Published:Updated:

`ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா கதவைச் சாத்திட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவேன்!'' - தம்பி ராமைய்யா #LetsRelieveStress

`ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா கதவைச் சாத்திட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவேன்!'' - தம்பி ராமைய்யா #LetsRelieveStress
`ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா கதவைச் சாத்திட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவேன்!'' - தம்பி ராமைய்யா #LetsRelieveStress

தம்பி ராமைய்யா நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல... குணச்சித்திர நடிகராகவும் சாதனை படைத்துவருபவர். `எந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தாலும், ஏ டு இஸட் தங்குதடையில்லாமல் ஒரு நீரோடயைப் போல பேசுகிறார்’ என்பதுகூடத் தவறு. `நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறார்!’ கருத்துகளையும் வாழ்க்கையின் அனுபவப் படிப்பினைகளையும் அவருக்கு அத்துப்படியாக அறிந்துவைத்திருக்கிறார். ``உங்கள் ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு எந்த மாதிரியான டெக்னிக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள்?’’ என்று பேச்சை ஆரம்பித்தோம்.

`` 'வெற்றியும் நம்மை குதுகலப்படுத்தாது; தோல்வியும் நம்மைச் சங்கடப்படுத்தாது'என்கிற மனநிலை இருக்கவேண்டியது மிக முக்கியம். ஒருத்தனுக்கு, அஞ்சு கோடி ரூபாய் கடன் இருக்கு. இன்னொரு பக்கம் மரணம் இருக்கு. ஒண்ணு, கடனை அடைக்க வாழ்க்கையில போராடணும்; இல்லைன்னா, அதைவிட்டுட்டு நிம்மதியா செத்துப் போகலாம். இந்த ரெண்டு சாய்ஸ்ல அவனுக்கு எது வேணும்னு கடவுள் கேட்கிறார்னுவெச்சுக்குவோம். அவன் எதைத் தேர்வு செய்வான்? உயிரோடு இருந்து கடனை அடைச்சுட்டு வாழ்ந்து காட்டுவோம்னுதான் நினைப்பான். 

ஸ்ட்ரெஸ்ங்கிறதை, நான் எப்படி எடுத்துக்குவேன்னா, `யாருக்குத்தான் கஷ்டம் இல்லை. எல்லோருக்கும்தான் கஷ்டம் இருக்கு’னு நினைச்சுக்குவேன். 

பிறக்கும்போதே எல்லாரும் கஷ்டத்தோடதான் பிறக்கிறோம். அதாவது 'சவம்'தான். அதனாலதான் 'பிரசவம்'னு சொல்றோம். எல்லோருக்கும் கஷ்டம்தான். 

இதுல தனிமனிதர்களோட கஷ்டம்ங்கிறது வானத்துலருந்து கொட்டுற மழையில ஒரு துளிதான். அதனால தனிமனிதனா, கஷ்டம்ங்கிறதை நான் சாதனையா பார்க்கலை. அதை ஒரு புலம்பலாத்தான் பார்க்கிறேன். சிம்பிள் மேட்டர் சார்... சந்தோஷத்தை அனுபவிக்காம செத்த பிச்சைக்காரனும் கிடையாது; கண்ணீரைச் சிந்தாம செத்த கோடீஸ்வரனும் கிடையாது.

நம்ம கண்ணுக்கு முன்னாடியே பெரிய கோடீஸ்வரர் எம்.ஏ.எம்.ராமசாமி கண்ணீர் சிந்தி புலம்பினதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கோம். இதுக்கு நேர் மாறாக வடபழனி கோயில் வாசல்ல இரண்டு பிச்சைக்காரங்க தங்களை மறந்து, தாண்டிக் குதிச்சு விளையாடி, சிரிக்கிறதையும் பார்க்கிறோம். 

எதையும் நாம எப்படி எடுத்துக்கொள்கிறோம்ங்கிறதுலதான் இருக்கு. 'சிரிக்காத நாள் வீணான நாள்'ங்கிற சார்லி சாப்ளினோட புகழ் பெற்ற வாசகம் ஒண்ணு உண்டு. என்னோட ஆஃபீஸ்லயே இதைத்தான் எழுதிவெச்சிருக்கேன்.
நாம பெற்ற தோல்விதான் ஸ்ட்ரெஸ் உண்டாகிறதுக்குக் காரணம். டென்ஷனா இருக்கிறவன் அதையே நெனைச்சுக்கிட்டு இருப்பான். ஊரும் அதைத்தான் பேசிக்கிட்டு இருக்குனு நினைப்பான். ஒரு மாணவன் வேலைக்கான இன்டர்வியூவுல தோத்துட்டா, `ஸ்கூல்வெச்ச எக்ஸாம்ல் பாஸ் பண்ணிட்டோம். கவர்மென்ட் எக்ஸாம்ல தோத்துட்டோம்’னு நினைப்பான். 

ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஒரு போட்டியில தோத்துட்டா, `இதுவரைக்கும் நடந்த போட்டிகள்ல ஜெயிச்சிட்டோம். ஆனா, கோப்பை வாங்கவேண்டியதுல மிஸ் பண்ணிட்டோம்’னு நினைப்பான். ஒரு அரசியல்வாதி தோத்துட்டா, `இந்த மாவட்டத்துல ஏழு எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்க. சீனியர்ங்கிற முறையில என்னைத்தான் அமைச்சராக்குவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா சாதாரண ஒரு எம்.எல்.ஏவை அமைச்சராகிட்டாங்க’னு வருத்தப்படுவாரு. இதுல தோத்தவனும் ஸ்ட்ரெஸ் வந்து கஷ்டப்படுவான். ஜெயிச்சவனும் வெற்றியை அனுபவிக்க முடியாம, `மந்திரி பதவி கிடைக்கலியே’னு கஷ்டப்படுவான். 

ஒரு மாபெரும் கோடீஸ்வரன் கப்பல் கவுந்துடுச்சேனு கவலைப்படறதும், ஒரு பிச்சைக்காரன் திருவோடு காணாமப் போச்சேனு கவலைப்படறதும் ஒண்ணுதான். ஒவ்வொரு நாளும் காலையில நாம உயிரோடு இருக்கோம்ங்கிறதை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டோம்னா அதுவே நமக்கு வெற்றிதான். நான் என் மனைவிகிட்டகூட அடிக்கடி சொல்லுவேன். வெற்றின்னா என்ன... தோல்வினா என்னா? அதிகபட்சம் ஒரு மனுஷனா வேற என்னத்தை அனுபவிக்கப் போறோம்? 

உண்ண உணவு, மாற்றிக்கொள்வதற்கு உடை, உறங்குவதற்கு ஒழுகாத வீடு. இந்த மூணு 'உ'தான் மனித வாழ்க்கைக்கு முக்கியம். இது தடையில்லாம ஒருத்தனுக்குக் கிடைச்சிட்டாலே அவன் சாதிச்சவனாயிடுறான். 

`அடுத்த தலைமுறைக்கு சம்பாதிக்கணும், பத்து தலைமுறைக்குச் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவனுக்குத்தான்’ ஸ்ட்ரெஸ் அதிகமா வருது. காசு இல்லாதவனைவிட இருக்கிறவனுக்குதான் ஸ்ட்ரெஸ் அதிகம்.

உடம்புக்கு நோய் வந்துட்டாலோ, தன்னை மீறிக் கடன் வாங்கிட்டாலோ ஸ்ட்ரெஸ் வந்துடும்னு நினைக்கிறோம். ஆனா, நல்லா திடகாத்திரமா இருப்பான். அவனுக்குச் சொந்தமா 75 பஸ் ஓடும். ஃபிக்ஸட் டெபாசிட்டுல நிறைய பணம்வெச்சிருப்பான். இதுதான் வெளி உலகத்துக்குத் தெரியும். ஆனா, கதவைச் சாத்திக்கிட்டு மனசுக்குள்ள அவன்படுற வேதனை அவனுக்குத்தான் தெரியும். பணத்தையும் புகழையும் காப்பாத்துறதுக்காக ஓடிக்கிட்டே இருப்பான். பணம் இல்லாதவனைவிட பணம் இருக்கிறவனுக்குத்தான் ஸ்ட்ரெஸ் அதிகம். நான்கூட வேடிக்கையாச் சொல்லுவேன். `இருக்குங்கிறதை பாஸிட்டிவாகவும் இல்லைங்கிறதை நெகட்டிவாகவும் நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, சில விஷயங்கள்ல இது மாறுதலா இருக்கும். இருக்குங்கிறதைவிட இல்லேங்கிறது நல்லது.’ 

` அஞ்சு கோடி ரூபாய் கடன் இருக்கு. என்கிட்ட எந்தக் காசும் இல்லை'னு சொல்லும்போது நாம எதைப் பெரிசாக நினைப்போம்?  
அவர் இந்தத் தெருவுல வந்து போறதே தெரியாது. `இந்தத் தெருவுல வசிக்கிற முன்னாள் அமைச்சரை போலீஸார் கைது செய்தனர்'னு அவரைச் சொன்னா நாம எதைப் பெருசா நினைப்போம்? 

பணம், புகழ், வெற்றி எல்லாமே ஒருவிதத்துல மயக்கம் தரக்கூடிய விஷம்தான். இன்றைய இளைஞன் விரட்டிவிரட்டி ஓடிக்கிட்டே இருக்கான். அவன் விரட்டிப்போனது கிடைச்சதும், அவன் திரும்பிப் பார்க்கும்போது,  அவன் குடும்பம் அவன் பிள்ளைகள் எல்லோரும் அவன் கையைவிட்டுப் போயிருப்பாங்க. அவன் யாரோட இதையெல்லாம் அனுபவிக்கப் போறான்?

காரணமே இல்லாம ஒருத்தன் டென்ஷனோட கோபமா இருக்கான்னா அவனோட மனம், உடல் ரெண்டுமே ஆரோக்கியமா இல்லைனு அர்த்தம். அவன் ஒரு இடத்துல முடங்கிடுவான். 

ஸ்ட்ரெஸ் ஏற்படாம இருக்கிறதுக்குச் சரியான சீக்ரெட் என்னன்னா யாரையும் வார்த்தைகளால காயப்படுத்திடக் கூடாது. ஒரு வார்த்தை சொல்றோம்னா அதை மூளையில மூணு முறை ஏத்தி, என்ன விளைவுகள் வரும்னு யோசிக்கணும். அப்புறம் பேசணும். நிறையப் பேர் மைக் கிடைச்சிடுச்சேனு பேசிக்கிட்டு அப்புறம் டென்ஷன்ல வருத்தப்படுவாங்க.  காயப்படுத்தாத வார்த்தைகள் மற்றவர்களை மட்டுமல்ல... நம்மையும் காயப்படுத்தாது.

நான் என்னிக்காவது மைக்கைப் பிடிச்சிப் பேசி பார்த்திருக்கீங்களா? உலக அரசியலைப் பின்னி பெடல் எடுத்திடுவேன். அது நண்பர்கள் மத்தியில் மட்டும்தான். 

நேர்மையை நெஞ்சுல கூடு கட்டி வாழ்றவங்க யாரும் மேடையேறிப் பேசினா, எதிரே ஏராளமான கேள்விகள் வரிசைகட்டி நிற்கும். அதுக்கு சகிப்புத்தன்மையோட பதில் சொல்ற தகுதி நமக்கு இருக்கானு பார்க்கணும். காரணமே இல்லாம நமக்குக் கோபம் வந்தா வீட்டுக்குள்ள நாம முடங்கிடணும். இல்லன்னா, நம்ம கோபமே நம்மைக் கேவலப்படுத்திடும். 'கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்பது ஆப்பிரிக்கப் பழமொழி.

புராண ரீதியாகப் பார்த்தால், ஸ்ட்ரெஸ்ங்கிறது ஒருவிதமான சைத்தான். சினிமா தொழிலாளர்கள்ல சிலர் நல்லா இருக்காங்க. சிலர் கஷ்டப்படுறாங்க. ஒரு நாள்ல இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக இருக்கிற நேரம், சைத்தான் சடுகுடு விளையாடுகிற நேரம். ரொம்பக் கவனமா இருக்கவேண்டிய நேரம். 

சினிமாவுல 20 வருஷம் தொடர்ந்து ஜெயிச்சிக்கிட்டு இருப்பான். ஒரே ஒரு வருஷம் தோத்துப்போயிருப்பான். அதோட துவண்டு போயிடுவான். ஸ்ட்ரெஸ்ஸுங்கிறது ஒருவித மனநோய். அதை அடுத்தவனா கொண்டுவந்து கொடுப்பதில்லை. நாமதான் அதை ஏற்படுத்திக்கிறோம். 

எல்லா மனிதனுக்கும் ஒரு நாள் மரணம் வரும். அது 75 வயதிலும் வரும்... 85 வயதிலும் வரும். எல்லாரும் ஒருநாள் கை, கால் எல்லாம் முடங்கிப்போய் கயிற்றுக் கட்டிலில் விழவேண்டி வரும். அப்போ நம்ம மனைவி, பிள்ளைகள், அவர் அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டுப் போவார்கள். நாம் தனிமையில் கிடக்கவேண்டி வரும். அப்போ நம்ம சாட்சி நம்மைச் சில கேள்விகள் கேட்கும். அதுக்கு நாம நியாயமான பதில்களை வெச்சிருக்கணும். 

எனக்கும் இந்த நிலை வரும். அப்போ என் மனசாட்சி என்னோட பேசும். என் மனைவியோடு நான் மகிழ்ந்திருந்த பொழுதுகள்... மறந்துடும். பிள்ளைகளைப் பெருமைப்படுத்திய நாள்கள்... மறந்துடும். சமுதாயம் என்னை தலையில் வைத்துக் கொண்டாடிய நேரங்கள்... மறந்துடும். தேசிய விருது மறந்துடும். எதுவும் என் நினைவு அடுக்குகளில் இருக்காது. 


நானும் என் மனசாட்சியும் மட்டும் பேசிக்குவோம். எங்கள் உரையாடல் கறந்த பாலைப்போல் இருக்கும். மரணத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு உரையாடல் நடக்கும்.  மனசாட்சி சில கேள்விகளை முன்வைக்கும். `ஒரு நாள் நீ உன் அம்மாவை திட்டினே. அப்பாவுக்குத் தெரியாம அவருடைய காசைத் திருடினே. மனைவியை ஈகோவால ஒருநாள் திட்டினே . உன் பிள்ளைகளைப்பார்த்து, உன் காசாலதான் அவங்க பெரிய இடத்துக்கு வந்துட்டாங்கன்னு சொன்னே...’ இப்படி ஆயிரம் கேள்விகளைக் கேட்கும். அதுக்கெல்லாம் நான் பதில் வெச்சிருக்கணும். அப்படி நேர்மையா நான் வாழ்ந்திருந்தாத்தான் அது நிறைவான வாழ்வு. நானும் நேராக சொர்க்கத்துக்குப் போவேன். இல்லைனா நரகத்துக்குத்தான் போவேன். இவ்வளவுதான் வாழ்க்கை.

10 வயது பளபளக்கிற வயது

20 வயது இருப்புக் கொள்ளாத வயது 

30 வயது முணுமுணுக்கிற வயது

40 வயது  நாயா பாடுபடுற வயது

50 வயது அனுபவிக்கத் துடிக்கிற வயது

60 வயது ஆசை மட்டுப்படுகிற வயது

70 வயது எண்ணத்தைச் செயல்படுத்த முடியாத வயது

80 வயது எங்கும் தனியாகச் செல்லக் கூடாத வயது

90 வயது  எங்கும்  தன் முகத்தைக் காட்டக் கூடாத வயது

100 வயது  என்னைப் பொறுத்த வரை சைத்தான்.

இப்படி வகுத்துக்கொண்டுதான் நான் வாழ்கிறேன். என்னோட வாழ்க்கைக்கு மிகச்சிறந்த ரோல் மாடல் சிவக்குமார் சார்தான். 75 வயசுல  அவர் ராமயணத்தை தலைகீழாக மேடைகளில் சொல்கிறார். ஒழுக்கமான வாழ்வு நெறிகளைக் கடைப்பிடிக்கிறார். அவர், மனைவிக்குச் சுமையாக இல்லை. பிள்ளைகளுக்குப் பெருமை சேர்க்கிறார். பேரப் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டுபோய்விடுகிறார். இப்படியாக வாழும் அவர் எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே சிறந்த ரோல் மாடல். அவரைப்போல் இருந்தால் யாருக்கும் ஸ்ட்ரெஸ் வராது.

எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால், என்னோட ரூமுக்குள்ள போய் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவேன். அப்படி டான்ஸ் ஆடும்போது, உச்சி முதல் உள்ளங்கால் வரை நமது உடலில் உள்ள நரம்புகள் சமநிலைக்கு வந்துடும். ஸ்ட்ரெஸ் நம்மை விட்டுப் போயிடும். இல்லைன்னா, கவிதை எழுதுவேன். சில வேளைகளில் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். டென்ஷனைக் குறைக்க இந்த மூன்று வழிகளைத்தான் நான் கையாளுகிறேன்’’ என்கிறார் தம்பி ராமைய்யா.