இந்திய வானம் - 20

தீராத சந்தோஷம்!

ர்நாடகாவின் பந்திப்பூர் வனவிடுதியில், சில ஆண்டு களுக்கு முன்னர் மூன்று நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவார காலம் தங்கியிருந்தோம். பத்திரிகை, டி.வி., போன் என எதுவும் இல்லாத உலகம். காட்டுக்குள்ளாக நடந்து சுற்றிக்கொண்டு அலைந்தோம். திடீரென ஒருநாள் மதியம், சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. யோசிக்க யோசிக்க உடனே சினிமா பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. நண்பர்களிடம், ‘படத்துக்குப் போகலாமா?’ எனக் கேட்டேன்

‘காலையில் இருந்தே எனக்கு சினிமா பார்க்கணும்னு தோணிக்கிட்டு இருக்கு. போவமா?’ என்றான் நண்பன்.

‘பக்கத்துல தியேட்டர் எங்கே இருக்குனு தெரியலை’ என்றான் இன்னொரு நண்பன்.

ஏன் திடீரென மூவருக்கும் உடனே சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது எனப் புரியவே இல்லை. விடுதிப் பணியாளரிடம், ‘அருகில் சினிமா தியேட்டர் எங்கே இருக்கிறது?’ எனக் கேட்டதற்கு, ‘டூரிங் தியேட்டர்கூட பக்கத்துல கிடையாது. நீங்க மைசூர் போனா,  சினிமா பார்க்கலாம்’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய வானம் - 20

சினிமா பார்ப்பதற்காக 80 கிலோமீட்டர் பயணம்செய்து போவதா என ஒருவரும் ஆட்சேபிக்கவில்லை. உடனே மைசூர் போய் வரலாம் என ஒப்புக்கொண்டார்கள். என்ன படம் பார்க்கப்போகிறோம், எந்த தியேட்டர்... எதுவுமே தெரியாது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு, திடீரென உடனே சிகரெட் பிடித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் எழும்; குடிப்பவர்களுக்கும் அப்படியே. அதுபோலத்தான் சினிமாவும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நாங்கள் மூவரும் தயாராகியிருந்தோம். விடுதிப் பணியாளரும் எங்களுடன் சினிமா பார்க்க வருவதாகச் சொன்னார். நால்வரும் காரில் கிளம்பியபோது மணி மாலை 4:30.

6 மணிக்கு மாலைக் காட்சி தொடங்கக்கூடும். அதற்குள் மைசூருக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என, காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் நண்பன். ஆனால், காட்டின் சீரற்ற பாதையில் காரில் வேகமாகச் செல்ல முடியவில்லை. சினிமாவுக்குப் போகிறோம் என்பது உற்சாகமாக இருந்தது. தியேட்டருக்குப் போய் சினிமா பார்ப்பது எத்தனை எளிதான செயல். ஆனால், இப்போது அது பெரிய சாகசம் ஆகிவிட்டது. எங்களுடன் வந்த விடுதிப் பணியாளர் தனது திருமணத்தின்போது மனைவியுடன் சினிமா பார்த்ததைக் கூறியதோடு, ‘கடந்த பத்து வருடத்தில் ஒன்றிரண்டு சினிமாதான் பார்த்திருக்கிறேன்’ என்றார். ‘அப்புறம் ஏன் எங்கக்கூட சினிமா பார்க்கக் கிளம்பினீங்க?’ என நண்பன் கேட்டதற்கு, ‘திடீரென சினிமா பார்க்கணும்னு ஆசை வந்துருச்சு’ என வெட்கப்பட்டார்.

‘மைசூரில் சினிமா தியேட்டர்கள் எந்தப் பகுதியில் உள்ளன... எது நல்ல தியேட்டர்?’ என நண்பன் கேட்டதற்கு, `எனக்கு எதுவும் தெரியாது. அங்கே போய் கேட்டுக் கொள்ளலாம்’ என்றார் விடுதிப் பணியாளர்.

‘கன்னடப் படம் அல்லது இந்திப் படம்தான் ஓடும்’ என நண்பன் சொன்னான். ‘கன்னடப் படத்துக்கே போவோம்’ என நான் சொன்னேன். நாங்கள் வழி முழுவதும் சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டே வந்தோம்.

னது பள்ளி நாட்களில் தீபாவளி, பொங்கல் தினத்தில் முதல் காட்சி பார்ப்பதற்காக இப்படி ஆவேசமாக வீட்டில் இருந்து கிளம்பிப் போயிருக்கிறேன். தீபாவளி அன்று புதுப் படத்துக்கு டிக்கெட் கிடைத்து படம் பார்ப்பது எளிது அல்ல. காலை 9 மணிக்கு முதல் காட்சி என்பதால், 6 மணிக்கு எல்லாம் டிக்கெட் கவுன்டர் முன்பாகப் பெருந்திரள் கூடிவிடும். அடிதடி, தள்ளுமுள்ளு செய்து கவுன்டர் உள்ளே சென்றால், அது மிக நீண்ட வளைவாகப் போய்க்கொண்டே இருக்கும். பாதி வரிசை நகர்வதற்குள் டிக்கெட் முடிந்துவிடும். அப்படியே அதே டிக்கெட் கவுன்டருக்குள் அடுத்த ஷோவுக்காக நின்றுகொண்டிருக்க வேண்டும். நெரிசலில் மூச்சுமுட்டும்; வியர்த்து வழியும். புது உடைகள் என்பதால், அது வேறு நசநசப்பை ஏற்படுத்தும். தியேட்டருக்குள் ஓடும் படத்தில் சில வசனங்கள், பாடல்கள் கேட்க முடிவதே ஒரே ஆறுதல்.
 
அடுத்த ஷோ மதியம் 12 மணிக்கு. அரை மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட் கவுன்டரைத் திறப்பார்கள். முண்டியத்து டிக்கெட் வாங்கி உள்ளே போவதற்குள், வியர்த்து சட்டை நனைந்துவிடும். பெஞ்ச் டிக்கெட்டில் இடம்பிடித்து உட்காருவதற்குள் படம் போட்டுவிடுவார்கள். ஆரவாரமும் ஆர்ப்பரிப்புமாக தியேட்டரில் சினிமா பார்ப்பது மறக்க முடியாத அனுபவம். ஒரு படம் பார்த்து முடித்துவிட்டு அடுத்த படம் பார்க்க இன்னொரு தியேட்டரை நோக்கி ஓடவேண்டும். அங்கே படம் தொடங்கி யிருக்கும். எப்படியும் இரண்டு, மூன்று படங்களைப் பார்த்து முடித்தால்தான் தீபாவளி கொண்டாடிய சந்தோஷம் இருக்கும்.

இந்திய வானம் - 20

கல்லூரி நாட்களில் புதுப்படம் ரிலீஸ் ஆகும்போது முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்து, முதல் காட்சிக்கு நண்பர்கள் ஒன்றாகப் போய் வருவது இனிமையான அனுபவம். தியேட்டர் கேன்டீனில் விற்கப்படும் கோன் ஐஸ், முட்டைபோண்டாவுக்காகவே சினிமா பார்க்க வருபவர்கள் இருந்தார்கள். என் கல்லூரி நாட்களில் அநேகமாக எல்லா இரவிலும் தவறாமல் இரவுக் காட்சி சினிமா பார்த்திருக்கிறேன். பார்த்த படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம் என்ற சலிப்பு உருவானதே இல்லை. இரவுக் காட்சிக்குப் பிறகு ஆளற்ற வீதியில் நடந்தபடியே தேநீர் குடிப்பதற்காக அலைவது இன்னோர் அனுபவம். என்னைப் போன்ற இரவுவாசி களுக்காகவே நிச்சயம் ஒரு தேநீர் கடை திறந்திருக்கும். சூடான தேநீரை கையில் வைத்துக்கொண்டு உறங்கும் நகரத்தை, வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். சினிமா, நம் அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதது; அன்றாட உணவைப் போல மாறியிருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில், சிறுநகரங்களில், கிராமப்புறங்களில் சினிமா பார்த்திருக்கிறேன். இன்று வரை சினிமா பார்க்கும் ஈர்ப்பு குறையவில்லை. எனக்கு டைட்டில் தொடங்கி, கடைசிக் காட்சி வரை பார்க்க வேண்டும். அதனால், ‘படம் தொடங்கு வதற்குள் மைசூர் போய் ஆக வேண்டும்’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். காட்டை விட்டு வெளியேறி, பிரதான சாலையைத் தொடும்போது கார் டயர் வெடித்து நின்று போனது. ஸ்டெப்னியில் போதுமான காற்று இல்லை. ‘டயரைக் கழற்றி எடுத்துக்கொண்டு போய், சரிசெய்து வர வேண்டும்’ என்றான் நண்பன். எரிச்சலாக வந்தது.

‘பேசாமல் அவனைத் தனியே விட்டுவிட்டு நாம் பஸ் பிடித்து சினிமாவுக்குப் போய் வந்துவிடலாம்’ என்றான் நண்பன்.

‘இல்லை... தாமதம் ஆகும் என்றால் இரவுக் காட்சி பார்க்கலாம்’ என்றேன்.

அதுவும் நல்ல யோசனைதான் என்றபடியே, டயரை எடுத்துக்கொண்டு லாரி ஒன்றில் லிஃப்ட் கேட்டுக் கிளம்பிப்போனார்கள். காரின் மீது சாய்ந்துகொண்டு நான் பார்த்த படங்களைப் பற்றி நினைத்துக்கொண்டி ருந்தேன்.

துரை ரீகல் தியேட்டரில் ஆங்கிலப் படங்களைத் தொடர்ச்சி யாகத் திரையிடுவார்கள். அங்கே புரூஸ்லீயின் ‘என்டர் தி டிராகன்’ படம் தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்புடன் ஓடியது. ‘ஷோலே’, ‘ஆராதனா’, ‘பாபி’, ‘யாதோங்கி பாரத்’ என பல முக்கியமான இந்திப் படங் களை மொழி புரியாமலே மக்கள் கொண்டாடினார்கள். ‘சங்கராபரணம்’ வெள்ளி விழா கொண்டாடியது. ஒருமுறை, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜப்பானியப் படம் ஒன்றை ரீகல் தியேட்டரில் பார்த் தேன். அதுதான் நான் பார்த்த முதல் ஜப்பானியப் படம். கொட்டும் பனியும் வயதான பெண் ஒருத்தியைத் தூக்கிக்கொண்டு மலையேறும் மகனும் நினைவில் அழியாதப் படிமங்களாக இருந்தார்கள். அந்தப் படம் `பேலட் ஆஃப் நாராயாமா’ என்ற புகழ்பெற்ற ஜப்பானியப் படம் என்பதை பின்னாளில் அறிந்தேன்.

சென்னைக்கு வந்தபோது சர்வதேசத் திரைப்படங்களைக் காண்பதற்காக திரைப்பட சங்கங்களில் உறுப்பினர் ஆனேன். தவிர, மாக்ஸ்முல்லர் பவன், அமெரிக்கன் எம்பசி, அலியான்சே பிரான்ஸ் போன்ற இடங்களில் காட்டப்படும் பிறமொழிப் படங்களையும் தேடித் தேடிப் பார்த்தேன். அப்போதுதான் உலகத் திரைப்பட விழாக்களுக்காக டெல்லி போவது தொடங்கியது. உலகின் மிகப் பெரிய ஐமேக்ஸ் அரங்குகளில் படம் பார்த்திருக்கிறேன். இன்னோர் உலகுக்குள் நாம் பிரவேசித்துத் திரும்புவதுபோல சிலிர்ப்பூட்டும் அனுபவம் அது.

கார் டயரைச் சரிசெய்துகொண்டு திரும்பிவந்தபோது 6:30 மணி. நாங்கள் மைசூரை அடைந்தபோது, இரவு 8 மணி. ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு எந்தப் படத்துக்குப் போகலாம் என விசாரித்து, தியேட்டரைத் தேடிச் சென்றோம். ‘10:30 மணிக்குதான் இரவுக் காட்சி’ என்றார்கள். பழைய காலத் திரையரங்கு. அதன் முன்னர் காரை நிறுத்திவிட்டு, நடந்து தேநீர் குடிக்கப் போனோம். ஒரு கன்னடப் படம் பார்க்க எதற்காக இத்தனை சிரமங்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம்? ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.

இரவுக் காட்சிக்குக் கூட்டமே இல்லை. லக்ஸ் சோப் விளம்பரம்  ஓடியது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு லக்ஸ் சோப் விளம்பரம் பார்க்கிறேன். திடீரென பதின்ம வயதுக்குத் திரும்பிப் போய்விட்டதுபோல் இருந்தது. படம் முடிந்து வந்தபோது மூவரும் களைத்து, சோர்ந்துபோய் இருந்தோம்.

இந்திய வானம் - 20

எங்களுடன் வந்த விடுதிப் பணியாளர் படம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் வெளியே போனவர், படம் முடியும் வரை தியேட்டரின் வெளிவாசலில் உட்கார்ந்தே இருந்தார். அவரிடம், ‘படம் பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டேன்.

‘இல்லை சார், வொய்ஃப், பிள்ளைகள் ஞாபகம் வந்துருச்சு. நாங்க எல்லாரும் சேர்ந்து சினிமா பார்த்து எத்தனையோ வருஷம் ஆச்சு. ஊர்ல அவங்க என்ன கஷ்டப்படுறாங்களோ, நான் ஊருக்கே போறது இல்லை சார். அந்த கெஸ்ட்ஹவுஸ்லயே கிடக்கேன். சினிமா பார்க்க ஆரம்பிச்சதும் ஊருக்குப் போகணும்னு தோணுச்சு. ரெண்டு நாள் நான் போயிட்டு வந்துர்றேன் சார். கொஞ்சம் பணம் வேணும்’ என்றார். அவருக்கு 500 ரூபாய் கொடுத்தோம். ‘எந்த ஊர்?’ எனக் கேட்டதற்கு, ‘ஹசன் பக்கம் சார். லாரி பிடிச்சுப் போயிருவேன்’ என, அவர் இருட்டில் நடந்துபோனார்.
‘இரவில் மறுபடியும் காரை ஓட்டிக்கொண்டு பந்திபூர் போவது கஷ்டம்’ என்றான் நண்பன். ‘இங்கேயே காரை நிறுத்திவிட்டு காருக்குள் படுத்துவிடலாம்’ என்றான் இன்னொரு நண்பன்.

வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு தியேட்டர் வாசலில் நிறுத்தியிருந்த காருக்குள் மூவரும் படுத்து உறங்கினோம். காலை வெயில் வந்தபோதுதான் உறக்கம் கலைந்தது. ஒரு சினிமா பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வந்து, இப்படி தியேட்டர் முன்பாக உறங்கி எழுவது எங்களுக்கே வேடிக்கையாக இருந்தது. மறுபடியும் காரை பந்திப்பூர் நோக்கி ஓட்டிக்கொண்டு திரும்பியபோது, நண்பன் கன்னடப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான். நேற்று பார்த்த படத்தில் வந்த பாடல் அது.

‘என்னடா பாட்டு இது?’ எனக் கேட்டேன்.

‘யாருக்குத் தெரியும். படம் ஒண்ணும் புரியலை. ஆனா, நல்ல பாட்டு’ என்றான்.

நாங்கள் சிரித்துக்கொண்டோம். காடு எங்களை மறுபடியும் வரவேற்றது. உள்ளே நுழைந்த மறுநிமிடம் விடுதிப் பணியாளரைப் போலவே நாங்களும், குடும்பத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினோம். அறையை உடனே காலி செய்துவிட்டு, சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். பெட்டிக்கடை ஒன்றில் காரை நிறுத்தி கிடைத்த எல்லா நியூஸ்பேப்பர்களையும் நண்பன் வாங்கிக்கொண்டான். செல்போன் அடிக்கத் தொடங்கியது. உலகின் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகப்போகிற புதுப் படத்தின் விளம்பரங்கள் வந்திருந்தன.
‘ஃபிரைடே, படத்துக்குப் போவமா?’ எனக் கேட்டேன்.

‘நோ சான்ஸ். வேலை இருக்கும்’ என, இருவரும் சொன்னார்கள். அவர்கள் இயல்புலகுக்குள் திரும்பியிருந்தார்கள்.

`வெள்ளிக்கிழமை என்ன படம் பார்ப்பது?’ என நான் யோசித்துக்கொண்டே வந்தேன். சென்னைக்குள் நுழைந்தபோது பூந்தமல்லி தியேட்டர் ஒன்றில் போஸ்டரை வெறித்துப்பார்த்தபடியே இரண்டு ஸ்கூல் பையன்கள் பையுடன் நின்றுகொண்டி ருந்தார்கள். நான்தான் அந்தப் பையன் என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். செய்து முடிக்கவேண்டிய சினிமா வேலைகள், எழுதித் தரவேண்டிய கட்டுரைகள், ஒப்புக்கொண்ட கூட்டங்கள், சந்திக்க வேண்டிய நபர்கள் என செல்போன் அழைப்புகள் தொடரத் தொடங்கின.

ஊர் வந்து சேர்ந்த சில நாட்களில் காட்டில் அடைந்த அனுபவங்கள் யாவும் மறைந்துபோயின. ஆனால், மைசூர் போய் சினிமா பார்த்த அனுபவம், இன்றும் பசுமை யாக நினைவில் இருக்கிறது. நம் அனைவருக் குள்ளும் சினிமா பார்க்கப்போன மறக்க முடியாத அனுபவங்கள் மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றனதானே!

- சிறகடிக்கலாம்...