Published:Updated:

காஞ்சிப் பட்டு, மைசூர் பட்டு, கட்வால் புடவை... கைத்தறி ஆடைகளில் அப்படி என்ன வித்தியாசம்?!

காஞ்சிப் பட்டு, மைசூர் பட்டு, கட்வால் புடவை... கைத்தறி ஆடைகளில் அப்படி என்ன வித்தியாசம்?!
காஞ்சிப் பட்டு, மைசூர் பட்டு, கட்வால் புடவை... கைத்தறி ஆடைகளில் அப்படி என்ன வித்தியாசம்?!

காஞ்சிபுரம் பட்டு, போச்சம்பள்ளி, மைசூர் சில்க் என ஏகப்பட்ட பட்டு வகைகள் இந்தியா முழுவதும் உள்ளன. `ஒவ்வொன்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம்?' என்பது பலரின் கேள்வி. இந்தியாவின் கைத்தறி ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை. கைத்தறித் தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும்விதமாக ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. பழங்கதைகள், நம்பிக்கைகள், அடையாளச் சின்னங்கள், கற்பனைக் கதைகள் போன்றவற்றை ஆடைகளில் நெய்து, பல்வேறு நிறங்களிலும் டிசைன்களிலும் தரமாகத் தரப்படுகிறது. முன்பைவிட பேட்டர்ன் மற்றும் டிசைன்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், கைத்தறிக்கான தனித்தன்மை மட்டும் என்றைக்குமே மாறாது. தென்னிந்தியாவின் கைத்தறி ஆடைகளின் சிறப்பம்சங்கள் இங்கே...

இக்கட் (Ikkat) :

ஆந்திர மாநிலத்தின் பிரபலமான கைத்தறி வகைகளில் ஒன்றான இந்த இக்கட், ஒருவிதமான சாயமிடும் நுட்பம். முழு நீளத் துணியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நூல்களைக் கட்டி, பிறகு சாயத்தில் முக்கி எடுக்கும் முறை `Tie and Dye' எனப்படும். இக்கட் டிசைனும் இப்படித்தான் உருவாகிறது. Tie and Dye, பட்டிக் (Batik) போன்ற நுட்பங்களில், நெய்த துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இக்கட்டில் துணிக்குப் பதிலாக நூற்கண்டு பயன்படுத்தப்படுகிறது. மொத்தமான நூற்கண்டை மெல்லிய நூல்களைக்கொண்டு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கட்ட வேண்டும். பிறகு இதை சாயத்தில் முக்கி எடுக்க வேண்டும். மெல்லிய நூல்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் சாயம் ஊடுருவியிருக்காது. பிறகு அந்த நூல்களை அவிழ்த்து வேறு சில இடங்களில் கட்டி சாயத்தில் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்த பிறகே அனைத்து நூல்களையும் பிரித்து ஆடையாக நெய்ய வேண்டும். இவ்வாறு உற்பத்தியாகும் ஆடை `இக்கட்' ஆடைகள் எனப்படும். சென்ட்ரல் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஜப்பான் (கசூரி என்பார்கள்) ஆகிய நாடுகளில் இக்கட் டிசைன்களை அதிகம் தயாரிக்கிறார்கள். போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள் இந்த இக்கட் நுட்பத்தில்தான் தயாராகின்றன.

கட்வால் :

தெலங்கானா மாநிலத்தின் புவியியல் குறியீடாக அறியப்படும் கட்வால் புடவைகளை, `SICO புடவை'கள் என்றும் கூறுவர். காட்டனால் நெய்யப்படும் இந்தப் புடவையின் பார்டர் மட்டும் பட்டால் ஆனவை. பலவிதமான கோயில், சிற்பம் எனப் பதிக்கப்படும் இந்தப் புடவை, ஏராளமான நிறங்களில் கிடைக்கும். காட்டன் மற்றும் பட்டின் இணைப்பால் உருவான கட்வால் புடவைகளின் பார்டர் மெல்லிய அளவு முதல் அகன்ற அளவு வரை கிடைக்கும். விலையும் அதற்கேற்றது.

காஞ்சிபுரம் புடவைகள் :

தமிழ்நாட்டின் பெருமைகளையும் கலாசாரங்களையும் ஆடைகளில் நெய்து, பட்டு சாம்ராஜ்ஜியத்தில் முதல் இடம் வகிக்கிறது காஞ்சிபுரப் புடவைகள். உலகளவில் தரமான பட்டைக்கொண்டு தயார்செய்யப்படும் ஒரே ஆடை இந்தக் காஞ்சிபுரம் பட்டாடை. கல்யாணம் முதல் காதணி விழா வரை பட்டு என்றாலே காஞ்சிபுரம்தான். முழுக்க முழுக்க பட்டால் ஆனவை இந்தப் புடவைகள். நேர்த்தியாக நெய்யப்படும் இந்தப் பட்டின் பளபளக்கும் ரகசியத்துக்குக் காரணம் `மல்பெர்ரி' புழுக்கள். கோல்டு மற்றும் சில்வர் நூல்களால் பின்னப்படும் இந்தப் புடவை, `கஸ்டமைஸ்டு' அதாவது வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எந்தவித டிசைன்களிலும் நெய்து தரப்படும்.

மைசூர் சில்க்:

100 சதவிகிதம் தரமான பட்டு மற்றும் தூய்மையான கோல்டு ஜரி கொண்டு நெய்யப்படும் பட்டு, மைசூர் பட்டு. திப்புசுல்தான் ஆட்சியில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த மைசூர் சில்க். மகாராஜா கிருஷ்ணராஜ் வாடியார் IV, 32 பவர் ஹாண்ட்லூம்களை சுவிட்சர்லாந்திலிருந்து வரவைத்து, இந்திய இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட முதல் பட்டாடை என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள காரணமாக அமைந்தார். இதன் தரமான பண்பு, ஆடையின் ஆயுட்காலத்தைக் கூட்டுவதுதான். பாரம்பர்ய மைசூர் புடவைகளில் வெறும் ஜரி டிசைன் மட்டுமே இருக்கும்.

தற்போது பேய்ஸ்லி (Paisley - Mango Design), பூக்கள் போன்ற டிசைன்களையும் கொண்டு உற்பத்தியாகிறது. மைசூர் புடவைகள், காஞ்சிபுரப் புடவைகளைவிட ஷிம்மர் (Shimmer) அதாவது பளபளக்கும் தன்மை குறைவானது.