Published:Updated:

அறிவுஜீவிகள் சூழ் வாழ்வு முதல் கடைசி கடிதம் வரை...நவீனத்துவ எழுத்தில் உருக்கிய வெர்ஜீனியா வூல்ஃப்!  #VirginiaWoolf

அறிவுஜீவிகள் சூழ் வாழ்வு முதல் கடைசி கடிதம் வரை...நவீனத்துவ எழுத்தில் உருக்கிய வெர்ஜீனியா வூல்ஃப்!  #VirginiaWoolf
அறிவுஜீவிகள் சூழ் வாழ்வு முதல் கடைசி கடிதம் வரை...நவீனத்துவ எழுத்தில் உருக்கிய வெர்ஜீனியா வூல்ஃப்!  #VirginiaWoolf


PC: Wikipedia

ழுதுவது என்பது செக்ஸ் வைத்துக்கொள்வது போன்றது; முதலில், காதலுக்காகச் செய்வீர்கள்; பிறகு, நண்பர்களுக்காகச் செய்வீர்கள்; அதன்பின், பணத்துக்காகச் செய்வீர்கள்!'

'ஒரு பெண் எழுதவேண்டுமெனில், அவளுக்கென்று ஓர் அறை, கொஞ்சம் பணம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்!' - கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எழுதுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அதிலும் ஒரு பெண் எழுதுவதை நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், லண்டனில் பிறந்த வெர்ஜீனியா வூல்ஃப் (Virginia Woolf) எழுதினார். அந்தப் பெண்ணின் பேனாவிலிருந்து வழிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஆழ்மனத்தில் புதைத்துகிடந்த கவலை, மனப்போராட்டம், கேள்விகளுக்கு விடையாக இருந்தன. 

இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களில் முக்கியமானவர், வெர்ஜீனியா வூல்ஃப். 1882-ம் ஆண்டு, லண்டனில் கின்சிங்கடன் (Kenginston) என்ற இடத்தில் பிறந்தார். வசதியான படிப்பறிவுள்ள குடும்பத்தில் பிறந்தவருக்கு வாசிப்பு மற்றும் சிந்தனை திறன் இயல்பிலேயே இருந்தது. ஆனால், மன அழுத்தங்களும் சோகங்களும் நிறைந்ததாகவும் வெர்ஜீனியாவின் வாழ்க்கை இருந்தது விசித்திரமானது. 

1895-ம் ஆண்டு தாயின் இறப்பு, வூல்ஃப்பை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 1904-ம் ஆண்டு தந்தையும் இறந்துவிட, தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளானார். சிறுவயதிலிருந்தே எழுதத் தொடங்கிய வெர்ஜீனியாவின் முதல் கட்டுரை, டிசம்பர் 1904-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, டைம்ஸ் லிட்ரரி சப்ளிமென்ட் (Times Literary Supplement) என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் வட்டம் சூழ வளர்ந்தார். பிரபல எழுத்தாளரான ஈ.எம்.பாஸ்டர் (EM Foster), பொருளாதார நிபுணர் ஜெ.எம்.கியேஸ் (J.M.Keyes), எழுத்தாளர் லிட்டன் ஸ்ட்ராசே (Lytton Strachey) என அமைந்த இவரின் நண்பர்கள் கூட்டத்தை, ‘புலோன்ஸ்பர்க் குழு’ (Bloomsburg Group) என்று அழைப்பார்கள். முற்போக்கு சிந்தனை, பாலியல் சுதந்திரம் பற்றி விவாதிக்கும் தீவிர குழுவாகச் செயல்பட்டார்கள். வெர்ஜீனியாவின் கூர்மையான எழுத்துக்கு இந்தக் குழுவும் முக்கியக் காரணம். 

1912-ம் ஆண்டு, லியோனர்டு என்ற எழுத்தாளரை மணந்தார் வெர்ஜீனியா. அவருடன் சேர்ந்து தொடங்கிய 'ஹோகர்த் பிரஸ்' மூலம், உலகப் புகழ்பெற்ற டி.எஸ்.இலியட், அண்டன் செகோவ் மற்றும் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். ஒருவரின் மனம் சார்ந்து நடக்கும் விஷயங்களையும், வெளி உலகையும் ஒருங்கிணைத்து எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் வெர்ஜீனியா. நவீனத்துவ இலக்கியத்தை, ஒரு பெண்ணின் பார்வையில் வலிமையாக வடிவமைத்தவர். இவரின் முதல் நாவலான, தி வயோஜ் அவுட் (The Voyage Out), 1915-ம் ஆண்டு வெளியானது. தன்னைச் சுற்றியுள்ள அறிவுஜீவி குழுவையே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் இது. இந்தக் கதையில் வரும் கிளாரிசா டாலோவே (Clarissa Dalloway) என்ற நடுத்தர வயது பெண்மணியின் வாழ்க்கையை மையப்படுத்தி, மிஸஸ் டாலோவே (Mrs.Dalloway) என்ற நாவலை எழுதினார். இது பெண்ணியம் பற்றி வெளிப்படையாகப் பேசியது. 1970-ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் எழுந்த பெண்ணியப் புரட்சிக்கு இவரின் எழுத்தும் முக்கியப் பங்கு வகித்தது. 
முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையே, இவர் எழுதிய நாவல்கள் வெளியாகின. பெண்ணியவாதம் பேசிய இவரின் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுத்துகளால் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வெர்ஜீனியா, வாழ்நாள் முழுவதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். 1941 மார்ச் 28-ம் தேதி, ஒஸி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தன் கணவருக்கு எழுதிய கடைசி கடிதத்தில், 'நான் மீண்டும் மன அழுத்தத்தில் தவிக்கிறேன் என்பது உறுதி. மீண்டும் அந்தக் கொடூர நாள்களை என்னால் அனுபவிக்கமுடியாது என்று நினைக்கிறேன். எனக்குத் தொடர்ந்து சில குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. உங்களின் வாழ்க்கையை நான் இனியும் கெடுக்க விரும்பவில்லை. நாம் மற்ற தம்பதியர்களைவிடவும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது 136-வது பிறந்தநாளையொட்டி, கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.