2015 ஸ்பெஷல்
Published:Updated:

உயிர் பிழை - 20

மருத்துவர் கு.சிவராமன்

உயிர் பிழை - 20

பயம்... மருத்துவ உலகின் மூலதனம். விழிப்புஉணர்வில் இருந்து ஓர் அங்குலம் விலகி பயம் தொடங்கும். விழிப்பு உணர்வு என்பது அறிவு; பயம் என்பது அறியாமை. முந்தைய தலைமுறையில் குடும்ப டாக்டர் என ஓர் உறவுமுறை இருந்தது. கொஞ்சம் அறியாமையில் அல்லது அதிகப் பிரசங்கித்தனத்தில் பயப்பட்டு, ‘தலை வலிக்குதே டாக்டர். மண்டைக்குள்ளே புற்று வளருதோ?’ என அந்த உறவிடம் கேட்கும்போது, செல்லமாக மண்டையில் குட்டி, `இங்கு முடிதான் ஓவரா வளருது. அதுதான் சளியும் தலைவலியும். உங்க அப்பனை மாதிரி அநியாயத்துக்குப் பயந்து நடுங்குற’ என அவர் சொல்வதோடு நிறுத்தி விடாமல், உதாசீனப்படுத்தாது தன் மூளைக்குள் நாம் சொன்ன தலைவலியை ஓர் ஓரத்தில் பதியவிட்டு, ஒவ்வொரு முறையும் அதை ஆராய நோட்டமிடும் பழக்கம் குடும்ப டாக்டரிடம் உண்டு. பழைய தமிழ் சினிமாவைத் தாண்டி இப்போது அப்படியான குடும்ப டாக்டரை அதிகமாகப் பார்க்க இயலவில்லை.

உயிர் பிழை - 20

‘தலைவலியா... எதுக்கும் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துட்டு, மதியமே வந்து என்னைப் பாருங்க. ஒருவேளை கட்டி கிட்டி இருந்துச்சுன்னா...’ என, ஏற்கெனவே உள்ள பயத்துக்கு புளியைக் கரைத்து ஓடவிடும் மருத்துவர்கள் இங்கே அதிகம்.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல... தாடி வெச்சவன் எல்லாம் தாகூர் அல்ல’ என்கிற மாதிரி, ‘வீங்குற கட்டி எல்லாம் புற்று அல்ல’ என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலின் வெளிப்புறமாக, உள்புறமாக பலவகைக் கட்டிகள் யதார்த்தமாக வந்து போவது உண்டு. அகஸ்மாத்தாகவோ அல்லது ஏதாவது சோதனை செய்யும்போதோ, அப்படியான கட்டியைப் பார்த்துக் கலவரப் பட்டு, மருத்துவரின் அடுத்த அப்பாயின்ட் மென்ட் வரை காத்திருக்க முடியாமல், அவர் வீட்டு சுவர் ஏறிக் குதித்து, ‘சார்... இந்தக் கட்டி புற்றுக்கு அடையாளம் இல்லையே?’ என, கூகுள் ஆண்டவரைக் குலதெய்வமாகக் கும்பிடும் ‘படித்த’ கூட்டம் இன்று நம்மில் அதிகம்.

உயிர் பிழை - 20

ஏப்பம் விடும்போது யதேச்சையாக வயிற்றை தானே தடவும்போதோ, கடற்கரை யோரம் காதலி கைகளைப் பற்றி நிற்கும்போது அல்லது ‘இது என்ன வாட்ச்சுக்கு மேலே வீக்கம், அய்ய்ய்யோ... டாக்டரை இன்னும் பார்க்கலையா, உனக்கு உன் உடம்பு மேல அக்கறையே இல்லையா?’ என வழிய வழிய தன் காதல் கரிசனத்தை நெஞ்சுக்குள் இருந்து கொட்டியவுடன், பதறியடித்து மருத்துவரை ஓடிவந்து பார்க்கவைக்கும் ஒரு கட்டிக்கு ‘கொழுப்புக் கட்டி’ எனப் பெயர். Lipoma என மருத்துவத் துறை அழைக்கும் இந்தக் கட்டி, உடலை எந்த வகையிலும் வருத்தாத வஸ்து. தோலுக்கு அடியில் தேமே என இருக்கும் அந்தக் கட்டி, பொதுவாக வலிக்காது; அரிக்காது; அழுகாது. உடல் எடை ரொம்ப மெலிந்தாலோ, மடமடவென எடை கூடினாலோ மட்டும்தான் வெளியில் தெரியும் அளவுக்கு இருக்கும். இந்த லைப்போமாவைப் பற்றி பயம்கொள்ள வேண்டியது இல்லை. வெகுசொற்பமாக இந்த லைப்போமாவின் வளர்ச்சி, ஏதாவது ரத்தநாளம் அல்லது நரம்பில் கொஞ்சம் அழுத்தி லேசான பிரச்னை பண்ணினால், கட்டியை அறுத்து அகற்றிவிடலாம்.

‘பாலிப்’ (Polyp) எனப்படும் மெல்லிய தசை வளர்ச்சியும் கிட்டத்தட்ட ‘தேமே’ வகைதான். அதிகம் பயம்கொள்ள வேண்டியது இல்லை. ரத்த ஓட்ட நாளங்கள் உள்ள எந்தப் பகுதியிலும் ‘பாலிப்பு’கள் எனும் தசை வளர்ச்சி வரலாம். மூக்குத்தண்டு, இரைப்பை, கருப்பை, மலக்குடல், பெருங்குடல்... என எங்கும் வரலாம். பெரும்பாலான பாலிப்புகள் ‘benign’ என மருத்துவ உலகம் சொல்லும் இயல்பான செல்களைக்கொண்ட தசை வளர்ச்சியாகவே இருக்கும். சிலவகை பாலிப்புகள் மட்டுமே நாளடைவில் புற்றாகக்கூடும் என்பார்கள். அடினோமா வகையைச் சார்ந்த Colon / Rectal Polyps மட்டும் அந்த வகையைச் சார்ந்தது. ‘சரி எனக்கு இப்படி ஒரு பாலிப் உள்ளது என்றால், அதை நான் benign என நினைப்பதா... உயிர் பிழை என பயம்கொள்வதா?’. நிச்சயம் அங்கே குடும்ப மருத்துவரின் ஆலோசனை அவசியம். பாலிப்பின் இடம், அளவு, குடும்பப் புற்றுநோய் வரலாறு, ஒட்டியிருக்கும் பிற நோய்க் கூட்டம்... என அத்தனையும் தெரிந்த குடும்ப மருத்துவர் சொல்படி கேட்க வேண்டும். ஒருவேளை ஐயத்தில் biopsy சோதனைசெய்யச் சொன்னால், பதறவேண்டியது இல்லை. நிறையப் பேர் நினைப்பதுபோல், `பயாப்ஸி சோதனை, நோயைக் கிளறிவிட்டு விடும்’ என்பதும் பொய். பயாப்ஸி எனும் திசு, சோதனையில் அது புற்றுக் கட்டியாக இருக்கும் பட்சத்தில் மிக எளிதான அறுவை சிகிச்சையோ அல்லது பிற சிகிச்சையின் மூலமோ துல்லியமாக நோயைத் தீர்க்க முடியும். தெளிவான நோய் அறிதல்தான் சரியான மருத்து வத்தின் முதல் படி.

அதேபோல் ஓர் இடத்தில் பாலிப்பைக் கண்டுவிட்டால், உடலின் வேறு இடத்தில் பாலிப் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் மறக்கக் கூடாது. சாதாரணமாக, மூக்குத்தண்டில் இருக்கும் பாலிப் அதிகபட்சம் சைனசைட்டிஸ் எனும் மூக்கடைப்பைக் கொடுக்கும். மூக்கடைப்புக்கான எளிய சித்த மருந்துகளான சீந்தில் கொடி தண்டின் சூரணத்திலேயே (பொடியிலேயே) அந்த பாலிப் காணாமல்போவது உண்டு.

உயிர் பிழை - 20

அதே சமயம் பித்தப்பை யின் பாலிப் எந்த மருந்துக்கும் அசராது. மிகச் சிறிய அளவில் இருக்கும் வரை (1 செ.மீ-க்குக் குறைவாக) எந்தத் தொல்லையும் தராது. உடனே இரண்டுக் கும் அறுவைசிகிச்சை என முதல் தேர்வாகப் போவது அவசியம் அற்றது. அவசியமா... இல்லையா? என்ற முடிவை கூகுள் ஆண்டவரிடமோ, கார்ப் பரேட் கூச்சலிலோ கேட்காமல் குடும்ப மருத்துவரை அணுகிக் கேளுங்கள். அவருக்கு உங்கள் குடும்பத்தில் புற்றுநோய் மரபு இருக்கும் வரலாறு தெரிந்திருக்கும். ஒருவேளை அவர் அந்த மரபின் நீட்சியாக இந்த ‘பாலிப்’ இருக்கும் என ஐயப்பட்டால், தசை வளர்ச்சியில் இம்மி திசுவை எடுத்துச் சோதிப்பதோ அல்லது அந்த பாலிப்பையே நீக்கி, நீக்கிய பகுதியை திசு சோதனைக்கு அனுப்புவதோ அவர் முடிவுக்கு விட்டு விடுங்கள். ‘இப்போதும் இல்லை... எப்போதும் இல்லை’ எனத் தெளிவாக இருக்கும்பட்சத்தில் வேறு வேலையைக் கவனிக்கச் சென்று விடலாம். ‘இன்றைக்கு ஒன்றும் செய்யாது. நாளைக்கு பிரச்னை தரக்கூடும்’ என நினைத் தால், சீந்தில் தண்டோ, சைபர் கத்தியோ இல்லை இரண்டும் கூட் டாகவோ சிகிச்சைக்குள் செல்வது இந்தக் காலத்துக் கட்டாயம்.

பெண்களின் மார்பகத்தில் வரும் ‘புற்று இல்லாத மார்பக நார்க்கட்டிகள்’ மீது இப்போது அலாதி பயம் பெருகிவருகிறது. ஒரு பக்கம் இதை மார்புப் புற்று பற்றிய விழிப்புஉணர்வு என எடுத்துக்கொண்டாலும், ‘புற்றெல்லாம் எதுவும் இல்லை. வெறும் நார்க்கட்டி (fibro adenoma) அல்லது நீர்க்கட்டி (cyst)’ என மேமோகிராமில் சொல்லிவிட்டபோதும், பலரும் நெடு நாளைக்கு இந்தக் கட்டிகள் புற்றுக்கட்டி ஆகிவிடுமோ? என்ற பயத்தில் அவஸ்தைப் படுவது அவசியமற்றது. அவ்வப்போது சுயபரிசோதனையும், இளவயதில் நார்க்கட்டிகள் இருந்திருப்பின் மாதவிடாய் முடிவில் மீண்டும் மேமோகிராம் எடுத்துக் கொள்வது மட்டும் போதுமானது. நார்க்கட்டி பெரும்பாலும் வலியைத் தருவது இல்லை. ஆனால், மார்பக நீர்க்கட்டிகள் (cyst) வலியைத் தரலாம். சில நேரத்தில் அந்த நீர்க்கட்டிகள் கொஞ்சம் பக்கத்துத் தசைகளின் அழற்சியோடு இருந்தால் வலியைத் தரக் கூடும்.

சினைப்பையிலும் இப்படியான நீர்க்கட்டிகள் சாதாரணமாக வரக்கூடும். கருமுட்டை சரியான நாளில் உடையாமல் அல்லது அதை உடைய உத்வேகப்படுத்தும் ஹார்மோன்கள் குறைந்திருந்தால் அது நீர்க்கட்டியாவது உண்டு. சினைமுட்டை உடைந்து முட்டையானது, கருப்பைக்குள் தள்ளப்பட்ட பின்னர் வெற்றுப்பையில் நீரும் ஹார்மோனும் சேர்ந்து மூடிக் கொண்டும், சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாவதும் உண்டு. பெரும்பாலும் இந்தக் கட்டிகள் இருக்கும் இடம், அளவைப் பொறுத்து கொஞ்சம் வலி, கொஞ்சம் கருத்தரிப்பில் தாமதம் தருமே ஒழிய, புற்றாக மாறாது. சரியான மருத்துவ சிகிச்சை, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை நீக்குவது எளிது. மீண்டும் மீண்டும் இப்படி நீர்க்கட்டிகள் வராது இருக்க, உணவிலும் வாழ்வியலிலும் கூடுதல் அக்கறை வேண்டும். இனிப்பை ஒதுக்கி விடுவது, லோ க்ளைசிமிக் உணவைத் தேர்ந்தெடுப்பது, நார் காய்கறிகளை விரும்பி உண்பது நீர்க்கட்டி மீண்டும் மீண்டும் வராதிருக்க உதவும்.

உயிர் பிழை - 20

நீர்க்கட்டிகளில் ஏராளமான வகைகள் உண்டு. இருக்கும் இடம், கட்டி அருகில்  தசை என அதற்கான பெயர்க் காரணம் இருந்தாலும், சில வகைக் கட்டிகள் மட்டுமே புற்றாகக்கூடும். மாதவிடாய்க்குப் பின்னர் வளரும் சினைப்பையின் நீர்க்கட்டி கொஞ்சம் உற்றுப்பார்க்கவேண்டிய விஷயம். CA 125 அல்லது திசு சோதனை தேவைப்படும். பாலிப்புகள் மாதிரியே மரபுரீதியாக புற்றுநோய் வரலாறு இருந்தால்,  இந்த நீர்க் கட்டியை உதாசீனப்படுத்தாமல் சோதிப்பது அவசியம்.

‘கட்டியா... கழலையா?’, `நல்ல திசுவா... பிழையான திசுவா?’ `வளருமா... வளரவிடுமா?’ என அத்தனையையும், `எத்தனை குளம்யா உங்க ஊர்ல இருந்துச்சு?’ என சென்னையில் இருந்து குடையும் ஆபீஸருக்காக, மரக்காணம் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் 350 பழைய ஃபைல்களைத் தும்மலுடன் புரட்டிக் கொண்டிருக்கும் பரிதாப ஊழியரால் நிச்சயம் யோசிக்க முடியாது. அவரது குடும்ப மருத்துவர்தான் கூடுதல் அக்கறையுடன் யோசிக்க வேண்டும். அப்படியான குடும்ப மருத்துவர் உறவு தொலைந்துபோனது, மேற்கத்திய நவீன வணிக நாகரிகத்தின் மிகப் பெரிய சூது. வேகவேகமாக நுகர் வோனையும் ஆக்குவோனையும் அந்நியப் படுத்தி அந்நியப்படுத்தி, அத்தனையிலும் காசு பார்க்கும் வணிக மோசடிதான் நவீன தாராளமயமாக்கம். உலகத்தரம் என்ற பெயரில் மருத்துவம் உட்பட அத்தனை துறையும் அதில் கோக்கப்படுவதில் தொலைவது நம் மரபு மட்டுமா... மரபில் வந்த உடல்வன்மையும்கூடத்தான். ஏனென்றால், உலகத்தர உபசரிப்புக்காக உருவாகும் `தமிழுக்கு எண் இரண்டை அழுத்தவும்’ என்ற கணினி வழி மருத்துவ நுகர்வோர் கரிசனத்தில், `அய்யா... இது புற்றா இருக்காதுல்ல சாமி?’ எனக் கேட்கும் சாமானியனுக்கு யார், எப்படி, எங்கிருந்து, என்ன... பதில் சொல்வார்கள்?

- உயிர்ப்போம்...