Published:Updated:

பிட்காயின் மைனிங் செய்ய உதவும் கிராஃபிக்ஸ் யூனிட்... அள்ளிச் செல்லும் இளைஞர்கள்!

பிட்காயின் மைனிங் செய்ய உதவும் கிராஃபிக்ஸ் யூனிட்... அள்ளிச் செல்லும் இளைஞர்கள்!
பிட்காயின் மைனிங் செய்ய உதவும் கிராஃபிக்ஸ் யூனிட்... அள்ளிச் செல்லும் இளைஞர்கள்!

பிட்காயின் மைனிங் செய்ய உதவும் கிராஃபிக்ஸ் யூனிட்... அள்ளிச் செல்லும் இளைஞர்கள்!

நீங்கள் ஒரு மாருதி ஆல்டோ கார் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். பிட்காயினைப் பற்றி ஒருவர் உங்களுக்குச் சொல்கிறார். ஒரு பிட்காயினின் விலை இன்று 6,89,630 ரூபாய். உங்கள் வீட்டில் ஓர் அறையை பிட்காயின்  மைன் செய்வதற்காக பயன்படுத்த நினைக்கிறீர்கள். சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு நல்ல கம்ப்யூட்டரை தயார் செய்து  தடையில்லா மின்சாரத்தையும் இணையச் சேவையையும் கொடுத்துவிட்டு ஒரு துணி போட்டு கணினியை மூடிவிடுகிறீர்கள். அந்த  அறையையும் பூட்டு போட்டு அடைத்துவிடுகிறீர்கள். சரியாகப் பத்துவருடங்கள் கழித்து வாழ்வில் ஓடிக் களைத்து ஓய்ந்து உட்காரப் போகும்போது அந்த அறையைப் பற்றிய ஞாபகம் வருகிறது. மெதுவாகச் சென்று திறந்து பார்க்கிறீர்கள். கணினியில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடியின் சத்தம் இன்னும் அதே வீரியத்துடன் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. தூசி படிந்த அந்தத் துணியை விலக்கிப் பார்க்கிறீர்கள்.
அன்று ஒரு பிட்காயினின் விலை 60,54,890 ரூபாய். நீங்கள் சம்பாதித்தது 500.00 பிட்காயின்கள். உங்களது பிட்காயினின் சொத்துமதிப்பு
குறித்து நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். சாதாரண மாருதி கார் காணாமல் போய் பல கோடிகள் மதிப்புள்ள மேற்கத்திய கார்கள் உங்கள் மாளிகை வாசலில் உங்களுக்காகக் காத்துக்கிடக்கும்.

இது பத்துவருட காலத்தில் நடக்கக்கூடிய மாற்றம்/சம்பாத்தியம். ஆனால், அதையே முழுநேரப் பணியாக எடுத்து இளைஞர்கள் செய்தால்? ஆம் இந்தியாவில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பிட்காயின் இளைஞர்களை சோம்பேறிகளாகவும் குறுக்கு வழியில் சீக்கிரமாகப் பணம் சம்பாதிப்பவராகவும் ஆசை காட்டி மோசம் செய்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துவிட்டன.  

சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் தற்போதைய ட்ரெண்ட் ஜி.பி.யு, அதாவது G.P.U (Graphical Processing Unit). இது ஒரு சாதாரண கிராஃபிக்ஸ் கார்டு. பெரிய வகை கேம்ஸ் விளையாட நம் கணினியில் பொருத்தப்படும் கிராஃபிக் சாதனம். இதை வைத்து பிட்காயின் மைனிங் செய்யலாம் என்று கண்டறிந்ததால் பெரும் இளைஞர் படை ரிட்சி தெருவுக்குப் படையெடுத்து வருகின்றனர்.பிட்காயின் மைனிங்  செய்வதில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த ஜி.பி.யு வழிமுறை. கணினி உலகில் பல கோடி அல்காரிதம் குறுக்கும் நெடுக்குமாக ஓடியவண்ணம் இருக்கும். அதில் ஒரு கணித புதிர் ஒளிந்திருக்கும், நம் கணினி கொண்டு அப்புதிரை உடைத்தால் நமக்கு ரிவார்டாக சில பிட்காயின்கள் கிடைக்கும். நம் கணினி எத்தனை விரைவில் புதிர்களைக் கண்டறிந்து அவிழ்க்கிறதோ அத்தனை விரைவில் பிட்காயின்கள் கிடைக்கும். இதில் நாம் இடைத்தரகராகவும் இருந்து பிட்காயினை வாங்கி விற்று கமிஷன் சம்பாதிக்கலாம்.

 இன்றே என் லேப்டாப்பில் பிட்காயின் மைனிங் செய்கிறேன் என்று வெறிகொண்டு கிளப்புபவர்களுக்கு ஒரு குறிப்பு. பிட்காயினை மைனிங் செய்திட முதலில் "பிட்காயின் மைனிங் சாஃப்ட்வெர்" மற்றும் "பிட்காயின் மைனிங் ஹார்டுவேர்" ஐ வாங்க வேண்டும். பிறகு அதில் மதர்போர்டை இணைத்து அத்தோடு கிராஃபிக்ஸ் கார்டுகளை இணைக்க வேண்டும். இது நம் கணினிக்கு அறிவூட்டும் சடங்கைப் போன்றது. எத்தனை கிராஃபிக்ஸ் கார்டுகளை இணைக்கிறோமோ அத்தனை விரைவில் கணினி தன் அறிவைக்கொண்டு நமக்குப் புதிர்களை அவிழ்த்து பிட்காயின் சம்பாதித்துக் கொடுக்கும். இந்த அல்காரிதம் குறிப்பிட்ட எந்த பேட்டர்னையும் பின்பற்றாது. அது ஒரு ரேண்டம் நம்பர். எனவே, இதை ஹேக் செய்வதென்பதோ ஒருவர் சம்பாதித்த பிட்காயினையோ அழிப்பது என்பதோ யாராலும் முடியவே முடியாது.

இன்றைய பொழுதில் ரிட்சி தெரு நிலவரப்படி 7,000 ரூபாய் மதிப்புள்ள கிராஃபிக்ஸ் கார்டு 17,000 ரூபாய் என்கிறார்கள். அத்தெருவில் கடை வைத்திருப்பவரிடம் பேசியபோது "கிராபிக்ஸ் கார்டில் பல டைப் இருக்கு. மதர்போர்டே ரெண்டு டைப் வரும். மினிமம் 6 ஜி.பு.யு போடலாம், மேக்சிக்ஸிமம் 19 ஜி.பி.யு போடலாம். கிராஃபிக்ஸ் கார்ட்ல ரெண்டு மாடல் இருக்கு. ஒன்னு AMD சிப் - கம்மி விலை, கம்மி பவர், கம்மி லாபம். இன்னொன்னு Nvidia சிப் - அதிக விலை, அதிக பவர், அதிக லாபம். இந்த மாதிரி பிட்காயின் மைனிங் பண்ண செட்டப் பண்ணா நீங்க ஒரு மாசம் கட்ற கரன்ட் பில் ஒரு நாள்லயே கட்ற மாதிரி வரும். காத்தோட்டமான ரூம்ல தான் சிஸ்டம் போடணும். இல்லைனா தீப்பிடிக்ககூட வாய்ப்பிருக்கு. ரேம் வகைலயும் நிறையா இருக்கு. DDR 3 8GB, DDR 4 8GB,. இப்டி நிறையா இருக்கு உங்களுக்கு என்ன பாஸ் வேணும்" என்று கேட்டவரிடம் சைலண்டாக ஜகா வாங்கிக்கொண்டு வீடடைந்தால் யூடியூபில் ஜி.பி.யு இணைத்து பிட்காயின் மைனிங் செய்வது பற்றி ஒருவர் வீடியோ பதிவிட்டிருந்தார். அவரை போனில் பிடித்தோம். 

" சார் இதுல மூணாவது மனுஷங்க யாரும் இல்லாததுனால ரொம்ப சேஃப் ஆன பணமாற்று முறை. இப்போ உங்க பாக்கெட்ல 100 ரூபா இருந்தா அதுல பாதி காச அரசாங்கமும் வங்கியும் பங்கு கேப்பாங்க. ஆனா பிட்காயின் அப்படி இல்ல.. உங்ககிட்ட இருக்குறது உங்களுக்கு தான். முழுக்க முழுக்க உங்களுக்குதான். நீங்க மத்தவங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சாலும் நொடி நேரத்துல உலகத்துல எந்த மூளைக்கும் உங்க பிட்காயினை அனுப்பலாம். இப்போ பிட்காயின் மார்க்கெட் கொஞ்சம் கிராஷ் ஆயிருக்கு அதனால நான் 'எத்திரியம்' அப்படிங்கற க்ரிப்டோ கரன்சில இன்வெஸ்ட் பண்ணிருக்கேன்” என்றார்.

2018 ஜனவரி 2-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இப்படி கூறினார். "பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்ஸி இன்னும் இந்தியாவில் சட்டபூர்வ அனுமதி பெறவில்லை. அதே நேரத்தில் இதைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிட்காயின் உபயோகிப்பவர்கள் சொந்த முயற்சியில் இதை செய்வதால் அரசாங்கம் எந்த விதத்திலும் உதவி  வழங்காது. எனவே, ஆன்லைன்
வாசிகள் கவனமாக இருக்கவும்" என்று அறிவுறுத்தினார்.

பணமதிப்பு வீழ்ச்சி, செல்லாக்காசு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நீக்கம் போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லாமல் இருப்பதால், பிட்காயின் மீது இந்திய மக்களுக்கு சிறு நம்பிக்கையும் ஆசையும் வந்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இது ஒரு மாயத் திரையில் மினுங்கும் எண்கள் விளையாட்டு என்பதால், சில தேசங்களில் இதை சூது என்று தடை செய்துள்ளனர். ஷேர் மார்க்கெட் போல அதிக முதலீடுகள் வந்துகொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் இது வீழ்ச்சியை சந்திக்கலாம் என்கிற அச்சமும் உள்ளது

அடுத்த கட்டுரைக்கு