Published:Updated:

டிஜிட்டல் சிறைச்சாலை!

கார்க்கிபவா

நீங்கள் செய்யாத ஒரு தவறுக்கு, உங்களை 13 மாதங்கள் சிறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள்? வெளியில் வந்து ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவது அடுத்தது. சிறை நாட்களின் துயரம் உங்களை எப்படி எல்லாம் அழுத்தியிருக்கும்! ஆனால், அமித் மிஷ்ரா, வேற மாதிரி! தான் சிறையில் இருந்தபோதே, சிறைப் பணிகளை முறைப்படுத்தும் ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்.
டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கோன் நகரைச் சேர்ந்தவர் அமித் மிஷ்ரா. 2013-ம் ஆண்டு இவரது மனைவி தற்கொலை செய்து கொள்ள, அமித் மிஷ்ராவின் மீது வரதட்சணைப் புகார் பாய்ந்தது. இதன் அடிப்படையில் அமித் மிஷ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவரது பெற்றோரும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தனர்.

டிஜிட்டல் சிறைச்சாலை!

``ஆரம்பத்துல எனக்கு சட்டரீதியாக எந்த உதவியும் கிடைக்கலை. என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவே மூணு மாசம் ஆச்சு. அப்பத்தான் என்கூட இருந்த பல கைதிகளுக்கும் அவங்க வழக்கைப் பத்தின தகவலே தெரியலைங்கிறதைக் கவனிச்சேன். அதே சமயம், எல்லா கைதிகளைப் பத்தின தகவல்களைத் தொகுக்கிறது, சிறை அதிகாரிகளுக்கும் சிரமமான வேலைனு புரிஞ்சது. என் மேல எந்தத் தப்பும் இல்லைனு நம்பின ஜெயில் அதிகாரி ஒருவர், ‘மனசை வேற பக்கம் திருப்புங்க’னு சொன்னார். ‘நடந்ததையே நினைச்சு அழுதுக்கிட்டு இருக்கிறதைவிட அதுதான் சரி’னு எனக்கும் தோணுச்சு. நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அதனால சிறை நடவடிக்கைகளைக் கவனிச்சு, அதுக்கு ஒரு சாஃப்ட்வேரை உருவாக்க முடிவுபண்ணினேன்” என்கிறார் அமித் மிஷ்ரா.

டிஜிட்டல் சிறைச்சாலை!

இவர் உருவாக்கிய மென் பொருளின் பெயர், `ஃபீனிக்ஸ்’. இதன் மூலம், ஒரு கைதி, தான் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளோம், வழக்கின் தற்போதைய நிலை என்ன, நீதிமன்றத்தில் அடுத்த வாய்தா எப்போது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதைப் போலவே சிறை அதிகாரிகளும், எந்த கைதி வெளியே செல்கிறார்... உள்ளே வருகிறார் போன்றவற்றை எந்தச் சிக்கலும் இல்லாமல் கண்காணிக்க முடியும்.

“சிறைக்குள் எக்கச்சக்க ஊழல். கைதிகள், தங்களுக்குத் தேவையான பொருட்களை சிறை கேன்டீனில் வாங்கிக்கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு கூப்பன்கள் வழங்கப் படும். ஆனால், இந்த கூப்பன்கள் 50, 100 ரூபாய் போன்ற ரவுண்டான தொகைக்கே இருக்கும் என்பதால், தேவைக்கு அதிகமான பொருட் களை வாங்கவேண்டிய சூழல். மேலும், கூப்பன்களை மற்ற கைதிகள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு. இதற்காக `ஃபீனிக்ஸ்’-ல் கைரேகை முறையைச் சேர்த்தோம். கைதிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கைரேகை பதித்து வாங்கிக்கொண்டால், அதற்கான பணம் மட்டும் அவர்கள் கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்” - மிக மிகச் சிக்கலான ஒரு விஷயத்துக்கு எளிதான தீர்வு கண்டு அறிந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் அமித் மிஷ்ரா.

பொதுவாக எல்லா கார்ப்பரேட்களும் அவர்களது நடவடிக்கைகளை ERP (Enterprise resource planning) மூலம்தான் கண்காணிக்கிறார்கள். SAP, Oracle போல பல ERP மென்பொருட்கள் சந்தையில் உண்டு. ஒரு நிறுவனத்துக்கு ERP மென்பொருள் நிறுவுவதாக இருந்தால், அதன் அத்தனை நடவடிக்கைகளையும் தெரிந்த ஒருவர் வேண்டும். அவரின் வழிகாட்டுதலில்தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆனால், சிறைச்சாலையை முழுமையாகப் புரிந்துகொண்ட ஐ.டி நபர்கள் அதிகம் இருப்பது இல்லை. அமித் மிஷ்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க, அவர் மிகச் சரியாக அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

டிஜிட்டல் சிறைச்சாலை!

``இந்த சாஃப்ட்வேரை உருவாக்கியதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. சிறைக்குப் போகாமல் இருந்திருந்தால் `ஃபீனிக்ஸ்’ சாத்தியமே இல்லை. ஆனாலும், சிறை அனுபவம் மிகவும் துன்பமானதுதான். இன்று வரை என் மனைவியின் முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. என் மாமனார் அவர் மகளை இழந்தார் என்றால், நான் என் மனைவியை இழந்தேன். விடுதலையான பின்னர், என் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியைச் சந்தித்துப் பேசினேன். நான் குற்றமற்றவன் என்பது அவருக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எனக்கு எதிராக இருந்ததாகத் தெரிவித்தார்” - விவரிக்க இயலாத உணர்ச்சிகள் நிறைந்த குரலில் பேசுகிறார் அமித் மிஷ்ரா.

இப்போது `இன்வேடர் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் அமித் மிஷ்ராவின் `ஃபீனிக்ஸ்’ மென்பொருளை, இந்தியாவின் அனைத்து சிறைச்சாலை களுக்கும் பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருக்கிறது இந்திய உள்துறை அமைச்சகம். ஹரியானா மாநிலத்தில் இருக்கும் எல்லா சிறைச்சாலைகளிலும் `ஃபீனிக்ஸ்’ மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து, அருணாசலப் பிரதேச மாநிலச் சிறைகளில் நிறுவப்போகிறார்கள். மற்ற மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

`வாழ்க்கை என்பதே தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு’ என்பார்கள். அந்தத் தற்செயலில் நல்லதும் உண்டு... கெட்டதும் உண்டு. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நமக்கான சவால். அந்தச் சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார் அமித் மிஷ்ரா!