Published:Updated:

நிலம்... நீர்... நீதி!

கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!

டந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் மையம்கொண்ட வடகிழக்குப் பருவமழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளக்காடாக்கி, பேரழிவை உண்டாக்கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகின.

ஆயிரமாயிரம் உதவிக்கரங்கள் நீண்ட நேரத்தில், ஆனந்த விகடனின் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலமாக நிவாரணப் பணிகளை உடனடியாகத் தொடங்கி செயல்படுத்திவருகிறோம். இன்னொரு பக்கம், இந்தப் பேரழிவுக்கான அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்வதுதான் நீண்டகாலத் தீர்வுக்கான ஒரே வழி. நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என இரு பணிகளையும் முன்னெடுக்க முடிவெடுத்தோம். முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கூடவே, இந்தப் பணிகளில் கைகோக்கும் வகையில் வாசகர்களும் நிதி உதவி செய்யலாம் என, வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

நிலம்... நீர்... நீதி!

ஆலோசனைக் குழு!

நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளின் தொடக்கமாக, முன்னோடி நீர்மேலாண்மை அறிஞர்கள், நீர்நிலைக் காப்பாளர்கள், நீரியல் செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, டிசம்பர் 10-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. குழுவில் இடம்பெற்றிருப்ப வர்கள் தவிர, இன்னும் பல நிபுணர்களும் களப்பணியாளர்களும் தங்களின் பயனுள்ள ஆலோசனைகளையும் நேரத்தையும் எப்போதும் தருவதற்கு சம்மதம் தந்துள்ளனர். இந்த இயக்கமானது, எந்த வழிகளில் எல்லாம் பயணித்து தன் இலக்கை அடைவது என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதை உணர்ச்சி பூர்வமானதாக அணுகாமல், நிரந்தரத் தீர்வு என்கிற வகையில் அணுகுவதுதான் சரி என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம்.

இதுவரை 77 லட்சம்!

முதற்கட்டப் பணிகள் தொடங்குவதற் குள்ளாகவே... தங்களின் பங்களிப்பாக நிதியைக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர் விகடன் வாசகர்கள். ஜனவரி 3-ம் தேதி வரை 77 லட்சத்து 96 ஆயிரத்து 80 ரூபாயை (77,96,080) நிதியாக வழங்கியிருக்கிறார்கள். (இதுகுறித்த விரிவான பட்டியல், விகடன் இணையதளத்தில் இடம்பிடிக்கும்).

ஆய்வுப் பயணம்!

ஜனவரி 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும், வண்டலூர் தொடங்கி வாலாஜாபாத் வரை `நிலம் நீர் நீதி’ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலரோடு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, இந்தப் பெருவெள்ளத்துக்கான காரணம் என்ன என்பது பலமாகவே உறைத்தது. வண்டலூரில் இருந்து வாலாஜாபாத் நோக்கி நீளும் சாலைக்கு தெற்குப் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான ஏரிகளின் நீர், தெற்குப் பக்கமாகவே வழிந்தோடி பாலாற்றில் சேர்கிறது. அந்தச் சாலையையொட்டியும், அதற்கு வடக்குப் புறமாகவும் இருக்கும் ஏரிகளின் நீர், வடக்குப் பக்கமாக வழிந்தோடி அடையாறில் சேர்கிறது. இப்படி அடையாறில் சேரும் ஏரிகளின் நீர் வழிந்தோடுவதற்கு உரிய வழி இல்லாமல் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதுதான் முடிச்சூர் பகுதியை மையம்கொண்டு வெள்ளப் பேரழிவு நிகழ்ந்ததற்கு அடிப்படை என்பதை நன்றாகவே உணர முடிந்தது. இங்கே பாய்ந்த நீர், அடையாறு வழியாகச் சீறிப்பாய்ந்த செம்பரம்பாக்கம் நீரோடு சேர்ந்து, சென்னை மாநகரையும் மூழ்கடித்துவிட்டது!

நிலம்... நீர்... நீதி!

கவலைகொள்ளவைக்கும் டெட்ராய்டு!

இன்றைக்கு, `ஐ.டி காரிடர்’ என அழைக்கப்படும் ஓ.எம்.ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை), காங்கிரீட் காடாக நிமிர்ந்து நிற்பது மொத்தமும் நீர்நிலைகளின் மீதுதான். இதேபோலத்தான், `இந்தியாவின் டெட்ராய்டு’ என அழைக்கப்படும் ஒரகடத்தின் கதையும். மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் பலவும் நீர்நிலை களுக்குள்ளும், அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும்தான் அமைந்துள்ளன...
அமைக்கப்படுகின்றன. பசுமை விமான நிலையம், செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை என பலவும் இங்கேதான் திட்டமிடப்படுகின்றன. இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால், இந்தப் பகுதி மிக விரைவில் காங்கிரீட் காடாக மாறும். இதன் காரணமாக, எதிர்காலத்தில் பெருவெள்ளப் பாதிப்புகள் பேரழிவையே ஏற்படுத்தும்!

நீர் இல்லாத ஏரிகள்!

மழை வெள்ளத்தின்போது பெரும்பாலான ஏரிகளில் இருந்து பாய்ந்த நீர், பாலாற்றில் சேர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு கரைபுரண்டு ஓடி, அனைவரையும் அதிசயிக்கவைத்தது. ஆனால், மழை முடிந்து இரண்டு வாரங்களிலேயே அந்தப் பாலாறு பழையபடி, பாழாய்ப் போய்க்கிடக்கும் சோகத்தை என்னவென்று சொல்வது? ஆம், தற்போது சுத்தமாக தண்ணீரே இல்லாமல் கிடக்கும் பாலாற்றைப் பார்த்து அதிர்ந்துதான் போனோம். பாலாற்றுக்குத் தண்ணீர் தர வேண்டிய ஏரிகள் மட்டும் அல்ல, திருவள்ளூர், காஞ்சிபுரம் இரண்டு மாவட்டங்களிலும் மழையின்போது நிரம்பி வழிந்த ஏரிகளில் பலவும், தற்போது அதன் கொள்ளவுக்கான தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடப்பது, பேரதிர்ச்சி!

நிலம்... நீர்... நீதி!

முதலில் ஏரிகளுக்கு உரிய கரைகளே இல்லை. சில ஏரிகளில் கொஞ்சம்போல இருந்த கரைகளை பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களே உடைத்துவிட்டனர். சில ஏரிகள் தாறுமாறாகத் தூர்வாரப்பட்டதால் தேங்கிய கொஞ்சநஞ்ச நீரும் கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முழுமையாக தண்ணீர் தேங்கியிருந்தால், அவை விவசாயத்துக்கும் குடிநீருக்கும் முழுக்கப் பயன்பட்டிருப்பதோடு, கோடைக்காலங்களில் ஊற்றுகளைப் பெருக்கெடுக்கவும் செய்திருக்கும். ஆனால், அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

இத்தகைய கொடுஞ்சூழல் கண் முன்னே நிழலாடும்போது... `இந்தியாவின் டெட்ராய்டு' என்கிற பெயரில் வேகமாக  இந்தப் பகுதி வளர்ந்து கொண்டிருப்பது, பெருமைகொள்வதைவிட பயத்தைத்தான் உண்டாக்குகிறது. இதுதான் நாம் காணப்போகும் முன்னேற்றம் என்றால்... இனி எதிர்காலமே இல்லை. ஆம், இயற்கை வளங்களை, நீர்நிலைகளை அணைத்துக்கொண்டு முன்னேறாத எந்த ஒரு வளர்ச்சியும், முழுமையான வளர்ச்சியாக இருக்காது என்பதே உலக வரலாறு. இந்த நிலை நீடித்தால், ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியவும் கூடும்!

இப்போதைய உடனடித் தேவை நீர்நிலைகளைக் கணக்கெடுத்து, கண்காணித்து, தொடர் கவனிப்பில் வைத்திருப்பதுதான். பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் உள்பட பலரும் இதில் கைகள் கோக்கும்போதுதான்... கரைகளைக் காக்க முடியும். அப்போதுதான் இது அந்தக் கால குடிமராமத்துபோல உண்மையான மராமத்துப் பணியாக மாறி, நீர்நிலைகளை என்றென்றும் வாழவைத்து, நம் வாழ்க்கையையும் செழிப்பாக்கும்!

ஏற்கெனவே, கீழ்க்கட்டளை உள்ளிட்ட ஏரிகளை பராமரித்துவரும் அருண் கிருஷ்ணமூர்த்தியின் இ.எஃப்.ஐ (இந்திய சூழலியாளர்கள் நிறுவனம்) அமைப்பு, இந்தப் பணிகளில் நம்மோடு கைகோக்க முன்வந்திருக்கிறது.

அனைவரும் வாருங்கள்... கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!

கைகோத்த தண்ணீர் மனிதர்!

நிலம்... நீர்... நீதி!

`ராஜஸ்தானின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங், ஜனவரி 3-ம் தேதி அன்று நீர்நிலைகள் ஆய்வுப் பயணத்தில் நம்முடன் பங்கேற்றார். வண்டலூர் ஏரி தொடங்கி பாலாறு வரை ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை நம்முடன் வந்து ஆய்வுசெய்தவர்... `பாலாற்றின் இன்றையச் சூழல் கண்ணீரை வரவழைக்கிறது. ஆற்றின் கடைமடை பகுதி வறண்டுகிடப்பது எங்குமே இல்லாத கொடுமை’ என்று சொன்னவர், `நிலம் நீர் நீதி’ இயக்கம் என்பது அருமையான முயற்சி. இதன் மூலமாக நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மக்களின் பங்களிப்போடு இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்போது வெற்றி நிச்சயம்!’ என்று வாழ்த்துகள் சொன்னதோடு, `இந்த இயக்கத்துக்கு பல வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம்‘ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

ஆலோசனைக் குழு

`நிலம் நீர் நீதி’ ஆலோசனைக் குழுவில் தற்போது இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்...

ராஜேந்திர சிங் - ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பின் தலைவர்: பாலைவனப் பூமியான ராஜஸ்தானில் வறண்டு காணாமல்போன ஆறுகளை உயிர்ப்பித்து, தற்போது அங்கே விவசாயத்தைச் செழிக்கவைத்திருப்பவர். ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை, தண்ணீர் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர் புரட்சியை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இவருக்கு, 2015-ம் ஆண்டுக்கான ‘ஸ்டாக்ஹோம் நீர் விருது’ (தண்ணீருக்கான நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது) வழங்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் சுரேஷ் - பாமரர் ஆட்சியியல் கூடம் மற்றும் தேசியச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழக இயக்குநர்: வழக்குரைஞரான இவர், மனித உரிமைகள் மீது அக்கறைகொண்டவர். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு, இந்தியா முழுவதும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதுடன், செயல்பாட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்துவருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பிரபலமாக இருந்த ‘கம்பக்காரன்’ நீர்பாசன முறைகள் பற்றி ஆய்வுசெய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வெளிநாடுகளில் நடத்தப்படும் நீர் மேலாண்மை பற்றிய பல மாநாடுகளில் உரையாற்றியவர்.

நிலம்... நீர்... நீதி!

ஜெயஸ்ரீ வெங்கடேசன் - நிர்வாக அறங்காவலர், கேர் ஆஃப் எர்த், சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்துவருபவர். குறிப்பாக, சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல்கொடுப்பவர்.  நீர்நிலைகள் மீது பொதுமக்களின் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருபவர்.

பியூஸ் மானூஸ் - சேலம் மக்கள் குழுவின் அமைப்பாளர்: கல்லூரியில் படிக்கும் காலத்தில், தரமான ஆசிரியர்களை நிரப்பச் சொல்லி போரட்டத்தில் இறங்கி, சிறைக்குச் சென்றவர். கனிமவளங்களைச் சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டுவருபவர். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களின் கூட்டு முயற்சியில் சேலம் ‘மூக்கனேரி’யைத் தூர் வாரியதுடன், அந்த மண்ணைக்கொண்டு ஆங்காங்கே திட்டுகளை அமைத்துள்ளார்.

வினோத்ராஜ் சேஷன் - நிறுவனர், தண்ணீர் இயக்கம், திருச்சி: திருவண்ணா மலையைச் சேர்ந்த இவர், திருச்சியில் தனியொரு மனிதனாகக் களம் இறங்கி, சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் சக்தியைத் திரட்டி, வறண்டுபோன குளத்தில் தண்ணீர் தேக்கிய சாதனைக்குச் சொந்தக்காரர். திருச்சி அருகே உள்ள சூரியூரில் தொடங்க இருந்த பெப்சி குளிர்பான நிறுவன ஆலையை, ஊர் மக்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி, போராட்டங்கள் மூலமாக விரட்டி அடித்தது, தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சும் கோக் குளிர்பான ஆலைக்கு எதிரான போரில் கைகோத்திருப்பது என, சூழலுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது இவரது போர் முழக்கம்.

அருண் கிருஷ்ணமூர்த்தி - நிறுவனர், இ.எஃப்.ஐ (இந்திய சூழலியளாலர்கள் நிறுவனம்), சென்னை: சுற்றுச்சூழல் மீதுகொண்ட ஆர்வத்தால் வெளிநாட்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறியவர். தான் நடத்திவரும் தன்னார்வ அமைப்பு மூலம் சென்னையில் உள்ள கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல ஏரிகளை, மாணவர்களை ஒன்றிணைத்து தூர் வாரும் பணி, பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களை மாணவர்களுக்கு நேரடியாகப் போதிப்பது என முழு நேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தன்னுடைய பங்களிப்புக்காக, 2013-ம் ஆண்டில் ‘ரோலக்ஸ்’ விருதைப் பெற்றிருக்கிறார்.

எங்களோடு நீங்களும்!

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி விகடன் முன்னெடுத்திருக்கும் `நிலம் நீர் நீதி’ எனும் இந்த அறப்பணியில், பெருவாரியான தமிழக மக்கள் தன்னார்வலர்களாக இணையும்போதுதான், இதன் வெற்றி வேகம் பல மடங்காக அதிகரிக்கும்!

ஆம்... நீங்கள் ஒவ்வொருவருமே களத்தில் இறங்கலாம். உங்கள் ஊரில் ஆறு, குளம், ஏரி, கால்வாய் என எவையெல்லாம் காணாமல்போயின என்று உங்களுக்கே தெரியும் என்றால், அனைத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள்; உங்களிடம் போதிய விவரங்கள் இல்லையா... ஊர்ப் பெரியவர்களிடம் பேசி, தகவல்களைத் திரட்டுங்கள்; உங்கள் கிராமத்தின் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 1975-ம் ஆண்டு வரைபடத்தைக் கேளுங்கள். அதில் ஆறு, ஏரி, குளம் மற்றும் வரத்து வாய்க்கால்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து, உங்கள் பகுதியில் வரைபடத்தில் இருக்கும் நீராதாரங்கள் நிஜத்தில் இருக்கின்றனவா எனத் தேடுங்கள்.

ஒவ்வொரு தகவலையும் முடிந்தவரை ஆதாரங்களோடு திரட்டுங்கள். அவற்றை எல்லாம், தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் pukar@namenshame.org என்ற மெயில் முகவரி மூலமாக நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.

கூடவே, இதற்கென்றே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 044-6680 2993 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தாங்கள் கூற விரும்பும் தகவல்களை, குரல் வழிகாட்டுதல்படி பதிவுசெய்யலாம். அந்தத் தகவல்களைப் பரிசீலித்து உரிய வகையில் பயன்படுத்துவோம்.