Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன்

‘யார் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ?’ என்று அயோத்தி ராமனிடம் கேட்பார் தியாகராஜர். ‘எதன் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ?’ என்று அபிஷேக் ரகுராமிடம் கேட்டால், ‘கல்யாணி ராகத்தை ஆலாபனைசெய்யும் பொருட்டு’ என்று பதில் வருமோ என்னமோ!

இந்த சீஸனில் எத்தனையோ பேர் கல்யாணி பாடியிருப்பார்கள்தான். ஆனால், `மியூஸிக் அகாடமியில் அபிஷேக் பாடிய கல்யாணி ஆகச் சிறந்த ஒன்று’ என கற்பூரம் அணைத்து ‘ஆயிரம் கல்யாணி நின் கீழ் ஆவரோ...’ என்று சொல்லத் தயார்!

கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது இந்தப் பிறவிப் பாடகரிடம். கல்யாணியை ஆதியுடன் அந்தமாக அலசி, கர்னாட்டிக் ஸ்டைலில் மட்டுமின்றி இந்துஸ்தானி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி எனப் பல்வேறு உருவம் கொடுத்து, சாந்தமாக, அதட்டலாக, உறுமலாக செல்லம் கொஞ்சி, மிரட்டி, உருட்டி அதகளம் செய்தார். பல்லவி கோபால ஐயரின் பாடலில் ‘ஓ ஜகத் ஜனனி, மனோன்மணி, ஓம்கார ரூபிணி கல்யாணி’ வரியில் நிரவல்செய்து, ‘தனி’க்கு வழிவிட்டு அது முடிந்ததும் ஸ்வரம் பாடி முடித்தபோது எழும்பிய கைத்தட்டல்களால் அகாடமி மேற்கூரையில் நிறைய விரிசல்கள்!

அதன் பிறகு ராகம் - தானம் - பல்லவிக்கு அபிஷேக் அடாணாவை எடுத்துக்கொண்டாலும், ‘காதுகளுக்குள் உன்னை விட்டேனா பார்...’ என வழி மறித்தது கல்யாணி!

சரிகமபதநி டைரி 2015

அபிஷேக்கிடம் எதிர்பார்க்கக் கூடாத, முடியாத ஒன்று டைம் மேனேஜ்மென்ட். ஒரு கச்சேரியில் மூன்று, நான்கு அயிட்டங் களுக்கு மேல் பாடாத பிடிவாதக்காரர் அவர்!

சீஸனை தாமதமாக ஆரம்பித்தாலும், பாடுபவர்களுக்கும் பார்வையாளர் களுக்கும் தரம்கூட்டியிருக்கிறது கிருஷ்ண கான சபா. அரங்கில் மூங்கில் நாற்காலிகளுக்கு புது வண்ணம் பூசி, வசதியாக உட்கார குஷன் போட்டிருக் கிறார்கள். முதுகில் மட்டும் பிரம்பு குத்தும். அதைவிட, ஹாலில் ‘Bose acoustics’ பொருத்தி ஒலி அமைப்பைத் துல்லியமாக்கியிருக்கிறார்கள். இதை எல்லாம் சாத்தியமாக்கியிருப்பவர் ஆர்.ஸ்ரீதர். சபாவின் துணைச் செயலரான இவர், `யக்ஞராமன் நினைவு அறக்கட்டளை’யின் நிர்வாக அறங்காவலர். இந்த அறக்கட்டளை சார்பாக சபாவுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, வாரிவாரி வழங்கும் வள்ளல்களில் ஒருவராக இணைந்திருக்கிறார்.

இந்த இடத்தில் மாலை நேரம் ஒன்றில் ஷசாங் புல்லாங்குழல் கச்சேரி. நிஷாந்த் சந்திரன் (வயலின்), ரமணமூர்த்தி (மிருதங்கம்), கிரிதர் உடுப்பா (கடம்) குழலுடன் கூட்டு!

ஸ்ரீ ராக வர்ணத்துடன் தொடங்கிய ஷசாங் குழலோசைக்கு சொக்கவைத்துவிடும் ஆற்றல் அதிகம். அதிலும் கல்யாணியில் கீழே, நடுவே, மேலே என ரோலர்கோஸ்ட்டர் பயணம்செய்து மெஸ்மரைஸ் செய்துவிட்டார். பிசிறு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத சுத்தமான வாசிப்பு. தம்பி வாசிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டதாம். தகவல் சொன்ன தந்தை, வள்ளுவனின் கூற்றுப்படி மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்தவர்!

‘உங்களுக்கு கானடா வேண்டுமா... கன்னட கௌள வேண்டுமா?’, `பூர்வி கல்யாணி அடுத்து வாசிக்கட்டுமா அல்லது கல்யாணியா?’ என்றெல்லாம் ராகங்களை ஏலம்விடுவதை ஷசாங் நிறுத்திக்கொள்வது நன்று. இன்ன ராகம் எனத் தீர்மானித்து வாசிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு; கேட்கவேண்டியது ரசிகர்களின் கடமை அல்லது தலையெழுத்து. என்ன... சொல்றது சரிதானே!

‘மாயனே...’ என்று திருப்பாவைப் பாடலை ‘கும்’ என்று ஆரம்பித்த நிஷா ராஜகோபால், குரலில், வாய் திறந்து பாடும்விதத்தில், அக்மார்க் கிளாசிக்கல் சங்கதிகளில் என்று அனைத்திலும் ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் காண்பித்து வருவது கண்கூடு. பார்த்தசாரதி சாமி சபாவில் சாருமதி ரகுராமன் (வயலின்), மனோஜ் சிவா (மிருதங்கம்), அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா) என்று ஷோக்கான பக்கவாத்தியம், நிஷாவுக்கு நல்ல போஷாக்கு!

சரிகமபதநி டைரி 2015

ஸ்ரீரங்கம் அரங்கநாதனைப் போற்றும்விதமாக தமிழில் அழகான விருத்தம் பாடி, பிருந்தாவன சாரங்கா ராகத்தில் ‘ரங்கபுர விஹார’வை பயபக்தியுடன் பாடினார் நிஷா. அன்றைய நாள் வைகுண்ட ஏகாதசி என்பதையும் நைஸாக நினைவூட்டினார்.

முன்னதாக பிலஹரி, சண்முகப்ரியா... பின்னதாக கரகரப்ரியாவில் ‘ஸ்ரீனிவாச தவ சரணம்...’ எனக் கவர்ந்திழுக்கும் பட்டியல் அன்று.
நிஷாவின் அடுத்த ஸ்டெப் என்ன? சற்று எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது அவரது கச்சேரி. திரைக்கதையில் திருப்பம் தருவதுபோல், அங்கங்கே எதிர்பார்க்காத ஆச்சர்யங்கள் கொடுத்து ‘அட’ போட வைக்கவேண்டும். உங்களால் முடியும்தானே சிஸ்டர்?

தியாகபிரம்ம கான சபாவுக்காக வாணி மஹாலில் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியை அமெரிக்காவில் ‘குட்டி கே.வி.என்’ என செல்லமாக விளிக்கிறார்களாம். கொலம்பஸ் கண்டுபிடித்த அந்தத் தேசத்தில் கல்வியை முடித்து, கர்னாடக இசையைத் தொழிலாக வைத்துக்கொள்ளும் பொருட்டு சென்னை புறப்பட்டுவந்து, இங்கே கும்மியடித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார் இந்த இளசு.

காதுகளுக்குள் கடப்பாரையை நுழைத்து இம்சிக்காத சாஃப்ட்டான குரல் ராமகிருஷ்ணன் மூர்த்திக்கு. பாடல் வரிகளை பொருள் சேதம் செய்வது இல்லை. எதிர்காலப் பொக்கிஷம்!

ரீதிகௌள, கல்யாணி என எந்த ராகத்தையும் ஓவர்டோஸாக்கித் திகட்டச் செய்யாமல் அவுன் கிளாஸில் மருந்தளவு கொடுத்து வசீகரித்தார். மெயினாகப் பாடிய தன்யாசி ராகம்கூட எட்டு நிமிஷங்களுக்குத்தான். ஸோ வாட்? முழு சாரமும் கிடைத்ததே! ‘ராம தியானமே உத்தமமான கங்கா ஸ்நானம்’ என தியாகராஜர் தன்யாசியில் சொல்லியிருப்பதை புனிதம் கெடாமல் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியிடம் துளியும் அமெரிக்க அலட்டல் கிடையாது தெரியுமோ!

கௌள ராகத்தில் பல்லவி. ‘அவனன்றி அணுவும் அசையாது... நம்மைக் காக்கும் இறைவன் அவனன்றி...’ என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர், மிருதங்க வித்வான் கே.அருண்பிரகாஷ்!
எந்நேரமும் எல்லா கச்சேரிகளிலும் புன்னகை பூக்கும் வதனத்துடன் பாடும் ஒருசில பாடகிகளில் முதல் இடம் காயத்ரி வெங்கடராகவனுக்கு. அவர் இசைக்கும்போது எதிரில் இருப்பவர் களுக்கும் தொற்றிக்கொள்ளும் உற்சாகம். நாரத கான சபா கச்சேரியும் விதிவிலக்கு அல்ல!

ஆர்.கே.ஸ்ரீராம்குமார் - மனோஜ் சிவா - திருச்சி எஸ்.கிருஷ்ணசுவாமி, வயலின் / மிருதங்கம் / கடத்துடன் பக்கவாத்திய பாதுகாப்பு சுவர் எழுப்ப, காயத்ரி வெங்கடராகவன் தொடக்கத்தில் பாடிய வஸந்தாவில் மாலை நேரத் தென்றல். கண்ட ஜாதி, ஏக தாளத்தில் சபரிமலை ஐயப்பன் மீது தீட்சிதர் இயற்றியுள்ள ‘ஹரிபுரபுத்ரம்’, பஞ்சாமிர்தமாக இனித்தது.

பிரதானமாக சங்கராபரணம். இதில் நடு போர்ஷனை குத்தகைக்கு எடுத்ததுபோல் விலாவாரியாகப் பாடினார் காயத்ரி. வெண்கல அண்டாவில் கோலிக்குண்டுகள் போட்டுக் குலுக்கியதுபோல் சங்கதிகள். வயலினில் தன் முறை வந்தபோது பாதி அளவுக்கு மட்டும் ஸ்ரீராம்குமார் வாசித்தார். அதுதானே பக்கவாத்திய தர்மமும்கூட! தியாகராஜரின் கோவூர் பஞ்சகத்துள் ஒன்றான ‘ஸுந்தரேச்வருநி ஜுசி’ கீர்த்தனையில் மூன்றாவது சரணத்தில் வரும் ‘ராஜரஜுநிகி...’ வரிகளை நிரவல்செய்து வெள்ளிமலை ஈசன் சுந்தரேசுவரனுடன் தட்டாமாலை சுற்றினார் பாடகி!

ரா-தா-பல்லவிக்கு ஆபேரி. ஆலாபனையில் ‘சிங்காரவேலனே...’ சங்கதிகள் நிறைய. பக்கத்தில் காருகுறிச்சி இல்லாத குறையைப் போக்கினார் ஸ்ரீராம்குமார்!

எல்லாம் சரி. காயத்ரியால் ஏன் இன்னமும் கூட்டம் ஈர்க்க இயலவில்லை. தேவை, சுயபரிசோதனை!

முதல் பாதி கச்சேரியில் ராயப்பேட்டை பாலத்துக்கு அருகே (பார்த்தசாரதி சாமி சபா) சாகேத்தராமன் பாடியது ராயபுரம் தாண்டி கேட்டிருக்கும். அந்த அளவுக்கு இரைச்சல். கண்களைச் சுழலவிட்டுப் பார்த்தேன். யாருமே ‘ஹியரிங் எய்டு’ மாட்டியிருக்கவில்லை. பின் ஏன் இத்தனை சவுண்ட்?

சாகேத்தராமனுக்கு மிருதங்கம் வாசித்த சீனியர் கலைஞர் காரைக்குடி மணி, ரொம்ப நேர்த்துக்கு மைக் திருப்திகரமாக அமையாமல் அவதிப்பட்டார். வால்யூம் வேறு அதிகமாக வைத்துவிட்டார்கள். மிருதங்கத்துக்கு ஈடுகொடுக்க வேறு வழி இல்லாமல் பாடகரும் குரல் உயர்த்த வேண்டியதாகிவிட்டது. நல்லவேளை, கச்சேரியின் பின்பாதியில் நிலைமை சீராகிவிட்டது.

வஸந்தாவில் வர்ணம்... தோடியில் ‘கோடிநதுல தனுஷ்கோடி...’ பிருந்தாவன சாரங்காவில் ‘ரங்கபுர விஹார...’ etc-க்களை முடித்துவிட்டு பைரவிக்குள் பிரவேசம். லால்குடி பாணி சங்கதிகள், மிதமான காலப்பிரமாணத்தில் அரங்கைச் சூழ்ந்தன.

ஜானகிபதிக்கு, கபட நாடக சூத்திரதாரியாக உலகை ஆட்டுவித்து, விரும்பிய பலன்களை அளிக்கும் பட்டாபிராமனுக்கு தியாகராஜர் அளிக்கும் உபசாரங்களை (உபசாரமுலநு...) சாகேத்தராமன் இங்கே மேடையில் வழங்கியது கேட்க ஆனந்தம்!

க்ளைமாக்ஸாக, காரைக்குடி மணியின் அசாத்தியமான தனி ஆவர்த்தனம். இவரது கை விரல்களின் ஆவேச அசைவுகளில் ஜதிகளும் சொற்கட்டுகளும் ஏடிஎம்-களில் ரூபாய் நோட்டுகள் வந்து விழுவது மாதிரி கொட்டுகின்றன. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு சரவெடிகள். அதுவும், மணியுடன் கடம் வி.சுரேஷ் இணைந்து கொள்ளும்போதெல்லாம் நாதப் பிரவாகம்!

கச்சேரி ஆரம்பத்தில் கை கொடுக்காத மைக் கொடுத்த தடங்கல்களை மறக்கச் செய்துவிட்டது ‘தனி’!

- டைரி புரளும்...