Published:Updated:

இந்திய வானம் - 21

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

இட்லி ஒழிக!

ஒடிசாவில் உள்ள சில்கா ஏரியைக் காண்பதற் காகச் சென்றிருந்தேன். மிகப் பெரிய ஏரி அது. படகில் சென்றால் டால்பின்கள் துள்ளுவதைக் காணலாம். கடலைப்போல கண்கொள்ள முடியாத பரப்பளவு தண்ணீர் விரிந்துகிடக்கிறது. குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. சில்கா ஏரியில் சிறியதும் பெரியதுமாக நிறையத் தீவுகள் உள்ளன. ஒன்றில் பெரிய காளி கோயில் இருக்கிறது.

காலை 10 மணி அளவில் படகில் ஏறி, மதியம் வரை சுற்றிக்கொண்டே இருந்தோம். டால்பின்கள், கண்கள் முன்னே துள்ளியோடி மறைந்தன. சில்கா ஏரி கடலில் சங்கமிக்கும் சத்படா பகுதிக்குப் போய் இறங்கி, மணலில் நடந்து சுற்றினோம்.

மதியம் 2:30 மணி இருக்கும். நல்ல பசி. சில்கா கெஸ்ட் ஹவுஸில் சாப்பிடச் சென்றோம். ஆட்கள் யாருமே இல்லை. காத்திருக்கவைத்து, சாப்பிடுவதற்காக ரொட்டியும் தால் மக்கனியும் கடாய் பனீரும் தந்தார்கள். அவ்வளவு நேரம் காத்திருந்தது வீண் அல்ல என உணர்ந்தேன். வெகு ருசியான உணவு. சுடச்சுட ரொட்டிகள் தந்தபடியே இருந்தார்கள்.

`வட இந்தியர்கள் ரொட்டியை, தினமும் அலுத்துப் போகாமல் எப்படிச் சாப்பிடுகிறார்கள்?’ எனச் சலித்துக் கொள்ளும் நான், அன்று விரும்பி ரொட்டி சாப்பிட்டேன்.

உடன் வந்த நண்பர் சொன்னார்...

`மணி இப்போது 3:30. நமக்குப் பசி அதிகமாகிவிட்டது. அதுதான் ருசிக்குக் காரணம்.’

`அப்படி அல்ல. அவசரத்தில் செய்யப்படும்போது சில நேரம் உணவுக்கு ருசி கூடிவிடுகிறது. பல நேரம் ருசி இல்லாமலும் போய்விடுகிறது. இன்று நாம் அதிர்ஷ்ட சாலிகள்’ என்றேன்.
வருடங்கள் கடந்தபோதும் இன்றும் அந்த ருசி நாக்கில் தங்கியிருக்கிறது. எப்போதுமே நல்ல சாப்பாடும், அதைச் செய்து தந்தவர்களும் நம் நினைவில் இருந்து மறைவதே இல்லை. ஏக்கத்துடன் அதை நினைவுகொள்வதோ, அதே ருசியை வேறு எங்கேயாவது உணரும்போது கண்ணீருடன் நினைவுகொள்வதோ தவிர்க்க முடியாதது.

இந்திய வானம் - 21

உணவு, எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திவிடக்கூடியது. கூடி உண்பதும், விருப்பமான உணவு எது என அறிந்து சமைத்துத் தருவதும் உறவை வலுப்படுத்தக்கூடியவை.

'How Green Was My Valley' என்ற ஹாலிவுட் படத்தில் உறைபனியில் சிக்கி, நடக்க முடியாமல் கிடக்கும் பெண்ணுக்காக ஊரே கூடி பிரார்த்தனைசெய்கிறார்கள். அந்தப் பெண் நலம் அடைந்துவிடுகிறாள். தங்களுக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு அவளது கணவன் நன்றி கூறுகிறான். தன் மனைவியையும் நன்றி கூறச் சொல் கிறான். அவளால் பேச முடியவில்லை. நெகிழ்ந்துபோய், `உங்கள் அனைவருக்கும் இன்று என் வீட்டில்தான் சாப்பாடு’ என அறிவிக்கிறாள். அன்பை வேறு எப்படிக் காட்ட முடியும் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம்.

யோசித்துப்பார்த்தால் நம் வீட்டுச் சாப்பாடு எப்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுக்கு ருசியாக இருக்கிறது. நமக்கு அடுத்த வீட்டுச் சாப்பாடுதான் ருசிக்கிறது. ஆனால், `அடுத்த வீட்டுக்குப் போய்ச் சாப்பிடக் கூடாது’ என கண்டித்து, பிள்ளைகளை வளர்க்கிறோம். சில நேரம் ஆசையை அடக்க முடியாமல் அடுத்த வீட்டில் சாப்பிட்டுவிடும் பிள்ளைகள், அது தெரிந்துவிடாமல் மறைக்கிறார்கள்; பொய் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் கள்ளச்சிரிப்பு உண்மையைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. சிறுவர்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும், பசி வயிற்றில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதை பெரியவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது. சிறுவர்களின் பசியும் ருசியும் உணர்ச்சி வெளிப்பாடும் விளக்க முடியாதவை.
 
எட்கர் கீரத் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர், `பன்றியை உடைத்தல்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். பார்ட் சிம்சன் பொம்மை ஒன்றை வாங்குவதற்காக, பீங்கான் உண்டியலில் காசு சேர்த்து வைக்கிறான் ஒரு சிறுவன். அந்த உண்டியல் ஒரு பன்றி வடிவில் உள்ளது. அதனுள் தனக்குக் கிடைக்கும் காசுகளை எல்லாம் சிறுவன் சேகரித்துவருகிறான். ஒவ்வொரு நாளும் அந்த உண்டியலை கையில் வைத்துக்கொண்டு பன்றியோடு பேசுவான். தனது ஆசையை அதனிடம் விவரிப்பான். இப்படியாக அந்தச் சிறுவன் பன்றியை மிகவும் நேசித்தான்.

ஒருநாள் உண்டியல் நிறைந்துவிடுகிறது. அவன் ஆசைப்பட்டதுபோல கடைக்குப் போய் பொம்மை வாங்கிவிடலாம் என, உண்டியலை உடைக்க சுத்தியலை எடுக்கிறார் பையனின் தந்தை. ஆசை ஆசையாக வைத்துள்ள பன்றியை உடைத்துத்தான் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்பது பையனுக்கு வருத்தம் அளிக்கிறது.

அதைத் தடுப்பதற்காக `நாளைக்கு உடைக்கலாம்...’ என அப்பாவைச் சமாதானம் செய்கிறான். அன்று இரவு எல்லோரும் உறங்கிய பிறகு, அந்தப் பன்றியை தன் கையில் எடுத்துக்கொண்டு போய் ஒரு வயலில் வைத்து, `வயலுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுவிடு...’ எனச் சொல்லிவிட்டு ஆசையோடு அதன் மூக்கைத் தடவுகிறான்.

அதைத் தவிர, அந்தப் பன்றியைக் காப்பாற்ற அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என, கதை முடிகிறது.

வெறும் பீங்கான் பன்றிதான் என்றபோதும், அதை நேசிக்கிற சிறுவன், பன்றி உடைபடாமல் காப்பாற்றப்பட வேண்டும்; அதனால் தனது பொம்மை வாங்கும் ஆசை பறிபோனால்கூடப் பரவாயில்லை என நினைக்கிறான். இதுதான் சிறார்களின் மனது.

சிறுவயதில் போதுமான சாப்பாடு கிடைக்காமல் ஏங்கிப்போனவர்கள், வாழ்நாள் முழுவதும் அதை நினைவில் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவுடன் சிலர் நிறையச் சாப்பிடுவதற்கு இதுவே காரணம். சாப்பாட்டைக்கொண்டு அதைச் செய்தவர் எப்படி இருப்பார் என யூகிக்கவே முடியாது. அக்கறைதான் உணவுக்கு ருசியை உருவாக்குகிறது.

இந்திய வானம் - 21

இந்தியில் வெளியான `தி லஞ்ச்பாக்ஸ்’ படத்தில், மும்பையில் வசிக்கும் ஒரு பெண், டப்பாவாலாவிடம் தன் கணவனுக்கு உணவு கொடுத்து அனுப்புகிறாள். அது வேறு ஒருவனுக்குப் போய்விடுகிறது. அவன் அதை ரசித்துச் சாப்பிட்டு, பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்புகிறான். அதன் வழியே அவர்களுக்குள் ஓர் உறவு ஏற்படுகிறது. உணவால் ஏற்படும் அந்த உறவுக்கு என்ன பெயர்? வெறும் தோசை, தக்காளிச் சட்னியால் ஒரு திருமணம் முடிவானதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க முடியாது. எனது நண்பர் சேதுராமன் தன் மகனுக்கு மணம்முடித்தது அப்படித்தான்.

இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளில், திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கடைகள் மூடப்பட்டு பதற்றமான சூழல் உருவானது. சென்னையில் இருந்து குடும்பத்துடன் தென்காசிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்த சேதுராமனின் கார், மதுரையை அடுத்த திருநகரைத் தாண்டியதும் நிறுத்தப்பட்டது. சாலையில் தொடர்ந்து பயணிக்க முடியாத நெருக்கடி.

எங்கே போவது, என்ன செய்வது எனப் புரியாமல் தடுமாறிப்போனார். அருகில் தங்குவதற்கு லாட்ஜ் எதுவும் இல்லை. மனைவி, மகள், பேரன், பேத்திகளை வைத்துக்கொண்டு இந்த இரவை எப்படிக் கடப்பது எனப் புரியாமல் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்து ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, `இரவு மட்டும் தங்க இடம் கிடைக்குமா?’ எனக் கேட்டார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் தங்கிக்கொள்ள அனுமதி தந்தார்கள். வீடு தேடி வந்துவிட்டவர்களின் பசியை ஆற்றுவதற்காக தோசையும் மிளகாய்ப்பொடியும் தக்காளிச் சட்னியும் செய்துகொடுத்தார்கள்.
அடுத்த வீடு எனப் பார்க்காமல் ஐந்து தோசைகள் சாப்பிட்டார் சேதுராமன். அதோடு `சட்னி செய்தவர் யார்?’ எனக் கேட்டார்.

கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் மலர்விழி என அறிந்துகொண்டு அவளைப் பாராட்டினார். மறுநாள் நிலைமை சீரானதும் அந்தக் குடும்பத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு தென்காசிக்குப் புறப்பட்டார்.

இது நடந்த அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள சேதுராமனின் மகனுக்குப் பெண் பார்க்கும் போது திடீரென மலர்விழியின் நினைவுவந்தது. நேரடியாக, திருநகருக்குச் சென்றார். தன் மகனுக்கு மலர்விழியைப் பெண் கேட்டார். இரண்டு குடும்பங்களும் பேசி முடிவுசெய்து திருமணமும் நடந்துவிட்டது.

`எப்படி அந்தப் பெண்ணைத் தேர்வு செய்தீர்கள்?’ எனப் பலரும் சேதுராமனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்... `எங்களை யாரோ எவரோனு நினைக்காமல் எங்கள் பசி அறிந்து, அந்தப் பொண்ணு தோசையும் சட்னியும் செய்து குடுத்துச்சு. அப்படிப்பட்ட மனசும் கைப்பக்குவமும்கொண்ட பொண்ணுதான் வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப் பட்டேன். என் மகனுக்கும் பெண்ணைப் பிடிச்சிருந்தது. அவங்க வீட்ல பேசி சம்மதிச்சாங்க. உண்மையைச் சொல்லணும்னா... அந்தத் தக்காளிச் சட்னிதான் இந்தக் கல்யாணத்துக்குக் காரணம்.’

இந்தியச் சமூகத்தில்தான் இதுவெல்லாம் சாத்தியம்.

ஒருமுறை பழைய பேப்பர் கடை ஒன்றில் பள்ளி மாணவன் ஒருவனின் நோட்டு கீழே கிடப்பதைக் கண்டேன். குனிந்து எடுத்துப் பார்த்தபோது அந்த நோட்டின் முதல் பக்கத்தில், `இட்லி  ஒழிக!’ எனப் பெரியதாக எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது. இட்லியால் மிகவும் பாதிக்கப்பட்ட பையன் போலும்.

இட்லி பிடிக்கவில்லை என்பதைவிடவும் தினமும் நூடுல்ஸ் தரப்படுவதில்லை என்பதுதான் இந்தக் கோபத்துக்குக் காரணமா?

இந்திய வானம் - 21

எதற்காக தனது பள்ளி நோட்டில் `இட்லி ஒழிக!' என எழுதிவைத்திருக்கிறான் என நினைத்து, சிரித்தபடியே அந்தப் பக்கத்தை மட்டும் தனியே கிழித்து எடுத்துவைத்துக்கொண்டேன்.
இட்லியின் மீதான கோபம் தலைமுறைகளைத் தாண்டியும் தீரவில்லைபோலும். அந்தக் கால குடும்பங்களில் இட்லி, தோசைக்கு மாற்று கிடையாது. அதுவே விவசாயக் குடும்பங்களில் ஆடம்பரம். அபூர்வமாக அடையோ, இடியாப்பமோ, உப்புமாவோ செய்வார்கள்.

சப்பாத்தி என்பது, நோயாளிகள் உணவு என எனது கிராமத்தில் கருதப்பட்டது. ஆகவே, அபூர்வமாக சப்பாத்தி செய்வார்கள். விருந்தாளிகள் வந்தால் மட்டுமே பூரி செய்யப்படும். தீபாவளி, பொங்கல் நாட்களில் டவுசர் பையில் சோளதோசையைச் செருகிக்கொண்டும் தின்றுகொண்டும் திரியும் சிறுவர்களை நான் அறிவேன்.

பள்ளி நாட்களில் தினமும் காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு, டிபன் பாக்ஸிலும் இட்லி கொண்டுவரும் பையன்கள் நான் படித்த பள்ளியில் அதிகம் இருந்தார்கள். பல நேரங்களில் அவர்கள் மற்ற மாணவர்களின் டிபன் பாக்ஸைப் பிடுங்கிச் சாப்பிட்டுவிடுவார்கள். பள்ளி நாட்களில் இட்லி சாப்பிடப் பிடிக்காத பையனாகத்தான் நானும் இருந்தேன். ஆனால், காலம் அதன் அருமையை உணர்த்திவிட்டது. இட்லி எவ்வளவு ருசியான உணவு என்பதை இன்று உணர்ந்து சாப்பிடுகிறேன்.

இந்தியாவின் சிறந்த காலைச் சிற்றுண்டிகளில் ஒன்று இட்லி. வெளிநாடுகளில் சுற்றி அலையும் போது திடீரென இட்லி சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதற்காக இந்திய உணவகம் தேடி சுற்றியலைந்து, இட்லியைக் கண்டுபிடித்துச் சாப்பிட்டு முடிக்கும் போது ஊருக்கே போய் வந்த சந்தோஷம் கிடைக்கும்.

வயதுதான் உணவுக்கு ருசி தருகிறதுபோலும். பள்ளி வயதில் சாப்பிடப் பிடித்த உணவுகள் இன்று விருப்பமாக இல்லை. 20 வயதில் எதைச் சாப்பிட்டாலும் ருசியாகத்தான் இருந்தது. 30 வயதில் நல்ல உணவைத் தேடிப் போய்ச் சாப்பிட ஆசையாக இருந்தது. 40 வயதில் எதைச் சாப்பிடுவது, எதை ஒதுக்குவது என யோசிக்கவைத்தது. இப்படி வயது ஏற, ஏற `உணவு ருசிக்கானது அல்ல; அது ஆரோக்கியத்துக்கானது’ என்ற புரிதல் உருவானது. ஆனாலும் பழகிய நாக்கு எளிதில் அடங்காது தானே! ருசியைத் தேடத்தான் செய்கிறது.

இந்தியாவைப் போல இத்தனை ருசிகரமான உணவு வகைகள் வேறு எந்தத் தேசத்திலும் கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வோர் இரண்டு மணி நேரப் பயண தூரத்துக்கும் உணவு மாறிவிடுகிறது. காரமும் புளிப்பும் இனிப்பும் மாறுபடு கின்றன. எத்தனைவிதமான உணவு வகைகள். சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மாறுபட்ட உணவு வகைகள்... ருசிகள். இந்தியாவை ஒன்றிணைப்பது உணவுதான். இந்தியாவின் உணவுப் பண்பாடு, மிகவும் தொன்மை யானது; பருவ காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியது. நகர வாழ்வில் அதைத்தான் நாம் தொலைத் திருக்கிறோம்.

நம் பெற்றோர் நமக்குத் தந்த ஆரோக்கியமான உணவு வகைகளை, ருசியை, நம்மால் நம்முடைய பிள்ளைகளுக்குத் தர முடியவில்லை. அவர்கள் அனுபவிக்கிற ருசி, நமக்கு அந்நியமாக இருக்கிறது.
யார் எதைச் சாப்பிட வேண்டும், யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என உணவு அரசியலாகிப்போன இன்றைய இந்தியாவில், `இட்லி ஒழிக!’ என ஒரு சிறுவன் எழுதியிருப்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதானோ என்னவோ!

- சிறகடிக்கலாம்...