Published:Updated:

இளநரை தடுக்கலாம், தலைமுடி பிளவுபடுதல் குறைக்கலாம்! - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!

இளநரை தடுக்கலாம், தலைமுடி பிளவுபடுதல் குறைக்கலாம்! - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!
இளநரை தடுக்கலாம், தலைமுடி பிளவுபடுதல் குறைக்கலாம்! - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!

இளநரை தடுக்கலாம், தலைமுடி பிளவுபடுதல் குறைக்கலாம்! - கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!

ன்றைக்குப் பலருக்கும் தலைமுடி பிரச்னைதான் தலையாய பிரச்னை. அதோடு `தலைமுடி பிளவுபடுதல்’ என்பது பரவலாகிப் பலரையும் பாடாகப் படுத்திவருகிறது. குறிப்பாக, இது பெண்களின் பிரச்னை. அதேபோல் இளநரை ஏற்படுவதால் ஆண், பெண் இரு பாலினருமே பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்காக என்னென்னவோ சிகிச்சைகளைச் செய்து பார்த்தாலும், பலன் மட்டும் கிடைப்பதில்லை. ``முடிவு பிளவுபடுதல், இளநரை ஆகியவற்றுக்கு எளிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவற்றால் நல்ல தீர்வு காண முடியும்’’ என்கிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக். அது குறித்து மேலும் விளக்குகிறார்...


``அலை அலையாக அழகான கூந்தல் வேண்டுமென்று எந்தப் பெண்ணுக்குத்தான் விருப்பம் இருக்காது? அழகான கூந்தலுக்கு ஆசைப்படுவது இருக்கட்டும். அதற்கு அவர்கள் முதலில்  ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். நாம் மிகச் சாதாரணமாக அலட்சியப்படுத்தும் பழைய சாதத்தில்கூட தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே,

ஊட்டச்சத்து விஷயத்தில் மட்டும் அலட்சியம் வேண்டாம். அதேபோல் கூந்தலைச் சரியாகப் பராமரிக்கவேண்டியதும் அவசியம். அதற்கு வாரத்துக்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தலைமுடியில் அழுக்கு, சிக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளும். எண்ணெய்க் குளியலால் மினுமினுப்பான கேசம் மட்டுமல்ல, பொலிவான சருமத்தையும் பெறலாம்.

அதேபோல் `கூந்தல் பிளவு’... இப்படியொரு வார்த்தையை நம்மில் பலர் கேட்டிருக்க மாட்டோம். அதைச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் `முடி பிளவு’ என்று சொல்வதே சரி. முடி பிளவு என்பது முடி கொட்டுவதைவிட அபாயகரமான ஒன்று. இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம் மண்டை ஓட்டின் வறட்சித் தன்மை, அதிக உடல் சூடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, கேசத்துக்கு ஒத்துக்கொள்ளாத ஷாம்பூகள், கூந்தலுக்கான ரசாயன சிகிச்சைகள், நீண்டகாலம் மருந்துகள் சாப்பிடுவது போன்றவை. பொதுவாக மண்டை ஓட்டை உலர்ந்து போகாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் முடியைப் பிளவுபடாமல் பாதுகாக்கலாம். வாரத்துக்கு இரு முறை நல்லெண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல பலன் தரும்.

மாதத்துக்கு ஒருமுறை முடியின் நுனிப்பகுதியை வெட்டிவிடுவது நல்லது; இது, முடிவு பிளவுபடுவதைத் தவிர்க்கும். ஆண்கள் அவ்வப்போது முடி வெட்டிக்கொள்வதால் அவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது. பெண்கள் முடி வெட்டிக்கொள்வதில்லை. மாதத்துக்கு ஒருமுறை அரை இஞ்ச் அளவுக்கு முடியை வெட்டிவிடுவதும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும்.

முடி பிளவுபட்டால் ரத்தப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம். உடலில், ஹீமோகுளோபின் அளவு, இரும்புச்சத்து, துத்தநாகக் குறைபாடு போன்றவற்றைக் கண்டறிய வேண்டும். இதில் ஏதும் குறைபாடு இருந்தால், தேவையான சத்துகளைச் சேர்த்துக் கொண்டாலே போதும்... முடி பிளவுபடுதல் பிரச்னை தீர்ந்துவிடும்.


இன்றைக்குப் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை இளநரை. இளநரை உண்டாவதற்கு பரம்பரை காரணமும் இருக்கலாம். பிற காரணங்களாக ஊட்டச்சத்துக் குறைபாடு, தண்ணீரில் கலந்துள்ள ரசாயனங்கள், காரத்தன்மையுள்ள ஷாம்பூக்கள், முடியை கலரிங் பண்ணுவது, ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணுவது, அயர்ன் பண்ணுவது போன்றவற்றைச் சொல்லலாம்.

முதலில் இளநரை பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம். அதாவது, ஐந்து வயது குழந்தைக்கு இளநரை வந்தால், முடியின் வேர்ப்பகுதி நரைத்துவிட்டால், மீண்டும் அது கறுப்பு நிறமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. 

இதயம், கண் போன்ற உறுப்புகள் பழுதானால் அவற்றுக்கு மாற்று உறுப்புகளைப் பொருத்திச் சரிசெய்யலாம். அதேபோல் நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகள் கெட்டுப்போனாலும் மாற்று உறுப்புகள் பொருத்தலாம். ஆனால் நிறத்துக்குக் காரணமான மெலனின் (Melanin) பிக்மென்ட்டை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. குறிப்பாக மரபு ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய முடியாது. நரை மேற்கொண்டு பரவாமல் வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, ஏற்கெனவே வந்த நரையை மாற்ற முடியாது.


இளநரைக்கு மருதாணி பூசுவது இயற்கை சாய முறை. வெள்ளை நிற முடியின் நிறத்தை மாற்றக்கூடியது மருதாணி. மருதாணிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உள்ளன. எனவே, மருதாணியுடன் கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம் அல்லது அந்தக் கலவையை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் பூசி வரலாம். ஒன்றிரண்டு இளநரை உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாள்கள் தலையில் தேய்த்து, நன்றாக ஊறவைத்துக் குளித்தால் இளநரையைத் தள்ளிப்போடலாம். ஆனால், நரை முழுமையாக வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்த கட்டுரைக்கு