உண்மையிலேயே `மக்களைப் புரிந்துகொண்டு ஆட்சி நடத்தும் ஓர் அரசாங்கம் இங்கு இருக்கிறதா?’ என்ற கேள்விதான் எழுந்தது. பஞ்சாங்கத்தில் இருந்து தாய்லாந்து வானிலை மையம் வரை பலரும் அபாயச் சங்கை ஒலித்தார்கள். அனைத்தையும் முதலமைச்சர் உதாசீனப்படுத்திவிட்டார்.

 “ஹெலிகாப்டரிலும் வாட்ஸப்பிலும் ஆட்சி நடத்த முடியாது!”

அமைச்சரவை என்பதே கூட்டுப் பொறுப்புதான். ஆனால் இங்கு, கூட்டு அடிமைகள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல் இழந்தது. மாநகரத்தின் தந்தை எங்கே போனார், அமைச்சர்கள் எங்கே, எம்.எல்.ஏ-க்கள் எங்கே, வார்டு கவுன்சிலர்கள் எங்கே... எவரையும் காணவில்லை. நாம் எப்போதும் திட்டித் தீர்க்கக்கூடிய இளைஞர்கள்தான், களத்தில் சுழன்று வேலைபார்த்தார்கள். ஏழை, பணக்காரன், சாதி, மதம்... என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அனைவரையும் சமப்படுத்தும் வேலையை மழை செய்தது. இதில், அரசாங்கத்தைப் பெருமைப்படுத்த ஒரு துளி சாதனையும் இல்லை.”

‘‘நிர்பயா வழக்கு, சல்மான் கான் வழக்கு போன்றவற்றில் எளியவர்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது என்று பரவலாக எழும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ஒருவன் உங்களை கட்டையால் அடிக்க வந்தால், நீங்கள் தற்காப்புக்காக கத்தியை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் குற்றவாளி. வைத்திருக்கும் ஆயுதத்தைப் பொறுத்துத்தான் குற்றம் தீர்மானிக்கப்படுகிறது. நிர்பயா வழக்கில் அந்தச் சிறுவன், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகாலம் அடைக்கப்பட்டிருந் தான். அதைக்கூட தண்டனை என்றோ, அவரைக்கூட குற்றவாளி என்றோ சொல்லக் கூடாது. சட்டத்தின் முன்னர், அவர் `முரண் பட்ட இளம்சிறார்’. 1988-ம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறார் குற்ற வயது வரம்பை, 2000-ம் ஆண்டில் 18 வயதாக மாற்றினார்கள். காரணம், பன்னாட்டுத் தீர்மானங்கள், ஐ.நா தீர்மானம், பெய்ஜிங் தீர்மானம் போன்றவை. இப்போது, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க இரண்டும் சேர்ந்து, ஒன்றரை நிமிட இடைவெளியில் சிறார் குற்ற மசோதாவை தாக்கல்செய்துள்ளனர். `கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும், வயதுவந்தவர் களைப் போன்று கடும் தண்டனை வழங்கப் படும்’ என இந்த மசோதா சொல்கிறது. மிக முக்கியமான இந்த மசோதாவை வெறும் ஒன்றரை நிமிடத்தில் தாக்கல் செய்து விட்டார்கள்.’’

``இதுபோன்ற சட்டங்கள் இருந்தால் குற்றம் குறையும் என்று சொல்கிறார்களே?’’

“பெருவாரியான மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு மதிப்புக் கொடுத்து, சிறார் சட்ட மசோதா தாக்கல் ஆகியுள்ளது. இதுபற்றி விரிவான விவாதம் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் உள்ள 120 கோடிப் பேரில் 40 கோடிப் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில், குற்றம் இழைத்த சிறுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களைத் தண்டிக்க ஒரு சட்டம் எதற்கு? சிறுவர் நீதிமன்றங்களின் பல தீர்ப்புகளைப் பார்த்தால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கும், சட்டப்படியான நீதி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகள் குற்றம் புரிந்தால் சீர்திருத்தம் செய்து சமூக நீரோட் டத்தில் கலக்கச் செய்ய வேண்டும்.”

``சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் விமர்சிக்கப்பட்டதே?’’

“நம் நாட்டில் பணக்காரர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பது உண்மைதான் என்பதற்கு சல்மான் கான் வழக்கு ஓர் உதாரணம். அவர் அந்த காரை ஓட்டவில்லை என்றால், வேறு யார் ஓட்டியது? இப்போது பிளாட்ஃபார்மில் படுத்திருப்பவர்கள்கூட, ‘டேய், சல்மான் கானை விடுதலை பண்ணிட்டாங்க. எழுந் திருங்கடா’ என கமென்ட் அடிக்கிறார்கள். சட்டம் சாதாரண மனிதனை நசுக்கி, வசதி படைத்தவனைத் தூக்கிப் பிடிக்கிறது. சமமற்ற ஓர் அமைப்புக்குள்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

``மக்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“2009-வது ஆண்டு காவல் துறைக்கும் வக்கீல்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அப்போது மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிடம், ‘மத்திய பாதுகாப்புப் படை இருந்தால்தான் நிலைமை சீரடையும்’ எனச் சொன்னேன். நான் சொன்னது நிறைவேற ஆறு வருடங்கள் தேவைப்பட்டி ருக்கின்றன. இன்றைக்கு ஓரளவு சிரமம் இல்லாமல் நீதிமன்றப் பணிகள் நடக்கின்றன. வழக்கு நடக்க வேண்டும் என நினைப்பவர்க ளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. வம்பு வளர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக் குத்தான் சிரமம். சோதனை செய்வதையே மானப் பிரச்னை என்றால் எப்படி?
ஏர்போர்ட்டில்கூடத்தான் சோதனை செய் கிறார்கள்? அதை, குறை சொல்ல முடியுமா?’’

``தமிழக அரசு, ஏராளமான அவதூறு வழக்குகளைப் போடுகிறது. இது ஆரோக்கியமான போக்கா?’’

“அவதூறு வழக்குகள் போடுவதில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். அவதூறு வழக்கை, மிரட்டு வதற்கான ஆயுதமாக மாற்றிவிட்டார்கள். கடந்த 40 வருடங்களாக கருத்துரிமைப் பிரச்னையில் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, தம்மை எதிர்ப்பவர்களை எப்படி நசுக்கலாம் என திட்டமிட்டுச் செயல் படுவதுதான்.’’
``சிம்பு, அனிருத் பாடிய பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே?’’

“சில தனி மனிதர்கள் இப்படிச் செய்வதைத் தடுக்க முடியாது. சினிமாவுக்கு சென்சார் போர்டு உள்ளது. இணையதளங்களுக்கு அப்படிக் கிடையாது. ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைக்குள்ளும் ஆபாசம் வருகிறது. செல்போன், கணினியில் எவ்வளவோ ஆபாசம் வருகின்றன. என்ன செய்ய முடியும்? சிம்பு - அனிருத் ஆகிய இருவரைத் தண்டிப் பதற்கும் சட்டம் இருக்கிறது. அதற்கு இவ்வளவு பில்டப் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. சிம்புவைத் திட்டும்போது அதைவிட ஆபாச மாகத் திட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தைச் சிதறவைக்கும் வேலைதான் இது.’’

``நீங்கள் நீதிபதியாக இருந்தபோது மதுரை, கிரானைட் கொள்ளை வழக்கில் பல தீர்ப்புகளை அளித்தீர்கள். இப்போது சகாயம் விசாரணை அறிக்கை முடிவு என்னவாகும்?’’
“கிரானைட் முதலாளிகள் மிக வலுவானவர்கள். அவர்கள்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதுவரை கிரானைட் முதலாளிகள் தோற்றதாக சரித்திரமே இல்லை. கிரானைட் கொள்ளையர் களுக்கு எதிராக நானே ஐந்து வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். ஆனால், அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. `முறைகேடு நடந்துள்ளது’ என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கு எதிராக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாருமே பேச மாட்டார்கள்”

``சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அடுத்து வரும் தமிழ்நாடு அரசியல் தேர்தல் களத்தைத் தீர்மானிக்குமா?’’

“இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. இந்த வழக்கு தினசரி எடுத்து நடத்தப்படுமா... இல்லையா என்பதை ஜனவரியில் சொல்லப்போகிறார்கள். வழக்கை முடித்துவிட்டு எப்போது தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பதை நீதிபதிதான் முடிவுசெய்ய முடியும். என் கணிப்பின்படி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் தீர்ப்பு வரும்.”

``சமீப காலமாக, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய தலைமை தேவை என்ற கோஷம் அதிகரித்திருக்கிறதே?’’

“மத்திய அரசின் பல கொள்கை களுக்கு இங்கு உள்ளவர்கள் இணங்கிப் போகிறார்கள். பிறகு என்ன தேசியம், திராவிடம்? அரசியலில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாதவர்கள்கூட அதிகாரிகளை வைத்து சுலபமாக ஆட்சிசெய்துவிட்டுப் போய் விடலாம். ஆளப்பிறந்தவர் என யாரும் கிடையாது. ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஆலோசகர் பதவியில் அமர்த்த வேண்டும் என எந்தச் சட்டம் சொல் கிறது? இத்தனை அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்தும் ஓய்வுபெற்றவர்களை ஏன் நியமிக்கி றார்கள்? மக்களுக்கு, தேர்தல் பற்றிய ஆர்வம் எல்லாம் இல்லை. சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள் தான் மாற்று என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். மக்களைப் பொறுத்தவரை தேர்தல் என்பது மற்றும் ஒரு கொண்டாட்டமான பொழுதுபோக்கு... அவ்வளவுதான்.”

``அப்படியானால், மக்கள் நலக் கூட்டணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அது சரியான கூட்டணியே அல்ல. எக்கச்சக்க முரண்பாடுகள். இலங்கை பிரச்னையில் வைகோ முன்நின்று போராடி னால், சி.பி.எம் ராமகிருஷ்ணன் பின்னால் வர மாட்டார். இதுபோல் பல பிரச்னைகளில் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கிராமங்களில் உழவு மாடுகளை ஜோடி சேர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்தே முயற்சி செய்வார்கள். ஒரு மாடு முரண்டு பிடித்தாலும் உழவுசெய்ய முடியாது. மக்கள் நலக் கூட்டணி உழவு மாடு போலத்தான்.”

`` `சகாயம் - 2016’ என்ற கோஷத்தை சிலர் முன்வைக்கிறார்களே?’’

“நல்லவனையும் தாண்டி இந்த நாட்டைச் சீர்படுத்தும் அளவுக்குத் திறமை உள்ளவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அந்தத் திறமை சகாயத்திடம் உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். `நேர்மையான அதிகாரி ஆட்சிக்கு வர வேண்டும்’ என்கிறார்கள். இங்கு ஏற்கெனவே அதிகாரிகள் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. `இவருக்கு மாற்றாக இவர் வர வேண்டும்’ எனச் சொல்வதே தவறுதான். தசாவதாரம் உள்பட பல அவதாரங்களைப் பார்த்துவிட்டோம். புது அவதாரத்தைத் தேடுகிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை.”

``அரசியல் கட்சிகளில் சேருவதற்கு உங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லையா?’’

“ஹா... ஹா... அரசியலுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம். நான் ஏற்கெனவே ஒரு கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தேன் (சி.பி.எம்). ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அழைத்தார்கள். அவர்களுக்கு நமது மாநிலத்தின் பல பிரச்னைகளில் எந்தக் கருத்தும் இல்லை. முல்லைப்பெரியாறு உள்பட பல பிரச்னைகளில் நம்மோடு முரண்டுபட்டு நிற்கிறார்கள். இது எனக்கு சரிவராது என மறுத்துவிட்டேன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 “ஹெலிகாப்டரிலும் வாட்ஸப்பிலும் ஆட்சி நடத்த முடியாது!”

‘‘சமீபத்தில் விரும்பிப் படித்த புத்தகம்?’’

‘‘சகோதரி நிவேதிதாவின் வாழ்க்கை வரலாறு (ஆங்கிலம்).’’

‘‘உங்கள் புத்தக அலமாரியில் எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன?’’

‘‘நன்கொடை அளித்த பின்னர் மீதி இருப்பது 2,000.’’

‘‘பொழுதுபோக்கு?’’

‘‘ஊர் சுற்றுதல்.’’

‘‘பிடித்த அரசியல்வாதி?’’

‘‘யாரும் உயிருடன் இல்லை.’’

‘‘கடவுளிடம் கேட்கும் வரம்?”

‘‘எங்கே இருக்கீங்க?’’

‘‘உங்களுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்?’’

‘‘என் மகள் சக்தி.’’

‘‘உங்கள் ரோல்மாடல்?’’

‘‘நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.’’

‘‘பிடிக்காதது?’’

‘‘புறம் பேசுவது.’’

‘‘இந்தியாவில் பிடிக்காத விஷயம்?’’

‘‘தன்னம்பிக்கையின்மை.’’

‘‘ஜெயலலிதாவிடம் கேட்க விரும்புவது?’’

‘‘ஏமாத்திபுட்டீங்களே!’’

‘‘அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு?’’

‘‘ `நிற்பதுவே நடப்பதுவே...’ (பாரதி).”